Logo


English
ஆறெழுத்துண்மை
பண் - காந்தார பஞ்சமம்
நந்தன வருடம் பங்குனி மாதம் 13ஆம் தேதி சுக்கிரவாரம்
அன்று சுவாமிகளால் இயற்றப்பட்டது


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

அற்புதம் ஆகிய அருமறை மொழிபோல்
வெற்பு உயர் புவனம்பல் விளங்கிடுமாறு
பற்பல தேவர்கள் படர்ந்த விண் உறினும்
தற்பரம் ஆவது சரவண பவவே.

1

ஞானமாக உள்ள அறிதற்கு அரிதான வேதங்களின் மொழிகளைப் போன்று, மலைகள் உயர்ந்துள்ள உலகங்கள் பல விளங்கும்படியாகப் பலப்பல கடவுளர்கள் பரவியுள்ள விண்ணுலகத்தை அடைந்தாலும், தன் உயிர்க்குரியதான மேலான பரம்பொருளாக உள்ளது சரவணபவ எனும் திருவாறெழுத்து மந்திரமேயாகும்.

பத்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருக்கினும் இகத்தில்
முத்தி தந்து அனுதினம் முழுப் பலன் நல்கச்
சத்தியம் ஆவது சரவணபவவே.

2

உலகத்தில் இறைவன்மீது மெய்யன்பும், அவனைப் பற்றிய அறிவும், அவனைப் பரவுதற்குரிய வழிகள் பலவும் இருந்தாலும், மறுமையில் பேரின்ப முத்தியினையும், இம்மையில் நாள்தோறும் முழுமையான நன்மைகளையும் அளிக்க உண்மையாக இருப்பது சரவணபவ என்னும் மந்திரமேயாகும்.

பூசிக்கும் வானவர் புரவலன் ஆவி
வாசிக்கும் மாஅடி வழிபடின் என்றும்
பாசத்தை நசித்து இவண் பரப்பிரம வாழ்வைத்
தாசர் பங்கு ஆக்கிடும் சரவணபவவே.

3

தம்மை வழிபடும் தேவர்கள்தம் காவலனின் மணம் கமழுகின்ற சிறந்த திருவடியை, எக்காலத்தும் சரவணபவ மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வந்தால், மும்மலங்களை அழித்து, இவ்வுலகில் பரம்பொருளுடன் கலந்திருக்கும் “சீவன் முத்தர்” எனும் மேலான வாழ்க்கையை, சரவணபவ என்னும் மகாமந்திரம் அடியார் உடைமை ஆக்கும்.

அருள்நலம் உள்ளவன் ஆதிமுன் உள்ளான்
பொருள் நலம் உள்ளவன் பூசித அடியார்க்கு
இருள்நிலம் எய்தினும் இதமுடனே அத்
தருணத்தில் காப்பது சரவணபவவே.

4

அருளாகிய நன்மை உடையவன். படைக்கப்பட்டவை அனைத்திற்கும் முதலானவன். பழைமையாக உள்ளவன். பொருளாகிய நன்மையாக இருப்பவன். வணங்கும் அடியார்கள் இருள் நரகத்தை அடைந்தாலும் அந்த நேரத்தில் காத்தருள்வது சரவணபவ எனும் மகாமந்திரமேயாகும்.

பொடிபொலி மேனியன் புரண வியோம
வடிவுஉடை அயில் உடை மனன் அடி கைகூப்பு
அடியவர்க்கு இடுக்கண் இவ்அவனியில் குறுகின்
சடிதியில் தடுப்பது சரவணபவவே.

5

திருநீறு விளங்கும் திருமேனியுடையவனும், முழு நிறைவான ஆகாச வடிவுடையவனும், வேற்படை ஏந்திய அரசனுமான இப்பெருமானது திருவடிகளை, “சரவணபவ” மந்திரத்தைச் சொல்லிக் கைகளால் கும்பிடும் அடியார்களுக்கு இம்மண்ணுலகில் துன்பம் வருமாயின் உடனே காத்தருளுவது சரவணபவ எனும் மகா மந்திரமேயாகும்.

