Logo


English

திருப்பழநிமலை

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆழி சுலவும் புவி எலாம் ஒளி செய் விண்ணின்மணி
       அனைய மணி முடி இலங்க
அகலுள் வட வரையைச் சடால் என்ன மோதிடற்கு
       ஆன மொய்ம்பு அணி துலங்க
நாழி ஓர் அரைக்குள் நிசிசரர் உயிர் முருக்கும் ஒரு
       நலிவில் வடிவேல் விளங்க
நடு அற்ற ஈனப் பிசாசுகள் பிரேதங்கள்
       நடை விட்டு உளம் கலங்க
வேழம் இவர் இந்திராதி திசைநாதர் தவநாதர்
       வெருவு உற்று உன் அடிவணங்க
விண்தலமும் மண்தலமும் அசைவுற்று நிலைபிசகி
       மேருகிரியும் குலுங்க
ஊழி முடிவு என நவிரம் ஏறும் முதல்வா என்றன்
       ஊறுகெட என்று வருவாய்
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

1

  எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! கடல் சூழ்ந்துள்ள மண்ணுலகம் முழுவதும் ஒளியைப் பரப்பும் சூரியனைப் போன்ற திருமுடி விளங்கவும், அகன்ற மந்தரமலையைத் திடீர் என்று தாக்குவதற்கு ஏற்ற வலிமையுள்ள திருத்தோள்களில் அணிகலன்கள் விளங்கவும், ஓர் அரை நாழிகைக்குள் அசுரர்களுடைய உயிர்களை அழிக்கவல்ல அழிவற்ற ஒரு கூர்மையான வேற்படை விளங்கவும் நீதியில்லாத இழிவான பிசாசுகளும் பிரேதங்களும் தம்முடைய இழிவான செயலைவிட்டு மனக் கலக்கம் அடையவும், ஐராவதம் என்னும் யானைமேல் ஏறிச் செல்லும் இந்திரன் முதலானோர், திக்குப்பாலகர், தவத்தலைவர்கள் அச்சம் கொண்டு உன்னுடைய திருவடிகளை வணங்கவும், விண்ணுலகும் மண்ணுலகும் அசைந்து தத்தம் நிலை கெடவும், மேருமலையும் குலுங்கவும், ஊழியின் இறுதிக்காலத்தில் மயில்மீது ஏறிவருகின்ற முதல்வனே! என்னுடைய துன்பம் ஒழிய என்று வந்தருள்வாய்? கூறியருள்வாயாக!

கண்ணே கண்மணியே கதிக்கு உரிய ஞானமே
       கருணையே கருணை ரசமே
கருவினில் கருவே தொழும்பனேன் இதய ஒண்
       கமலமே கமலமணமே
விண்ணே விண் ஒளியே நல் வேத வேதாந்தமே
       மேதக வெறுக்கை அரசே
வித்தாரம் ஆன புவனம் பரப்பு எங்கணும்
       வியாபித்து நிற்கும் நிறைவே
தண் ஏறு நின் அடியை நண்ணாத பாவி பொய்
       சாலவும் சொற்றபாவி
தக்கோர் இடத்து உறவு பண்ணாத பாவி வெகு
       தவறுகள் இழைத்த பாவி
உள்நேர் இலாத படுபாவி நான் உன் அருள்
       உறாது உய்ய இடனும் உண்டோ
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

2

   எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! என்இரு கண்களே! கண்களின் கருவிழியே! நான் நற்கதி அடைதற்குரிய ஞானமே! கருணையே! கருணையின் சுவையே! கருவினுக்குக் கருவே! அடிமையாகிய எனது இருதய தாமரையே! சிறந்த வேதவேதாந்தமே! மதிப்புமிக்க முத்திச் செல்வத்திற்குரிய அரசனே! அகன்றதான உலகப் பரப்பு முழுவதும் பரவியுள்ள நிறைவான பொருளே! நான், அருள் எனும் குளிர்ச்சி மிகுந்த உன்னுடைய திருவடிகளைச் சிறிதும் நெருங்காத பாவி; பொய்யை மிகுதியாகச் சொன்ன பாவி; நல்லவர்களிடம் நட்புக் கொள்ளாத பாவி; மிகுதியாகக் குற்றங்கள் செய்த பாவி; மனத்தில் ஒரு சிறிதும் நேர்மை இல்லாத பொல்லாத பாவி; இத்தனைப் பாவங்களைச் செய்த பெரும்பாவியாகிய நான் உனது திருவருளைப் பெறாமல் கடைத்தேறுவதற்கு வழியுமுண்டோ? இல்லையன்றோ?

