Logo


English

மூன்றாவது மண்டலம்

இம்மண்டலம், காசி யாத்திரை, பரிபூரணானந்த போதம், தகராலய ரகசியம் எனும் மூன்று நூல்களைக் கொண்டதாகும்.  முதலாகவுடைய காசியாத்திரை எனும் நூல், சுவாமிகள் கி.பி.1902ல் வட இந்திய யாத்திரை மேற்கொண்டு இடையே பல தலங்களைத் தரிசித்தும், காசி, மற்றும் வட இந்திய தல தரிசனம் செய்தும் தமது பயண அனுபவங்களையும், இறையருள் அனுபவங்களையும் பாடல்களாக, வரைந்துள்ளார்கள்.  நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, வெண்டளையான் வந்த கண்ணிகள் போன்ற 608 பாக்களைக் கொண்டது.

இந்நூலில் மலர்ந்துள்ள அரும்பெரும் கருத்துக்களில் சில ஈண்டு வழங்கப்படுகின்றன.

ஆறுமுகனானவன், விதி, மால், அரன் ஆகிய மூவருக்கும் மேம்பட்ட தெய்வமாகும்.  ஊனுடம்பு எடுத்தார் எத்துணை அருட்செல்வரே யாயினும் அவர்களும், ஏனையோர் போல், அவ்வுடம்பு உண்டாதற்கு ஆன கலைகளுக்கு உட்பட்டவரே. பசு என்னும் சீவனானவன், எஞ்ஞான்று பொன் வண்ணனாய், கருத்தாவாய், புருடனாய், தோற்றங்கட்கெல்லாம் காரணமாயுள்ள ஈசனைக் காண்கின்றனனோ அஞ்ஞான்று சீவன் முத்தனாகிய அவன், புண்ணிய பாவங்களை நீங்கினவனாய், களங்கமில்லாதவனாய்ச் சிவசாமியத்தை அடைகின்றனன்.

ஆன்ம உடம்பினுள் உயர்பொருளாயுள்ள ஆன்மாவை அருள்துணைகொண்டு அனுபவத்தில் அறிபவரே, அதனை நீங்காத நிறைபொருளாயுள்ள பரமான்மாவையும் அறிந்து பூரணம் அடைவர்.  விழிப்பிலும், தூக்கத்திலும், சேராத இடைநிலை ஒன்று உண்டு.  அந்நிலையில் அமலநிட்டை பிரகாசிக்கும்.  இந்நிட்டை நான், எனது, என்பன கழியப்பெற்று, ஞானம் ஏறிடு வாரிடந்துள்ளது.  இதற்கு விளக்கம், வேகாத அரிசி மிகவும் வெந்து பதங்கெட்ட கூழ், இரண்டும் அல்லாத சோறு எனவாம்.  நூற்றையடுத்த பத்து நூற்றோசை கோடல் போல், தொண்ணூறு என வருவதைச் சுட்டி, முருகன் திருவடியில் நாட்டம் உள்ள உயிரானது பெறும் உயர்வு குறிக்கப்பட்டது.  யமகமாகப் பாடியருளிய பாடல்கள் 180 முதல் 185 வரை சுவாமிகளின் பெருமையைப் பறைசாற்றுவனவாகும்.  காலன் கைபடாதிருக்க பாடல் 189ல் சுவாமிகள் உபாயம் கூறியுள்ளார்கள். 

காசியில் குமரகுருபரர் மடத்தில், சுவாமிகள் காஷாயம் ஏற்ற நாள், கலியுகம் 5004ல் நிகழ் சுபகிருது ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் புதவாரம், பூச நஷத்திரம் ஆகும்.  கி.பி. 1902 என்க.

காசி யாத்திரை எனும் இந்நூலில் ஐந்துவித பாவினங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
அவையாவன:
கட்டளைக் கலித்துறை
நேரிசை வெண்பா
பின் முடுகு பல்சந்தம்
மடக்கு யமகம்
வெண்டளையான் வந்த பரஞ்சோதிக்கண்ணி
இந்நூலில் ஆழ்ந்த கருத்துகளும் அனுபவங்களும் உள் அடக்கிய பாடல்கள் 608 ஆகும்.

