Logo


English
அமிர்தமதி

அந்தாதி


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

அமிர்தமதிக் குடிலத்தான் நான்குமுனி
வோர்க்கு உரைத்த அடைவே போல் நீ
நிமிருமதி அறுமுனிவர்க்கு உரைத்ததுகை
காட்டாக நிலைத்த ஞாயம்
தமியன் அறிந்து அன்னணமே நில்லாது
பிதற்றி நிதம் தனியா மோகத்
தமம் அதனில் கிடந்து உழலும் நெஞ்சு உளனாத்
தகவு இழந்து பாழ்பட்டேனே.

1

அமிர்தமுடைய பிறை நிலவைச் சூடிய சடையனாகிய சிவபெருமான் சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர் என்னும் நான்கு முனிவர்களுக்கும் உபதேசித்த வழியே போலக் குமர குருபரனாகிய நீ உயர்ந்த ஞானமுடைய தத்தன், அனந்தன், நந்தி, சதுமுகன், சக்கரபாணி, மாலி என்னும் ஆறு முனிவர்களுக்கும் உபதேசித்த அந்த நிலையான உண்மையை, அடியேன் அறிந்து கொண்டு அவ்வாறே செய்யாமல், விடாமற் பேசிக் கொண்டு அடங்காத மோகமாகிய தமோ குணத்தில் வீழ்ந்து வருந்தும் மனம் உள்ளவனாக அறிவிழந்து வீணாகிவிட்டேனே! இனி என் செய்வேன்.

பாழ் ஆன உடல் எடுத்தேன் பயன் அறியேன்
பண்பு இல்லாப் பாவி ஆனேன்
தாழாத உனை மறந்தேன் எனை அறியேன்
செய்த எலாம் சமித்துக் கொண்டு
சூழ் ஏதப் பிரபஞ்ச வாசனையை
மாய்த்து உன் அடித் தொழும்பர் நாளும்
வாழ்ஏக வீட்டுனுக்கே வரவழைத்தி
அயில் பிடித்த வடிவினானே.

2

வேலைப் பிடித்த அழகனே! ஒன்றுக்கும் பயனில்லாத இந்த மனித உடம்பைப் பெற்றேன்; வாழ்க்கையின் பயன் எது என்றும் அறியமாட்டேன்; நற்குணம் இல்லாத பாவியாக உள்ளேன்; என்றுமே தாழ்வு அடையாத என் கடவுளான உன்னை மறந்து விட்டேன்; என்னைப் பற்றியும் அறிந்தேனில்லை; நான் செய்த பிழைகள் எல்லாம் பொறுத்துக் கொண்டு என்னைச் சூழ்ந்து கொண்டுள்ள குற்றமான உலகப் பற்றினை ஒழித்து, உன்னுடைய திருவடியைப் பற்றிய தொண்டர்கள் எப்போதும் உனைப் பிரியாது வாழ்கின்ற முத்தி எனும் தனி வீட்டினுக்கே என்னையும் அழைத்துக் கொண்டருள்வாயாக.

வடிவு இல்லாப் பெருவெளியா மன்னிய நீ
கருணையினால் வடிவம் ஆகி
மிடி இல்லா அடியவர்கட்கு அனுதினமும்
அருள் இறையாய் விளங்கி ஆதி
முடிவு இல்லா இறையோன் முன் இறை ஆகி
நான்மறையின் முதல் மெய் ஓதும்
கடிஇல்லா நினது அடியை இறைஞ்சு எனது
கரிசு ஒழித்துக் காத்திடாயே.

3

உருவம் இல்லாத பெரிய வெளியாக நிலைபெற்ற நீ, உயிர்களிடத்துக் கொண்டுள்ள கருணையினால் உருவமாகத் தோன்றி, வறுமையில்லாத மெய்யன்பர்க்கு நாள்தோறும் அருள்புரியும் கடவுளாய் விளங்கி, முதலும் முடிவும் இல்லாத இறைவனாகிய சிவபெருமான் முன்பு பெரியோனாக எழுந்தருளி, நான்கு வேதங்களின் உண்மையான ஓங்காரத்தை உபதேசிக்கும் அச்சமில்லாத உனது திருவடியை வணங்கும் என்னுடைய குற்றங்களைப் போக்கிக் காத்தருள்வாயாக.

