சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
1
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! அன்னம் இட்டவர்கள் முன்னே அவர் உள்ளம் துன்புறும்படிச் சொன்ன அநியாயமோ? உண்ணும் உணவிலே நஞ்சைக் கலந்து கொலை செய்த பாவமோ? பெரிய கடவுளை மறந்த செருக்கோ? தன்னையே பெரியவன் எனச் சொல்லித் திரிந்த பெரிய பாவமோ? நடுவர் மன்றத்தில் வழக்கில் ஒரு பக்கமாகச் சார்ந்து அநீதி கூறியதோ? பொய்யாகச் சத்தியம் செய்த தாழ்வோ? அனேக உயிர்களைத் தின்ற பாவங்களோ? மேலான குணமுடைய தெய்வங்கள் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களை அழித்த பாவமோ? மனம் மொழி மெய்களில் தூய்மையில்லாமல் மகாமந்திரத்தைச் செபித்த குற்றமோ? என்னை முன்னேற விடாமல் ஆட்சி செய்கின்றதே முருகா! வந்து அருள் செய்யமாட்டாயோ?
அண்டினவருக்கு இன்னல் தந்த தவறோ துன்பில்2
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! என்னை அண்டினவர்களுக்குத் துன்பம் தந்த குற்றமோ; என் துன்பக் காலத்தில் என்னை ஆதரித்தவர்களுக்கு நான் துன்பம் செய்த கொடுமையோ; உன்னுடைய திருவடிகளை நம்பின அடியார்களை வணங்காத செருக்கோ; சண்டாளர் தொடர்பினை விரும்பிய தொடக்கமோ; மிகுதியாகப் பொய் சொன்ன குற்றமோ; சத்திரங்களையும் சாலைகளையும் அழித்த பாதகமோ; நீருக்குள் பெண் உறவு கொண்ட தவறோ; பழமையான வேதங்களைப் பழித்துக்கூறிய பாவமோ, பகலில் பெண் உறவு கொண்ட குறையோ; பத்தினித் தன்மை மிக்க இளமகளிரைக் காதல் செய்த தீவினையோ; வந்து என்னை தலையில்லா முண்டம்போல் ஆக்கி, விலைக்கு விற்கப்படும் அடிமைபோல் அடிமையாகக் கொள்கின்றதே! முருகப்பெருமானே வந்து அருள்புரியமாட்டாயோ?
சித்தநிலை மாறினோர் பொருள் கொண்ட குற்றமோ3
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! மனநிலை மாறினோர் (பித்தர்) பொருள்களைக் கவர்ந்த குற்றமோ; தெய்வத்தை நிந்தித்த குற்றமோ; குழந்தையைக் கொன்ற பாவமோ; பிறர் பொருளைத் திருடிய குற்றமோ; சிவாகமங்களை இகழ்ந்து கூறிய தீமையோ; சத்தியத்தைப் போற்றும் சைவரைப் பழித்துக் கூறிய குற்றமோ; மேலான அறத்தை விற்றுண்ட தவறோ; தான் சாவதற்காக நஞ்சை உண்ட குற்றமோ; சண்டாளர் சாதி வினைகளைச் செய்த குற்றமோ; வஞ்சனை செய்வாரைப் புகழ்ந்த தொடக்கமோ; கூலிகளைக் குறைத்துக் கொடுத்த குறையோ; கோபத்தையே எப்போதும் விரும்பிய பாவமோ; குடிகேடன் ஆன பயன் தானோ; முத்திநெறியைச் சேராமல் எனை வளைக்கின்றதே, முருகப்பெருமானே வந்து அருள் புரியமாட்டாயோ?