பரிபூரணாந்தபோதம்:

இது, மூன்றாவது மண்டலத்தைச் சார்ந்த இரண்டாவதாக அமைந்த நூலாகும்.  தீவிரதர கதியுடையாருக்கே இந்நூல் உரியது.  சுத்தாத்துவிதம் எனும் சொல்லின் பொருளைச் சுருதி வாயிலாக இனிது விளக்கும் நூலாம்.  இஃது, உள்பொருள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, ஒன்றுமின்றோ என்பார்க்கு, சுவாமிகள் உண்மைப் பதமாய சோற்றினைக் காணாதார், துவித அரிசியினையும், ஏகக் கூழினையுமே காண்கின்றனர் என இந் நூலில் விளக்கியுள்ளார்.  உண்மை ஞானமே, வியவகார நெருப்பு ஆற்றின் மயிர்ப் பாலமாகவும், ஏகமும், துவிதமுமே, அப்பாலத்தின் இருமருங்காகவும் நிச்சயிக்கப்படும் என்றும், அப்பாலத்தினடைந்து முத்திக்கரை சேரச் சாமர்த்தியமில்லாதார்.  அப்பாலம் அறும்படி நடை தந்தேனும், மருங்கு இரண்டினுள் ஒன்றில் காலிடுதலாற் றவறுண்டேனும், அவ்வாற்றில் வீழ்குனராவர்.  அன்னோர் எம்முடைய சுத்தாத்துவித வைதீக சைவ சிந்தாந்த நூலுரைகளின் நுட்பமறிதற்குத் தகுதியுடையாரல்லர் என்றும் கூறியுள்ளார்.

ஆக பரிபூரணானந்த போதம் எனும் இம்மாமறை நூலின் திறன் ஓரளவு உணர்த்தப்பட்டது அறிக.

இந்நூலை, முதன்  முதலாக, நுண்மாண் நுழை புலமை கைவரப்பெற்றவரும், சென்னை விவேகானந்தக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவருமாயிருந்த, சிந்தாந்தச் செல்வர், பேராசிரியர் டக்டர், ப. இராமன், M.A. Ph.D., அவர்கள் ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில் ஓர் அரிய நூல் வடிவாக்கி அதன் காரணமாக அன்னவருக்கு ஆய்வுப் பட்டமான டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது,  தமிழர் மற்றும் பாம்பன் சுவாமிகளின் பக்தர் அனைவரும் பெருமையடையும் நிகழ்ச்சியாகும்.

    நேரிசை வெண்பா, கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கலிநிலைத் துறை, போன்ற பாயிரம் பாடல்கள் = 13, பதிபசுபாச யதார்த்த விளக்கப் பாடல் = 115, துறவற விளக்கப் படலப் பாக்கள் 102 ஆக 230 பாக்களாலான பரிபூரணானந்த போதம் எனும் மூல நூலும், மற்றம் சிவ சூரியப் பிரகாசம் என்னும் உரையுடன் உள்ள நூலில் அடங்கிய பாடல்களைக் மட்டும் ஈண்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நூலில் அடங்கிய பாடல்களுக்கு விளக்கம் அளிக்கும் முறையால் 73 உபநிஷத்துக்கள், ஆகமங்கள், ஸ்மிருதிகள், புராண இதிகாசங்கள் தமிழ் மறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள், சூத்திரங்கள், திருமந்திரம், திருப்புகழ், நன்னூல், நிகண்டு பட்டினத்தடிகள் நூல் போன்ற 171 பனுவல்களிலிருந்து ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வரைந்த சிவசூரியப் பிரகாசம் எனும் உரையை ஓதுபவர்கள் தவமுதிர்ச்சி பெறுவர் என்பது திண்ணம்.

இந்நூலில் அடங்கியுள்ள பேருண்மைகளில் சிலவற்றைக் காண்போம்.

  1. உடம்பிலே இருதயத் தானம் முக்கியம் போல உலகில் சிலவே புண்ணியத் தலங்களாகும்.
  2. நின்மல நிட்டை கூடுவகர்களின் இருக்கையை தேவர் வாழ் ஊர் எனலாம்.
  3. விருப்பு வெறுப்புகளாலாய மனம் தானாக அடங்க மனனம் தேவை.
  4. நோயளவாய்க் கைப்பான மருந்து கொடுத்து குணப்படுத்தல் வைத்தியன் கடமை யொக்க, இறைவன் தண்டித்தலும் மறக் கருணையாம்.
  5. ஆவிக்கு வடிவு உண்டு.  அதாவது சரீரத்தின் இருதயத்தில் பெருவிரல் அளவாய் உள்ள ஒளி வடிவில், அணுவுக்கு அணுவாய் இருக்கின்றது.  அதையே தியானித்துப் பரம் பொருளை அடைக.

