Logo


English

பரதேவதை

1. வாக்காலும் மனத்தாலும் ஓர் அளவுபடுத்தி உரைக்கப்பட முடியாமல் உயர்ந்து விளங்கும் குகானந்தப் பெருவாழ்வையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டு, கரைகாண்தற்கரிய கடலின் நடுவில் உள்ள மரக்கலத்தில் இருக்கும் காக்கை போன்று துன்பத்துக்கு உள்ளாகி இருக்கும் எளியேனைக் கருணை புரிந்து காத்தருள்க. இயல்பாகவே தூய்மைப் பட்டுள்ள குகனே! அருள்மயமே! பொருள்மயமே! புத்தம் புதிய பேரமிழ்தே! ஞானக்கனியே! அக்கனியின் ரசமே! மூப்பு, இளமை முதலான அவத்தைளைப் பொருந்தாமல் காலாதீதப்பட்டு விளங்கும் பேரழகே! முனிவர்களின் உள்ளக்களிப்பே! ஒப்பற்ற வகையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!

2. இந்நாள்வரை என்னைச் சார்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் என்னைவிட்டு நீங்கி விலகியொழியும் படிச்செய்த உன் கருணையாகிய அதுவே, இப்பொழுது என்னை உனக்கு அர்ப்பணிக்க (எனக்குரிய பரிபூரண நிலையைக் கொடுக்க) தயைகூர்ந்து வெளிப்பட்டு வராதோ? புதுமையும் உயர்ச்சியும் பொருந்திய அழியாத மதுவே! கரும்பின் சுவையே! கனிச் சுளையின் இனிப்பே! விருப்பத்தை அதிகரிக்கும் சுவைமிக்க பாலமுதே! சிறப்புநிலையே! நால்வேத நெறிப்பட்டவர்க்குரிய தலைவனே! குகனே! ஒப்பற்ற வகையில் ஐந்தொழிற் கூத்து இயற்றம் மிகப் பெரிய ‘பரதெய்வமே’!

3. எனது நெறியைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட் படுத்தாமல், என் ஆன்ம நாயகனாகிய இறைவ, உனது திருவருளே கதி என்று தெளிவும் உறுதியும் கொண்டுள்ள என்னைப் பாராமல் மறைந்துள்ளது எதற்காக? அருளே பரிசுப்பேறாக விளங்கும் உனது பெருமைக்கு இது பொருந்துமோ? கூறியருள். அழியாத இன்பநிலையே! பரிபூரணப் பொருளே! அறிவின் வடிவே! இரவும் பகலும் அணுகாத, (கால – அதீதமான) சிதாகாசப் பெருவெளியே! மூல ஒளிப்பொருளே! சிவமே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!

4. உன்னை அடையும் பொருட்டாகவே இந்நாள்வரை உன்னையே உள்ளத்தில் ஆழ்ந்து நினைத்து இங்கே திரியும் என்னை நீ சற்றேனும் நினைந்து பார்க்காமல் இருப்பதைக் கருதி எந் நெஞ்சம் கலங்குகிறது; “கண்ணீர் மல்கக் கசிந்து உருகும் தொண்டரைப் போல் நான் நடந்துகொண்டிருந்தும் என்னை நீ அன்னியமாக்கி விட்டாயே!” என்று கருதி உள்ளமானது நைந்து கரைகின்றது. மனம் இரங்கி அருள்புரிவாய்! அளப்பதற்கரிய பெருமையும் வியாபகமும் உடைய குகேசுவரனே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!

5. எனக்கு உற்ற தாயாகவும் தந்தையாகவும் உள்ள நீ, இப்போழுது ஆட்கொள்ளவில்லை எனில் நான் எனது இறுதிக்காலத்தை அடைந்து இறக்கின்ற அன்று எளியேனின் உயிர் அடைக்வடிய இடமும் நிலையும் யாதாக இருக்குமோ? சற்றும் அறியேன். கந்தா! குரு நாயகமே! பந்தத் தொடர்பான உலகியல் விஷயங்களைக் கருதாத வைராகிய சீலர்களின் சிந்தனை மயமாக விளங்குபவமேன! கருணையே வடிவாக உள்ளவனே! அடியார்களின் தாபமாகிய (மோகிக்கச் செய்யும் உலகசுகங்களாகிய) யானையைக் கொன்று எறியும் சிங்கமே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!

