Logo


English
ஆனந்தகளிப்பு
ஆனந்த மேகுக பிரமம் - சச்சி
தானந்த ஞான சதானந்த பிரமம்


குகபிரமம் ஆனது, ஆனந்த சொரூபமும் சச்சிதானந்த சொரூபமும் ஞான சொரூபமும் சதானந்த சொரூபமும் உடையதாகும்.

எந்தை யவனருள் கொண்டே - யுனக்
கெடுத்துச்சொல் வேன்செவி கொடுத்துக்கேண் ஞேயா
சிந்தைகெட் டுத்துயி லுங்கால் - செலல்
செப்பி னெழுபதோ டைந்தங் குலங்காண். (ஆனந்த)

1

மாதர்சை யோகத்தி னாற்பத் - தெட்டும்
மருவிய முக்காலு மாம்விரைந் தோடும்
போதிரு பத்தைந் தரையாம் - சென்று
போம்போது தான்பதி னெட்டாகு ஞேயா. (ஆனந்த)

2

உண்ணும் பொழுது மொலிக்க - மொழி
யுரைக்கும் பொழுதும் பதின்மூன் றரையாம்
நண்ணிய சாதார ணத்தி - லிரு
நான்குட னொன்றா நலிவது ஞேயா. (ஆனந்த)

3

ஒன்பதி லேவிட யந்தா - னில்லா
தொடுங்கிடி னெட்டேகா லாமே ழரைக்கே
இன்பச் சமாதிதான் கூடி - நன்றா
யிருக்கலா மற்றப் படிக்கில்லை ஞேயா. (ஆனந்த)

4

ஏழரை தன்னிலே முக்கால் - குன்று
மேனற் கடாக்ஷவாக் குண்டாகு மாறில்
ஊழொடு முக்காலந் தோன்று - மதி
லோர்முக்கால் குன்றின்மெய்ஞ் ஞானக்கண் காணும். (ஆனந்த)

5

நாலரை தன்னிலா காய - கம
னந்தனக் குண்டா மதின்முக்கால் குன்றின்
கோலப் பதினான் குலகும் - நிமை
கொட்டு மளவிலே சுற்றி வரலாம். (ஆனந்த)

6

மூன்றிலே யட்டமா சித்தி - கூடு
முக்கா லடங்கிடி னவநிதி செய்ய
ஆன்றவல் லாண்மையுண் டாமொன் - றரைக்
கான்மாவைக் காணலா மன்புள்ள ஞேயா. (ஆனந்த)

7

முக்காலி லீசுர வமிச - மாகி
முன்பினுந் தன்னிழல் காணாம னிகழும்
முக்காலு மற்ற விடத்தே - பர
முத்தி யெனும்பெரு வாழ்வாகு ஞேயா. (ஆனந்த)

8

இந்தத் திதியிற் புசிப்பும் - நீரு
மிதமான காற்று மனாவசி யஞ்சேர்
எந்த வியாதியுஞ் சாவு - மில்லை
யெழிலான தேசுனல் வாசமு முண்டாம். (ஆனந்த)

9

இந்தவி தம்பர மேசன் - சொற்றா
னென்றுநீ தேரிதின் மூச்சைப் பிடித்துப்
பந்திப்ப தில்லை மனத்தை - யுள்ளே
பந்திக்கத் தானே யடங்குமம் மூச்சு. (ஆனந்த)

10

மாற்றஞ்செய் வன்மனக் கல்லைப் - பத்தி
மார்க்க குகைதனில் வைத்தே யுருக்கி
ஊற்று குகன்பதந் தன்னி - லந்த
வுத்தம மான மனோலய மெய்தும். (ஆனந்த)

11

வீட்டுக் குடையவ னீயே - யந்த
வீட்டிற் சுகிக்கவிவ் வீட்டைநம் பாதே
ஊட்டு மறுசுவை போக்கிச் - சிவ
னூட்டு முருசியை யுட்கொண்டு தேக்கு. (ஆனந்த)

12

தோன்றிடு தூக்கமுந் தள்ளிக் - கெட்ட
சோம்பலுந் தள்ளிச் சுகமெல்லாந் தள்ளி
ஊன்றிய யோகத்தி னில்லங் - கேநின்
றுண்டாகு மானந்த மெல்லாநீ கொள்ளே. (ஆனந்த)

13

கொண்ட தவத்திலே நின்றுன் - னெரி
கொண்ட பசிக்கெதிர் வாய்த்ததை யுண்டவ்
வண்ட வெளியிலே சென்று - கண்ட
வற்புத மெல்லா மடக்கஞ்செய் துய்யே. (ஆனந்த)

14

சீர்மலி யானந்த வீட்டின் - பத்தைச்
சேர்ந்த வண்ணாமலைப் பேரெந்தை யீசன்
கூர்வடி வேலுடை யைய - னென்னுட்
குடிகொண்ட வொருவன்ற னடியென்றும் வாழி.(ஆனந்த)

15


Home    |    Top   |    Back