காத்து ஆளும் உன்னை அல்லால் மற்றொருவர்
காப்பார் கொல் ககனத்தோர் சூர்
தீர்த்து ஆண்ட பெரியோய் கா எனத் தினமும்
மனத்து உள்கிச் சேவை செய்யும்
கோத்திரம் உளார் எவர்க்கும் குடிக் கடவுள்
ஆன அருள் கோல ஞாலம்
மாத்திரம் தானோ அறியும் வான் உலகும்
அறியும் அருள் வாழி மன்னோ.

4

தேவலோகத்தாரின் அச்சத்தைப் போக்கி அடிமை கொண்ட பரம்பொருளே! உயிர்கள் அனைத்தையும் காத்து அடிமையாகக் கொண்டுள்ள உன்னை அல்லாமல் வேறொரு கடவுள் காப்பாற்றுவாரோ? மாட்டார். காப்பாற்று என வேண்டி நாள்தோறும் மனத்தினுள் தியானித்துக் கொண்டு செய்யும் மரபு உள்ள அடியார்கள் எவராயினும், அவர்க்கு நீ குலக்கடவுளாக விளங்கும் அருள் வடிவை இந்த மண்ணுலகம் மட்டும்தானோ அறியும்? தேவலோகம் அறியுமன்றோ? அத்கைய உனது திருவருளை அடியேன் துதிக்கின்றேன்.

வாழிய நீ வாழிய ஓர் தெய்வமகள்
முருடர் மகள் மஞ்ஞை வாழி
கோழி எனும் கொடி வாழி கொற்றம் உடை
அயில் வாழி குடிலை வாழி
ஊழி தொறும் உன் அடியார் வாழி அரும்
பொன் அடி வாழ் உறவே வந்த
ஏழையேன் உய்யுமாறு இங்கு எவ்வணமோ
அவ்வணம் வந்து இயம்பிடாயே.

5

அறுமுகப் பெருமானாகிய நீ வாழ்க! ஒப்பில்லாத தேவமகளான தெய்வயானை வாழ்க! வேடர் மகளான வள்ளியம்மை வாழ்க! மயில் வாகனம் வாழ்க! சேவல் எனக் கூறப்படும் கொடி வாழ்க! வெற்றியுடைய வேற்படை வாழ்க! பிரணவம் வாழ்க! ஊழிக்காலம் தோறும் உன் அடியார்கள் வாழ்க! அடைதற்கு அரியதான உம்முடைய திருவடியிற் கலந்து வாழ்வதற்கு உன்னை நாடி வந்த அறிவில்லாதான் அடியேனிடம் வந்து பிழைக்கும் வழி இவ்வுலகில் எந்த முறையோ அந்த முறையில் கூறியருள்வாயாக.

இயம்ப அரும் உன் சேவடியை அல்லாது
மற்று எதையும் இறை என்று எண்ணேன்
நயம்படுமாறு ஆற்று ஒழுங்கும் அறிகிலேன்
திருவடியை நாடி நாடிப்
பயம்பெருகத் தீழ்ப்பு அடையும் முழுமகன் என்று
ஆம் பலனோ பலிக்கக் காண்பேன்
தயங்கேல் என்று அணைத்து அருளத்
திருவுளத்தில் நினையாத தன்மை யாதோ.

6

சொல்லுதற்கு அரியதான உன்னுடைய சிவந்த அடியை அல்லாமல் பிறிது எதையும் கடவுள் என்று நினைக்க மாட்டேன். நன்மை அடையுமாறு செய்யும் முறையும் அறிய மாட்டேன். உன் திருவடியைத் தேடித்தேடி அச்சம் மிகுதியாகக் கீழ்மை அடையும் மூடன் என்று அபயம் கூறித் தழுவிக் கொண்டு அருள்புரிய, உனது திருவுளத்தில் நினையாத குணம் எதுவோ அறிகிலேனே.

யாதும் உனை அன்றி உண்டோ நான் உனக்குப்
புறம்போ என் நாட்டம் ஆகிச்
சூது உடையோர் தொழில் போல யான் அறியாது
எனுள் இருந்து சுழற்றி ஆட்டும்
சாதம் அதை எனக்கு நனி அறிவிக்க
உள கருணை தான் வாராமல்
தோதகம் தான் விளைத்ததுஎது சொல்லி அருள்
அகண்ட அருள் சுகிர்த வாழ்வே.

