Logo


English

கந்தவேள் வேட்கை

இப்பாடல் கலிவிருத்தமாகும். இது இரண்டாமெழுத்தொன்றிய சிறப்புடை அடியெதுகையாகும். அடியொன்றற்குப்பதினான்கக்கரம். இப்பாடல் இயற்றிய காலம் துந்துபி வருஷம் சித்திரை மாதம் 18ந் தேதி ஆதித்தவாரம் ஆகும்.

1. தோகையையுடைய நல்ல மயிலின் மீது வருகின்ற தூய வெட்சி மாலை அணிந்தவனே! அழிவற்ற ஞான வடிவனே! குறையாத சிறந்த வீடுபேற்றின் தலைவனே! அழியாது என்றும் உள்ள அடியவர்கள் வந்தடையும் முதல்வனான அறிவனே! என் ஆவி மழுங்கினாலும் என் ஆசை உன்னை விட்டு நீங்குமோ? நீங்காது.

2. ஞான வித்தாகிய சிவபிரான் தரும் ஞான மணியே! தேன் போன்ற இனிய அமுதமே! இன்ப வடிவினனான கடவுளே! புதிய அமுதம் போன்றவனே! நல்ல வேலைப் பிடித்த கையழகுடைய முத்திக்கு வித்தான முதல்வனே என் உயிர் நீங்குவதாயினும் என் ஆசை உன்னை விட்டு நீங்குமோ? நீங்காது.

3. பிரணவப் பொருள் ஆகிய அமுதமே! இனிப்பு நீங்காத சர்க்கரையே! திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற பொருளே! சுவைமிக்க (மா, பலா, வாழை ஆகிய) முக்கனியே! சூரபதுமனுக்குப் பகைவனாய் இருந்தவனே! என் உடம்பில் நெருப்புப் பற்றிக் கொண்டாலும் தெய்வயானை விரும்பும் உன்னை விட்டு என் ஆசை நீங்குமோ? நீங்காது.

4. குற்றமற்ற அழகனே! மயிலூறும் பேரழகனே! வாலறிவே வடிவானவனே! பகைவர்களின் எதிரியே! குற்றமற்ற திருமகள் ஆகிய மான் பெற்ற வள்ளியின் காதல் முத்தே! நான் துன்பத்தால் தளர்ச்சி அடைந்தாலும் உன்னை விட்டு என் ஆசை நீங்குமோ? நீங்காது.

5. ஈசுவரத் தன்மையுடைய ஞான இருக்கையே! மறையின் பொருளே! புகழுடைய அருளைப் பொழியும் மேகமே! இன்பு நுகரும் முத்தர் உள்ளங்களில் விளங்கும் பயனே! அடியவரின் அன்பில் உள்ளவன் என்று மேலோர் சிந்திக்க வுள்ளவனே! என்னைத் துன்பமானது அழுத்திக் கொண்டாலும் என் ஆசை உன்னை விட்டு நீங்குமோ? நீங்காது.

6. இன்பம் தரும் மங்கள வடிவனே! மயில் ஏறும் சங்கரனே! வலிமை நிறைந்தவனே! இருவினைகளையும் அழிக்கும் எங்கும் நிறைந்த பொருளே! வாமனன் ஆகிய திருமாலின் கடவுளே! ஞான பண்டிதனே! உன் செயலால் என்னை நோய் பீடித்தாலும் உன்மீது நான் கொண்டுள்ள ஆசை ஒழிந்திடுமோ? ஒழியாது.

7. வேலிறைவனாகிய முதல்வனே! திருமால், பிரமா முதலியோரின் அன்பு தெய்வமே, தூய அந்தணனே! மலைமகளின் திருமகனே! பண்புடைய தேவனே! சிவகுருவே! உன் செயலால் என்னை நஞ்சு பற்றினாலும் உன்மீது நான் கொண்டுள்ள ஆசை அழிந்திடுமோ? அழியாது.

8. வலிய பூதப் படையுடையவனே! அழியாத பேரின்பம் உடையவனே! தலைவனே! கந்தனே! ஆற்றல் குறையாத நவவீரர்கள் நம்பும் குகனே! பொன்னால் அமைந்த தோளணியும் மாலையும் அணியும் பெரியோனே! உலகமே அழியினும் உன்மீது நான் கொண்டுள்ள ஆசை அழிந்திடுமோ? அழியாது.

9. வண்டுக் கூட்டங்கள் விரும்பும் தேன் நிரம்பிய கடம்பமாலை அணிந்த மணமார்ந்த தோளுடையவனே! வேதங்களைக் கூறும் அழகிய திருவாயுடைய தலைவனே! அழகனே! கங்கை மைந்தனே! உலகமே அழியினும் உன்மீது நான் கொண்டுள்ள ஆசை அழிந்திடுமோ? அழியாது.

10. ஒப்பற்றவனே! பரவெளியனே! ஆட்டுக்கடா மீது ஏறும் செம்மேனித் தேவனே! காமத்தை அழித்துக் கந்தரனுபூதியை அருளிய அருணகிரிநாத முனிவரை ஆட்கொண்ட தேவதேவனே! குருவினல் உபதேசிக்கப்படும் ஞான மந்திரப் பொருளே! எனது உடம்பு அழிந்தாலும் உன்மீது நான் கொண்டுள்ள ஆசை அழிந்திடுமோ? அழியாது.


Home    |    Top   |    Back