Logo


English

அட்டாட்ட விக்கிரகலீலை

(முழு முதல்வன் ஆன சிவபெருமான் உயிர்கள் உய்திகருதி நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல, அவன் திருவிளையாடலில் கொண்ட திருமேனிகள் 64 என்பர். அவற்றைப் பேரருளாளரான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இப்பாடலில் உணர்த்துகின்றார். இப் பகுதி, கலியுகம் 5000க்குச் சரியான விளம்பி வருடம் (கி.பி 1898) சுவாமிகளால் பாடப்பட்ட 48 சீர் விருத்தமாகும். இது இறைவனின் 64 திருவிளையாடல்களைக் குறித்த விபரங்களை உள்ளடக்கியது. இப்பாடலில் குறித்த அறுபத்து நான்கு மூர்த்தங்களில், கொன்றை சூடிறைக்கும், கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமைக்கும் நடுவே, சூர்தடிந்த சுடர்வேலோன் திகழும் கோலமாகிய சோமஸ்கந்த மூர்த்தம், சிறுத்தொண்டர் ஒருவருக்கு மட்டுமே அருளப்பட்ட காட்சியாகும். இறையின் இவ்வடிவை சிந்தை செய்து, வழிபட்டு வாழ்பவர் இல்லங்களில், நலம் பல திகழும் என்பது நல்லோர் வாக்கு.

இப்பாடலை முப்போதும் பாடியாடுக: ஆடாவிடினும் பாடுக, அங்ஙனம் செய்வார்க்கு உரோக நாதசம், பாபநாசம், சத்ருநாசம், ஆயுள்விருத்தி, தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி உண்டாதலோடு சர்வார்த்த சித்தியும் முத்தியும் வாய்க்குமென்பது வாய்மை என்ற சுவாமிகளின் குறிப்பும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

1. சந்திர சேகரம்: பிறை நிலவைத் திருமுடியில் அணிந்த திருக்கோலம். (சந்திரன் தக்கனின் மகளிர் இருபத்தெழுவரை மணந்தனன். அவரில் கார்த்திகை, உரோகிணி என்னும் இருவரையே விரும்பி ஏனையரைச் சிறிதும் காதலோடு பாராட்டினானல்லன். இஃதறிந்த தக்கன் சினந்து நாள்தோறும் ஒவ்வொரு கலையாகக்குறைந்து சந்திரன் முடியக் கடவன் என்று சபித்தான். அவ்வாறே திங்களும் கலைகளை இழந்து வரலாயினன். தக்கன்பால் கொண்ட அச்சத்தால், சந்திரனைக் காப்பாற்ற எவரும் முன்வந்திலர். அந்நிலையில் தனக்குப்புகல் அருளக் கூடியவர் பரமசிவனே என்று உணர்ந்து சந்திரன் அவர் திருவடியடைந்தான். பெருமான் ஒரு புதிய மலரை எடுத்து அணிவது போல அவனைத் திருமுடியில் அணிந்து இறவாப் பெருவாழ்வை அருளினான்.

இத்திருக்கோலம் உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகிய துன்பங்களை நீக்கி அழியாத பேரின்ப வீடு அருள விளங்குவதாகும்.

2. அர்த்தநாரீசுரம்: ஒரே திருமேனியில் இறைவன் வலப்பக்கத்தும் இறைவி இடப்பக்கத்தும் விளங்கும் அம்மையப்பர் என்னும் திருக்கோலம். (தோல் உடை, குழையணி, திருநீற்றுப் பொலிவு, கலப்படை ஆகியவை வலப்பக்கத்திலும், துகில் உடை, தோடு அணி, பசுஞ் சாந்து அழகு, அழகிய வளையல் விளங்கும் கையில் பசுங்கிளி ஆகியவை இடப்பக்கத்திலும் கொண்டது இத்திருக் கோலம் ஆகும்).

