Logo


English
ஆனந்தகளிப்பு
ஆனந்த மேகுக பிரமம் - சச்சி
தானந்த ஞான சதானந்த பிரமம்


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.


குகப்பிரமம் ஆனது, ஆனந்த சொரூபமும் சச்சிதானந்த சொரூபமும் ஞான சொரூபமும் சதானந்த சொரூபமும் உடையதாகும்.

எந்தை அவன் அருள் கொண்டே - உனக்கு
எடுத்துச் சொல்வேன் செவி கொடுத்துக் கேள் ஞேயா
சிந்தை கெட்டுத் துயிலும்கால் - செலல்
செப்பின் எழுபதோடு ஐந்து அங்குலம் காண். (ஆனந்த)

1

அறிஞனே! எம்முடைய தந்தையாகிய இறைவன் அருளைக் கொண்டே உனக்கு எடுத்துச் சொல்வேன்; உன் செவியைக் கொடுத்துக் கேட்பாயாக. மனம் செயல்படாது உறங்கும்போது, பிராணன் ஒருதரம் வெளியில் செல்வதைக் கூறின் எழுபத்தைந்து அங்குலம் ஆகும்.

மாதர் சையோகத்தில் நாற்பத்து - எட்டும்
மருவிய முக்காலும் ஆம் விரைந்து ஓடும்
போது இருபத்தைந்து அரை ஆம் - சென்று
போம் போது தான் பதினெட்டாகும் ஞேயா. (ஆனந்த)

2

அறிஞனே! மாதருடன் கலவி செய்யும் போது பிராணன் ஒருதரத்திற்கு நாற்பத்தெட்டே முக்கால் அங்குலம் வெளியில் செல்லும்; வேகமாக ஓடும் போது இருபத்தைந்தரை அங்குலம் வெளியில் செல்லும்; நடக்கும்போது பதினெட்டு அங்குலம் வெளியில் செல்லும்.

உண்ணும்பொழுதும் ஒலிக்க - மொழி
உரைக்கும் பொழுதும் பதின்மூன்றரையாம்
நண்ணிய சாதாரணத்தில் - இரு
நான்குடன் ஒன்றா நலிவது ஞேயா. (ஆனந்த)

3

அறிஞனே! உணவு உண்ணும் போதும் உரக்கப் பேசுகின்ற பொழுதும் பிராணன் பதின்மூன்றரை அங்குலம் வெளியில் செல்லும்; சாதாரணமாக இருக்கும் போதும் பிராணன் ஒன்பது அங்குலம் வெளியில் செல்லும்.

ஒன்பதிலே விடயம் தான் - நில்லாது
ஒடுங்கிடின் எட்டேகால் ஆமே ஏழரைக்கே
இன்பச் சமாதிதான் கூடி - நன்றாய்
இருக்கலாம் மற்றப் படிக்கு இல்லை ஞேயா. (ஆனந்த)

4

பிராணன் ஒன்பது அங்குலம் ஓடும்போது புலன்கள் ஒடுங்கினால், பிராணன் அப்போது எட்டேகால் அங்குலம் வெளியில் செல்லும்; ஏழரை அங்குலம் நடந்தால் இனிய சமாதி கூடி இருக்கலாம்; அதுவன்றி வேறு ஒன்றுமில்லை.

ஏழரை தன்னிலே முக்கால் - குன்று
மேல் நற்கடாக்ஷ வாக்கு உண்டாகும் ஆறில்
ஊழொடு முக்காலம் தோன்றும் - அதில்
ஓர் முக்கால் குன்றின் மெய்ஞ்ஞானக்கண் காணும். (ஆனந்த)

5

பிராணனின் ஓட்டம் ஏழரை அங்குலத்திலிருந்து முக்கால் அங்குலம் குறைந்து ஓடினால், நல்ல அருள்வாக்குத் தோன்றும்; ஆறு அங்குலம் ஓடினால் பழம் பிறப்புத் தோன்றும்; ஆறில் முக்கால் அங்குலம் குறைந்து ஓடினால் முக்காலமும் தோன்றும்; அதில் முக்கால் அங்குலம் குறைந்து ஓடினால் ஞானக்கண் தோன்றும்.

நாலு அரை தன்னில் ஆகாய - கம
னம்தனக்கு உண்டாம் அதில் முக்கால் குன்றில்
கோலப் பதினான்கு உலகும் - நிமை
கொட்டும் அளவிலே சுற்றி வரலாம். (ஆனந்த)

6

நாலரை அங்குலம் பிராணன் செல்லும்போது ஆகாயத்தைக் கையால் பிடிக்கும் ஆற்றல் தனக்கு உண்டாகும்; அந்த நாலரையில் முக்கால் குறைந்து நடந்தால், அழகிய பதினான்கு உலகங்களையும் இமைகொட்டும் நேரத்திற்குள் சுற்றி வரலாம்.

மூன்றிலே அட்டமாசித்தி - கூடும்
முக்கால் அடங்கிடில் நவநிதி செய்ய
ஆன்ற வல்லாண்மை உண்டாம் ஒன்று - அரைக்கு
ஆன்மாவைக் காணலாம் அன்புள்ள ஞேயா. (ஆனந்த)

7

அன்புள்ள அறிஞனே! பிராணன் மூன்றங்குலமாக ஓடும் போது அட்டமாசித்திகள் கைகூடும்; அதில் முக்கால் அங்குலம் குறைந்து நடந்தால் நவநிதி செய்யும் ஆற்றல் உண்டாகும். ஒன்றரை அங்குலம் நடந்தால் ஆன்மாவைத் தரிசிக்கலாம்.