7

எல்லையற்ற பேரருளான பேரின்ப வாழ்வே! எந்தப் பொருளும் உன்னுள் அடங்கியிருக்குமேயன்றி உன்னை விட்டு விலகி இருக்குமோ? அவ்வாறிருக்க நான் மட்டும் உன்னை விட்டுப் புறம்பாக இருப்பேனோ? எனது விருப்பம் ஆகி வஞ்சனையுடையார்போல் நான் அறியாமல் என்னுள்ளே இருந்து கொண்டு, சுழற்றி ஆட்டுவிக்கும் உண்மையை எனக்குத் தெளிவாகக் கூறுவதற்குள்ள கருணைதான் வராமல் வஞ்சம் செய்தது ஏது? எனக்குக் கூறியருள்வாயாக.

சுகிர்தம் அற்ற இறப்பினையும் பிறப்பினையும்
துணிபொடு நான் நினைக்கும் போது ஆல்
அகிவாயில் அகப்பட்ட அணி நுணலை
போல் உள்ளே அழுங்கு கின்றேன்
மகிழ்வு கெழு நீ அணைத்துக் கொள்ளாயேல்
அவ் அழுங்கல் மாறுமோ என்
விகிர்தம் எலாம் சீத்து ஆள விளங்கும் அருள்
சிவஞான விமலா விண்ணே.

8

என்னுடைய பொய் எல்லாம் நீக்கி அடிமைகொள்ள விளங்கும் அருள் வடிவான சிவஞானமாயுள்ள தூய ஆகாசமே! நன்மை இல்லாத பிறப்பும் இறப்பும் ஆகிய இரண்டனையும் தெளிவுடன் நான் நினைக்கும்போது, பாம்பின் வாயில் அகப்பட்ட அழகிய தவளையைப் போன்று மனத்துள்ளே வருந்துகின்றேன். இன்பமாய் உள்ள என் கடவுளாகிய நீ உன்னோடு சேர்த்துக் கொள்ளாயேல் அந்த வருத்தம் போகுமோ?

விண்ணவராய்த் தானவராய் இராக்கதராய்ப்
பல்கணமாய் வெறி ஆர் பேயாய்
மண்ணில் உறை மானுடராய் வல் விலங்காய்
அண்டசமாய் மணியார் பாம்பாய்த்
திண்ணிய கல்லாம் மழையாய்ப் புல் மரமாய்ப்
புழு அளியாய்ச் செடியாய் மற்றும்
எண் அரிய பிறப்பு எல்லாம் பிறந்ததற்கும்
கணக்கு உண்டோ ஏழையேனே.

9

அறிவில்லாத நான் தேவராய், தானவராய், இராட்சசராய், பலவகையான கணங்களாய், வெறி மிகுந்த பேயாய், மண்ணுலகில் வாழுகின்ற மனிதராய், வலிய விலங்காய், முட்டையில் பிறப்பனவாய், அழகுடைய பாம்பாய், உறுதியான கல்லாய், மலையாய், புல்லாய், மரமாய், புழுவாய், வண்டாய், செடியாய்ப் பின்னும் அளவிடற்கரிய பிறப்புக்கள் எல்லாம் பிறந்ததற்கும் ஓர் அளவுண்டோ?

ஏழை இங்கே இனிப் பிறக்க ஞாயம் இல்லை
கான் எவையும் இனிமை இல்லாப்
பீழை எனத் தோன்றி நினை அடைதல் நிஜம்
எனும் குறிப்பும் பிறங்கலானும்
ஊழ் உறுதி போழ்ந்து ஆளும் உருத்திரனாம்
உனை அடுத்த தானும் ஓவா
ஆழ அருள் கடல் அருணையான் வாழ்வில்
என்னையும் வை அமிர்த விண்ணே.

10

அழிவில்லாத சிதாகாசமே! அறிவில்லாத நான் இம் மண்ணுலகில் இனிமேலும் பிறப்பதற்கு ஒரு நியாயமுமில்லை. பார்க்கப்படுகின்ற எப்பொருளும் இன்பமில்லாத துன்பம் எனத் தோன்றி, உன்னை அடைதல் உண்மை என்னும் அடையாளம் விளங்குதலாலும், வினையின் வலிமையைப் பிளந்து அடிமை கொள்ளும் உருத்திரன் என்னும் கடவுளாகிய உன்னைச் சேர்ந்ததாலும், ஒழியாத ஆழமான அருள் கடலான அருணகிரிநாதப் பெருமானுடைய முத்தி வாழ்வுபோல் அடியேனையும் வைத்தருள்வாயாக.


Home    |    Top   |    Back