வேதியரை நிந்தித்த தவறோ விவேகர் அற4
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! வேதம் அறிந்த அந்தணர்களைக் குறை கூறிய தவறோ; அறிஞர் தம் அறம் செயும் விருப்பத்தை மறுத்துப் பேசிய அதர்மமோ; மெய்யன்பர் செய்யும் சிறந்த விரதங்களுக்குத் துன்பம் விளையச் செயல்புரிந்த குற்றமோ; மாதவிலக்கு உள்ள பெண்களை உறவு கொண்ட பிழையோ; சொன்ன சொற்படித் தவறாமல் நடக்காத குற்றமோ; வஞ்சனை வழியில் சென்ற பயனோ; குற்றமான தொழில்கள் மூலம் பொன் தேடியதால் உண்டான பாவமோ; பாவி கையிலிருந்து பிச்சை பெற்று உண்ட குற்றமோ; சதாகாலமாய் என்னைப் பரந்த துயரக்கடலில் அமிழ்த்தி முதுமையான அறிவு தோன்றாமல் ஆட்சி செய்கின்றதே, முருகப்பெருமானே வந்து அருள் புரியமாட்டாயோ?
படிகம் உதவா லோபியாகி வந்தோர் அகடு5
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! பிச்சை உதவாத உலோபியாகிப் பிச்சை பெற வந்தோர் வயிறு பசித் தீப்பற்ற வைத்து உண்ட பாவமோ; படரும் கொடிகள், மரங்கள், செடிகள் ஆகியவை கேடு அடையும்படி வெட்டிப் பலன் தருவது கெடும்படிச் செய்ததன் பயனோ; சேலை நழுவ விட்டு மயக்கும் மாதர்கள் மேல் மனம் வைத்த அதர்மமோ; உனது மாட்சியுடைய திருவடியை மறந்த குற்றமோ; பெரிய பொருளாம் உனக்கும் இன்னொரு கடவுளைச் சமம் என்று சொன்ன குற்றமோ; விலை மாதர்களின் பெரிய அல்குல் உரிமை என நினைத்து மனைவியைக் கைவிட்ட செயலோ; கருணையில்லக் கதைக்களுக்கே செவி கொடுத்த குற்றமோ; என்னை விருப்பம் என்னும் ஓடத்தில் இருத்தி, முடிவில்லாத கவலைக் கடலின் மீது வருத்துகின்றதே; முருகப்பெருமானே வந்து அருள் புரியமாட்டாயோ?
கள் உண்டு தள்ளாடி நின்ற மதி மோசமோ6
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! கல்லை உண்டு தள்ளாடி நின்ற அறிவுக்கேடோ; கஞ்சாவும், அபினும், மதுவும் ஆகியவற்றைக் கைகண்ட காயகல்பம் என்று நினைத்து உண்ட அறிவுக்கேடோ; நம்பினர் கணக்கைப் பொய்யாக எழுதிக்காட்டி வஞ்சித்த குற்றமோ; புலையர்கள் எனத் தினம் உயிர்க்கொலை செய்து அற்பமான மாமிசத்தை உண்டதால் வந்த பாவமோ; அன்பு பாராட்டிப் பிறர் ஒப்படைத்த சொத்தை அவர் கேட்டபோது இல்லை என்று கூறிய குற்றமோ; மனத்துள் ஒன்றை நினைத்துக் கொண்டு வாயில் ஒன்றைப் பேசும் வஞ்சனையால் ஊதியம் ஈட்டிய குற்றமோ; உன்னுடைய திருக்கோயில்களில் அசுத்தம் செய்து, அடியார்களின் உரையை மீறி நடந்துகொண்ட குற்றமோ; முள்ளு முள்ளாய் என்னைக் குத்துகின்றதே பரம முருகனே! வந்து அருள் புரியமாட்டாயோ?
பிரியலர்க்கு இரிபு ஆய பிழையோ பிதா அன்னை7
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! நண்பர்க்கு பகைவனான குற்றமோ; தாய், தந்தை, மனைவி, சுற்றத்தார் என்மீது கொண்ட மனக் கொதிப்போ; பெரிய பொருளான (பிரம்மம்) உன்னை அதுபோன்று இல்லை என்று கூறிய பாவமோ; பேய்க்கு நான் அடிமையான குற்றமோ; பிறன் மனைவியை விரும்பிய பலனோ; என்னைத் துணையாக நம்பினவர்க்குத் துரோகம் செய்த பாவமோ; குரு இட்ட சாபமோ; பத்தி வழியில் செல்லும் பத்தர்களுக்குக் குற்றம் செய்த குற்றமோ; நீதி வளரும்படி உலகத்தை ஆளுகின்ற அரசன் மனைவி, குரு, அண்ணன், மாமன் முதலானோர் தம் பத்தினிமார்களைத் தழுவக் கருதிய தீமையோ; அந்தணர்க்கு ஈவதாக உறுதிமொழி செய்தபடி அளியாத குற்றமோ; என்னை வலிமையான துன்பத்தில் நுழையச் செய்து வருத்துகின்றதே முருகப் பெருமானே! வந்து அருள் புரியமாட்டாயோ?
