Logo


English
உள்ளக்களி
வேறுஎழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கருவிளங்காய், கருவிளங்காய், கருவிளங்காய், கருவிளங்காய்,
கருவிளங்காய், கருவிளங்காய், கருவிளங்கனி


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

கடல் சுலவு நிலையமிசை மகளிர் அகல் குறியில் ஒரு
கடவை வழி வளுவளு என வருமனிதரைக்
கடவுள் சுதர் எனும் இழிவு புரைய ஒரு குறை இழிவு
கழற வழி எவளவும் இல் கடவுள் மகனாய்
மிடல் மகிமை ஒளி வடிவம் மிளிர வெளிவரு முருகை
விகிர்தம் அற எனது மனம் நினை நிலைமையால்
நடலைகெட அவல நசை உழலைகெட இதலைகெட
நவில் அரிய பரம சுகம் அதை அடைவனே.

1

கடல் சூழ்ந்த இம்மண்ணுலகில், மாதரின் அகன்ற அல்குலில் ஒரு குற்றமான வழியில், வளுவளு எனப் பிறந்து வெளிவரும் மனிதரைக் கடவுள் மகன் எனும் இழிவு போன்று, ஒரு குறைவும் இழிவும் சொல்ல வழி எவ்வளவும் இல்லாத கடவுள் மகனாய், வலிமையும் பெருமையும், ஒளியான வடிவமும் ஒளிவீச, வெளியே தோன்றிய முருகனைப் பொய்ம்மையின்றி எனது மனம் நினைக்கும் நிலைமையால், என் துன்பம் ஒழிய அவலமான ஆசை என்னும் மனச் சுழற்சி ஒழிய, பிறப்பு ஒழிய சொல்லற்கரிய பரம சுகத்தை அடைவேன்!

திரிநகரம் எரிய எதிர் பக அவுணன் இயமன் ஒளிர்
தினகரனை விது மதனன் அயன் அவன் மகன்
கரியசுரன் வலிய சிறுவிதி இளவல் இவர்கள் உயர்
கறுவம் அற முறுகி விறல் அணி கலிசம் ஆர்
முருகு இதழி கிளுவை விளஅணி பரம சிவனுடைய
முருகன் என அருமறைகள் முரசம் அறையும்
ஒருவன் எனது இதய மலர் உளன் இனி ஒர் விளரி இலை
உறுவது அவன் அரிய இணை அடியின் நிழலே.

2

முப்புரம் எரிய எதிர் கொக்கு வடிவான அசுரன், இயமன், ஒளிவீசும் சூரியன், சந்திரன், மன்மதன், பிரமன், அவன் மகனான கரிய கடவுளான திருமால், தக்கனின் மக்கள் ஆகியோரின் பெரிய செருக்கு ஆகியவற்றை அணியும் பரமசிவனுடைய புதல்வன் முருகன் என அரிய அறும்படிக் கோபித்த வீரர் அணியும் வன்னி, மணமுள்ள கொன்றை, கிளுவை (ஒரு வகை மரம்) விளா வேதங்கள் முரசறைவது போல் கூறும் ஒருவன், எனது இதயமலருள் உளன். இனி எவ்வித ஆசைப் பெருக்கமும் இல்லை! நான் அடைவது இனி அவனுடைய அடைதற்கரிய இணையடிகளின் நிழலேயாகும்!

வருகை செலவு என அறையும் இருதிறமும் இறுதி உற
வளர் மவுன ஒரு மொழியை அருளும் இறையோன்
பரிபுரமும் இறைமணியும் மளமள என ஒலிதர ஒர்
பசிய சிகிமிசை உளவு பவுள் சுடைய கோன்
கருமுகையும் நெளி பணமும் மிலையும் மலை மகள் உடைய
கர முருகன் அனுதினம் என் மனதில் உளன் ஆல்
மருவலர்கள் பகைமை இலை உறுவல் உறு பிணிகள் இலை
வறுமை இலை உறுகண் இலை மடமை இலையே.

3

பிறப்பு இறப்பு எனக் கூறப்படும் இருவகையும் ஒழிந்து போக நிலைபெறும் மெளன மொழியை அருளிய இறைவனும், சிலம்பும் சிறுமணிகளும் பளபள என்று ஒலிக்கவும், ஒரு பச்சை மயில்மீது செல்வோன் ஆன பெருமையுடைய அரசன், சாதிப் பூமாலையும் நெளியும் அரவமும் சூடும் மலைமகளான உமாதேவியின் திருக்கரத்தில் அமர்ந்தருளும் முருகன். அவன் அனுதினமும் என் மனதில் உள்ளான். ஆகையால், பகைவருடைய பகையுமில்லை! துன்பந்தரும் நோயுமில்லை! வறுமை இல்லை! அச்சமில்லை! அறியாமையில்லை!

