Logo


English

மனது

கலிவிருத்தம்
நட்டபாடையெனும் பண்ணிலும் பாடலாம்


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்துக் கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் புகழ் கலைமாமகள் உரியோன் எனும் வேதா
சொலும் அம் பிரணவ ஒண்பொருள் சொன ஈச இராயா
கலகம் செய் என் அகம் என்பது கரையும்படிப் புரி சூர்
தொலையும்படி அருள் என்று சொல் சுகம் மேவுவை மனதே

1. மனமே! உலகத்தார் புகழும் சிறந்த கலைமகள் கணவனான பிரமதேவன் “ஓம்” எனச் சொன்ன அழகிய பிரணவத்தின் சிறந்த பொருளை விளக்கிக் கூறிய ஈசனே! அரசனே! சிறிதும் அடங்காமல் கலகம் செய்து கொண்டிருக்கும் என் மனம் என்பது கரையும்படிச் செய்தருள்! “துன்பத்தை ஒழியும்படி அருள்” என்று சொல்வையானால், நீ சுகத்தைப் பெறுவாய்!

சாரார் உயர் ஏழ் அத்திரி தகரத் தவமே செய்
ஒர் ஏழ் இருடிக்கும் தலை உடையப் புனல்பெருகக்
கூறார் அயிர்வேல் விட்டிடு குமரேசனது ஈரம்
வாராவிடில் நாம் உய்ய ஒர் வழி ஏது சொல் மனதே.

2. மனமே! உயரமான ஏழுமலைகளும் தகரும் பொருட்டுத் தவம் செய்த பகைவரான ஏழு ரிஷிகளுக்கும் தலைகள் உடையவும், வெள்ளம் பெருகவும், கூர்மையான வேற்படையை ஏவிய குமரேசனது அருள் வாராவிடில் நாம் கடைத்தேற ஓர் வழியேது? சொல்வாயாக!

அண்ணாமலை வழியில் பரை அருகில் புனல் இலை என்று
எண்ணார் திறன் ஒர்ந்தே ஆயில் ஏவித் தெளிவு ஆய
தண்ணார் உயர் நன் நீர் அலை தாவப் புனல் தந்த
அண்ணா அருள் புரியாய் என அறையாய் அளிமனதே.

3. அன்பான மனமே! திருவண்ணாமலைக்குச் செல்லும் வழியில் பரை அருகில் தண்ணீர் இல்லை என்று நினைப்போர் நினைவை அறிந்து, வேற்படையை ஏவித் தெளிவான குளிர்ச்சி மிகுந்த நல்ல நீரைத் தாவி வரும்படித் தந்த தலைவா! திருவருள் புரிவாய் என்று கூறுவாயாக!

ஏகாதச ஏணோர் பதினொரு கைப் படையாயும்
வாகு ஆர் கரம் ஒன்றில் சிவவலி தான் அயிலாயும்
சாகா அருள் உருவாயும் விளங்கச் சுடர் தனியை
வா கா என ஏத்தாய் அருள் வழிநாடிய மனதே.

4. திருவருள் பெறும் வழியை நாடியமனமே! பெருமைமிக்க ஏகாதசருத்திரர் என்போரைப் பதினொரு திருக்கைகளில் ஏந்தும் பதினொரு படைக்கலங்களாகவும், நன்கு அமைந்த வலக்கரம் ஒன்றில் சிவபெருமானுடைய வலிமை மிகுந்த சூலாயுதத்தை வேற்படையாகவும், இறவாத அருளோ திருவுருவாகவும் விளங்க, ஒளிவீசும் ஒப்பற்ற தனி முதல்வனை வா. கா. எனத் துதிப்பாயாக!

தாவும் கயல் விழி வள்ளி தனாது உண்மை பொருந்தக்
காவிஞ்சிய வன வேடர்கள் கறுவிக் கலி தருகால்
கூவும் படிச் சரணஆயுதம் விளித்தே அடல் கொண்டோய்
வா என்று சொல் வாழ்வாய் அருள் வழி நாடிய மனதே.

5. அருளைப் பெறுதற்குரிய வழியைத் தேடிய மனமே! தாவும் கயல் மீன்கள் போன்ற அழகிய கண்களையுடைய வள்ளியம்மை, தனது உண்மைக்குப் பொருத்தமாக வலிமை மிகுந்த வனவேடர்களை வெகுண்டு வஞ்சகம் செய்தபோது, கொடியாக உள்ள கோழியைக் கூவும்படிக் கட்டளையிட்டுப் போர் செய்தோனே! என்னிடம் வருக என்று சொல்! நீ வாழ்வாய்!

