சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
1
சிறந்த மெய்யறிவானவனே! என்னை “நீ வேறு நான் வேறு” என்றில்லாதவாறு இரண்டற்ற நிலையில் அணைத்துக் கொள்பவனே! அழகிய தேவர்கள் நாள்தோறும் புகழ்ந்து வழிபடுகின்ற பரமேசுவரனே! ஒளிமிக்க வேற்படையை ஏந்தியவனே! நெல்லை அப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அன்புடைய ஓங்காரமானவனே! எனது விருப்பத்தை நிறைவேற்றியருள்வாயாக.
கச்சு அணி மாமுகையாள் குறக்காரிகை காவலனே2
கச்சு அணிந்த பெரிய தனங்களையுடைய அழகிய குறவள்ளியின் கணவனே! மாசற்ற மெய்யான யோகிகளின் உள்ளமாகிய வீட்டைத் தனக்குச் சொந்தமாகக் கொண்டு குடியிருப்பவனே! அச்சம் இல்லாத சிவனே! நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குறைவிலாத என் கடவுளே! எனது எண்ணத்தை நிறைவேற்றியருள்வாயாக.
ஏத்தி இறைஞ்சுபவர் மினை ஏக அருள்பவனே3
உன்னைப் புகழ்ந்து வணங்கும் அன்பர்களுடைய பிறவி என்னும் பெரும் துன்பம் ஒழியும்படி அருள்புரிபவனே! மரபு என்பது ஒன்றும் இல்லாதவனே! குணம் இன்னது எனவும் நிகர் இன்னது எனவும் கூற முடியாதபடி உள்ளவனே! உயிர்களின் தலைவனே! நெல்லை அப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அழுக்கில்லாத சேயவனே! எனது உள்ளத்தை நிறைவேற்றியருள்வாயாக.
உம்பரைத் தொண்டுகொளும் கன உத்திப் பெருக்கு உடையாய்4
“எல்லாத் தேவர்களும் தமக்குத் தொண்டு செய்யுமாறு செய்தற்குரிய பெருமைமிக்க அருட்செல்வ வளம் உடையவனே! எம்முடைய பெருமானே!”, எனக் கூறி நாள்தோறும் உன்னைத் துதிப்பவரைச் சார்ந்து விளங்குபவனே! அறிவாகாசமாக உள்ளவனே! வேதங்களை அளித்தருளியவனே! நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவந்த வேற்படையை ஏந்தியவனே! எனது சிந்தையை நிறைவேற்றியருள்வாக.
கங்கையும் கொன்றையும் ஆர் கிடைக் கண்நுதல் ஆனஒரு5
கங்கை நதியையும், கொன்றை மலரையும் அணிந்த சடையினையும், நெற்றிக் கண்ணினையும் உடைய சங்கரனுடைய குமாரனே! அந்தச் சங்கரனார்க்குக் குருவே! பழி ஒன்றும் இல்லாதவனே! நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிறந்தவனே! குகப்பெருமானே! எனது புந்தியை நிறைவேற்றியருள்வாயாக.
கான மலர்க்குழலி தெய்வ குஞ்சரி காவலனே6
மணம் மிக்க மலர்களைச் சூடிய கூந்தலையுடைய தெய்வயானையின் கணவனே! கடலில் அசுரர்களுடைய வீரமாகேந்திரபுரியை மூழ்கச் செய்து தேவர்களைச் சிறை மீட்டு விண் குடியேற்றினவனே. அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குற்றமற்ற வேத முதல்வனே! எனது நோக்கத்தை நிறைவேற்றியருள்வாயாக.
பத்தர் உள் புத்து அமுதே எங்கள் பாக்கியப் பொக்கிஷமே7
அடியார்கள் மனத்தில் புதிய அமிழ்தமாக இனிப்பவனே! எங்களுடைய நன்மைகளின் வைப்பிடமாக உள்ளவனே! ஞானசத்தி என்னும் வேற்படையைத் திருமேனியின் ஒரு பக்கமாக வைத்துள்ளவனே! அத்தனே! அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள நிலையானவனே! சண்முகனே! எனது நெஞ்சத்திலுள்ள நினைப்பை நிறைவேற்றியருள்வாயாக.
பூவளம் கொண்டு ஒழுகச் சிவபுண்ணியம் தான் தழைக்கத்8
தாம்பிரபரணி எனும் ஆறானது சிறிதும் குறைவின்றி நாள்தோறம் நிலங்கள் செழுமை கொண்டு விளங்கவும், சிவபுண்ணியம் சிறந்து வளரவும் துணைபுரியும் வகையில் பெருகி ஓடிக்கொண்டிருக்கும் நெல்லையில் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அழிவில்லாத வேற்படையைத் திருக்கரத்து ஏந்தியவனே! என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றியருள்வாயாக.
சந்ததம் வந்திப்பவர் பத்திச் சாலத்தில் சிக்கிக் கொள்ளும்9
எப்போதும் துதிப்பவருடைய பத்திவலையில் எளிதில் அகப்பட்டுக் கொள்ளும் செம்மையும் அழகும் வாய்ந்த அன்புடையவனே! உமாதேவியின் செல்வமாக விளங்கும் உயர்ந்த பொருளே! தேவர்கள்தம் தலைவனே! அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அழிவில்லாத எம்பெருமானே! என்னுடைய ஞானத்தை நிறைவு பெறச் செய்வாயாக.
சங்கையில் உன்புகழைத் தினம் சாற்றிய எந்தைபிரான்10
அளவற்ற உனது புகழைத் தினந்தோறும் பாடித்துதித்த எனக்குத் தந்தையாகிய அருணகிரிநாதப் பெருமானுடைய கடவுளே! இம்மண்ணுலகில் உன்னையன்றி என்னை உய்வித்தருளியவர் எவர் உள்ளார்? நீயே அன்றோ என்னை உய்வித்தருளியவன். நெருப்பை திருமேனியாகக் கொண்டவனே! அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குற்றமிலாதவனே! எனது வழிபாட்டினை நிறைவேற்றியருள்வாயாக.
குறிப்பு:- திருநெல்வேலிச் சிவாலயத்திலுள்ள சண்முகமூர்த்தி திருக்கோவில் பூதிமங்கிகியிருத்தலை தேசிகர் கண்ணுற்று உளம் வருந்துநராய் அற்றைப் போதாகிய ஆடி மாத 28 ஆம் நாள் “சீருடையாரியனே” என்றற் றொடக்கத்து இவ்விருபதாந் திருப்பதிகம் பாடியருளினார். இதன்கண் முதற்கட் சீருடமை தோன்றி நிற்றலும் எனதுள்ளத்தைப் பூர்த்திசெய் என்னும் வேண்டுகோள் பெருகி நிற்றலும் காணக்கிடக்கின்றனவே. அக்கோவிலும் அடுத்த ஆண்டிற்றானே செழுமை பூத்து விளங்குதலைத் தேசிகர் கண்ணுற்று உவகை பூத்தாரென்னும் விவரம் சரித்திரத்துங் காணலாம்.