3. சக்கரப்பிரதானம்: திருமாலுக்குச் சக்கரப் படையை வழங்கியருளிய திருக்கோலம்.

(சிவபிரான் சக்கர வடிவமாகத் தம் கால் விரலால் தரையில் கீறியதைச் சலந்தரன் எடுத்துத் தலையில் வைத்தலும் அது சக்கரப்படையாகி அவனுடம்பைப் போழ்ந்து கொன்றது. அச்சக்கரப்படையைப் பெற விரும்பிய திருமால் சிவபிரானை நாள் தோறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு வழிபட்டுவந்தார். ஒரு நாள் இறைவன் திருவிளையாட்டாக ஆயிரம் மலர்களில் ஒன்றைக் குறையச் செய்தார். வழிபட்டுக் கொண்டிருந்த திருமால் ஒரு மலர் குறைவது கண்டு தம் கண்ணைப்பிடுங்கி மலராக இறைவன் திருவடியிலிட்டு வழிபாட்டை முற்றுவித்தார். அதுகண்டு மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கரப்படையும், கண்ணும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரும் வழங்கியருளினார்).

4. தக்ஷிண மூர்த்தம்: தென்முகப் பரமனாய் விளங்கும் திருக்கோலம். (மெய்ப்பொருள் உணரமாட்டாத நான்முகன் மக்களாய் சனகர், சனாதநர், சனந்தனர், சனற்குமரர் ஆகிய நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளி வாக்கு இறந்த பூரணமாய், மறைக்கப்பாலாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்ன திருக்கோலம்.

5. இலிங்கம்: எல்லாத் தேவர்களையும் தன்னுள் அடக்கி ஐம்புலன்களுக்கும் புலனாகும்படி விளங்கும் இலிங்கத் திருமேனி. (இது அருவுருவத் திருமேனியாம்).

6. இலிங்கோற்பவம்: தாமே முதற்பொருள் என்று மயங்கிய பிரம விட்டுணுக்கள் ஆண்டுத்தோன்றிய பேரொளிப் பிழம்பின் முடியும் அடியும் காணமுடியாது அயர்ந்து தருக்கொழிந்து வழிப்பட்டார்கள். அவர்கள் வழிபாட்டுக்கு இரங்கிச் சிவலிங்கத்தில் தோன்றி காட்சியளித்த திருக்கோலம்.

7. தக்ஷயக்கிய பங்கம்: தக்கன் வேள்வியை அழித்த திருக்கோலம்

8. சந்தியினிர்த்தனம்: மாலையில் செய்த நடனத் திருக்கோலம் (யாவரையும் காப்பாற்றுமாறு ஆலகால நஞ்சையுண்ட இறைவன், திருமால் முதலிய தேவர்கள் மத்தளம் முதலிய இசைக்கருவிகளை வாசிக்கும்படி செய்து இறைவர் நடமாடிய திருக்கோலம்).

9. சந்தத நிர்த்தனம்: ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நிகழும்படி ஆடும் நடனத் திருக்கோலம்.

10. சண்டேசாநுக்ரகம்: சண்டேசுவரநாயனாருக்கு அருள் செய்த திருக்கோலம்.

11. சலந்தரவதம்: சலந்தரன் என்னும் அசுரனைச் சக்கரப்படையால் பிளந்து கொன்ற திருக்கோலம்.

12. அகோராஸ்திரம்: அகோராத்திரம் என்னும் அம்பால் சத்ததந்து என்ற அசுரனைக் கொன்றதிருக்கோலம்.

13. ஏகபதம்: கடையூழிக் காலத்தில் எல்லா உயிர்களும் தம் திருவடியில் பொருந்த ஒரே திருவடியுடன் விளங்கும் திருக்கோலம்.

14. அசுவாரூடம்: மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டுக் காட்டிலிருந்த நரிகளை யெல்லாம் பரிகள் ஆக்கித் தாம் குதிரைச் சேவகனாகி மதுரையில் பாண்டியன் முன் எழுந்தருளிய திருக்கோலம்.