எத்தனை படித்தாலும் வஞ்சனை பொறாமை தாம்
       என்னைவிட்டு அகல இலையே
இதமாக எவ்வளவு சொன்னாலும் மடமனது
       இணங்கி நின்று உருக இலையே
பத்தி நெறியார் நட்பும் எய்த இலை இனி என்ன
       பண்ணுவேன் நின் கடைக்கண்
பார்வை என் பக்கல் வருமேல் வம்பு போம் இன்பு
       பற்றும் எண் கண் நல் நெஞ்சம்
சுத்தம் அது அடைந்த பின் அவற்கு உரிய நிருமிதத்
       தொழில் நல்கு திவ்வியவயனே
சுகுர்த்த அருள் வாரியே தூய் மன வெளிக்குளே
       சுடரும் ஆனந்த வடிவே
உத்தமத்திற்கு எலாம் உத்தம விலாசமாய்
       உள்ள ஒரு பெரிய பொருளே
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

3

   எட்டுக் கண்களுடைய பிரமன் ஆணவம் நீங்கித் தூய்மை அடைந்த பின்பு அவனுக்குரிய படைப்புத் தொழிலை அளித்தருளிய தெய்வீக ஆற்றலுடையவனே! இன்ப அருட்கடலே! தூய்மையான மனவெளிக்குள் ஒளிவீசும் பேரின்பத் திருவருளே! முதன்மையான அழகுடையதாகவுள்ள ஒப்பற்ற பிரமப் பொருளே! எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! தோத்திர நூல்களையும் சாத்திர நூல்களையும் கற்றிருந்தாலும் வஞ்சனை, பொறாமை என்னும் தீய குணங்கள் என்னைவிட்டு நீங்கவில்லையே! இனிமையாக எவ்வளவு நல்ல கருத்துக்களை உரைத்தாலும் அறியாமை குடி கொண்ட மனது ஒத்துநின்று உருகவில்லையே! பத்திவழியில் செல்லும் அடியார்களின் தோழமையும் கிடைக்கவில்லையே! இனிமேல் நான் என்ன செய்வேன்? உன்னுடைய கண்களின் கடைப்பார்வையேனும் என் பக்கமாகத் திரும்புமானால் துன்பம் நீங்கும்! இன்பம் சேரும்!

நாட்டுப் படரப் பிணிகள் சோற்றுக் குரம்பையை
       நசிப்பதோ சங்கை இல்லை
நாளாகு மேல் அருட்கு ஆளாவனோ என்னு
       நடலையோ கொஞ்சம் இல்லை
கோட்டுக் குசத்திரதி கொண்கன் அலர் சொரிகின்ற
       கொடுமையோ மெத்த மெத்த
கூறும் இத் துயரெலாம் இச்சிறுவன் எவ்விதம்
       கொண்டு தெளிவான் என்ன உன்
தாட்டிக உளம் சிறிது கருதிடாதோ அடியர்
       தாபம் செகுக்கும் வள்ளால்
சரத ஐச்சுரிய சம்பன்ன பரிபூரணத்
       தண் அருள் பெருவாரியே
ஓட்டில் பெரும்பலி எடுத்து உண்ட ஒருவற்கு
       உரைத்த மாமந்திர குருவே
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

4

   அடியார்களுடைய துன்பங்களை ஒழிக்கும் வள்ளலே! நிலையான முத்திச் செல்வமுடைய நிறைவானவனே! முழுநிறைவான குளிர்ந்த அருட்பெருங்கடலே! மண்டை ஓட்டில் பெரிய பிச்சை எடுத்து உண்டவரான ஒப்பற்ற சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உரைத்தருளிய உயர்ந்த மந்திர சொரூபமான குருவே! எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! நாட்டிலுள்ள துன்பந்தரும் நோய்கள் சோற்றாலாகிய உடம்பை அழிப்பதற்கோர் அளவில்லை! நாட்கள் அதிகமாகுமானால் உன் திருவருளுக்கு நான் உரியவன் ஆவேனோ என்கிற வருத்தமோ சிறிதில்லை! திரண்ட தனங்களடைய இரதிதேவியின் கணவனான மன்மதன் ஐந்து மலர் அம்புகளைப் பெய்கின்றதால் உண்டாகும் துன்பமோ மிக அதிகம்! சொல்லப்படுகின்ற இவ்வையான துன்பங்கள் எல்லாம் இந்தச்சிறுவனாகிய யான் எந்த விதத்தில் ஏற்று அறிவுபெறுவேன் என்று உனது வலிமையான திருவுள்ளம் சிறிதளவேனும் நினைத்திடாதோ?

