Logo


English
அடியவர்க்கடிமைநாம்

எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்


(இவ்விருத்த அடி எண்சீர்க்கழிநெடிலடியாகாதோ? என்பார்க்கு 2ல் “விறன் மிண்டனார்” 3ல் “நெடுமாறனார்” என வருவனபோற் பல தொடர்கள் வருகின்றனவாகலின் அத்திறத்ததாகாதென்பது விடையாம் என்று சுவாமிகள் கூறியிருக்கின்றார்கள்)

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

மறைமலி காழியோன் நாவுக்குஅரையர் சேம
மதிகொண்ட நாவலூரர்
பொறைமலி சண்டி பூசல் நமிநந்தி முருகர்
புகழுடைத் தண்டிஅடிகள்
நிறைமதி நீலநக்கர் சோமாசி கலயர்
நேய அப்பூதி அடிகள்
அறிவு ஒடு நேடி நின்ற அருள்ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

1

வேதம்மிகு திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பேரின்ப அறிவு கொண்ட சுந்தரமூர்த்தி, பெருமைமிகு சண்டிகேசுவரர், பூசலார், நமிநந்தி அடிகள், முருகர், புகழுடைய தண்டியடிகள், நிறையறிவுடைய நீலநக்கர், சோமாசிமாறர், கலயர், அன்புள்ள அப்பூதியடிகள் ஆகிய அறிவுடன் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.

புகழ்த் துணை மானி செங்கட்சோழர் உயர்வுஆய
பொறை இடங்கழியர் கம்பர்
புகழ்க் கழற்சிங்கர் தூயநேசர் மெய்ப்பொருளார்
புகழ்ச் சோழன் மலையன் ஒண்மை
திகழ் சிறப்புலி குறும்பர் கணநாதர் திவ்விய
திருமூலர் விறல் மிண்டனார்
அகம் அதில் நேடி நின்ற அருள் ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

2

புகழ்த்துணையார், மங்கையர்க்கரசியார், செங்கட்சோழனார், மேலான பொறுமையுடைய இடங்கழியார், கலிக்கம்பர், புகழுடைய காடவர்கோன் கழறிசிங்கனார், தூய அன்புடைய நேசர், மெய்ப்பொருளார், புகழ்ச் சோழனார், சேரமான் பெருமானார், சிறப்புலியார், பெருமிழலைக் குறும்பர், கணநாதர், அழகிய திருமூலர், விறல்மிண்டனார் முதலியோர் உள்ளத்தில் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.

நரசிங்க முனையர் மூர்த்தி ஏனாதி கலியர்
நலன் நின்ற நெடுமாறனார்
வரம் விஞ்சு சடையர் கூற்றர் அமர்நீதி அன்பின்
மதர் சேர்ஐ அடிகள் கோனார்
பரம்விஞ்சு சத்தி மூர்க்கர் ஆனாயர் உருத்ர
பசுபதிப் பெயரர் பரிவு ஆல்
அரன் என்று நேடி நின்ற அருள் ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

3

நரசிங்கமுனையரையர், மூர்த்தியர், ஏனாதியார், கலியர், வரம்மிகு சடையர், கூற்றுவர், அமர்நீதியார், அன்பு மிகுந்த ஐயடிகள் காடவர் கோனார், மேன்மைமிகு சத்தியார், மூர்க்கர், ஆனாயர், உருத்திர பசுபதியார் முதலியோர் அன்பினால் சிவபெருமான் என்று தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியார்க்கு அடிமை நாமே.

இயற்பகை நாளைப் போவார் வாய்இல்லார் மாறா
இசை ஞானி கண்ணப்பனார்
தயைப் புகழ் திருக்குறிப்பர் கலிக்காமர் காரி
தாயர் அருள் கொள் கோட்புலி
கயல்கணம் பேயர் நாகை அதிபத்தர் மானக்
கஞ்சாறர் எறிபத்தனார்
அயிர்ப்புஅற நேடி நின்ற அருள் ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

4

இயற்பகையார், திருநாளைப் போவார், வாயிலார், சோமாசி மாறனார், இசைஞானியார், கண்ணப்பனார், அன்புடைய புகழுக்குரிய திருக்குறிப்புத் தொண்டனார், கலிக்காமர், காரியார், அரிவாட்டாயர், அருள்கொண்ட கோட்புலியார், கயல்மீன் போலும் கண்களுடைய காரைக்கால் அம்மையார், நாகையைச் சேர்ந்த அதிபத்தர், மானக்கஞ்சாறர், எறிபத்தனார் முதலியோர் ஐயம் அறத் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.

செருத்துணை சிறுத்தொண்டு அண்ணல் கிழநீக்கு நல்ல
திருநீலகண்டர் அருளே
பெருத்திட விளங்கு தண்டிலே வல்ல பாணர்
பிழை அறு குலச்சிறை நெடுந்
தருக்குஉறு கணம்புளார் மாமுனை அடுவார் ஏசு இல்
சாக்கியர் உயர்ந்த அன்பால்
அரிப்புஅற நேடி நின்ற அருள்ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

5

செருத்துணையார், சிறுத்தொண்டர் என்னும் பெரியார், முதுமை நீங்கிய நல்ல திருநீலகண்டக் குயவனார், அருள் மிகுந்திருக்க விளங்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணர், குற்றமற்ற குலச்சிறையார், பெருஞ்செருக்குடைய கணம்புல்லர், சிறந்த முனை அடுவார், கெடுதல் இல்லாத சாக்கியர், உயர்ந்த அன்பினால் குற்றம் அறத் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.

