Logo


English

காசியாத்திரை

இப்பாடல் நேரிசை வெண்பா வகையைச் சார்ந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் புலவர் பிமா. சோமசுந்தரனார் எழுதியதாகும். ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த அனைத்து ஞான நூல்களின் சாரமாக விளங்குவது சிவஞான தீபமாகும். அவர்கள் ஓதிய பலநீதிகளின் சாரமாக விளங்குவது காசி யாத்திரையாகும். இந்நூல் 608 பாடல்களைக் கொண்டது. பல பாடல்கள் நுட்பமும் திட்பமும் செறிந்து அரிதுணர் பொருளாய் ஸ்ரீமத் சவாமிகள் யாத்துத் தருந்திறம் சிந்திக்கத்தக்கதும், சுவாமிகளின் நுண்மாண் நுழைபுலம் காட்டுவதுமாகும். மேலே குறிப்பிட்ட பாடல் 265 முதல் 277 வரை உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் அடியார்கள் எங்கள் விலாசத்தில் தொடர்பு கொண்டால் அப்புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுபவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி தங்களுக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதை நாங்கள் மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

விளக்கம்:-

சாவா மருந்து உண்ட பெருமையுடைய தேவர்களும் கருதுவதற்கு அரிய ஒட்பமுடை குகலிங்கமே! எளியேன் இறுமாந்து இருக்குமாறு எக்காலத்தும் குறையாத அருளையே எனக்கு வழங்கியருள்வாயாக. குற்றமற்ற இன்பத்தையே தந்தருள்வாயாக.

மேல் மேல் வளரும் சிவானந்தம் என்னும் ஒளி ஓங்கி விளங்குகின்ற குகலிங்கமே! மெய்ஞ்ஞானம் இல்லாதவர் காணாதன யாவும் கண்டு பரம்பொருளாகிய ஆரா அமுதத்தை அடையும் சான்றோர் பெறும் சிறப்பு நிரம்பிய நிலையை எனக்கு நன்கு அருள் செய்வாயாக.

இருதய தாமரையின் நாப்பண் விளங்கும் அருள்நிரம்பிய அழகிய குகலிங்கமே! எனது வழுத்துரைகள் ஆகிய பாடல்களையெல்லாம் இனிதாகச் செவிகளில் ஏற்றுக் கொண்டு குறைவில்லாத சோமலோகத்தைத் தந்து ஆண்டு கொள்ளும் அனாதிப் பொருளே! நின் திருவருள் நிலையை எனக்கு வழங்கியருள்க.

அனாதியாகவே உயிர்களைத் தொடர்ந்துள்ள ஆணவ மலக் குற்றம் ஒட்டாது நீங்கி உய்திபெற எண்ணும் மேம்பாடுடைய அடியவர்களின் குற்றங்களைக் களையும் ஞான மயமான குகலிங்கமே! என்னுடைய மனத்தின் அடக்கத்திற்கு எவ்வித இடையூறும் நேராமல் அருள்புரிவாயாக. நின் திருவடியின்பத்தை வழங்கியருள்வாயாக.

இதயத்தின் கண்ணதான செந்தாமரையில் எழுந்தருளியுள்ள குகலிங்கமே! அடியவர்கள் என்மேல் சினங்கொள்ளாதபடி செய்து அவர்களின் அன்புக்கு என்னை ஆளாக்கி எக்காலத்தும் அழிவற்ற ஒப்பற்ற நல்ல வீடுபேற்றை வழங்குகின்ற விளக்கமான அமலமான திருவருளை அடியவனுக்கு வழங்கியருள்வாயாக.

இதுவே செம்மையாய சிவம் என்று கருதி எப்போதும் சிந்திக்கும் எனது இதய தாமரை மலரில் எழுந்தருளியுள்ள குகலிங்கமே! அடியவன் இறப்புப் பிறப்பு என்னும் நோய்களை வெல்வேனாக, அவைகளுக்குக் காரணமான நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளையும் வெல்வேனாக. ஆணவ மல இருளின் வலிமையை வெல்வேனாக. இவை கூடுமாறு அருள் புரிவாயாக.

எனக்குக் களைகண்ணாக விளங்கும் குகலிங்கமே! தன்னையே கொல்லும் கொடும்பகையாகிய சினத்தைக் கொல்வேனாக, திருச்செற்றுத் தீயுழியுய்க்கும் அழுக்காறு என்னும் பாவியைக் கொல்வேனாக. மடமையையும் மதத்தையும் கொல்வேனாக. விரைந்து பற்றும் சோம்பரைக் கொல்வேனாக. இதற்கு நீ அருள்புரிந்து ஆணவமாகிய பாசம் கூடாத ஞான வாழ்வை எனக்குத் தந்தருள்வாயாக.

பிரணவத்தின் பொருள் என்று நான் சிந்திக்கும் ஞான மயமான குகலிங்கமே! இடைகலை, பிங்கலை, பெருமை நிரம்பிய சுழுமுனை என்பவற்றை எவ்வெவ்விடங்களில் நிலை பெறுத்த வேண்டுமோ அவ்வவ்விடங்களில் நிலைபெறச் செய்து உருவத்தையே கருதும் எனது மனத்தை அருவமாக்கி அருள்புரிவாயாக.

சச்சிதானந்தப் பொருளாகிய சிவகந்தன் என்றுள்ள குகலிங்கமே! உலகச் செய்திகள் யாவற்றையும் என்னுள் மறையச் செய்து எனது வடிவத்தைக் குகனாகிய நினது உருவமாகச் செவ்விதாக இயற்றியருளி என்னுள் நிறைந்து விளங்கும் பாகுபாடு இல்லாத நிலையைத் தந்தருள்வாயாக, தந்தருள்வாயாக.

ஊனுடம்பு ஆகிய ஆலயத்துள் இருப்பதான ஆன்மலிங்கத்தில் விளங்கும் ஈசன் குகன் ஆவன். அப்பரம் பொருளைக் காண்பான் வேண்டி அவனை ஆன்மலிங்கத்தின் நடுவில் பாவித்திடும் பெரியோரின் மாட்சிமைக்கு மேம்பட்டதொரு மாட்சிமை இல்லை.

குகப்பரமன் எழுந்தருளியிருக்கும் ஆன்மலிங்கமே குகலிங்கமாகும். அந்தக் குகன் நின்பால் எழுந்தருளும் அருள் வந்து கூடுமானால் அக்குகன் இருக்கும் ஒன்று என்பதற்கும் இரண்டு என்பதற்கும் இடங்கொடாத உயர்ந்த அத்துவித நிலை நன்கு வந்து கூடும் என்பதை என் மனமே! நீ நம்பு. (நம்பி அவனை வழிபடுவாயாக).

ஞானமே திருமேனியாக வுடைய சிவகுகனும் உயிரும் அத்துவித நிலையில் விளங்கி நிற்பதால் முத்தியை விழையும் ஆன்மா இலிங்கமாகும். சிவகுகன் அந்த இலிங்கத்துள் விளங்கும் பொருளாகும். தூய்மை மாறாத இதுவே மாட்சிமையுடையதாகும்.

இம்மாட்சியே யோக முடிவு. இம்மாட்சியே ஞானம் ஆகிய நிலை. இம்மாட்சியே சிவசமம் எனப்படும் முத்தி என்று அறியும் சிறந்த மாண்புடையவர் முழுமுதல்வனுக்கு ஆன்மா ஒரு மூர்த்தம் ஆகும் என்று மெய்ந்நூகளில் கூறப்பட்டுள்ளதும் இதுவே என்று முடிபு கூறுவர்.


Home    |    Top   |    Back