15. சத்ய சதாசிவம்: சத்தியயோசாதம், வாமதேவம், தற்புருடம், அகோரம், ஈசானம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்டு வேதமும் ஆகமமும் அருளிய திருக்கோலம்.

16. மிக்க சதாசிவம்: ஐந்து திருமுகத்துடன் விளங்கும் சதாசிவர், நிவர்த்தி, பிரதிஷ்டை வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்னும் அபரவிந்துகலைகளானும், இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்துவகாமிநி என்னும் அபரநாதகலைகளானும் சூக்குமை, அதிசூக்குமை, மிருதை, அமிருதை, வியாபிநி என்னும் பரவிந்து கலைகளானும், வியாபிநி, வியோமரூபை, அநந்தை, அநாதை, அநாசிருதை என்னும் பரநாத கலைகளானும் இருபத்தைந்து திருமுகங்களுடன் கூடி விளங்கும் திருக்கோலம்.

17. தகுலகுளேசுவரம்: தகைமை பெற்ற இலகுளம் என்னும் உலகத்தில் மணிகள் இழைத்த அரியணை மீது எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.

18. சகஜசுகாசனம்: சிவபெருமான் ஆறுதிருக்கைகளோடு தேவி இடப்பாகத்தில் விளங்கச் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.

19. கூர்மசங்காரம்: திருப்பாற்கடலைக் கடையும் மத்து ஆகிய மந்தரமலையை ஆடையாகித் தாங்கிய திரமால் செருக்குற்று தமது ஆமை வடிவத்தை மேன்மேலும் பெரிதாக்க, அதனால் திருப்பாற்கடல் கரைபுரள, உலகும் துன்புற்றது, அதனால் தம்மிடம் புகலடைந்த தேவர்களைக் காக்குமாறு அந்த ஆமையைக் கொன்று அதன் ஓட்டையணிந்த திருக்கோலம்.

20. மச்சாரி: சோமுகாசுரனை மீன் வடிவெடுத்துக் கொன்றதிருமால் தருக்குற்றுக் கடலைக் கலக்க உலகுயிர்படும் வருத்தம் கண்டு தேவர்கள் எம்பிரானிடம் முறையிட எம்பிரான் மீனைக் கொன்று அதன் கண்களை அணிந்து கொண்ட திருக்கோலம்.

21. வராஹாரி: வராக உருவம் கொண்டு இரணியாட்சனைக் கொன்ற திருமால் செருக்குற்று உலகை அழிக்கமுற்பட்ட அந்தப் பன்றியைக் கொன்று அதன் பல்லைப் பிடுங்கி அணிந்து கொண்ட திருக்கோலம்.

22. சற்குரு மூர்த்தம்: மாணிக்கவாசப் பெருமானுக்கு உபதேசம் செய்தருளிய திருக்கோலம்.

23. உமேசம்: இடதுபக்கம் தேவி விளங்க எழுந்தருளிப் பிரமதேவன் படைப்புத் தொழிலைச் செவ்வையாக நிகழ்த்த அருள்புரிந்த திருக்கோலம்.

24. உமாபதி: தேவி ஐந்தொழிலும் இயற்றிவரும்படி அருள்செய்த திருக்கோலம்.

25. ஜயபுஜங்கத்திராசம்: தாருகவன முனிவர்கள் தம்மைக் கொல்லும்படி வேள்வியில் படைத்து அனுப்பிய பாம்புகளை அச்சுறுத்தித் தம் திருமேனியில் அணிந்து கொண்ட வெற்றித் திருக்கோலம்.

