Logo


English

ஆதரிப்பாரெவர் – விளக்கம்

இப்பாடல் கலிநிலையத் துறை (இசை) இரண்டாமெழுத்தொன்றிய சிறப்புடை அடியெதுகை ஆகும்.

1. மனம், மொழிகளுக்கு எட்டாத பேரருளாளன் ஆகிய சேய்ப் பரமனே! உலகங்களைப் படைக்கும் பிரமனையும் படைத்த மூலன் ஆகிய முழுமுதற் பரம் பொருளே! காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலையும் நன்கு காக்கும் ஒப்பற்ற பிரணவப் பொருள் ஆகிய கடவுளே! இந்த உடம்பு நீங்கினவுடன் என்னை ஆதரிப்பவர் நீயன்றி வேறு யார் உளர்.

2. உடம்புகளில் வாழும் உயிர்கள் யாவும் சேரவேண்டும் முதற்பொருளை (அதாவது வீட்டுப் பேற்றை) “ஏகன்” என்று வேதங்களால் புகழப்படும் நினது திருமுன் வைத்துள்ள சிற்றம்பலத்துப் பராபரனே! எனது உள்ளத்தில் நிறைந்துள்ள ஆறுமுகனே! இந்த உடம்பை விடுத்தவுடன் என்னை ஆதரிப்பவர் நீயன்றி வேறு யார் உளர்? (பராபரன் தனது உண்மையால் உலகிற்கு அன்னியமாகவும், வியாபகத் தன்மையால் அதற்கு அனன்னியமாகவும் விளங்குபவன்.)

3. பொன்னால் செய்த மாணிக்கங்கள் அழுந்தப் பெற்ற குண்டலங்கள் நன்கு விளங்கும் திருசெவிகள் உடையவனே! நின் சிவந்த கையில் வேல் ஏந்தியவனே! எனது பாடல்களை ஏற்றுக் கொண்ட பிரானே! இந்த உலகத்திலே யாதொரு குறிக்கோளும் இன்றி அலைகின்ற பேய்போல வுள்ள ஏழையாகிய நான் உள்ளம் முதலிய எல்லாக் கரணங்களும் செயலிழந்திட இந்த உடம்பை விடுத்தவுடன் என்னை ஆதரிப்பவர் நீ யன்றி வேறு யார் உளர்?

4. திருமால் பெருமை கொள்ளும் மருமகனே! ஐம்முகச் சிவபிரான் அளித்த வேல் முருகனே! பச்சை நிறமுடைய மயிலில் ஏறி வருபவனே! என்று பாவலர் போற்றுகின்ற வெட்சி மாலையின் மணம் கமழவுள்ள தோள்களை யுடையவனே! நான் இந்த உடம்பை விடுத்தவுடன் என்னை ஆதரிப்பதற்கு நினது திருவுள்ளம் அன்றி வேறு யார் உளர்?

5. கருங்குவளை போன்ற கண்ணுடையவன் ஆகிய என் தாயும் வேடர் குலக் கொடியும் ஆகிய வள்ளிப் பிராட்டியைத் தேவியாகக் கொள்ளும் பிரானே! என்னைப் பீடிக்கின்ற நோய்க்கு இடம் கொடுக்கும் உடம்புடையவனாய் உள்ளேன். இந்த உலகத்தில் யார் இருந்து என்ன பயன்? இந்த உயிர் உடம்பை விட்டு நீங்கினவுடன் என்னை ஆதரிப்பவர் நீ அன்றி வேறு யார் உளர்?

6. நான் இல்லறத்தில் இருந்த காலையும் அதை நீங்கித் துறவறம் மேற்கொண்டு வந்த பின்பும் எனக்கு நேர்ந்த துன்பங்களை எல்லாம் ஒழித்த அளவற்ற பேரருட் கடலாய் உள்ளவனே! நடுநிலை திறம்பாத வேற்பெருமானே! ஆசையால் பற்றப்பட்டுச் சுழலும் இந்த இழிந்த உயிர் தன் ஆட்டத்தை விடுத்தவுடன் என்னை ஆதரிப்பவர் நீ அன்றி வேறு யார் உளர்?

7. பசுமையான தினைப்புனங் காவல் கொண்டிருந்த வள்ளிப் பிராட்டியின் முன் பசுமையான இலைகள் நிறைந்த வேங்கை மரமாகி வருத்தமின்றி நின்ற பிரானே! பழநி செல்லேல் என்று என்னையும் ஒரு பொருளாகக் கருதித் தடை செய்த பிரானே! ஒளி விளங்கும் வேலுடைய வீரனே! இணையில்லாத ஞான முதல்வனே! குற்றம் நிரம்பிய இந்த உடம்பை விடுத்தவுடன் என்னை ஆதரிப்பவர் நீயன்றி வேறு யார் உளர்?

8. மேகத்தை மருட்டுகின்ற கூந்தலையுடைய தெய்வயானைப் பிராட்டியாரை மணந்த முத்தையனே! சிறந்த மயில்மீது எழுந்தருளுகின்ற தெய்வங்களின் தலைவனே! சிவனே! பெருமை தரும் பொருளே! நெஞ்சமானது வாடி வருந்தி இந்த உலகை விடுத்தவுடன் என்னை ஆதரிப்பவர் நீயன்றி வேறு யார் உளர்?

9. எனது பிறவிப் பிணியானது நீங்குதல் வேண்டி உனது சிவந்த திருவடியை நாள்தோறும் போற்றினேன். வீடுபேறு தா என்று உன்னையே சிந்திக்கவும் ஆனேன். மனக்கவலையை மாற்றும் குகப் பரமனே! இந்த உடம்பைப் பேணிவரும் அவலமானது ஒழியும்படி உயிர் நீங்கினவுடன் என்னை ஆதரிப்பவர் நீயன்றி வேறு யார் உளர்?

10. உலக மயலை வென்று திருப்புகழை அருளிச் செய்த பெருமையுடைய அருணகிரிநாத முனிவரின் உள்ளத்தில் விளங்கும் இளம்பூரணன் என்று புகழவுள்ள எண்குணங்களும் விளங்கும் இறைவனே! எல்லா உலகங்களிலும் நிறைந்துள்ள புண்ணியனே! அறுமுகனே! தொல்லையான இவ்வுடம்பை நான் விடுத்தவுடன் என்னை ஆதரிப்பவர் நீயன்றி வேறு யார் உளர்?


Home    |    Top   |    Back