Logo


English

அனவரதபாராயணாஷ்டகம்

உரை பேராசிரியர் S.P. சபாரத்தினம் MA., Ph.D கலிவிருத்தம், பண் – முதிர்குறிஞ்சி

செவ்வேட்பரமன் ஒருவனையே புகழ்ந்து பாடும் நெறி பூண்ட சுவாமிகள், விநாயகன், சிவன், உமையும் முருகனே என திட்பம் கூறியுள்ளார். இவ்வாறான நெறி பற்றி நிற்பவர் யாவராயினும் அவர் தம்மால் வணங்கத் தகுதிபெற்றவராவர் என்றும் மந்திர பீஜங்கள் பல பதித்தும் பாடப்பட்ட எட்டு பாக்கள் அடங்கிய இறைவணக்கப் பாடல்களாகும்.

1. ஞானத் திருமன்றும் எனப்படும் பொன்னம்பலத்தில் எழுந்தருளித்திகழும் இளமை நலம் பொருந்தியயானை முகத்தை உடைய விநாயகப் பெருமானும் எப்பொழுதும் மங்கள நாதமாக உள்ள பிரணவத்தின் வடிவாக உள்ள விநாயகப் பெருமானின் இளவலான குகப்பெருமானும் வேதாகமங்களில் புகழ்ந்து கூறப்படுகின்ற; முன்னைப் பாம் பொருளுக்கும் பழம் பொருளாகத் திகழ்பவனான சிவபெருமானும்; அவ்வாறே சிவத்தோடு ஒத்துப் பழம் பொருளாக விளங்கும் உமையும்ஆகிய இந் நாற்பெரும் தெய்வமும்); உண்மையில் ஒரே பரம் பொருளே; வேறுபட்ட தெய்வங்கள் அல்ல என உணரும் ஞானப் பெரியோர்களின்; உயர்ந்த பெருநிலையில் விளங்கும் திருவடிகளை நான் வணங்குவேன்.

2. கூர்மையில் சிறிதும் குறைந்து விளங்காத வேற்படையைக் கொண்டுள்ள அறுமுகப் பெருமானும்; மனம் துள்ளி அலைபாய்வதையும் வருத்தம் உறுவதையும் தவிர்த்து விடுபவனும், குளிர்ந்த பிறைச் சந்திரனை அணிந்திருப்பவனுமான சிவபெருமானும்; அழகு அல்லது அருள்வளம் என்றும் குறைவுபடாமல் உள்ள மலைமகளாம் உமையும்; ஐந்து திருக்கரங்களை உடைய கணபதியும்; என் உள்ளத்துள் எப்பொழுதும் அணையாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஒரு பரம் பொருளே எனக் கருதி வணங்குகிறேன்.

3. சூரியன், சந்திரன், அக்கினி இவர்களையே தனது மூன்று கண்களாகக் கொண்டிருக்கும் சிவபெருமானும்; அழகிய ஒளிபொருந்திய சந்திரன் போன்ற திருமுகம் உடைய உமையும்; வணங்குவாருடைய குற்றங்களைப் போக்கி விடுகின்ற ஐங்கரனான கணபதியும்; பகையைவென்று தனது ஆனந்த நிலையை அடியார்க்கு அளித்தருள் கடம்ப மாலை அணிந்த கந்தப் பெருமானும்; உண்மையில் ஒருபரம் பொருளே எனும் உண்மையை ஓதுவதன் மூலம்; இறைவனின் குளிர்ந்த கருணை மேன்மேலும் மிகுந்து விளங்க; பெருகிவரும் துன்பங்களெல்லாம் நீங்கி வாழ்வேன்.

4. அடியார்களின் மனமயக்கத்தை (அறியாமயை, மோகத்தை) நீக்குகின்ற உமை அம்பிகையையும்; மதம் வாய்ந்த யானை முகம் உடைய கணபதியையும்; அன்னியம் எனப்படும் துவித நிலையை அழித்து அத்துவிதப் பேற்றை அருளும் வேற்படை அரசனான குகப்பெருமானையும் (அல்லது அயலார் எனப்படும் பகைவரை அழிப்பவனான வேற்படை அரசனையும்); பகைவர்களின் தீமைத் தன்மைகளை நீக்கிவிடுகின்ற சிவபெருமானையும்; ஒரு பரம் பொருளே எனக் கருதி வழிபட்டால்; துன்பமாகிய புயற்காற்றை நீகிவிடுவதான அருளானது வந்து சேரும்; என்று கருதி மிகவும் நன்றாகப் புகழ்ந்து துதிப்பேன்.