முக்காலில் ஈசுர அமிர்சம் - ஆகி
முன்பினும் தன் நிழல் காணாமல் நிகழும்
முக்காலும் அற்ற இடத்தே - பர
முத்தி எனும் பெருவாழ்வு ஆகும் ஞேயா. (ஆனந்த)

8

அறிஞனே! பிராணன் முக்கால் அங்குலம் நடந்தால் ஈசுர அமிசம் ஆவார்; அவர் நிழல் முன்னும் பின்னும் விழாது; அந்த முக்கால் அங்குலம் நடப்பதும் நின்றுவிட்டால் பரமுத்தி என்னும் பெருவாழ்வு கிடைக்கும்.

இந்தத் திதியில் புசிப்பும் - நீரும்
இதம் ஆன காற்றும் அனாவசியம் சேர்
எந்த வியாதியும் சாவும் - இல்லை
எழில் ஆன தேசு நல் வாசமும் உண்டாம். (ஆனந்த)

9

இந்த நிலையில், உணவு உண்ணுதலும் நீர் பருகுதலும் காற்றைச் சுவாசித்தலும் அவசியமில்லை; ஒருவரைச் சேரும் நோய்களும், மரணமும் போன்றவை இவருக்கு இல்லை; அழகான ஒளியும் வாசனையும் மேனியில் தோன்றும்.

இந்த விதம் பரம ஈசன் - சொற்றான்
என்று நீ தேர் இதில் மூச்சைப் பிடித்துப்
பந்திப்பது இல்லை மனத்தை - உள்ளே
பந்திக்கத்தானே அடங்கும் அம் மூச்சு. (ஆனந்த)

10

இந்த விதமாகப் பரமேசுவரன் சொன்னான் என்று நீ தெளிவாக அறிந்து கொள்வாயாக. இதில் மூச்சை இழுத்து உள்ளே அடக்குவது இல்லை; மனத்தை உள்ளே அடக்கினால் பிராணன் தானே அடங்கும்.

மாற்றம் செய் வன்மனக் கல்லைப் - பத்தி
மார்க்க குகைதனில் வைத்தே உருக்கி
ஊற்று குகன் பதம் தன்னில் - அந்த
உத்தமமான மனோலயம் எய்தும். (ஆனந்த)

11

மாறுதலைச் செய்துகொண்டே இருக்கும் வலிய மனம் என்னும் கல்லைப் பத்தி மார்க்கம் என்னும் குகையில் வைத்து உருக்கிக் குகன் திருவடியில் ஊற்றுவாயாக! அவ்வாறு ஊற்றினால் உயர்வான மனோலயம் தோன்றும்.

வீட்டுக்கு உடையவன் நீயே - அந்த
வீட்டில் சுகிக்க இவ்வீட்டை நம்பாதே
ஊட்டும் அறுசுவை போக்கிச் - சிவன்
ஊட்டும் உருசியை உட்கொண்டு தேக்கு. (ஆனந்த)

12

மானுடப் பிறப்பு எடுத்திருப்பதால் அந்த வீடுபேற்றிற்கு உரியவன் நீயே. அந்த வீட்டு இன்பத்தை அனுபவிக்க உள்ள நீ இந்த உடம்பு எனும் அழியும் வீட்டை நம்பாதே. ஊட்டப்படும் அறுசுவை உணவை விட்டுவிட்டுச் சிவன் ஊட்டும் அமுதச் சுவையை உட்கொண்டு தேக்கி வைப்பாயாக.

தோன்றிடு தூக்கமும் தள்ளிக் - கெட்ட
சோம்பலும் தள்ளிச் சுகம் எல்லாம் தள்ளி
ஊன்றிய யோகத்தில் நில் அங் - கே நின்று
உண்டாகும் ஆனந்தம் எல்லாம் நீ கொள்ளே. (ஆனந்த)

13

மனத்தில் தோன்றிடும் துக்கத்தை நீக்கியும், கெட்ட சோம்பலை நீக்கியும், இவ்வுலக இன்பங்களை எல்லாம் நீக்கியும், நிலையான இராஜயோகத்தில் நிற்பாயாக. அங்கு நின்று அதனால் உண்டாகும் பேரானந்தம் எல்லாம் நீ அனுபவிப்பாயாக.

கொண்ட தவத்திலே நின்று உன் - எரி
கொண்ட பசிக்கு எதிர் வாய்த்ததை உண்டு அவ
அண்ட வெளியிலே சென்று - கண்ட
அற்புதம் எல்லாம் அடக்கம் செய்து உய்யே. (ஆனந்த)

14

நீ மேற்கொண்ட தவத்திலே உறுதியாக நின்று, தீப்போன்ற பசிக்குக் கிடைத்ததை உண்டு, அந்த அண்டவெளியில் சென்று, காணும் அற்புதங்கள் எல்லாம் உன்னுள் அடக்கி உய்வாயாக.

சீர்மலி ஆனந்த வீட்டு - இன்பத்தைச்
சேர்ந்த அண்ணாமலைப் பேர் எந்தை ஈசன்
கூர்வடி வேல் உடை ஐயன் - என் உள்
குடிகொண்ட ஒருவன்தன் அடி என்றும் வாழி. (ஆனந்த)

15

சிறப்பு மிகுந்த ஆனந்த வீட்டு இன்பத்தைச் சேர்ந்து அனுபவிக்கும் அருணகிரிநாதர் ஆகிய, எம் தந்தையின் கடவுளான கூர்மையான வடிவேலுடைய தலைவன், என் உள்ளே எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற பெருமான் தன் திருவடி என்றும் வாழ்க!


Home    |    Top   |    Back