26. சார்த்தூலஹரி: தாருகவன முனிவர்கள் தம்மைக் கொல்லும்படி வேள்வியில் படைத்து விடுத்த புலியை உரித்துத் தோலை அணிந்து கொண்ட திருக்கோலம்

27. பைரவம்: அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கோத்துக் கொள்ளவும் ஆண்டிருந்தபடியே வழிபட்ட அவனைக் கணநாதனாக்க அருள்செய்த திருக்கோலம்.

28. கலியாண சுந்தரம்: இறைவன் உமாதேவியை மணந்த திருக்கோலம்.

29. வடுகம்: துந்துபியின் மகனாகிய முண்டாசுரன் என்பவனை அழிக்க வடுகராகிய திருக்கோலம்.

30. கிராதம்: அருச்சுனனுக்கு அருளுமாறு வேடராக வந்த திருக்கோலம்

31. சுந்தர விருஷபவூர்தி: அழகிய இடப வடிவமாக வந்த திருமால் மீது அமர்ந்து நடத்தும் திருக்கோலம்.

32. விஷாபஹரணம்: திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் என்னும் நஞ்சையுண்டு நீல கண்டராகித் தேவர்களைக் காத்த திருக்கோலம்.

33. சுவராபக்நம்: வாணாசுரனோடு போரிடுகையில் கண்ணன் ஏவிய சீதளசுரத்தை அழிக்குமாறு சிவபிரான் உட்டிணசுரத்தை முத்தலை, நான்கு கை, ஒன்பது கண்கொண்ட படையாக ஏவிய திருக்கோலம்.

34. துகளறு க்ஷேத்திர பாலகம்: நீர்ப் பிரளயத்தால் அழிந்து போன உலகத்தை மீண்டும் படைத்துக் காத்தருளும் குற்றமற்ற திருக்கோலம்.

35. தொல்கருடாந்திகம்: சிவனாரைத் தொழக் கண்ணுதற் பரமன் திருமுன் அடைந்த திருமால் திரும்பிவரக்காலங் கடந்த போதலைக் கண்டு கயிலை வாயிலின் கண் இருந்த கருடன் சிவனாரைப் பழித்தலை அறிந்த நந்தியெம் பெருமான் தனது மூச்சுக்காற்றால் கருடனைத் தூர எறிந்தும் அண்மையில் இழுத்தும் அலைத்து அவன் தருக் கடக்கிய திருக்கோலம்.

36. முகலிங்கம்: இலிங்கத்திலேயே புன்முறுவல் திகழும் திருமுகம் கொண்ட திருக்கோலம். இது 5, 4, 3, 2, 1, இவ்வகைய முகவேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.

37. துங்க கங்காதரம்: ஒரு காலத்தில் தவி திருவிளையாட்டாகச் சிவபிரானின் இரு விழிகளையும் தம் திருக்கைகளால் மூட அதனால் உலகெங்கும் இருள் பரவி உலகுயிர்கள் துன்புறல் கண்ட பெருமான் தம் நெற்றிக் கண்ணைத்திறக்க அக்கண்ணின் தீயொளி பரவி உலகம் முன்போல் நடப்பதாயிற்று. அது கண்டு தேவியும் எம் பெருமான் கண்களினின்றும் தன் கைகளை எடுத்தனள். அக்காலை அவள் கை விரல் நகக்கால்கள் தோறும் வியர்வை தோன்றியது. அது பெருவெள்ளமாய் உலகங்களை எல்லாம் மூடுதலைக் கண்ட பெருமான் உலகுயிர்களைக் காக்க வேண்டி வெள்ளமாகிய அந்தக் கங்கையினைச் சடையில் ஏற்றுத் தாங்கினார். தூய்மையான அந்தக் கங்கையைத் தாங்கிய திருக்கோலமே கங்காதரம் ஆகும்.

