Logo


English
அடியவர்க்கடிமைநாம்

எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்


(இவ்விருத்த அடி எண்சீர்க்கழிநெடிலடியாகாதோ? என்பார்க்கு 2ல் “விறன் மிண்டனார்” 3ல் “நெடுமாறனார்” என வருவனபோற் பல தொடர்கள் வருகின்றன வாகலின் அத்திறத்ததாகாதெனப்து விடையாம் என்று சுவாமிகள் கூறியிருக்கின்றார்கள்)

மறைமலி காழி யோனா வுக்கரையர் சேம
மதிகொண்ட நாவலூரர்
பொறைமலி சண்டி போச னமிநந்தி முருகர்
புகழுடைத் தண்டியடிகள்
நிறைமதி நீல நக்கர் சோமாசி கலயர்
நேயவப் பூதியடிகள்
அறிவொடு நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

1

புகழ்த்துணை மானி செங்கட் சோழருயர் வாய
பொறையிடங் கழியர்கம்பர்
புகழ்க்கழற் சிங்கர் தூய நேசர்மெய்ப் பொருளர்
புகழ்ச்சோழன் மலையனொண்மை
திகழ்சிறப் புலிகு றும்பர் கணநாதர் திவ்விய
திருமூலர் விறன்மிண்டனார்
அகமதி நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

2

நரசிங்க முனையர் மூர்த்தி யேனாதி கலியர்
நலனின்ற நெடுமாறனார்
வரம்விஞ்சு சடையர் கூற்ற ரமர்நீதி யன்பின்
மதர்சேரை யடிகள்கோனார்
பரம்விஞ்சு சத்தி மூர்க்க ரானாய ருருத்ர
பசுபதிப் பெயரர்பரிவால்
அரனென்று நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

3

இயற்பகை நாளைப் போவார் வாயில்லார் மாற
ரிசைஞானி கண்ணப்பனார்
தயைப்புகழ் திருக்கு றிப்பர் கலிக்காமர் காரி
தாயரருள் கொள்கோட்புலி
கயற்கணம் பேயர் நாகை யதிபத்தர் மானக்
கஞ்சாற ரெறிபத்தனார்
அயிர்ப்பற நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

4

செருத்துணை சிறுத்தொண் டண்ணல் கிழநீக்கு நல்ல
திருநீல கண்டரருளே
பெருத்திட விளங்கு தண்டி லேவல்ல பாணர்
பிழையறு குலச்சிறைநெடுந்
தருக்குறு கணம்பு லார்மா முனையடுவா ரேசில்
சாக்கிய ருயர்ந்தவன்பால்
அரிப்பற நேடிநின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

5

பரமனைப் பாடு வாரெந் நாளும் புகழ்ந்து
பணிபவர் மனத்தையவனில்
மருவவைப் பவர்க ளாரூ ருதயஞ்செய் யன்பர்
வழுதற்ற புலவரறவோர்
முருகுடை மேனி தீண்டு பவர்சாரு மடிகண்
முழுநீறு பூசுமுனிவர்
அரணொடு நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

6

சேந்தனார் கண்ட ராதித் தரஞ்சேதி ராயர்
திருவாலி யமுதரமுதம்
மாந்துபுரு டோத்த மப்பே ராளர்கரு வூரர்
வாய்மைவே ணாடரார்வந்
தீந்தகா டவர்கள் கோனற் றிருவாத வூரர்
திருமாளி கைத்தேவரொன்
றாந்தனையு நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

7

பிடித்திடு தண்டு குந்தஞ் சுரிகைமுச் சோலம்
பிரபாவ மோடியங்க
மடக்கொடி வள்ளி பங்கன் மணநீ றணிந்து
மயிலேறு மெங்கள்பரமன்
நடித்திடி னகத்தி னுள்ளே நடுவான சண்ட
னடமாட வருவதேதென்
றடிக்கடி நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

8

முனைதருஞ் சூர னோடன் றமர்செய்து கொண்ட
முருகவே ளெங்கள்பரமன்
பனியுறு கடம்பு நீல முடிமீ தணிந்து
பலகாலு நெஞ்சினடுவே
கனைகழல் சிலம்ப நாட கஞ்செய்யின் வந்து
கவிபாத கங்களிலையென்
றனுதின நேடி நின்ற வருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

9

கொடுநிழ லவிய வந்த குறையோவ வின்பு
குறையாத பேறுமுறவே
வடுவறு கவிகள் சொன்ன வருணகிரி யென்று
மறவாது கொண்டசரணம்
குடிகொளவு ளஞ்சி யஞ்சி யிவையாடு கின்ற
குமரகுரு தாசனாளும்
அடியடைய நேடி நிற்கு மருளார் குகேச
னடியவர்க் கடிமைநாமே.

10


Home    |    Top   |    Back