6. “எண்ணாமல் எண்ணும் (நினையாமல் நினைக்கும்) தியானசீலத்தைத் தந்தருள்; என்னையே பெற்றுக் கொள்,” என இவ்வாறே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவனாகிய என்னை நீ சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பின், நான் மேலும் மனம் நைந்துநைந்து “என் தலைவ! என் ஐயனே! அனைத்துக்கும் எல்லையாக இருப்பவனே! என்னை ஆட்கொள்ள உள்ள அப்பா!” எறெல்லாம் அழுவேன்; மீண்டும் மீண்டும் உன் திருவடிகளிலேயே வீழ்வேன், அடியாரிடம் பெருவிருப்பம் கொண்டுள்ள நீ அடியார்கள் மனம் நொந்து புண்ணாகுமாயின் அப்படித் துன்பத்துக்கு ஆளாகிக் கலங்கும் மனம் முதலான கரணங்களை வறிதே பார்த்துக் கொண்டிருப்பாயோ? தண்மை நிறைந்த அருள்மயமே! வரங்களை அருளும் பெரிய மலையே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற்கூத்து இயற்றும் மிகப்பெரிய பர தெய்வமே!

7. “உன்னை நான் காணவில்லை” எனும் பேச்சுக்கு இடமில்லாமல், “நான் உன்னை உள்ளவாறு கண்டு கொண்டேன்; இரண்டறக் கலந்தேன்” எனும் வாக்குத் தோன்ற நீ உனது பெரிய திருவருளை வழங்கவில்லை எனில் இனிவரக்வடிய ஆணை எதுவோ என அஞ்சுகிறேன். இவ்வாறு அஞ்சும் நான், எனது வாழ்நாள் முழுவதும் உன்னையே நம்பி இருந்தும் கூட, “இவ்வாறு நம்பியது வீண்” எனும் பேச்சுப் பிறக்க ஒரு நியாயமும் உண்டோ! சாண் அளவுக்கு மேலே ஏறி முழம் அளவுக்குக் கீழே சறுக்கி விழுந்து, இவ்வாறே வீண்போய் விடாமல் நீ அருள்வாய். ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப் பெரிய பரதெய்வமே!

8. எளியேன் கருதும் வண்ணம் எனக்கு என்னைக் கொடுத்தாய் எனில் என்னையும் அவ்வாறே உனக்குக் களிப்போடு வழங்கிடுவேன். இது தொடர்பாக, உன்னிடம் உள்ள திருவுள்ளக் கருத்து இன்னதென நான் உணரவில்லை. நெகிழ்ந்த நிலையில் உள்ள உள்ளம் கலங்கப் பெற்று எப்பொழுதும் அயர்ச்சி கொண்டிருக்கும் எனது நெஞ்சத்தையே உனது திருக்கோயிலாகக் கருதி வாசம் செய்யும் தலைமைத் தெய்வமே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!

9. அருவநிலை என்பதையே உருவநிலை உடையதாகக் காட்டும் நுண்ணிய அணுவுக்குள், எங்கும் விரிந்திருக்கும் ஆகாச வெளியையே நுழைக்கும் உனது பெரிய அருளாற்றல் என்னை முழுவதும்மாக விழுங்கிக் கொண்டு எனது கண்டித நிலைகள் எல்லாம் (ஏகதேசமாகவே உணரும் எனது கட்டுப்பட்ட நிலைகள் எல்லாம்) அற்றுப் போய், எனது சீவநிலையானது ஒரு மாத்திரை குறைந்து சிவநிலையாக ஆகுமாறு (சீவ என்பதில் சீ-இரண்டு மாத்திரை; சிவ என்பதில் சி-ஒரு மாத்திரை) செய்யக்கூடிய வலிமையை இழந்துவிட்டதா என்ன? அருள்வாய், அருள்வாய்! அடியார்க்கு அரசே! அமிழ்து உண்ணும் தேவர்களின் நாயகமே? சிவத்துவப்பேறே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!

10. பொய்ந்நிலை உடையதாகவும் ஒரு சிறிதும் உண்மை உணர்த்தும் வலிமை அற்று அறியாமைக்கு உதவுவதாகவும், எப்பொழுதும் ஐம்பொறி புலன்களுக்குரிய விஷயங்களிலேயே ஆழ்ந்திருக்கும் இழிந்தோர்க்கு மிகவும் இதமாகச் செயற்படுவதாகவும் சிறுமைப்பட்டுள்ள அற்பமானகருவி கரணங்களுக்கு அன்னியப் பட்டுள்ளதாக ஆன்மாவைக் கருதும் தூய நிலையில் என்னை வைத்துக் காப்பாய். வேதாந்த சித்தாந்த சமரச நிலையில் உண்மையாகவே பெருவிளக்கத்துடன் திகழும் சிவப்பொலிவே! கந்தர் அனுபூதி பாடிய அருணகிரிப் பெருமானுக்கு வாய்த்துள்ளதான “இரண்டறக் கலந்திருத்தல்” எனும் பேரானந்த விளைவே! சிவமே! ஒப்பற்ற முறையில் ஐந்தொழிற் கூத்து இயற்றும் மிகப்பெரிய பரதெய்வமே!


Home    |    Top   |    Back