Logo


English

பிழைபொறுக்க முறையீடு

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் சார்ந்தது.

முத்தரின் முதல்வா முதுமொழித் தலைவா முட்டிலா வனப்பு அது பொதுளும்
சித்திர வடிவே திகழ் அரும் குழகா செங்கையில் நன்கு அயில் உடையாய்
மத்தமும் எழிலார் அறுகும் வில்லுவமும் மதலையும் அணிபவர் மழவா
பித்தனேன் குறை தீர்த்து அருள் சிவனே என் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

1

  முத்தர்களின் தலைவனே! வேதங்களின் தலைவனே! குறைவில்லா அழகு நிரம்பிய ஓவிய வடிவாய் விளங்கும் அரிய குகனே! சிவந்த திருக்கையில் வேற்படையுடையவனே! ஊமத்தை, அழகு நிறைந்த அறுகம்புல், வில்வம், கொன்றை மலர் ஆகியவற்றை அணிபவரின் மகனே! பித்தனாகிய என் குறையைத் தீர்த்து அருளும் சிவனே! என் குற்றங்களைப் பொறுத்து என்னை அடிமைகொள்வது உன் கடனாகும்.

கீணம் இல் பொருளே கிளர் ஒளிப் பிழம்பே கிருபைசேர் கற்பகக் காவே
மாணவர் சிமேல் கரங்களைக் குவித்து வணங்கிட வரு சிவக் கொழுந்தே
ஆணவம் குடிகொண்டு அருள்தனை மறந்து இங்கு அனுதினம் அனுசிதம் செறியப்
பேணிய கொடியேன் நின் சரண்புகுந்தேன் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

2

  அழிவில்லாப் பொருளே! விளங்கும் ஒளிப்பிழம்பே! கருணை பொருந்திய கற்பகச் சோலையே! அடியார்தம் சிரமேல் கைகளைக் குவித்து வணங்கும்போது வந்து அருள்புரியும் சிவகுமாரனே! ஆணவமலம் குடிகொண்டதால், உன் அருளை மறந்து இங்கு அனுதினமும் தகாதவை மிகுதியாகச் சேரச் செய்த கொடியவனாகிய நான் உன் திருவடியில் அடைக்கலமானேன்! என் குற்றங்களைப் பொறுத்து என்னை அடிமை கொள்வது உன் கடனாகும்.

பத்தருக்கு ஏமம் பொழி அருள் குயினே பரம மெய்ஞ்ஞானிகள் உளத்தே
நித்தலும் ருசிக்கும் சருக்கரைக் குவடே நேய மால் அயன் முதலோர் தாம்
சித்த சன்னதமே கொளப் பொறி இசைத்த செம்மலே எம் குல வாழ்வே
பெத்தனேன் உன்சேய் ஆனதால் இனி என் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

3

  பக்தர்களுக்கு இன்பத்தைப் பொழியும் அருள் மேகமே! பரம மெய்ஞ்ஞானிகள் உள்ளத்தில் நாள்தோறம் சுவைக்கும் சருக்கரை மலையே! அன்புள்ள திருமால் பிரமதேவன் முதலானோர் மனத்தில் செருக்குக் கொள்ள, அவர்களுக்குத் தக்க அறிவைத் தந்த சிறந்தோனே! எம்குல வாழ்வே! உலகப் பற்றுள்ள நான் உன் குழந்தையானதால், இனி என் குற்றங்களைப் பொறுத்து என்னை அடிமைகொள்வது உன் கடனாகும்!