நெடிய உவர் சூழும் இப் பெரிய நிலை தனில் உன்
       நிஜாநந்தம் அடைய நல்லோர்
நெக்கு உருகு பத்தியோடு எண்ணிப் பல்கால நிலை
       நின்றவர் உரைத்த நெறியில்
கொடிய மனதைத் திருத்தித் தவம் செய்கிறார்
       கொங்கை மின்னார் நிதம்பக்
குழியிலே விழு நமக்கு எந்தவாறு அதுவந்து
       கூடும் என்று உள்கி உள்கிப்
பிடிபட்ட உழை எனக் குழையும் என் நெஞ்சை நின்
       பெரிய திருவுள்ளம் அறியும்
பேயினும் கடையனேன் எனினும் உனை நம்பு எனைப்
       பீடையில் நிறுத்தல் முறையோ
உடலினுக்கு உயிராகி உயிரினுக்கு அறிவாகி
       ஒளிர்கின்ற பரமபதியே
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

5

   உடம்பினுக்கு உயிராக, இருந்த உயிருக்கு அறிவிக்கும் அறிவாக, விளங்கி ஒளி வீசுகின்ற நரபதி சுரபதிகளுக்கெல்லாம் மேலானபதியே! எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! பெரிய கடல் சூழ்ந்துள்ள இப்பெரிய மண்ணுலகில் உனது உண்மை இன்பத்தை அடைவற்கு நல்லவர்கள் நெக்கு உருகு பத்தியுடன் அளவில்லாத பலகாலம் நிலைத்திருந்தவர்கள் வகுத்துக் கூறிய வழியில், பொல்லாத மனத்தைச் செம்மைப்படுத்தித் தவத்தைச் செய்து வருகிறார்கள். திரண்ட தனங்களுடைய மாதர்தம் அல்கல் எனும் குழியில் வீழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு எந்த வகையில் அந்தத் தவ ஒழுக்கம் வந்து பொருந்தும் என்று நினைத்து நினைத்து, வேடரால் பிடிக்கப்பட்ட மான் போன்று கலங்கும் என் மனத்தை உனது பெரிய திருவுளம் அறியும்! பேயைக் காட்டிலும் இழிந்தவன் என்றாலும் உன்னை நம்புகின்ற அடியேனைத் துன்பத்தில் நிலைபெறச் செய்தல் நீதியாகுமோ?

சந்ததமும் மிகை அற விளங்குபர சிவயோக
       தண்டாயுதப் பிரமமே
தண்ணளியை நாடுநற்கு இன் அமுத சாகரத்
       தாரையைப் பொழி மாரியே
எந்தையே அருள் அருள் எனக் கதறினேன் மனது
       இரங்கினாய் இல்லை இனிமேல்
எப்படி அரந்தை பொய்த்து இன்புவந்து அணையும் என்று
       இதயம் மிக்கு அயர்கின்றதே
வந்த நாள் தொட்டு இங்கு இழைத்துள்ள தீமை பெரு
       மலைபோல் இருப்பினும் வெளி
மணி முன்னரே இமக் குலம் அழிதல் போல் அழிய
       வந்து நீ உண்மை கூற
உந்தி இடை நின்று உன்னை அடையுமா திருவுளத்து
       ஒல்லை ஓர் எணம் கொளாயோ
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

6

   எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! எப்போதும் பிறவித் துன்பம் இல்லாமல் விளங்குகின்ற மேலான சிவயோக மூர்த்தியான தண்டாயுதப் பிரமமே! குளிர்ந்த அருளை விரும்புவோர்க்கு இனிய அமுதக் கடலான மழையைப் பொழிகின்ற திருவுள்ளம் சற்றும் இரங்கவில்லை; அதனால் எப்படி என் துன்பம் இல்லாமல் போய் இன்பம் வந்து சேரும் என்று நினைத்து என் நெஞ்சம் மிகத் தளர்கின்றதே! இந்த மண்ணுலகில் பிறந்த நாள் முதல் இவ்விடத்தில் செய்துள்ள தீவினைகள் பெரிய மலைபோல் இருந்தாலும், வானத்திலுள்ள சூரியன் முன்னால் பனிக்கூட்டம் கணத்தில் அழிவது போல் அழிய நீ நேரில் காட்சியளித்து, மெய்ப்பொருளை உரைக்க உயர்வில் நிலைபெற்று உன்னை அடையுமாறு உன் திருவுளத்தில் ஓர் நினைப்பை விரைந்து கொள்ளமாட்டாயா?