பரமனைப் பாடுவார் எந்நாளும் புகழ்ந்து
பணிபவர் மனத்தை அவனில்
மருவ வைப்பவர்கள் ஆரூர் உதயம் செய் அன்பர்
வழுத்து அற்ற புலவர் அறவோர்
முருகு உடை மேனி தீண்டுபவர் சாரும் அடிகள்
முழுநீறு பூசு முனிவர்
அரண்ஒடு நேடி நின்று அருள்ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

6

பரமனையே பாடுவார், எந்நாளும் புகழ்ந்து பத்தராய்ப் பணிவார், மனத்தை இறைவன்பால் வைத்தவர் எனப்படும் சித்தத்தைச் சிவன்பால் வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், பொய்யில்லாப் புலவர்கள், அறவோர்கள், அழகுடைய மேனியைத் தீண்டுபவர் என்று கூறப்படும் முப்பொழுதும் திருமேனி தீண்டுவார், அப்பாலும் அடிசார்ந்தார் முழுநீறு பூசிய முனிவர் வலிமையுடன் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.

சேந்தனார் கண்டராதித்தர் அம் சேதிராயர்
திருவாலியமுதர் அமுதம்
மாந்து புருடோத்தமப் பேராளர் கருவூரர்
வாய்மை வேணாடர் ஆர்வம்
தீந்தகாடவர்கள் கோன் நல திருவாதவூரர்
திருமாளிகைத் தேவர் ஒன்று
ஆம்தனையும் நேடி நின்ற அருள்ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

7

சேந்தனார், கண்டராதித்தர், அழகிய சேதிராயர், திருவாலியமுதர், அமுதம் உண்ணும் புருடோத்தமர் என்னும் பெரியார், கருவூர்ச் சித்தர், வாய்மை பேசும் வேணாடர், ஆசையற்ற காடவர்கள் கோன், நல்ல திருவாதவூரடிகள், திருமாளிகைத் தேவர், பெருமானைச் சேரும்வரையும் தேடி நின்றவர் ஆவர். இந்த அருள் நிறைந்த குகேசன் அடியவர்களுக்கு அடிமை நாமே.

பிடித்திடு தண்டு குந்தம் சுரிகை முச்சூலம்
பிரபாவம் ஒடு இயங்க
மடக்கொடி வள்ளிபங்கன் மணநீறு அணிந்து
மயில் ஏறும் எங்கள் பரமன்
நடித்திடின் அகத்தின் உள்ளே நடுஆன சண்டன்
நடம் ஆட வருவது எது என்று
அடிக்கடி நேடி நின்ற அருள்ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

8

திருக்கையில் பிடித்துள்ள தண்டாயுதம், குந்தம், உடைவாள், முச்சூலம் ஒளி வீசிக்கொண்டிருக்க, இளங்கொடி போன்ற வள்ளியம்மையின் விருப்பன், மணம் கமழும் திருநீறு அணிந்து மயில்வாகனம் ஏறும் எங்கள் கடவுள் உள்ளத்தில் நடம் செய்வானாயின், நடுநிலை வகிப்பவன் என்று கூறப்படும் இயமன் நம் பக்கம் நடமாட்டம் செய்வது ஏது என்று உணர்ந்து அடிக்கடி தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்களுக்கு அடிமை நாமே.

முனைதரும் சூரனோடு அன்று அமர் செய்து கொண்ட
முருகவேள் எங்கள் பரமன்
பனிஉறு கடம்புநீல முடிமீது அணிந்து
பலகாலும் நெஞ்சின் நடுவே
கனைகழல் சிலம்ப நாடகம் செய்யின் வந்து
கவிபாதகங்கள் இலை என்று
அனுதினம் நேடி நின்ற அருள் ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

9

பகைகொண்ட சூரபன்மனுடன் அன்று போர் செய்த முருகவேள் ஆன எங்கள் இறைவன் குளிர்ச்சி பொருந்திய கடம்புமலர் மாலையைக் கரிய முடிமீது அணிந்து பல சமயமும் உள்ளத்தின் நடுவில் ஒலிக்கும் கழல் அசைய நடனம் செய்யின் வந்து சேரும் எனிற் குற்றங்கள் இல்லை என்று அனுதினம் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.

கொடுநிழல் அவிய வந்த குறை ஓவ இன்பு
குறையாத பேறும் உறவே
வடிவு அறு கவிகள் சொன்ன அருணகிரி என்று
மறவாது கொண்ட சரணம்
குடிகொள உள் அஞ்சி அஞ்சி இவை பாடுகின்ற
குமர குருதாசன் நாளும்
அடி அடைய நேடி நிற்கும் அருள் ஆர் குகேசன்
அடியவர்க்கு அடிமை நாமே.

10

பிறவி என்னும் கொடிய நோய் அழியவும், வந்த குற்றங்கள் ஒழியவும், இன்பம் குறையாத பேறு பெறவும், குற்றமில்லாத கவிகள் பாடியருளிய அருணகிரிநாதர் என்றும் மறவாமல் கொண்ட திருவடிகள் குடிகொள்ள, மனத்தில் அஞ்சி அஞ்சி இவற்றைப் பாடுகின்ற குமரகுருதாசன், நாள்தோறும் திருவடியை அடையத் தேடி நிற்கும் அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே.


Home    |    Top   |    Back