கன்னலே இழுதே கற்கண்டே தேனே கனிந்த முக்கனி ரசமே இன்
மன்நய விளைவே அமுதமே ஒழியா மதுரமே சீனிச் சக்கரையே
என் உளத்து இயங்கும் இறை எனும் குருவே எந்தையே திருத்துணை கிடைத்த
பின்னும் நிற்கு ஏற்காப் பிசிதனை நவின்றேன் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

4

  கரும்பே! நெய்யே! கற்கண்டே! தேனே! நன்கு பழுத்த மா, பலா, வாழை எனும் முக்கனிகளின் சுவையே! நிலையான இனிய நன்மையின் விளைவே! அமுதமே! ஒழியாத இனிமையே! இனிய சருக்கரையே! என் மனத்தில் இயங்கும் கடவுள் என்னும் ஞான குருவே! எமது தந்தையே! உன் மேலான துணை கிடைத்த பிறகும், உனக்கு ஏற்புடையதல்லாத பொய்யினைக் கூறினேன்! என் குற்றங்களைப் பொறுத்து அடிமை கொள்வது உன் கடனேயாகும்!

பங்கயன் அரன் மால் பண்ணவர் இமவான் பந்தனை ஏனை மூர்த்திகளும்
கங்குலும் பகலும் வினோத ஐம்பூத கருமமும் உனை அன்றி உண்டோ
எங்களுக்கு அயலோர் புரிபுகர் பொறுப்பது எங்களுள் உண்டு அது பொருவப்
பிங்கல அயிலோய் பரிக்கை பண்ணாது என் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

5

  பிரமன், திருமால், உருத்திரன், தேவர்கள், உமையம்மையார் முதலியோர்களும், இரவு பகலும் வினோதமான ஐம்பூதங்களின் செயல்களும், உன்னையன்றி நிலை பெறுவதுண்டோ? மனிதர்களாகிய எங்களுக்குள் மற்றவர்கள் செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. அதுபோலப் பொன்னொளி வீசும் வேலையுடைய பெருமானே! அடியவன் செய்த குற்றத்தை உள்ளத்திற் கொள்ளாது அப்பிழையைப் பொறுத்து என்னை அடிமை கொள்வது உன் கடனாகும்.

மால் அயற்கு அரிய வரை எனத் திமிர்ந்த மதிக் குஇடைத் தாணுவுக்கு ஆதி
நூலின் முன்மூல நொடித்து அகத்தியற்கு நுவன்ற நற் பரம புங்கவனே
வேலினுக்கு இறையே குறத்திதன் துரையே வினய விண்ணவர்கள் பண்ணவனே
பீலியில் இவரும் சிவபெருமானே பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

6

  திருமாலுக்கும் பிரமனுக்கும் அடியும் முடியும் காணமுடியாத மலை என உயர்ந்து நின்ற பிறையைச் சடையில் அணிந்த சிவபெரமானுக்கு, வேதங்களின் மூலமான பிரணவத்தை உபதேசித்து அதனை அகத்தியருக்கும் உரைத்த மேலான குருவே! வேலிறைவனே! குறத்தியின் கணவனே! வினயமுள்ள தேவர்களின் கடவுளே! மயிலின்மீது ஏறும் சிவபெருமானே! நான் செய்த பிழைகளைப் பொறுத்து என்னை அடிமைகொள்வது உன் கடனாகும்.

வீசிடு துளக்க ஞெகிழியம் தாளா விண்குடி ஏற்றிய வீரா
தாசர் வெம்பவத்துள் திளைத்திடா வண்ணம் தடை புரிந்து ஆள் அருளாளா
ஆசைகொள் பாழ்த்த நினைப்பினுள் அயர்வேன் அதிகமும் ஏழையே முனிந்து
பேசிய நீதான் எனைக் கைவிடாது என் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

7

  ஒளிவீசி அசையும் சிலம்பணிந்த திருவடியுடையவனே! தேவர்களைத் தேவலோகத்தில் குடியேற்றிய வீரனே! அடியார் கொடிய பிறப்பினுள் அகப்பட்டு இளைக்காவண்ணம் தடை செய்து அடிமை கொண்டருளும் அருளாளனே! ஆசைகொள்ளும் பாழான நெஞ்சத்தால் மனம் தளர்கின்றேன். அதிகம் அறிவில் ஏழையாவேன். சினந்து பேசிய நீதான் எனைக் கைவிடாது, என் பிழைகளைப் பொறுத்து அடிமைகொள்வது கடனாகும்.