கருப்பையில் இராநின்ற உயிர் தனக்குப் போனகம்
       கிரமமாய் அளித்தும்
கல்லினுள் தங்கு தேரைக்கு உரிமை ஆய ஆ
       காரம் நிதமும் கொடுத்தும்
திரப்படு சினைக்கு உணவு தேடி அங்கு உதவியும்
       திதி செய் நிழல் உள்ள உன்றன்
சேவடிகளைத் தொழும் சீவனை இரட்சகம்
       செய்யாது விடுவை கொல்லோ
விருப்பு உளர் அகத்து இடை வதிந்து திமிரம் போழும்
       விகுண மெய்ஞ்ஞான யோக
வித்தார வாழ்வு தந்து எக்காலும் அழியாத
       வீடு பெறுமாறு கங்கை
உருப்படவிடாது இந்த உருவொடு முடிவு செய
       உள்கும் எம்பெரிய பொருளே
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

7

   உன் மீது அன்பு கொள்வார் மனத்தில் தங்கியுள்ள இருள் எனும் அறிமையைப் பிளக்கும் மேலான குண மெய்யறிவான யோகமெனும் பெரியதான வாழ்க்கையைத் தந்து, எக்காலத்தும் அழிந்து போகாத வீடு பேற்றைப் பெறும்படிப் பிரமன் கையில் படைக்கும்படி விடாமல், இந்தப் பிறப்போடு முடித்தற்கு நினைக்கும் எமது பரப்பிரமமே! எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! கருப்பைக்குள் இருக்கின்ற உயிர்க்கும் உணவை முறையாகக் கொடுத்தும், கல்லுக்குள் வாழும் தேரைக்கும் உரிமையுடன் உணவை நாள் தோறும் அளித்தும் உருண்டை வடிவான முட்டைக்கள் இருக்கும் கருவிற்கும் அதற்கேற்ற உணவைத் தேடிக் கொண்டுவந்து கொடுத்து உதவியும் காத்தருளும் அருள் நிழல் உள்ள உன்னுடைய செம்மையான திருவடிகளைத் தொழும் உயிரை உறுதியாகக் காத்தருள் வாயன்றோ!

கணை அன்ன தாரை விழி கொடு மெள்ள நோக்கிக்
       கருத்தைக் கெடுத்து எவரையும்
கமழ் மஞ்ச அணை மீது இருத்தி இன்னுரை தந்து
       காம ஆகமப்படிக்குக்
கணை வளைகள் கலகலென உபய கரமலர் கொண்டு
       கைச்சரச வரிசை பலவும்
காட்டி வதனத் தோடு வதனம் வைத்து இனிய நல்
       கனி என்ன உடல் சுவைத்துப்
பணையம் பறித்தவுடன் மனை விட்டு அகற்றும்
       பகட்டிகளின் நட்பு ஒரீ இப்
பரமான நின்னையே நினையும் ஒரு நெஞ்சம் என்
       பால் நிமிர அருள் தியாணர்
உணர்வு அற்ற பதகர்க்கு உதவாத தெய்வமே
       ஓதரிய வேத முதலே
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

8

   நல்ல அறிவு இல்லாத கயவருக்கு உதவிபுரியாத கடவுளே! சொல்லற்கரிய வேதத்தின் முதற்பொருளே! எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! அம்பு போன்ற கூர்மையான கண்களைக் கொண்டு மெதுவாகப் பார்த்து எண்ணத்தைக் கெடுத்து எத்தகையவரையும் மணம் வீசும் கட்டிலில் அமரச் செய்து, இனிய மொழிகள் பேசிக் காமசாத்திரம் விவரிக்கின்றபடியெல்லாம் முன்கை வளையல்கள் கலகலவென ஒலிக்க, இருகைகளான மலர்களைக் கொண்டு காம விளையாட்டுக்கள் பலவற்றையும் ஆடிக்காட்டி, முகத்தோடு முகம் சேர்த்து, இனிய சுவையுடைய பழத்தைச் சுவைப்பது போல் உடம்பைச் சுவைத்துப் பணம் பறித்தவுடன் வீட்டை விட்டே துரத்தி விடுகின்ற வேடக்காரிகளின் உறவை ஒழித்துக் கடவுளான உன்னையே நினைக்கின்ற ஒரு மனம் என்னிடத்தில் ஓங்க அருள்வாயாக!