38. கங்கா விசர்ஜநம்: பகீரதன் வேண்டுகோளுக்கிணங்க பிரமன் சிவபெருமான் பால் பெற்றுச் சத்தியலோகத்தில் இருக்கச் செய்த கங்கையைப் பூலோகம் செல்ல விடுத்தான். தன் வேகத்தைத்தடுப்பார் யாருமிலர் என்று தருக்குற்று வந்த கங்கையைப் பரமன் தம் சடை முடியில் ஒரு திவலையாக முடிந்து கொண்டார். பின்னர் பகீரதன் வேண்டுகோட்கிணங்கி எம்பெருமான் கங்கையை மண்ணுலகத்திற்குச் செல்லுமாறு விடுத்த திருக்கோலம்.

39. சபசோமாஸ்கந்தம்: சத்தாகிய தனக்கும் சித்தாகிய தேவிக்கும் நடுவில் ஆனந்தமாகிய முருகன் விளங்கும் மங்கலமான சச்சிதானந்த திருக்கோலம்.

40. சூரஸிம்ஹாரி: இரணியனைக் கொன்று அவன் குருதியைக் குடித்த வெறியினால் உலகங்களை அழிக்க முயன்ற வீரத்தைக் கொண்ட நரசிங்கத்தின் தோலை உரித்த திருக்கோலம்.

41. கமாரி: மன்மதனை நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கிய திருக்கோலம்.

42. யமாந்தகம்: மார்க்கண்டேய முனிவருக்காக இயமனை முனிந்து இடது திருவடியால் உதைத்த திருக்கோலம்.

43. சுசிமாணவபாவம்: முருகனே பரமகுரவன் என்பதையாவரும் உணருமாறு அவன் பால் பிரணவப் பொருள் கேட்டுநின்ற சீடபாவத் திருக்கோலம்.

44. சுபகரபிரார்த்தனை மூர்த்தம்: இறைவன் திருவிளையட்டாகத் தேவியை அவள் கொண்ட ஊடல் நீங்குமாறு வேண்டிநின்ற திருக்கோலம்.

45. நறுந்திரிபுராந்தகம்: முப்புரத்தை எரித்த நறிய திருக்கோலம்.

46. சுரர்பரசும் சுமுககங்காளம்: வாமனனாய் மூன்றடி மண்பெற்று திரிவிக்கிரமனாய் மகாபலியை ஒடுக்கிய நாராயணன் மமதை கொண்டு உலகத்துன்புறுத்தலைக் கண்டு திருவிக்கிரமனைச் சாய்த்து அவனது முதுகெலும்பைத் தண்டாகக் கையில் கொண்ட திருக்கோலம் என்பர். அஃது சிறப்புடைய பொருளன்று. பேரூழிக்காலத்தில் மாய்ந்த பிரம விட்டுணுக்களின் கங்காளந்தரித்த கோலம் என்று உணர்க.

47. இரக்த பிக்ஷைப்பிரதானம்: பிரமனுடைய தலையோட்டில் தேவர்களின் குருதியைப் பிச்சையாக ஏற்ற திருக்கோலம்.

48. இருஞ்சடரே சுடர்கவுரீவரப் பிரதம்: பேரொளி வீசும் கெளரியாக இறைவி விரும்பிய வண்ணம் அருள் செய்த திருக்கோலம்.

49. மஹாபாசுபதசொரூபம்: அருச்சுனனுக்குப் பாசுபதப்படை அருளிய திருக்கோலம்.

50. அணி தோன்று புஜங்கலளிதம்: கருடனுக்கு அஞ்சித் தம்மை வழிபட்டுப் புகலடைந்த பாம்புகளை (அவைகள் ஏன் கருடா? சுகமா? என்று எக்களிப்புடன் வினவும் ஆற்றலும் சிவசன்னிதியில் தன் ஆற்றலை யிழந்து எல்லாரும் இருக்கும் இடத்தில இருந்தால் சுகம் தான் என்ற விடையை அப்பாம்புகள் கேட்டு மகிழ்வும் கொள்ளும் வண்ணம்) தமது திருமேனியில் அழகு விளங்கும்படி அணியாகக் கொண்ட திருக்கோலம்.