அடியவர்க்கு எளியான் என்று உனை முதுநூல் அமனத்து நன்கு எடுத்து எடுத்து அதிர்த்த
படி எனை ஒரு தொண்டாய் எண்ணி இதுநாள் பணித்து அதில் நில் எனச் சொனதால்
கொடியவன் எனினும் தவக்கம் இல்லாமல் கூடுவன் உன் அருள் பவுள்சைப்
பிடிதவறாது ஓர் நிலை கொள்ளவே என் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

8

  பழைமையான வேதங்கள், ஆகமங்கள் முதலிய நூல்கள் அனைத்திலும் உன்னை அடியார்க்கு எளியன் என்று நன்றாக எடுத்து எடுத்துக்கூறியபடி என்னை ஒரு தொண்டனாய் நினைத்து, இந்நாளில் கட்டளையிட்டு, “அதில் நிற்பாயாக” எனச் சொன்னதால், நான் கொடியவனாயிருந்தாலும் குறைவில்லாமல் உன் அருட்செல்வத்தைக் கூடுவேன். நான் உன்னைப் பற்றிக் கொண்ட பிடியானது தவறாமல் ஒரு நிலையிலிருக்க, என் பிழைகளைப் பொறுத்து அடிமை கொள்வது உன் கடனாகும்.

துள்ளுமாமயில் மீது ஏறு விண்ணவனே தொழும் அடியார்கள் பிரானே
கள்ளை ஆர் கழுநீர்த் தொடை இறை நாயேன் கருத்தை விட்டு அகலாக் கருத்தே
பிள்ளை செய் அடக்கோது அனைத்தையும் பொறுமைப் பிதாசமித்து அணைப்பது கடுப்பப்
பிள்ளை என்று உனக்கே அடைக்கலம் ஆம் என் பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

9

  குதித்து வரும் பெரிய மயிலின் மீது ஏறிவரும் தேவனே! உன்னை வணங்கும் அடியார்களுக்குப் பிரியமான கடவுளே! தேனிறைந்த செங்கழுநீர் மலர் மாலையை அணிந்த இறைவனே! நாயாகிய என் நினைப்பை விட்டகலாத நினைப்பே! தம் மகன் செய்யும் பொல்லாங்கு அனைத்தும் பொறுமையுள்ள தந்தை மன்னித்து அரவணைப்பதுபோல், மகன் என்றே உனக்கு அடைக்கலமான என் பிழைகளைப் பொறுத்து அடிமை கொள்வது உன் கடனாகும்!

நேசம் உற்றோர்பால் நிறையும் நல் அறிவே நினைவினில் எழுந்து ஒளிர் சுடரே
மாசுஇல் நல் அருணா சலத்தவன் இறையே மலர் அடி பணி குமரகுரு
தாசனைக் காப்போன் நான் எனும் தேவே சரவண பவ சிவ குகனே
பேசிய பேச்சால் நான் இஙன் இழைத்த பிழை பொறுத்து ஆள்வது உன் கடனே.

10

  அன்பு கொண்டோர்பால் நிறைந்தருளும் நல்ல அறிவே! என் நினைவினில் தோன்றி ஒளிரும் சுடரே! குற்றமில்லாத அருணாசலத்தவன் எனப்படும் அருணகிரிநாதரின் கடவுளே! உன் தாமரை மலர் போலும் திருவடியை வணங்கும் குமரகுருதாசனைக் காப்போன் நான் என்று கூறும் கடவுளே! சரவணபவ சிவகுகனே! நான் பேசிய பேச்சினால், நான் இவ்வுலகில் செய்த பிழைகளைப் பொறுத்து என்னை அடிமை கொள்வது உன் கடனாகும்.


Home    |    Top   |    Back