Logo


English

இந்நூலில் உள்ள பாடல்கள் முதலில் சுவாமிகள் இயற்றியவாறும் பின்பு சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்தும் அந்த பாடல்களுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்துமிலைந்தோன்

கட்டளைக் கலித்துறைஇந்து மிலைந்தோன் புரஞ்செறுத் தான்வளை யேந்துநல்வை
குந்த னிலைங்கையர் கோன்சினந் தானறுங் கோலமலி
இந்திர னீடார் வலன்செறுத் தானரு ளேமிகுந்த
கந்தன் றொழும்பர் துயர்செறுத் தான்சர்வ காலமுமே.

இந்துமிலைந்தோன் புரம் செறுத்தான் வளை ஏந்து நல்வை
குந்தன் இலங்கையர் கோன் சினந்தான் நறும் கோலமலி
இந்திரன் ஈடார் வலன் செறுத்தான் அருளே மிகுந்த
கந்தன் தொழும்பர் துயர் செறுத்தான் சர்வ காலமுமே.       1.


பிறைசூடிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்தான்; பாஞ்சசன்யம் எனும் சங்கைத் தன திருக்கையில் ஏந்திய சிறந்த வைகுந்தனான திருமால், இராம அவதாரத்தில் இலங்கை அரசனான இராவணனைக் கோபித்துக் கொன்றான்; நல்ல அழகுமிகு இந்திரன் பெருமைமிக்க வலா சுரனைக் கொன்றான்; அருளே மிகுந்த கந்தனோ அடியார் தம் துன்பங்களை எல்லாக் காலத்திலும் ஒழித்தான்.


வேளைச்செம் பொற்கழ லன்பர்செந் தேனை விமலைகொஞ்சும்
காளைக் குமரனைக் கந்தன் குகனென் கலைவலனை
வாளைப் பொருவிழி வள்ளி யவாவி மருவுநறுந்
தோளொப் பிலியைத் துதிக்குநர்க் கானந்தந் தோன்றிடுமே.

வேளைச் செம்பொன் கழல் அன்பர் செந்தேனை விமலைகொஞ்சும்
காளைக் குமரனைக் கந்தன் குகன் என் கலை வலனை
வாளைக் பொருவிழி வள்ளி அவாவி மருவு நறும்
தோள் ஒப்பிலியைத் துதிக்குநர்க்கு ஆனந்தம் தோன்றிடுமே.       2.


சிவந்த பொன்னாலாகிய கழல் அணிந்த வேளை, அன்பரின் செந்தேனை, உமாதேவி கொஞ்சும் காளைக் குமரனை, கந்தன் குகன் என்னும் கலை வல்லவனை, வாள்போன்ற கண்களுடைய வள்ளியாகிய தன் சத்தியை விரும்பி அத்துவிதமாகச் சார்ந்து நிற்கும் நல்ல தோள்களையுடைய ஒப்பில்லாதவனைத் துதிப்போர்க்கு இன்பம் தோன்றிடும்.


குரவன் குரத்தி கொழுநனி னன்னை கொழுநன்முதல்
மருக னுடைத்திருத் தாதையை வேட்டொரு மாகுரத்தி
மருகி யெனுங்குறத் திக்கடங் காநசை வைத்தினிய
பரிவுற்று நின்ற குறவனைத் தேவென்ப பண்ணவரே.

குரவன் குரத்தி கொழுநனின் அன்னை கொழுநன் முதல்
மருகன் உடைத் திருத்தாதையை வேட்டு ஒரு மாகுரத்தி
மருகி எனும் குறத்திக்கு அடங்கா நசை வைத்து இனிய
பரிவுற்று நின்ற குறவனைத் தேவு என்ப பண்ணவரே.       3.


கலைமகளின் துணைவரான பிரமதேவனின் அன்னையின் கணவரின் முதல் மகன் உடைய தந்தையை (சிவன்) மணந்த ஒரு பெரிய உமையம்மையின் மருமகள் என்னும் குறத்தியான வள்ளியம்மைக்கு, அடங்காத ஆசை வைத்து, இனிய அன்பு கொண்டு நின்ற குறவனான ஒருவனைக் கடவுள் என்று தேவர்கள் கூறுவர்.


அந்தே னிருக்குங் குரற்காம தேவியு மாசைகொள்ளும்
பந்தார் குயத்தியொண் டெய்வானை வள்ளி பதியெனெதிர்
வந்தாள வேண்டு மியாணர் வினைகளின் வாய்க்குமருஞ்
சந்தான வாழ்வு நிகராகு மோவெனத் தானிங்ஙனே.

அந்தேன் இருக்கும் குரல் காம தேவியும் ஆசைகொள்ளும்
பந்தார் குயத்தி ஒண் தெய்வானைவள்ளி பதி என் எதிர்
வந்து ஆள வேண்டும் யாணர் வினைகளின் வாய்க்கும் அரும்
சந்தான வாழ்வு நிகராகுமோ எனத்தான் இங்ஙனே.       4.


அழகிய தேன்ஆன குரலுடைய இரதியும் ஆசைகொள்ளும் பந்து போன்ற தனங்களுடைய சிறந்த தெய்வானை, வள்ளி ஆகியோரின் கணவன், என் முன்னே வந்து இங்கு நல்வினைகள் செய்வதால் கிடைக்கும் அரிய செல்வ வாழ்க்கையும் சமமாகுமோ என என்னை அடிமை கொள்ள வேண்டும்!