5. திருமாலும் நான்முகனும் கண்டு அறியாத செந்தாமரை மலர் போன்ற திருவடியும் திருமுடியும் உடைய சிவபெருமான்; சிவானந்த மயமான உமை அம்பிகை; அடியாரைக் காக்க எப்பொழுதும் வேலோடு விரைந்து வரும் குகப் பெருமான்; யானைமுகனான கணபதி; எப்பொழுதும் தூய்மையாகவே திகழ்கின்ற ஞானமே வடிவான ஒரேபரம் பொருளே எனக் கருதி; இவ்வாறு பேதம் காணாமல் ஒன்றெனக் கண்டு வழிபடுவதே சிறந்தது எனக்கருதி மகிழ்ச்சி அடைவேன்.

6. திருவருள் புரிகின்ற ஐம், க்லீம் எனும் பீஜாட்சரங்களுடன் விளங்கும் திரிபுரையும்; பராசக்தியும்; ஞான குருவாக எழுந்தருளி ஞானப் பாற்சோறு அளிப்பவளும் “செளம்” “ஹ்ரீம்” எனப்படும் பீஜாட்சரங்களுடன் கூடியவளுமான உமையம்பிகை; குகப் பெருமான்; வணங்கும் அடியார்களுக்கு நேர உள்ள இடையூறுகள் நீங்கும் வண்ணம் அருள்புரிகின்ற திருவடிகளை உடைய கணபதி; ஏனைய தெய்வங்களினும் மேம்பட்டு விளங்கும் சிவபெருமான்; தடத்த நிலையில் இல்லாமல் சொரூப நிலையில் விளங்கி அருள்புரியும் ஒருபரம் பொருளே; இவ்வாறு ஒரேபரம் பொருளாக விளங்கி என்னைக் காத்தருள்க. (பீஜாட்சரங்கள் வரும் இத்திருப்பாடலை மிகவும் கவனத்துடன் பிழையின்றி ஓதுக).

7. ஒளிபொருந்திய நெற்றியை உடைய தெய்வயானைப் பிராட்டியார்; வள்ளிமலைத் தினைப்புனத்தில் விளங்கிய வள்ளிநாயகியார் ஆகிய இருவரின்; பேரழகையும் கண்டு களிக்கும் திருக்கண்களை உடைய, சரவணபவ எனும் திரு ஆறெழுத்துக்குரிய பெருந்தகையாம் குகப்பெருமான்; பெருமை பொருந்திய நெற்றிக் கண்ணை உடையவரும் ‘கம்’ எனும் பீஜாட்சரத்துடன் கூடியவருமான கணபதி; வளர்கின்ற அக்கினி நெற்றிக் கண்ணாகக் காணப்படும் சிவபெருமான்; உமை அம்பிகை (ஆகிய இந்நால்வரும் ஒரு பரம் பொருளே ஆதலின் அப்பரம் பொருளின்) திருவருள் என்னைக் காப்பதாக.

8. கலைமகளும் நான் மறையும் புகழ்கின்ற ஓங்காரப் பரம்பொருளான கணபதி; அழகு பொருந்திய திருமகள் துதிக்கும் திருவைந்தெழுத்துக்குரிய சிவபெருமான் நிலவுலகத்தாலும் திருமகளாலும் புகழப்படும் உமை அம்பிகை; அருட்பொலிவும் சந்தப் பொலிவும் மிகுந்த திருப்புகழ்ப் பாடல்களை அருளிய அருணகிரிப் பெருமானின் இறைவனான முருகப் பெருமான் பேரின்பக் களிப்பை உள்ளத்தில் ஊற்றுவதான பெருமை பொருந்திய திருவருள்; என்னை என்றென்றும் காத்தருள்வதாக.


Home    |    Top   |    Back