பைந்துளவ மவுலியும் அயனும் இமையவரும் நறிய
பனி மலர்கள் கொடு புசனை புரியவளர்தே
உய்ந்திட உள் இருடிகள்நல் உபநிடத மவுனம் உள
உயர் மகிமை உடையவர்கள் நினைவில் உள கோ
ஐந்து முகன் உருவினிடம் மிளிர் அமலை முருகன் எனும்
அருள் இறை என் மனம் அதனில் உளன் இனி அரோ
நைந்து ஒழியும் மறம் முழுதும் முதியமல வலி அழியும்
நாடு உடைய நமன் உருமும் வருவது இலையே.

4

பசிய துளசி மாலையணிந்த முடியுடைய திருமாலும், அயனும், தேவரும், மணமும் குளிர்ச்சியுமுடைய மலர்களைக் கொண்டு பூசை செய்து கடவுளர் உய்ந்திட நினைக்கும் ரிஷிகளும் நல்ல உபநிடத அமைதி உள்ள உயர்ந்த பெருமையுடையவர்களும் தம் நினைவில் உள்ள அரசனானவன், ஐந்துமுகன் திருமேனியின் இடப்பாகத்தில் ஒளிவீசும் அமலையான உமாதேவியின் மகன் ஆன முருகன் என்னும் அருள்புரியும் இறைவன் என் மனத்தில் உள்ளான். அதனால் இனிப் பாவம் முழுதும் மெலிந்து ஒழியும். பழைமையான ஆணவமல வலிமையும் அழியும். நடுவுநிலையுடன் நடக்கும் இயமனுடைய அச்சமும் வருவதில்லை!

முண்டிதம் இல் சிறு சிகையும் இடையில் அணி கவுசனையும்
முழு மதியம் என மிளிரும் முகமும் ஒருகைத்
தண்டும் உரம் உறு புரியும் இளமை உடை உருவும் எழில்
தர இலக இருடி சுரர் அடிகள் எவரும்
கண்டு நலன் அடைய என அமிர்தம் மழை பொழி பெரிய
கருவி கவி பழநிமலை உறை பெரியவன்
தொண்டன் என உள எனது மனதில் உளன் இரவு பகல்
துணையும் அவன் அணைவும் அவன் நினைவும் அவனே.

5

மழித்தல் செய்யாத சிறுகுடுமியும், இடையில் அணி கோவணமும், முழு நிலவு என ஒளிவீசும் முகமும், ஒரு கையில் தண்டாயுதமும், மார்பில் முப்புரியும், இளமையுடைய உருவும் அழகு தரும்படி விளங்கிய ரிஷி, தேவர், கடவுளர் எவரும் தரிசித்து நன்மையடையவென, அமிர்த மழை பொழி பெரிய மேகம் கவிந்துள்ள பழநிமலையில் தங்கும் பெரியவனின் தொண்டன் என உள்ள, எனது மனதில் உள்ளவன், இரவும் பகலும் எனக்குத் துணையும் அவன்! ஆதரவுமவன்! நினைவும் அவனே!

பன்றிமலை தணிகைமலை அருணைமலை அரவமலை
பவணை மலை அடிகள்மலை துடவைமலை வான்
ஒன்றுமலை மயிலமலை மலயமலை கயிலைமலை
உறை விமலா குமரகுரு புவனம் முழுதும்
நின்ற நிலை அறிய எனில் உனது உருவை அறிதி என
நிகமம் எனும் முதுமறைகள் முறையிடுதலால்
என்றும் அவன் அருள்வலி கொடு எனது உருவை அறிதல் பெரிது
இலை எனும் ஒர் உயர் துணிவில் அடிமை உளனே.

6

பன்றிமலை, தணிகைமலை, திருவண்ணாமலை, நாகமலை, கழுகுமலை, சுவாமிமலை, சோலைமலை, திருப்பரங்கிரி, மயிலமலை, பொதியமலை, கயிலமலை, முதலிய மலைகளில் எழுந்தருளும் மலமற்ற குமரகுரு, உலகம் முழுவதும் நீ நிலைபெற்றுள்ள நிலையை அறியவெனில், உன் உருவத்தை முதலில் அறிந்து கொள்க என்று நிகமம் எனப்படும் பழமையான வேதங்கள் முறையிடுதலால், எக்காலத்தும் அவன் அருள் வலிமையைக் கொண்டு எனது உருவை அறிந்து கொள்ளுதல் பெரிய செயலன்று எனும் ஒரு மேலான உறுதியில் அடிமை உள்ளேன்!

பொருவுமலி திரிபும் இலி அருளும் இலி தெருளும் இலி
புகழும் இலி வசையும் இலி நசையும் இலி ஒர்
உருவும் இலி அருவும் இலி உரு அருவும் இலி நுவலும்
உரையும் இலி கரையும் இலி வெறுமையும் இலி
குருவும் இலி குடியும் இலி குலமும் இலி பெயரும் இலி
குணமும் இலி சினமும் இலி துணையும் இலி என்று
அருமறைகள் நவில் பெரிய பொருள் குமரகுரு எனவும்
அறியும் எனது இறை உணர்வு நிறைவை உறுமே.