அல் ஏறு முகில் ஒன்று நின்று ஓர் அரைக் கடிகை
       ஆசார மாரி பெயினும்
ஆயிரம் கிரணங்கள் அவிர நிமை நேரம் விண்
       அனலி கனலைச் செய்யினும்
வல் ஆண்மை தெவிளும் வங்கூழ் இமைப் பொது எங்கும்
       மல்கி விறலா வீசினும்
வாரிதிகள் கிஞ்சித்து முனை கொளினும் இப்பெரிய
       வையகம் இருக்குமோ இங்கு
எல்லாம் உன் ஆக்கினைக்கு உள்ளாய் இருந்தவை
       இருக்கின்ற பேருதவியை
எண்ணாமல் நல்நடவை நண்ணாமல் உன் அடிகள்
       எந்நாளும் உன்னாது இதே
உல்லாசம் என்று உலக மயிலில் உழி தரு மண்ணை
       யோயானும் யாவும் உணர்வோய்
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

9

   எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! எல்லாம் அறிவோனே! கருமை மிகுந்த மேகம் ஒன்று ஓர் அரைநாழிகைப் பொழுது விடாது பெருமழையைப் பொழிந்தாலும், ஆயிரம் கதிர்களை விரித்துக் கொண்டு சூரியன் இமைப்பொழுது நெருப்பைச் சொரிந்தாலும், வலிமையோடு வீசினாலும், கடல்கள் சிறிதளவு பொங்கி எழுந்தாலும், இப்பெரிய மண்ணுலகம் அழியாமல் இருக்குமோ! இவ்வுலகில் அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்தும் உன்னுடைய கட்டளைக்கு அடங்கியிருந்து, அவை ஈகின்ற பெரிய உதவிகளை நினைக்காமல், நல்லொழுக்கத்தை நாடாமல், உன்னுடைய திருவடிகளை எக்காலத்திலும் தியானிக்காமல், நானும் இதுதான் இன்பம் என்று நினைத்து உலக இன்பமயக்கில் உழல்கின்ற பேயோ? கூறுவாயாக.

உலகில் எச்செலவும் தவ விழுப்பத்தினால்
       உண்டாகும் முன் பின்னாக
உறவு உள்ள துன்பு எலாம் நீதி முன் அநீதி போல்
       ஒழியும் என்று இறைவன் நூல்கள்
சொலும் வண்மையானும் மற்று உத்தி அனுபவம் எனச்
       சொல் அளவையானும் அந்தத்
துகள் அரு தவத்தினின்றும் செல்வம் இலை என்று
       துணிவதும் தவமானது
நலன் அற்ற பொய் உரை வியர்ப்பு இவைகளால் அழிவு
       நண்ணுமென உய்த்து உணர்வதும்
நாள் நாளும் நற்றவத்து உயர்வதும் தவம் உள்ள
       நல்லவர்க்கே உண்டு இ நாள்
உலைகின்ற எற்கும் அவ் ஊழ் உள்ளதோ சொலாய்
       உரன் அருணகிரி அடிகளே
உலகு அனைத்தும் புகழ் திருப்பழநி மலைமேவும்
       ஓங்கார குருநாதனே.

10

   எல்லா உலகங்களும் புகழ்கின்ற திருப்பழநி மலைமேல் எழுந்தருளியுள்ள ஓங்கார வடிவான குருநாதனே! உலகத்தில் எந்த வகையான செல்வமும் தவப் பெருமையினால் உண்டாகும்; முன்னும் பின்னுமாக உறவு கொண்டுள்ள துன்பங்கள் எல்லாம் நீதியின் முன்னே அநீதி ஒழிவதுபோல் ஒழியும் என்று, இறைவனருளிய வேதாகமங்களாகிய நூல்கள் கூறும் வளமையாலும், உத்தி, அனுபவம் என்று சொல்லப்படுகின்ற தருக்க முறையாலும், அந்தக் குற்றமற்ற தவத்தின் மூலமாகச் செல்வம் அடைவது இல்லை என்றும் முடிவுசெய்வதும், தவம் என்பது நன்மையில்லாத பொய்ச் சொல், கோபம் இவை போன்றவற்றால் அழிவடையும் என்று நுட்பமாய் அறிவதும், நாளும் சிறந்த தவத்தில் உயர்வடைவதும், முற்பிறப்பில் தவம் செய்துள்ள நற்குணமுடையவர்களுக்கே வாய்க்கும், ஞானமடைந்த அருணகிரிநாதரின் கடவுளே! இந்நாளில் சீரழிகின்ற எனக்கும் அந்த ஊழ்வினை உள்ளதோ?


Home    |    Top   |    Back