Logo


English
அவனியாசை

கட்டளைக்கலிப்பா


அவனி யாசை யெலாஞ்சிக லென்றறா
வன்புக் காந்தொண் டடித்துணை காண்டலென்
றிவரு நெஞ்சசை யாநிலை நிற்பதென்
றெங்கு நின்னன்ப னாக வுலாவலென்
றுவமை யற்ற சிவானந்த வெள்ளமே
யுண்மை யாய பரம்பொரு ளேயிருங்
கவலை நூறிறு மாப்பளித் தாளுமெங்
கர்த்த னேகந்த மாதன மூர்த்தியே.

1

நாசி நாவிழி காதுட லைந்தையும்
ஞால நாடலி லேதடை செய்யினும்
ஆசை யாலகக் கண்ணுழல் பேய்மன
மரைநொ டிப்பொழு தேனு மடங்குமோ
தேசி கன்றய வொன்றுள தேலது
செவ்வ னேயடங் கித்துணை யாமலாற்
காசி கண்டவர்க் கும்பகை யாகுமே
கர்த்த னேகந்த மாதன மூர்த்தியே.

2

பாவிற் றுண்பவர் போலநில் லாமலுன்
பாத மேபுக ழுந்தனி யேனுனை
மேவிக் கொள்ளும்விர்த் தாந்தமெ லாநுவல்
வேத நூல்பல வாய விளம்பவென்
ஆவிக் குச்சரி யாயுள நன்முனி
யாண்டி யாப்பிள்ளை யைப்பிரிந் திங்கணே
காவுற் றுத்திரி யும்படி யாயினேன்
கர்த்த னேகந்த மாதன மூர்த்தியே.

3

வாட்ட டங்கண் மடந்தைய ரல்குலா
மண்ட பத்துறை மாமத வேண்முக
வாட்டங் கொண்டெனக் கஞ்சுவ தென்றுழல்
மனமி லாதகப் பார்வையி னிற்குமோர்
நாட்ட மாகி நிராலம்ப விண்ணிலே
நானி றந்துநின் றுய்வதென் றம்மையார்
கோட்டு ரோருக வள்ளிக்குங் குஞ்சரக்
கோதைக் குங்கிடைத் துள்ளநற் கொண்கனே.

4

காவி யங்க ணிளம்பிடி யார்களின்
காம வேட்கை யெலாமிங்க ணேபச்சை
நாவி யாகியு னல்லருண் மங்கையை
நாடி யின்புறற் கென்றருள் வாயெனக்
கூவி யேத்த விதித்த சுரேசனே
கோளர் கையி லெனைப்பிடித் தேகொடுத்
தாவி சாம்பி யவத்தைகொள் வானெனை
யாக்குங் காரண நானறி யேனரோ.

5

அந்த கார விலாச வுடம்புடை
யந்த கன்வந் தவைத்துயிர் கொண்டபின்
பந்த னாப்பட் கிடத்தி வயாவுடைப்
பந்து கூடி யழாவொரு வாழ்வுறச்
சிந்தை யானதை நின்பதப் போதிலே
சேர வைத்துனை யேதுதி செய்திடுஞ்
சொந்தக் காரனு மாயபின் பென்றனைச்
சோதிக் கின்றதென் னேகுக தெய்வமே.

6

இம்மை யிற்சுகந் தந்ததன் மேலுமே
லிடத்தில் வைக்கும் விழுப்பொரு ளாயவுன்
செம்மை சேர்திருத் தாள்களைச் சந்ததம்
சிந்தித் துக்கரங் கூப்பென் கரங்களால்
தம்மை யேபெரி தாப்புகழ் வீணரில்
சார்ந்து கும்பிடச் செய்தவென் புன்மையை
விம்மு நானுண் ணினைத்து நகைக்கிறேன்
வேதன் விண்டு தொழுங்கும ரேசனே.

7

என்னுற் பன்னமுவ் வாறிரண் டாண்டெனா
விங்கு ளோர்மதித் தோது கிறாரதில்
உன்னைச் சூழ்ந்ததெ லாஞ்சொலி னேழள
வுற்ற வேழிலு முட்கவ லின்றிநின்
தன்னை நாடிய வாண்டொரு நான்கரோ
சங்க டங்கொண்ட வாண்டொரு மூன்றரோ
இன்னு மென்விளை வாங்கொ லறிந்திலே
னெந்தை யேசெந்தில் வாழ்கும ரேசனே.

8

பன்றி யொன்றக னேமியைத் தோண்டவும்
பறவை யொன்றகல் வானிற் பறக்கவும்
நின்ற முக்க ணுடைப்பெரு மானுடை
நித்தி யானந்த மைந்தவிங் குன்றுணை
யன்றி வேறொர் துணையெனக் கில்லையே
யைய னேநம்பி னோரைநீ கைவிடாய்
என்ற சொல்லும்பொய் யாகுங் கொலோவிடா
வீரம் வைத்தின்ப மேகொளச் செய்தியே.

9

வெண்ட லைக்கைய ராடறக் காட்டழல்
விவர்ண மாயையைச் சுட்டடக் குந்தரம்
தொண்ட னேன்கண் டகங்களி கூர்ந்துனைத்
தொழுமெ னாதுரு வைத்தெரிந் தங்ஙனே
கண்டி டுந்தெளி வாலுன் னருட்பிர
காசத் தோடுங் கலந்துய்ய வேண்டுமால்
அண்ட வாண வணாமலைப் பேருடை
யானை யாளறு மாமுகத் தெய்வமே.

10


Home    |    Top   |    Back