7

ஒப்பில்லாதவன், மாறுபாடு அடையாதவன், அறிவு மயக்கமில்லாதவன், தெளிவில்லாதவன், புகல் இல்லாதவன், இகழ் இல்லாதவன், ஆசையில்லாதவன், உருவம் இல்லாதவன், அருவம் இல்லாதவன், உருஅருவம் இல்லாதவன், கூறப்படும் சொல்லும் இல்லாதவன், எல்லையும் இல்லாதவன், சூனியமும் இல்லாதவன், குருவும் இல்லாதவன், குடியும் குலமும் பெயரும் குணமும் இல்லாதவன், கோபம் இல்லாதவன், துணையும் இல்லாதவன் என்று இவ்வாறு அரிய வேதங்கள் கூறும் பெரியபொருள். குமரகுரு என்று அறியும் எனது கடவுள் உணர்வானது நிறைவடையும்!

கருத அரிய ஒரு நிலையில் இரவு பகல் இலை வலிய
கலுடமொடு சுகுர்தம் இலை மிசிரம் இலை நீள்
பெருமையொடு குறுமை இலை அகம் நடுவு புறமும் இலை
பிரிவும் இலை விழைவும் இலை மறதி நினைவு ஆம்
இருவகையும் வருதல் இலை என மறைகள் புகலும் அதை
எனை மருவு பரமகுரு எனும் முருகவேள்
கிருபை கொடு சம நிலையை அணவி எனை அணவி உள
கிருதி அற உகளம் அற அடைவல் இனியே.

8

நினைத்தற்கரிய ஒரு நிலையில் இரவும் பகலும் இல்லை; வலிய துன்பமொடு இன்பம் இல்லை; பெரிய பெருமையுடன் சிறுமை இல்லை; உள், நட, வெளி என்பனவும் இல்லை; பிரிவும் இல்லை; விருப்பமும் இல்லை; மறப்பும் நினைப்பும் எனும் இருவகை நிலையும் இல்லை; இவ்வாறு வேதங்கள் கூறும் அதனை, என்னைச் சேரும் பரமகுரு என்று அறியும் எனது கடவுள் உணர்வு நிறைவடையும்!

உயிரில் உயிர் என மருவு குமார குருபரன் என் உடை
உளம் அதனில் உளன் இனி அவ்வரிய இறைவற்கு
அயர்வில் அளி திரு உதகம் அமைதி மலய சமலர்கள்
அணு வனிலம் நறை அறிவு சுடர் உணர் உயிர்
நயம் உடைய அவி எனவும் அமைய மறவன் அனு தினமும்
நகை முகமோடு அயரும்முறை தனில் எனது பாழ்
மயல் ஒழிய இயல்பு ஒழிய உதயமொடு விளிவு ஒழிய
மலரகித அமுதநிலை தனை உறுவனே.

9

உயிருக்கு உயிர் எனச் சேர்ந்துள்ள குமரகுருபரன் என்னுடைய உள்ளத்திலும் உள்ளான்; இனி அந்த அரிய கடவுளுக்குத் தளர்வில்லாத அன்பே திருமஞ்சனநீர், சாந்தமே சந்தனம், பிராணவாயுவே மலர்கள், ஞானமே நறும்புகை, உணர்வே தீபம், உயிரே நல்ல நைவேத்தியம் என அமைய இன்ன காலமென்றில்லாமல், நாள்தோறும் புன்னகை முகத்துடன் செய்யும் அகப் பூசை முறையில், எனது பாழான மயக்கம் ஒழியவும், குணம் ஒழியவும், பிறப்புடன் இறப்பொழியவும், ஆணவமலம் நீங்கிய மரணமிலாத நிலை அடைவேன்!

ஐந்து திற நவில உள உலகின் நடை தர உரிய
அனவரதம் உயிர்கள் உயிர் எனவும் அறிவில்
ஐந்தின் அரசு எனவும் நிறை அமல அருண்மய அனக
அவிசன விசம துவித ரகித உசித
விந்தை மிக உள அருணகிரி தமிழின் இரத நுகர்
மிகையில் செவியினன் எனும் என் இறை அருளினான்
விந்து மன ஒழிவுஅடைவன் எனை அடைவன் அருள் அடைவன்
மிளிர் அமல பரமகதியினை அடைவனே.

10

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து வகையாக உள்ளதெனச் சொல்லப்படும் இவ்வுலகம் இயங்க, எப்போதும் உயிர்களுக்குள் உயிராக இருந்தும், அறிவில்லாத பொறிகள் ஐந்தின் அரசெனக் கூறப்படும் மனம் என நிறைபவனும், மலமற்ற அருள்மயன், தூயவன், துன்பமில்லாதவன், சமானமின்மை, இரண்டின்மை, மேலான அற்புதம் மிக உள்ள அருணகிரிநாதரின் தமிழ்ப் பாடலின் சுவையை நுகரும் குற்றமில்லாத செவியினன் ஆன, என்னுடைய கடவுளின் அருளினால் மாறுபடும் ஒழிவடைவேன். என் ஆத்மாவை அடைவேன். அவன் அருள் அடைவேன். ஒளிவீசும் மலமற்ற பரமகதி என்று கூறப்படும் முத்தியடைவேன்.


Home    |    Top   |    Back