Logo


English

தெய்வ வணக்கம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் சார்ந்தது.

அறிவினுக்கு அறிவான பொருளை அடிகட்கு அருளும்
       ஆனந்த போத நிதியை
அத்துவித நிச்சய அகண்ட ஏக ஆகாரம்
       ஆன சின்மய வாரியைக்
குறிதிரிபு இலாத சிவயோக பரிபூரணக்
       கூர்ப்பினைக் குருபரத்தைக்
குழவு முது கிழமையின் திலக கோசர சிற்சு
       கோதய விலாச வெளியைத்
துறவர் இருதய நடையை அம்பரம தேசு எனச்
       சுடரும் ஆனந்த வடிவைச்
சுத்தபர தத்துவச் சுடரைச் சுயம்புவைத்
       துரிய ஒங்கார முதலை
நிறை சரத நிட்கள நிர்ஆக திருநாம பர
       நிட்டையில் நிலாவு திருவை
நித்திய சுவானுபவம் உற்ற அயில் அடிகளை
       நிரந்தரம் உள் நெஞ்சில் வைப்பாம்.

1

  சிற்றறிவான உயிர்களுக்கு அறிவிக்கும் பேரறிவான பரம்பொருளை; முனிவர்களுக்கு அருள்புரியும் இன்ப அறிவான செல்வத்தை; இரண்டற்றதாய் நிலைபெறும் எல்லையற்ற ஏக வடிவான அறிவுக்கடலை; பெயரும் மாறுபாடும் இல்லாத சிவயோக முழுநிறைவான சிறப்பினை; ஞானாசிரியனை; இளமையினைப் பழைமையான உரிமையாகக் கொண்ட மேலானதாய் அறியத் தக்க அறிவின்பப் பரவெளியை, துறவிகளின் இருதய இயக்கத்தை; அழகிய மேலான ஒளி என ஒளி வீசும் இன்பவடிவை; தூய மேலான தத்துவ ஒளியை; சுயம்புவை; நான்காவதான ஓங்கார முதற் பொருளை; நிறைவான மெய்யும் அருவமும் உடம்பிலாததும் பேர் இலாததும் மேலான நிட்டையில் உள்ள தெய்வமும் நிலையான தன் இன்ப அனுபவமுடையதும் ஆன வேலிறையை எப்போதும் மனத்தினுள் வைப்போமாக.

நின்மல நிர் ஆமய புராண பரதாரக
       நிர்அம்பர நிர் ஆகாரமாய்
நிர்க்குண நிர் ஆகுல நிர் ஆசன நிர் ஆசூச
       நிட் பிரபஞ்சப் பிரமமாய்ச்
சன்மமிகை மரணம் இன்று அண்ட பிண்டப் பெயர்கொள்
       சங்கங்களில் கலாவிச்
சச்சிதானந்த சிவ சிற்ககனமாய் நித்த
       சருவ வல்லபம் உள்ளதாய்த்
தன்ம கிருபாகர விலாச சுக சாகர
       சதாசிவ மகேச வடிவாய்ச்
சதுமறைசொல் வேதாந்த சித்தாந்த நிலையில் எழு
       சமரச சுபாவ முடிபாய்
நன் மவுனர் அறிவின்மெய் அறிவாகி விரிவாகி
       நாளும் சிறந்து திகழும்
ஞாட்பு ஆறு எழுத்து இறைக்கு அடிமை என இதய உள்
       நண்ணி அஞ்சலி செய்குவாம்.

