தேவலோகத் திருவிளையாடல்
(ஆறாம்பத்து)
இப்பாடல் அறுசீக்கழிநெடிலடியாசிரியவிருத்தம் (இசை) ஆகும்.
1. பிரணவ தேசிகன், பிரணவ மதர்மரபன் (பேரின்ப ஓங்காரோபதேச பரம்பரைக்குக் கடவுள்). ஓதாதொருங்குணர்ந்த சேய், தற்போதம் ஈந்தோர் தொடர்பன், நிராலம்பன், பொருந்து மாற்றாற்கொள் பல் பேருருவோன், பூமாலை புனை நவவீரர் கட்குத் தலைவன், போர்வேல் இலக்ஷரிறைவன், குமரன், தோந்தீர் கலைஞன், மகாப்பிரபு, சோதிப் பெருமாள், காங்கேயன்.
2. ஒளியுடைப் பொன்னிறம் பிரகாசிக்கின்ற தேவயானை மணாளன், அமிர்தன், சத்திய சங்கற்பன், கருணாகரன், அண்ணல்காலாதீதன், கால அரசன், பொன்னிற் பன்மணிகள் பதித்துள்ள பெரிய மணிரதன், பொறையன், சருவாபரணன், நடனன், நற்கமலாசன மழவு, “நான்” என்னுஞ் சொல்லிற்கு வாச்சியன்.
3. தேவ கிரீடி, சேனானி, தேவ தேவன், மகா சேனன், குறைவற்ற விசுவாதீதபரன், சுவாமி நாதன், அனாதி, பல கோவில் வதிவோன், கலியாண கோலன், கிரெளஞ்சகிரியைப் பிளந்த மதன், சாவில்லாச் சருவாந்தரியாமி, மேன்மையுடைப் பிரமதாதிபதி.
4. பன்னிரு கண்ணன், (ஆறு நெற்றிக்கண்களுண்மையிற்) பதினெண்கண் முருகன், பன்னிரு புஜன், அழகிய இரண்டு திருத்தாளினன், பலம் பொருந்திய எண்ணில் சென்னி கால் கைகள் செறிந்த ஓருருவினன், கந்தகிரித்துரை, சத்திதரன், பிரமணியன், சிறப்புப் பொருந்திய பர சுப்பிரமணியன், பெருமைவாய்ந்த அபர சுப்பிரமணியர்கள் பெருமான்.
5. முத்துக்குடையுடையோன், கொடிமுதலிய நிகரற்ற பெரிய விருது பலவுடையோன், தெள்ளிய அற்புதன், ஆகாசத்திற்செல் சிவந்த பாதன், நீர்மேல் நடப்போன், திரளக்கினி யூடுசெல்வோன், காற்றினிடை நடத்தலைச் செய்வோன், மாலைகள் திருமார்பிற் புரளும்படி நடந்தருள் தேவன், அகத்திய முனிவர்க்கு ஆசாரியன், பிரம பொற்பாதுகை யுடையோன்.
6. வீணைவல்லோன், வேய்ங்குழவன், மேலான தேவதுந்துபிகள் முழுங்குங் கோயில்களுடையோன், பெருமையுமழகும் வாய்ந்த விசாகன், விளங்குகின்ற மாணிக்கவண்ணன், சகலகலாநாதன், அழிவற்ற முதனூலிற்கு முன்னோன், ஏமகூட வாசன், (எச்செயலுக்குங்) கருத்தா, யாண்டுஞ் செல்லவல்ல ஆஞ்ஞையுடைக் கடவுள், ஜகந்நாதன், ஆறெழுத்து மந்திர யந்திர தெய்வம்.
7. (அசுரப்பிணமலைகளையும் எண்ணிறந்த அசுரசேனைகளையுங்) கட்பார்வையாற் சாம்பராக்கினோன், (அளவிட்டுரைத்தற்கரிய அவுணத்திரள்களைச்) சிரிப்பால் எரித்தோன், சமுத்திரத்தை அங்கையளவாக்கி யுண்டோன், ஆகாயத்திற் கோடி சூரியர்களாய் விளங்கினோன், பிரசண்டமாருதமானோன், இசைபொருந்திய ஒரு மொழியினாலே இறந்தோரை யெழுப்பும் வல்லோன், கடவுள், பற்றொன்றில்லான் இரக்கமுள்ள நித்திய பிரமசாரி, சச்சிதானந்தன்.
8. சருவைச்சுவரியன், சீவோபாதியிலி, சருவாதரன், நீதியுள்ளோன், கருவமுள்ள பிரமனுக்கு வருத்தமும் அனுக்கிரகமும் புரிந்த வரம்புடையோன், சங்கன், அக்கினிபூ, தூலப் பொருள்களிலுஞ் சூக்குமப்பொருள்களிலுங் கலந்துள்ளோன். குறைவற்ற நான்காவது பொருள் (பிரமாமுதலிய மும்மூர்த்திகட்கு மேலான பொருள்), தன்னேரில்வோன், நிலைபேறுடைப் பெரிய சதாசிவன், கணிதத்திற் கெட்டாத நாதாதீதன்.
9. இடுநர்க்கிடுநன், கணபதிக்கிளையோன், துஷ்டநிக்கிரகன், சாந்த குணமுள்ள சிட்டரைப் பாலிப்போன், நீக்கமற நிறைந்த பராபரன், உலகமயக்கத்தை யுதறியவர்க்கு உதவு தெய்வம், வேண்டுவார் வேண்டுமாறருள்புரிகோ, பெருகிய துயரத்தாழ்ந்து கிடப்பார்க்கு உதவிபுரி தயாளன், தன்னைப் பாடுவார்க்கின்பருள் வள்ளல்.
10. இன்னவாகிய திருநாமங்களையும், பிரமதேவன் எடுத்தியம்பியவுடன் ஒளிமிகுந்த தேவர்கள் உவகை பூத்தார்கள். (பின்பு) பிரமதேவனோடு இமையா நாட்டநலன் நிலைபெற்ற தேவரெல்லோருஞ் சண்முக பெருமான் சரணங்களை வணங்கினார்கள்; செஞ்சொற் செரிந்த திருப்புகழாந் தமிழ் வேதஞ் செப்பிய முனிவரது நெறியைப் பின்பற்றும் பெரியீர்!