நாவிதர் வண்ணார் கூலி நல்காத பீடையோ8
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! அம்பட்டன், வண்ணான் ஆகியோர் கூலியைக் கொடுக்காத பீடையோ; பெண்களின் தனங்களில் கண் பார்வையைச் செலுத்திய பிழையோ; விரத நாள்களில் மாதரைத் தழுவிய தீமையோ; புலவர்களின் சாபமோ; பரமனே உன் கோபமோ; பத்தர்களின் மனவருத்தமோ; பால் உண்டு புணர்ந்த பழியோ; மேலான முதல்வன் பூசையைச் செய்யாதுவிட்ட குறையோ; பசுக் கொலை செய்த பெருங்குற்றமோ; கன்றுகள் குடிக்கின்ற பாலைக் கறந்த குற்றமோ; விதவையைப் புணர்ந்த குற்றமோ; நல்ல கொள்கை வளராமல் என்னை மூவகைத் துன்பங்களான குழியில் தள்ளுகின்றதே! முருகப் பெருமானே! வந்து அருள் புரியமாட்டாயோ?
புனிதர் நெஞ்சம் கலுழ வசை சொன்ன கலுடமோ9
முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைக்கும் ஆனந்த மேகமே! புண்ணியர் நெஞ்சம் கலங்க இழிவாகப் பேசிய குற்றமோ; பொய் நூலைக் கூறிய குற்றமோ; மணமகன், மணமகள் ஆகியோரைப் புறம் கூறி நட்பைக் கெடுத்த குற்றமோ; பணத்தாசையால் அநியாயமான எண்ணம் கொண்டு தானியங்களின் அளவைச் சுருக்கியும் விலையைக் கூட்டியும் விற்று மனத்தில் மகிழ்ச்சி கொண்ட செருக்கோ; சிவபெருமான், விஷ்ணு ஆகியோரின் திருக்கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அசுத்தம் செய்த அதர்மமோ; உனது குளிர்ந்த திருவருளை நினைக்க முடியாமல் சனிபோல் என்னைப் பிடித்து வருத்துகின்றதே! தண்டமிழ் அகத்திய முனிவர், பகீரதன், இராகவன், வீணையுடைய முனிவரான நாரதர், வாசுகி எனும் அரவம், முனிவர், தேவர் எத்தகையரும் வணங்கும் தாமரைத் திருவடிகளுடையவனே! முருகப் பெருமானே! வந்து அருள் புரியமாட்டாயோ?
சுத்தமா நல்லறிவு தோன்றாத பாதகன்10
முத்தியளிக்கும் முதற்பொருளே! திருப்புகழ் பாடியருளிய அரசனான அருணகிரிநாதர் விரும்பும் வேதங்களின் முடிவான கருத்தனே! முத்தர்களுடன் சித்தர்களும் பருகும்படி அமிர்தத்தைப் பொழிதற்கு வானை மறைத்தெழும் ஆனந்த மேகமே! சிறிதுகூட நல்ல அறிவு தோன்றாத பொல்லாதவன்; மிகுதியான பொய் உடையவன் என்றாலும் சொற்படி நடக்காத பொல்லாத வஞ்சகன்; பிறப்பை நாசம் செய்பவன் என்றாலும் பத்தி நெறியைப் பழகாத அறிவிலி; கொடுமையே செய்யும் முழுமூடன் என்றாலும், பழியும் பாவமும் ஒன்றாகக் கூடிய ஒரு தூல உடம்புள்ளவன் என்றாலும், எத்தனை குற்றங்கள் இப்படிச் செய்திருந்தாலும், நான் இன்னும் அறியாமையினால் செய்தாலும், எப்படியாவது ஆதரித்து இனிய திருவருளை அளித்தருளி நீ என்னை அடிமை கொள்ளுதல் உன் செயலாகும்!