51. ரிஷபாந்திகம்: பேரூழிக் காலத்தில் எல்லாவுலகும் அழிவுறுதலைக் கண்டு உய்திகருதித் தம்மை வந்தடைந்த தருமதேவதையை விடையாகக் தமக்குக் கொண்டு அத்தேவைதைக்கு அருளிய திருக்கோலம்.

52. தோமறுகஜயுத்தம்: தேவர்களை வருத்துவதையே தன் தொழிலாகக் கொண்ட கயாசுரன் என்னும் யானை வடிவம் கொண்ட அரக்கனுக்கு அஞ்சிக் காசியம் பதியில் தம்மைப் புகலடைந்த தேவர்களைக் காத்தருளுமாறு கயாசுரனைக் கொன்று யானைத்தோலை உரித்துத் தமது திருமேனியில் அணிந்து கொண்ட குற்றமற்ற திருக்கோலம்.

53. விந்தை விளம்பு கஜாந்திகம்: சூரபதுமனின் மகனாகிய பானுகோபனுடன் நேரிட்ட போரில் தனது கொம்புகள் ஒடிந்து பெருந் துன்பத்துக்கு ஆளான தெய்வயானை ஆகிய ஐராவதம் திருவெண்காட்டில் வழிபட அதற்கு அருள் செய்த வியப்புடைய திருக்கோலம்.

54. வீணைதயங்குதக்ஷிண மூர்த்தம்: தும்புரு, நாரதர், சுகர் முதலிய முனிவர் பெருமக்களுக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்தியருளுதற்காகத் தமது திருக்கைகளில் வீணையை ஏந்தி வாசித்துக் காட்டிய தென்முகக் கடவுள் திருக்கோலம்.

55. மேதக யோக வினோதமதாக விளங்குதக்ஷிண மூர்த்தம்: சிவபெருமான் முன்னொரு காலத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமரர் என்னும் பிரமபுத்திரர்கள் எளிதில் உணரும் வகையாக மேன்மைத் தன்மையுடைய யோக நிலையை வினோதமாக அருளிய யோகதக்ஷிணாமூர்த்தம் ஆகிய திருக்கோலம்.

56. விமல பிக்ஷாடனம்: தாருக வனத்து முனிவர்களுக்கு உண்மையை உணர்த்துவதற்காக எடுத்த பிக்ஷாடனத் திருக்கோலம்.

57. கவலையுத்தாரணம்: தன்னைவந்து புகலடைந்த அடியார்கள் இடுக்கண்களைத் தொலைத்து உதவியருளும் திருக்கோலம்.

58. வேதகணம் புழும் விதிசிரகண்டனம்: வேதக் கூட்டங்கள் போற்றுகின்ற பிரமதேவனின் தலையைக் கைந்நகத்தால் கிள்ளியெடுத்த திருக்கோலம்.

59. கவுரி லிலாசமந்விதம்: உமாதேவியாருடன் வினோதார்த்தமாகத் திருவிளையாடல் செய்து மணந்து கொண்ட திருக்கோலம்.

60. எழிலரியர்த்தம்: திருமால் தம்மை நோக்கிச் செய்த அருந்தவம் கண்டு மகிழ்ந்து வேண்டிய வரங்களையும் வழங்கியருளித் தமது உருவில் ஒரு பாதியாக (கேசவார்த்த மூர்த்தியாக) விளங்குகின்ற திருக்கோலம்.

61. வீரபத்திரம்: வீரமார்த்தாண்டன் என்னும் அசுரனைக் கொன்ற வீரபத்திரர் ஆகிய திருக்கோலம்.

62. திரிமூர்த்தி முப்பரதம்: மூன்று திருவடிகளோடு அயன், அரன், அரி எனனும் மும்மூர்த்தியாக விளங்கும் திருக்கோலம்.

63. மஹாவேதாளிநடம்: காளியோடு நடனம் செய்த திருக்கோலம்.

