Logo


English

முதலாவது
சரவணப்பொய்கைத் திருவிளையாடல்

இப்பாடல் கலிவிருத்தம். அடியொன்றற்குப்பதினோரக்கரம். இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பக்திபிறங்கப் பாடப்படுமாயிற் குழந்தைகட்குற்ற பாலாரிட்ட தோடங்கணீங்கும். சுகமுண்டாம். தாய் தந்தையருள் யாவரேனும், மற்றையருள் எவரேனும் பாடலாம். ஐயமின்று.

1. வாயுதேவனும் அக்னிதேவனுஞ் சுமந்துள்ள (சிவபிரானுடைய ஆறுநுதல் விழி) அக்கினிப் பெரும் பொறிகள், நயப்பாடுடைய கங்கைநீர் நிரம்பிய நாணற்புல்லொடுகூடிய பொய்கையிலே (விடப்பட்டபோது) பொருந்திய தாமரை மலர்களில் ஆறுதிருமுகங்களையுடைய சேயனாய் விளங்கின. இதனைக் கண்ணுற்ற தேவர்கள், மலர்மாரி சொரிந்தார்கள்.

2. திருமாலானவர் அஞ்ஞான்று கூறியவாறு கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அமுதூட்ட வந்த போது, எங்களுடைய முதற்பரம்பொருளாகிய அச்சேய், ஆறு குழந்தைகளெனவாகி அப்பெண்களின் அழகிய கைம்மலர்களையடைந்திருந்தன. ஒரு சமயத்தில்,

3. அக்குழவிப் பரம்பொருள், சிறந்த பாலலீலைகள் செய்தருள வேண்டுமென்று தனது செவ்விய திருவுளத்திற் கருதி, பலவாகிய திருமேனிப் பெயர்கள் தோன்ற நின்றபோது ஒரு பிள்ளை, (கண்வளருங்கோலமாய்) யோகநித்திரையிலே அமர்ந்து விளங்கிற்று.

4. ஒரு குழந்தை, உலாவிக் கொண்டு அடிக்கடி சிரித்தது. ஒரு சேய், தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக அழுதது, ஒரு பிள்ளை, பெருங்குரலோடு கதறிற்று. ஒரு மதலை, புன்சிரிப்போடழுதது.

5. ஒரு மழவு தனது கால்விரலை வாயில் வைத்துச் சுவைத்தது. உலாவிக் கொண்டிருந்த ஒன்று, தனது தாமரைமலர் போன்ற கையினை வாயிலே வைத்துக்கொண்டது. ஒன்று பாம்பு போல நகர்ந்தது. ஒன்று, நொடிப்பொழுதினுள் மகிழ்ச்சியோடு தரையிலே தவழ்ந்தது.

6. ஒன்று மூன்றிரண்டடிகட்கதிகமாக நடந்தது. ஒன்று, தனது ஊன்றிய திருவடி சிவக்கும்படி ஓடியது. ஒன்று இயன்றவாறு நன்கு நடந்து அலுத்து நின்றது. ஒன்று, விசாலமான நிலத்தை யடைந்தது.

7. ஒன்று தாயின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றது. ஒன்று ஓய்வின்றி யெழுந்தும் விழுந்தும் விளையாடிற்று. ஒன்று தன் பருவத்திற்கேற்றபடியே நடத்தலைச் செய்தது. ஒன்று தன்னுடைய தாய்கண்டு அதிசயிக்கும்படி ஆட்டம் புரிந்தது.

8. ஒன்று, தாவிச் செல்லுந் தவளைபோலத் தத்தித்தத்திச் சென்றது. இரண்டு குழந்தைகள், மிக்க வலிமையுள்ள செம்மறிக் கடாக்களைப் போன்றும் மல்லர்களைப் போன்றுங் குறைவில்லாத் தம்முடைய அழகிய நெற்றிகளான் முட்டி உலாவிப் பெருமிதத்தோடு குற்றமற்ற சண்டைகளைச் செய்தன.

9. (கேட்குந்திறனுடையீர்!) இச்சண்டைகளின் பெருமையை இன்னுங் கேளுங்கள். இக்குழந்தைகள், தம்முடைய இரண்டு அகப்பாதம், மேற்புயம், முதுகு, கணையொத்த கணைக்கால், முழங்கால், வலியவிரல், ஒளிபொருந்திய கைத்தலம், சென்னி, மார்பு கழுத்து என்னும் இவ்வுறுப்புக்களையே படைக்கலங்களாகக் கொண்டு தாக்கி வீறிநின்றன.

10. சந்தக்கவியாகிய அருணகிரிநாதரது உவகையை நாடுகின்ற நன்மையுடையீர்! பல குழந்தைகள், ஆகாயவெளிகளிலே தாவி விளையாடிமீட்டும் பூமியின் கட்போந்து மற்றைக் குழந்தைகளோடும் நன்றாகக் குழுமிநின்று நடனஞ்செய்த வகையெல்லாஞ் சொல்லால் அளவிடப்படுமோ? (படாவே என்னறபடி.)


Home    |    Top   |    Back