Logo


English
உலக வாழ்வு
வஞ்சிவிருத்தம்


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

உலக வாழ்வை உறுதி என்று
அலையும் மூடர் அகம் எலாம்
கலகமே செய் கருவியார்
வலைவிடாது வளையுமே.

1

இவ்வுலக வாழ்வை உறுதியானது என்று நம்பி, எப்போதும் அலைந்து திரியும் மூடருடைய மனமெல்லாம், கலகம் செய்யும் ஐம்பொறிகள் என்னும் வலைவிடாமல் வளைக்கும்.

சாமி நாத சண்முகா
காமன் நோபு கன்மம் ஏ
வாமலே செய் வந்து எனாய்
நேமம் நேடு நெஞ்சமே.

2

நியமம் தேடும் மனமே! சாமிநாதனே! சண்முகா! நீ வந்து மன்மதன் வருத்தும் செயலை என்மேல் ஏவாமல் ஏவாமல் செய் என்பாயாக.

பூசி வா விபூதி நீ
றுஆசி லாத மேனிமேல்
மாசு இல் பூதி மல்குவாய்
நேசம் ஆனா நெஞ்சமே

3

அன்பான மனமே! குற்றமில்லாத உடம்பின்மீது நாள்தோறும் திருநீற்றைப் பூசி வருவாயாக! அவ்வாறு செய்து வந்தால் குற்றமில்லாத செல்வத்தை மிகுதியாக அடைவாய்.

காறு கெட்ட கந்தனால்
ஊறு அறுக்க உள்ள நீ
வேறு எழுத்தை வெஃகுறேல்
ஆறு எழுத்தை அன்றியே.

4

அளவில்லாத கந்த அருளால் உன் துன்பத்தை ஒழிக்கவுள்ள நீ திருவாறெழுத்தையன்றி வேறு எழுத்தை விரும்பாதே.

சாமம் ஓது மா சதா
வீமன் மைந்தன் மேனி ஆம்
ஓமும் எம்பிரானின் ஒர்
ஏம மந்த்ரமே அரோ.

5

சாம வேதம் கூறும் சதாசிவப் பெருமான் மகனான எமது கடவுள் குகேசனுடைய திருமேனியாகும் ஓங்காரமும் இனிய மந்திரமாகும்.

இறைமுன் இட்டு உணாத ஊண்
கறையை ஒக்குமே கலாம்
உற அறுத்த ஊண் இடேல்
வெறிது இல் சுத்தன் வேலனே.

6

இறைவன் முன்னே படைத்து உண்ணப்படாத உணவு நஞ்சை ஒக்கும். அறிவுடைய தூயன் வேலன் அவனுக்குக் கொடுமையாக உயிரைக் கொன்ற மாமிசத்தை நைவேத்தியம் என்று படைக்காதீர்.

நிலவு மேனி நிருமலப்
புலவன் எந்தை பொருவு இல் கால்
மலரை நாளும் வழிபடின்
விலகும் எந்த வினையுமே.

7

ஒளிபொருந்திய திருமேனியுடைய குற்றமில்லாத புலவனாகிய எம்தந்தை முருகவேளின் ஒப்பற்ற திருவடி மலரை நாள்தோறும் வணங்கினால், எந்த வினையும் விலகிவிடும்!

வடிவு மைந்தன் அடி மலர்
வடிவு கண்டு மகிழ்பவர்
வடிவு கொண்ட மடவரல்
வடிவை வண்டு புகழ்வரே.

8

அழகுடைய மகன் முருகனின் திருவடி மலரின் அழகு கண்டு மகிழ்பவர் அழகுடைய பெண்களின் அழகைக் குறைவுடையதெனக் கூறுவர்.

ஆதி அந்தம் அற்ற சேய்
சீதம் விஞ்ச சேவடிப்
போது கண்ட போதையர்க்கு
ஏது அனந்தை இச்சையே.

9

முதலும் முடிவும் இல்லாத சேயின் குளிர்ச்சியை வெல்லும் சிவந்த திருவடி மலரைத் தரிசித்த அறிஞர்க்கு உலகப்பற்று ஏது?

இச்சை நோயர் எத்துணைப்
பச்சை மாழை பார்க்கினும்
துச்ச ஆசை சோர்வரோ
உச்சு வாச உள்ளமே.

10

உள்ளே மூச்சுக்காற்றை இழுக்கும் மனமே! ஆசை என்னும் நோய் பிடித்தவர்கள் எவ்வளவு பசும்பொன் பெற்றாலும், அற்ப ஆசையில் சோர்வடைய மாட்டார்கள்!

வரையிலும் பை வண்டு அறை
சுரம் அடர்ந்த துறையிலும்
விரதம் நோற்க வேண்டுமோ
சரண் அடைந்த தாசரே.

11

உன்னைச் சரணடைந்த அடியார் மலையிலும் அழகிய வண்டுகள் ஒலிக்கும் காடுகள் செறிந்த இடங்களிலும் தவம் செய்ய வேண்டுமோ?

நிட்டை கூடி நிறுவினும்
சட்டி நாதர் தயவு இலார்
ஒட்டி வாழும் உரன் உறார்
விட்டிடாது விடுதியே.

12

உடம்பின்மீது பற்று வைத்துக்கொண்டு நிட்டையைச் செய்தாலும், சஷ்டித் தலைவரான கந்தவேளின் அருள் இல்லாதவர், அத்துவிதமாக வாழுதற்குரிய ஞானத்தைப் பெறமாட்டார்; விடுதலை கிட்டாது.

முத்தன் ஆன முருகனைப்
பத்தியோடு பணிகுநர்
செத்திலாத தெளிவிலே
நித்தம் வாழ்வர் நிலவியே.

13

முத்தியாக விளங்கும் முருகப்பெருமானைப் பத்தியுடன் வணங்குவோர் மரணமிலா ஞானத்துடன் இவ்வுலகில் நித்தியமாக வாழ்வார்கள்.

அருணை நாதன் அறிவினால்
மருவு தேவ மணி அருள்
முருக வேளை முழுவதும்
கருதும் யோகு கமழுமே.

14

அருணகிரிநாதரின் ஞானத்தால் கூடும் சிவபெருமான் அருள், முருகவேளை முழுவதும் நினைக்க யோக மணம் வீசும்.


Home    |    Top   |    Back