இந்நூலை நன்கு உணர்ந்த பின்னரே தகராலய ரகசியம் எனும் நூலை ஓதுதல் முறைமை ஆகும்.

தகராலய ரகசியம்:

இந்நூல், மூன்றாவது மண்டல நூல்களுள், இரண்டாவதாகக் குறித்த, பரிபூரணானந்த போதம் எனும் நூலினை நன்கு ஆராய்ந்த பின்னரே படிக்க வேண்டிய ஞான நூலாகும்.  இதைச் சுப்பிரமணிய பரத்துவப் போதகப் பெருநூல் எனலாம்.  ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துக்களை உள்ளடக்கிய நூலாகும் இஃது.  மற்றும், சவாமிகள் சாதகநெறி நின்று பெற்ற அனுபவ உண்மைகளை உணர்த்தும் ஞானநூல் எனவும் கொள்ளலாம்.  அதியிளமை தொட்டு இறைவனது விசேட அருளுக்கு ஒரு கொள்கலனாய் விளங்கும் பெற்றியரான சுவாமிகள், துறவற ஒழுக்கம் பூண்ட பின்னர் மெளனமாயிருந்த காலத்து அருளிய நூல், இஃது.

பிரப்பன்வலசைப்பதியில் ஓர் மயான பூமியில் 35 நாட்கள் தவமியற்றி, தவம் மேற்கொண்ட ஏழாம் நாள் இறைவன் கெளபீனதாரியாய் வெளிப்பட்டு ஒரு சொல்லால் சுவாமிகளுக்கு உணர்த்தியருளிய உபதேசப் பொருளே இந்நூல் வடிவாயது என்றால் மிகையாகாது.  பாம்பன் பதியின் கண்ணே வதிந்திருந்து, வெற்றிவேல் பிடித்த கையையுடைய கொற்றநீள் குமரநாயகனுக்கு மீளா அடிமையாகி, உலக இன்பங்களைக் கான்ற சோறெனக்கைவிட்டு, அந்நாயகன் தானே தஞ்சமெனச் சார்ந்த குமரகுருதாச சுவாமிகள் எனும் திவ்ய சிறப்புப் பெயருடையவர் அருளிச் செய்த நூல் இஃது என்று நூலின் ஆக்கியோனாக்குவயம் பகுதியில் குறிப்பு உள்ளது.

இந்நூல் இரண்டு காண்டங்களாய் அமைந்தது.  முதலாங்காண்டம், பாயிரம் 7 செய்யுள், நூல்வரலாற்று இயல், பிண்ட தகர வித்தையியல், அண்ட தகரவித்தையியல், என்ற மூன்று பிரிவுக்கு மொத்தம் 40 செய்யுட்களும், இரண்டாங்காண்டம், ஐயமறுத்தருளியல், தோத்திரவியல் முடிபியல் ஆகியவை 70 செய்யுட்களாகவும் ஆகிய 117 செய்யுட்களைக் கொண்ட இந்நூல் கி.பி. 1895க்குச் சரியான துர்முகி ஆண்டு மார்கழி மாதம் பாடி முடிக்கப் பெற்றது.  செய்யுள் இயற்றிய காலம், தலம், முதலிய விவரங்களைச் சுவாமிகளே விளக்கியுள்ளார்கள். 

இந்நூலில் அடங்கிய பாவினங்களாவன:
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கலி விருத்தம்
வஞ்சி விருத்தம்
கலி நிலைத் துறை
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

  இந்த மூன்றாவது மண்டலத்தில் அடங்கிய காசியாத்திரைப் பாடல் 608, பரிபூரணானந்த போதம் பாடல் 230 மற்றும் தகராலய ரகசியம் பாடல் 117, ஆக மொத்தம் பாடல்கள் 955 ஆகும்.

காசியாத்திரை


Home    |    Top