படைத்துப் படைத்துச் சலித்ததின் றெண்கணன் பந்துரக்கை
தொடுத்துத் தொடுத்துச் சலித்ததின் றாலத் தொடைமதன்கை
கெடுத்துக் கெடுத்துச் சலித்ததின் றேமன்கை கேட்பவர்க்குக்
கொடுத்துக் கொடுத்துச் சலித்ததின் றுன்கை குகேச்சுரனே.

படைத்துப் படைத்துச் சலித்தது இன்று எண்கணன் பந்துரக்கை
தொடுத்துத் தொடுத்துச் சலித்தது இன்று ஆளத் தொடை மதன்கை
கெடுத்துக் கெடுத்துச் சலித்தது இன்று ஏமன்கை கேட்பவர்க்குக்
கொடுத்துக் கொடுத்துச் சலித்தது இன்று உன்கை குகேச்சுரனே.      5.


குகேச்சுரனே! எட்டுக் கண்களுடையவனான நான்முகனின் அழகும் திரட்சியுமுடைய கை எழுவகைப் பிறப்புகளையும் உடைய எல்லாவற்றையும் படைத்துப் படைத்துச் சலிக்கவில்லை; மலர் அம்புடைய மன்மதனின் கை அம்புகளை எய்து எய்து சலிக்கவில்லை; இயமன் கை உயிர்களைக் கொன்று கொன்று சலிக்கவில்லை; உன் திருக்கை கேட்பவர்க்கு வரங்களைக் கொடுத்துக் கொடுத்துச் சலிக்கவில்லையே குகனே!


ஆசை பெருக்குடை யாழியி லாழ்ந்தி யனாரதமும்
பூசைக் கிணக்கமின் றோவல்கொள் பாழ்த்த புரைமனத்தின்
மாசைக் கடிந்தினி மாறாப் பெருங்களி வவ்வுதற்கு
நீசற் றிரங்குத லெக்காலம் வேல்பற்றி நின்றவனே.

ஆசைப் பெருக்கு உடை ஆழியில் ஆழ்ந்து இயன் அனாரதமும்
பூசைக்கு இணக்கம் இன்று ஓவல்கொள் பாழ்த்தபுரை மனத்தின்
மாசைக் கடிந்து இனிமாறாப் பெருங்களி வவ்வுதற்கு
நீசற்று இரங்குதல் எக்காலம் வேல்பற்றி நின்றவனே.       6.


வேலைப் பிடித்து நின்றவனே! ஆசைப் பெருக்குள்ள கடலில் மூழ்கி எப்போதும் உனது பூசைக்கு இணங்காமல் இருந்துவரும் பாழான குற்றமுள்ள மனத்தின் குற்றத்தை நீக்கி, இனி என்றும் மாறாத பேரின்பத்தைப் பற்றுதற்குச் சிறிது இரங்குதல் எந்தக் காலத்தில்?


பேரின்ப நூல்கற்றுப் பேதையர் மோகம் பிடித்தவர்கள்
பார்வை வலையி லகப்பட்ட கோலங்கள் பார்த்தவர்முன்
பாரதைச் செய்தவர் நாமிலஞ் செய்தவ னாளுடையான்
சார்புடை யீரறி வீரென்பர் வீணர்கள் சண்முகனே.

பேரின்ப நூல்கற்றுப் பேதையர் மோகம் பிடித்தவர்கள்
பார்வை வலையில் அகப்பட்ட கோலங்கள் பார்த்தவர் முன்பு
ஆர் அதைச் செய்தவர் நாம் இலம் செய்தவன் ஆளுடையான்
சார்புடையீர் அறிவீர் என்பர் வீணர்கள் சண்முகனே.       7.


பேரின்பத்தைக் கூறும் சாத்திரம் கற்றும், பெண் ஆசை பிடித்தவர்களைப் பார்வை வலையில் அகப்பட்ட கோலங்களைப் பார்த்தவர் முன்பு அதைச் செய்தவர் யார் என்றா கேட்கிறீர்கள்? நாம் செய்யவில்லை! எம்மைச் செய்யச் செய்தவன் எம்மை அடிமை கொண்டவன்! அவன் அடியார்களே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்பர் வீணர்கள்!


வீட்டி லிருக்கும் விளக்கைவிட் டேவெளி யேநெருப்புக்
கேட்டுத் திரியு மதியிலி போலுனைக் கீழ்நிலையோர்
நாட்டிற் கருது கிறாரந்த நாட்டமெ னாட்டங்கொலோ
பாட்டிற் புகழரு ணைப்பெய ரோற்குற்ற பண்ணவனே.

வீட்டில் இருக்கும் விளக்கை விட்டே வெளியே நெருப்புக்
கேட்டுத் திரியும் மதியிலி போல் உனைக் கீழ் நிலையோர்
நாட்டில் கருதுகிறார் அந்த நாட்டம் என் நாட்டம் கொலோ
பாட்டில் புகழ் அருணைப் பெயரோற்கு உற்ற பண்ணவனே.      8.


பாட்டினால் உன்னைப் புகழ்ந்த அருணகிரிநாதருக்கு உற்ற கடவுளே! வீட்டில் உள்ள விளக்கை விட்டு விட்டு, வெளிச்சத்திற்காக வெளியே நெருப்பைக் கேட்டு அலையும் அறிவில்லாதார் போல், உனைக் கீழானவர் இவ்வுலகில் நினைக்கின்றனர்; அந்தக் கீழான எண்ணம் என் எண்ணமோ? இல்லையன்றோ?


Home    |    Top   |    Back