2

  மும்மலங்கள் இல்லாததும் பிறவி நோயற்றதும் பழைமையானதும் மேலான பிரணவ சொரூபமும் திசையில்லாததும் ஆகாசம் அல்லாததும் சத்துவம், இராசதம், தாமதம் எனும் முக்குணங்கள் இல்லாததும் துன்பமில்லாததும் இருக்கை ஒன்றும் இல்லாததும், பிறப்பில்லாததும், பிரபஞ்சமில்லாப் பெரிய பொருளானதும் கொண்டுள்ள கூட்டங்களில் சேரச் சத்து சித்து ஆனந்த சிவ சிதாகாசமாய் நிலையாக எல்லா ஆற்றலுமுடையதாய் உள்ளதும், வடிவாய், நான்கு வேதங்களும் கூறும் வேதாந்த சித்தாந்த நிலையில் தோன்றும் ஒற்றுமைத் தன்மை முடிபாய், நல்ல மோனத்தைக் கொள்வோர் சிற்றறிவின் மெய்யறிவாகிப் பரந்து, நாள்தோறும் சிறந்து விளங்கும் வலிமையான திருவாறெழுத்து இறைக்கு அடிமை என மனத்துள் பொருந்தி வணங்குவோமாக.

தொல்லையில் வாதவூர் அடிகள் ஒரு பெயர்புரம்
       சொல்ல ஒண்ணாத முதல் எனச்
சொற்ற பரமாய் மும்மறைக்கு இதயமாய் உள்ள
       தூவரிகளுக்கு உரிமையாய்
ஒல்லை மறையின் பனுவல் பன்னும் ஆறு ஆதார
       உடலையும் பிராணன் என்றே
ஒது ஆவி தன்னையும் பொலம் எனும் பொருளையும்
       ஒருங்கே கவர்ந்து ஒன்றை நல்கு
எல்லை ஒன்றுஇல் பரமபதியாகி அதர்வத்தில்
       எசுரில் எழு பஞ்சருத்ரம்
என்ற திவ்ய உபநிடதங்கள் அறைகின்ற சிவம்
       என்ன எவரும் தொழ வளர்
தில்லை அம் பொதிநடக் களைகணாய் ஆறு என்று
       செப்பு பொறிகட்கு அணங்காய்த்
தேகிகள் உளக்குகைதொறும் உள்ளதாய் உள்ள
       தெய்வமணியைப் பணிகுவாம்.

3

  பழங்காலத்தில் திருவாதவூரடிகள் ஒரு பெயரும் ஓர் ஊரும் உடையது எனச் சொல்ல முடியாத முதற் பொருள் என்று சொன்ன பரம்பொருளாய், இருக்கு, யசுர் சாமம் எனும் மூன்று வேதங்களின் இதயமாக விளங்குகின்ற தூய மகாவாக்கியங்களான தத்துவமஸி, அஹம்பிரம்மாஸ்மி, பிரஞ்ஞானம் பிரம்ம ஆகியவற்றிற்கு உரியதாய், பழைமையான ஆகமங்கள் கூறுகின்ற மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களுடைய உடம்பையும் பிராணன் என்று அழைக்கப்படுகின்ற உயிரையும், பொன் எனப்படுகின்ற பொருளையும் ஒருங்கே தன்னுள் அடக்கி ஒன்றைப் படைக்கும் போது, மற்றதில் நரபதி சுரபதிகளுக்கெல்லாம் மேலான பரமபதியாக இருப்பவன். அதர்வணம், யசுர் வேதங்களில் சொல்லப்படுகின்ற, அதர்வ சிரசு, அதர்வசிகை எனப்படம் வைதிக சைவ சித்தந்தத்தை விளக்கிக் கூறும் பெருமைக்குரிய உபநிடதங்கள் கூறுகின்ற சிவபெருமான் என்று கூறும்படி, எத்தகையவரும் வணங்கும்படி வளரும் தில்லைத்தலத்தில் ஆறு எனக் கூறப்படும் தீப்பொறிகட்குரிய தெய்வமாய், உடம்பு பெற்றவர்களின் (மனிதர்கள்) உள்ளம் எனும் குகைதொறும் எழுந்தருளியிருக்கும், சிந்திப்பதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணியாய் உள்ளதை வணங்குவோமாக.


Home    |    Top   |    Back