தேவு என்பன யாவும் புகழ் சிவசம்புவும் உமையும்
மேவும் கயிலாயம் தனில் மிளிரும் கொலு இடையே
தூவின் சுரர் பரவும்படிச் சுடரும் குமரேசா
வா என்று சொல் வாழ்வாய் அருள் வழி நாடிய மனதே.

6. அருளைப் பெறுதற்குரிய வழியைத் தேடிய மனமே! கடவுள் என்று கூறப்படுவோர் அனைவரும் புகழ்ந்து கூறும் சிவபெருமானும் உமாதேவியும் எழுந்தருளியுள்ள திருக்கயிலாயத்தில், மிளிரும் திருக்கொலுவின் இடையில், என்னிடம் வருவாயாக என்று சொல்! நீ வாழ்வாய்!

முன்னைத் தவம் முற்றுப்பெற மொய்ம்பு ஏறு அசுர ஈசன்
என்னப் புவி வந்து உன்றனோடு இகலிக் கொலை அயிலால்
கன்னல் சடம் வகிருண்டு கலாபம் துன நின்றான்
தன்னை கொளு முருகா அருள்தா என்று அழுமனதே.

7. மனமே! முன்பிறப்பில் செய்த தவம் நிறைவேற வலிமை மிகுந்த அசுரர் அரசனான சூரபன்மன் இவ்வுலகில் வந்து பிறந்தான்; பிறந்து உன்னுடன் போர் செய்து, கொலைத் தொழிலுடைய வேற்படையால் பிளப்புண்டு, மயிலாகவும் கோழியாகவும் மாறி நின்றவனை, வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட முருகா! எனக்கு அருள் புரிவாயாக என்று அழுவாயாக!

முருகா அரிமருகா எனை முழுதும் கொள உள ஓர்
குருவே புகல் இனி வேறு இலை கூகா என உறவோர்
அருகே அழும் முனமே உனது அடியே பெற அருளாம்
பொருள் ஈ என உயர் வந்தனை புரியாய் அளிமனதே.

8. அன்பான மனமே! முருகா! திருமால் மருமகனே! என்னை முழுமையாக அடிமைகொள்ளும் ஒப்பற்ற குருவே! எனக்கு இனி வேறு புகலிடம் இல்லை; இயமன் என் உயிரைக் பிடிக்கும்போது உறவினர்கள் கூ, கா என அருகிலிருந்து அழுவதற்கு முன்னரே, உனது திருவடியைப் பெற, அருளாகிய பொருளை ஈந்தருள் என மேலான துதியைச் செய்வாயாக!

தென்தாணுவில் என்றும் வதி சிந்தா அறிவாளன்
மன்றாடி வணங்கும் பெருமானே முருகோனே
என்று ஆளுவை என்று ஆளுவை என்றே விசுவாசித்து
ஒன்றா நிலை கூடும்படி உயர்வாய் அளி மனதே.

9. அன்பான மனமே! தென்மலை எனும் பொதிகை மலையில் எக்காலத்தும் வாழ்ந்து வரும் குறுமுனிவரான அகத்திய மகாமுனிவர் மன்றாடி வணங்கும் பெருமானே! முருகோனே! என்று என்னை அடிமை கொள்வாய்? என்று என்னை அடிமை கொள்வாய் என்றே விசுவாசம் கொண்டு ஒன்றி நிலை கூடும்படி உயர்த்துவாயாக!

ஆசேதும் இலா நின்னுடைய அனுபூதி அடைந்தே
தேசோடு உனது அடிமேய ஒர் தெருளார் அருணகிரி
ஆசான் என மிளிர் தாரக அரசே எனை ஆள் என்றே
சாதனை புரியாய் இனி எய்தாய் துயர் மனதே.

10. மனமே! குற்றமில்லாத உன்னுடைய அனுபூதியை அடைந்து, புகழுடன் உனது திருவடியை அடைந்த ஒப்பற்ற ஞானியான அருணகிரிநாதரின் ஞானகுரு என விளங்கிய பிரணவ சொரூபனான அரசனே! எனை அடிமை கொள்வாய் என்று சாதனை செய்வாயாக! செய்தால் இனித் துன்பம் அடையமாட்டாய்!


Home    |    Top   |    Back