64. வெருவறுமேகபத்திரியுரு: ஒரு திருவடியே கொண்டு பிரம விட்டுணுக்களைத் தமது இரு பக்கத்திலும் வைத்துள்ள திருக்கோலம்.

ஆய்விளம்பறுபது நான்கும். ஆகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருக்கோலங்களும்

விலாசவளிப்பு நிமித்தம் எடுத்த : திருவிளையாட்டாகத்தன் பெருமையை உயிர்கள் உணர்ந்து உய்திபெறுமாறு கொண்ட

மெய்ப்பொருள் எது அதுவே: உண்மையான பரம்பொருள் யார் என்பது உணரவேண்டின் அவரே.

விண்ணவர்மண்ணவர் கண்ணவர்யாவரும்: தேவர்களும் பூவுலகத்தவர்களும் மற்ற உலகத்திலுள்ள யாவரும்

வீடருளாய் எனவே: எங்கட்கு வீட்டுப் பேற்றை வழங்கியருள்வாயக என்று

வந்தனை புரிய : வணங்கிப் புகழ
இருந்துளன் நீ என: விளங்குகின்ற முருகன் ஆகிய நீயே என்று
வண்டமிழான்: வளம் பொருந்திய தமிழ்மொழி கொண்டு வாயாலும்
மனசான்: மனத்தாலும்
வாழ்த்தி வணங்கு எனை ஆள: நின் திருவடியை வாழ்த்தி மெய்யால் வணங்குகின்ற என்னை ஆட்கொள்ளும்படி

என் இருதய மலரில் எழுந்தருளாய்: என் உள்ளத்தாமரையில் எழுந்தருள்வாயாக (என்று வேண்டுகின்ற அடிகளார் பின் வருமாறு மயிலேறும் பெருமானை வழுத்துகின்றார்)

மந்திர நாயக: வேதங்கள் விளங்கும் முழுமுதற்பொருளே.
தந்திர நாயக: ஆகமங்களில் விளங்கும் முழு முதற்பொருளே
மங்கள நாயக: மங்களுக் கெல்லாம் மங்களமாகிய வீடுபேற்றின் தலைவனே
ஓம் மய: பிரணவத் திருமேனி கொண்டவனே
தவரீசுர : தவம்செய்வார் கருத்தில் திகழும் ஈசுரனே
பரம: பெரியவற்றுக் கெல்லாம் பெரியவனே
குஹேசுர: உயிர்களின் இருதயமாகிய குகையில் விளங்கும் ஈசுரனே!
வசனமனாதீத: மனமொழிகளைக் கடந்தவனே!
வரத: வேண்டுவார் வேண்டுவதே வழங்கும் வள்ளலே
க்ருபாகர: அருளே உருவமானவனே
குமர: என்றும் இளையோனே
பராபர: பராபரப்பொருளே
வரைவறு ஷாட்குண்ய வஸ்துவென்: எல்லையற்ற ஆறு குணங்களையுடைய பகவன் எனப்படும் பொருள் என்று கூறும்.
அற்புத சத்திய வித்தக: சச்சிதானந்தப் பெருமானே
மரணமொடயன மிலா வானவ: பிறப்பு இறப்பு இல்லாத தெய்வமே
ஞானநபோமணியே: சிதாகாசத்தில் விளங்கும் மாணிக்கமே
திருமால யனறியாவோர் மாமலையின் பெயரான்
குருநாத: பிரமவிட்டுணுக்கள் அடியும் முடியும் காணாது திகைத்த ஒப்பற்ற பெருமையுடைய மலையின் பெயரை (அருணகிரி என்னும் பெயரைக்) கொண்டநாதரின் குருநாதனே.

என்மருடெறு மாமுனியே: எனது அறியாமையாகிய இருளை அழிக்கும் பெருமை பொருந்திய ஆசிரியப் பெருமானே.


Home    |    Top   |    Back