மஞ்சிகைச் செவியோன் மயில்பரி ஊர்வோன்
தஞ்சம் என்றவர்க்கு அருள்தரு சமர்ஊரான்
செஞ்சரண் வாழ்த்துநர் திருவடி சேர்வார்
சஞ்சலம் தவிர்ப்பது சரவணபவவே.

6

குண்டலம் அணிந்த திருச்செவிகளுடையவனும், மயிலாகிய குதிரைமேல் ஏறிச்செல்பவனும், அடைக்கலம் என்ற அடியார்களுக்கு அருள்புரியும் திருப்போரூரில் எழுந்தருளியவனுமான இப்பெருமானுடைய சிவந்த திருவடிகளைத் துதிப்பவர்களும், அத்திருவடிகளைத் தியானிப்பவர்களும் அடையும் துன்பங்களை நீங்குவது சரவணபவ என்னும் மகாமந்திரமேயாகும்.

பொங்கிடு புனலில்அம் பூவில் வெம்கனலில்
எங்கணும் உளவெளியில் வளி பகலில்
கங்குலில் அடியவர் கருத்து நன்குஆகச்
சங்கடம் தீர்ப்பது சரவணபவவே.

7

பொங்கி எழுகின்ற நீரிலும், அழகிய பூமியிலும், வெம்மையான நெருப்பிலும், எவ்விடத்திலும் பரவியுள்ள ஆகாசத்திலும், பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும், தம் அடியார்களின் எண்ணங்களை நன்றாக நிறைவேறும்படி செய்து, அவர்களுடைய துன்பங்களை நீக்குவது சரவணபவ என்னும் மகாமந்திரமேயாகும்.

தென்திசைக் கோன்விடு திரிவிதத் தூதர்
குன்றுஎனும் புயமலை குலுங்க முக்குடுமி
வென்றிகொள் கடம்தடி வீசி வெம்பிடினும்
தன் துணையாவது சரவணபவவே.

8

தெற்குத் திசையின் அரசனான இயமன் ஏவுகின்ற மூன்று வகையான தூதர்கள், குன்று என்று கூறும்படியாக உயர்ந்த தோள்களாகிய மலைகள் அசையும்படி வந்து முத்தலைச் சூலம், வெற்றியைத் தரும் கயிறு, தண்டம் ஆகிய ஆயுதங்களை வீசிக்கொண்டு கோபித்தாலும், அந்த நேரத்தில் அடியார் தம்மைக் காத்தருளும் துணையாக இருப்பது சரவணபவ என்னும் மகாமந்திரமேயாகும்.

தேவியும் தேவனும் திருஉரு அருவம்
மேவி அனாதியாய் மிளிர்தல் சண்முகம்என்று
ஆவல் உற்று உணர்பவர் அழிவுறா வண்ணம்
சாவினைத் தடுப்பது சரவணபவவே.

9

“சத்தியும் சிவனும் ஆகிய, திருஉருவமும் அருவமும் பொருந்தி, அனாதி காலமாய் விளங்கி வருதல் ஆறுமுகம்”, என்று ஆசை கொண்டு அறிபவருடைய மரணத்தைத் தடுத்துக் காத்தருள்வது சரவணபவ என்னும் மகாமந்திரமேயாகும்.

இந்திரன் முனிவர்கள் ஏத்து பொன்சரணான்
செந்திரு நகர்இடம் சேர்ந்து அதில்வாழ
அம்திருப் புகழ் பாடினவர்க்கு அபயம்
தந்ததைத் தருவது சரவணபவவே.

10

தேவலோகத்து அரசனான இந்திரனும், விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் உள்ள முனிவர்களும் துதிக்கின்ற, அழகிய திருவடிகளையுடையவனது செம்மையான அழகிய வீட்டினை அடைந்து, அதில் வாழ்வதற்கு அழகிய திருப்புகழ்ப் பாடல்களைப் பாடிப்பரவிய அருணகிரிநாதருக்கு அடைக்கலம் தந்தருளியதைப் போல, அடியார்களுக்குத் தரவல்லது சரவணபவ என்னும் மகாமந்திரமேயாகும்.


Home    |    Top   |    Back