Logo


English

சஷ்டி வகுப்பு

இப்பதிகம் குழிப்பு (சந்தபேதம் – 32) வகையைச் சார்ந்தது. இதற்கு உரை நக்கீரன் வழியடிமை புலவர் பி.மா. சோமசுந்தரனார் எழுதியது ஆகும். இப்பாடல் கலியுகம் 5005க்கு நேரான சோபகிருபது வருடம் (கி.பி. 1903) ஐப்பசி மாதம் 10-ஆம் நாள் கந்த சஷ்டியன்று சென்னையிலருளிச் செய்யப்பட்டது.

1. மேல் உலகத்தில் வாழும் தேவர்களும் முனிவர்களும் கீழ் உலகத்தில் வாழும் பாம்பு இனத்தவர்களும் அரக்கர்களும் அழகு கெழுமிய மக்களும் விரும்புகின்ற ஒப்பற்ற (பேரின்பப் பெரு) வாழ்வைத் தன்பால் வைத்திருக்கும் சிவபெருமானுடைய நெற்றிக்கண் வழியாக வெளிப்பட்ட தூயவனே! உமையம்மையாரின் பாலையுண்ட திருவாய் மலர் உடையவனே!

2. யானைத் திருமுகமுடைய அழிவில்லாத விநாயகப் பெருமானுக்கு இளையவனே! நீர்பெருக்கையுடைய தேவ நதியாகிய கங்கையானவள் விரும்பும் ஞான வடிவனாகிய மகனே! தேவ அரசன் ஆகிய இந்திரன் வழிபடும் திருவடியோனே! எண் குணங்களும் நிறைந்த அமுதம் பொழியும் சந்திரன் என்று அறவோர் போற்ற விளங்கும் அறவடிவனே!

3. செங்கடம்பு மலரும், யாவரும் விரும்பும் பவளமும், (எனைய பொருள்களின் அழுக்கைப் போக்கியும்) தன்பால் அழுக்குக் கூடாத தீயும் ஆகிய இவைகளினும் மிகுந்த செவ்வொளி வீசும் திருமேனியுடைய ஞான வினோதனே! சிவஞானத்தை அறிவுறுத்தும் குரவன்மாரின் தலைவனே!

4. வானத்தில் விளங்கும் அறுமீன் ஆகிய கார்த்திகைப் பெண்களின் திருமகனே! ஆட்டை வாகனமாகக் கொண்டருளிய தேவனே! தன்வயத்தான் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கையறிவினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை ஆகிய எட்டுக் குணங்களை உடைய பெரிய பொருள் ஆகிய ஈசனே! சித்தத்தைச் சிவன்பாலே வைத்த அடியார்களின் திருக்கூட்டத்துக்கு அருள் வழங்கும் செல்வனே!

5. வண்டுகள் தேனை நாடிக் குடையும் பல மாலைகளும் அழகோடு மணம் வீசும் கடம்ப மாலைகளும் அணிந்துள்ள அகன்ற திருமார்புடைய முதல்வனே! பேரின்பம் துய்த்தற்குப் பெரியோர் வந்து அடையும் ஒளிப்பிழம்பு வடிவினனே!

6. நவமணி நுதல் அணிஏர் நகைபல மிடற்றிலும் காலிலும் கலகலகல என மாக் கவினோடு நடம்புரியும் பெருஞ்சிறப்புடைய மயிலின் மீது என்றும் விளங்கும் பித்தனே! சிவபெருமானுக்குப் பிரணவம் ஓதியருளிய தலைவனே!

7. வலிமையுடைய அசுரகுலம் முழுதும் அழியும்படி அசுரர் மன்னன் ஆகிய சூரபதுமனின் மலைநிகர்த்த உடம்பை இரண்டாகப் பிளந்த ஒளிகொண்ட கூர்மை நீங்காத வேலை நீண்ட திருக்கையில் கொண்ட வீரனே! அருள் குறையாது எனது உள்ளக் குகையில் எழுந்தருளியுள்ள இயல்பினனே!

8. அழகும் வலிமையும் கொண்ட பல பறவைகளுக்கும் அரசன் என்று உலவுகின்ற மிக்க வண்மையுடைய கருடனை வெகுண்டு அலைத்துச் செம்மாப்பினால் உயர்ந்து விளங்கும் சேவல் தங்கிய கொடியையுடைய ஆண்டவனே! குடைக்கூத்து விளக்கம் பெறும்படி ஆடிய ஒப்பற்ற திருக்கூத்தனே! (கோழி கருடனையலைத்த வரலாற்றைக் கந்த புராணம் உபதேச காண்டத்திலும் ஸ்ரீமத் சவாமிகள் அருளிய சுப்பிரமணிய வியாசத்திலும் கண்டு கொள்க).

9. உயர்ந்தோர் போற்றும் அருட்சத்தியாகிய தேவயானையம்மையாரும், அருமைமிக்க வள்ளிப்பிராட்டியும் விரும்பும் திருமேனி கொண்ட அழகனே! முருகனே! தாமரை மலரில் எழுந்தருளிய பெருமானே! அருள்பொழியும் திருவிழிகளையுடையவனே! ஆற்றல் மிக்க கந்தனே!

10. சங்கு சக்கரங்கள் விளங்கும் கையினனாகிய திருமாலும், அன்பு நிறைந்த நாமகள் மணாளன் ஆகிய பிரமனும், கதிரவன் போல் ஒளி வீசும் திருமேனி கொண்ட உருத்திரப் பெருமானும் சிந்திக்கும் ஞான வண்ணனே!

11. பெரிய பொருட்குப் பெரிய பொருளாயும், பிரணவப் பொருளாயும், தகராலயப் பொருளாயும், மாட்சிமையும் தூய்மையும் கொண்ட உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் குகனே! சரவண சிவமே! பேரின்ப மழைபொழியும் அருளாகிய மேகமே!

12. ஐம்புலன்களும் அஞ்சி ஏவல் செய்யும்படி நடாத்தும் பெரியவர் அடைகின்ற சிறந்த மேம்பாடு கொண்ட பேரின்பத்தை அருளும் தலைவனாய் வேதங்களால் புகழப்படுபவனே! மிகச் சிறந்த சிவ யோகத்தில் விளங்கும் இன்பப் பொருளானவனே!

13. சிவப்பேற்றினை விரும்பும் மேம்பாடுடைய அகத்திய முனிவர் பெரிதும் மகிழும்படி பிரணவப் பொருளை அறிவுறுத்திய குருவே! முக்காலத்தும் எவ்வகைத் துன்பமும் தீண்டாதவனே! உயர்ந்த சத்துப் பொருளே! அழிவிலியே!

14. அழிவற்ற கந்தகிரியைச் சிந்திப்பவரின் மனத்துயரை யழித்து, அந்த கந்தகிரியில் இன்புற்று வாழும்படி அளித்தருள அன்பு செய்யும் எல்லையற்ற ஞான சந்திரனே! பரசிவ நிலையை அடியவர்கட்கு வழங்கி யருளும் சேந்தனே!

15. அடியவானகிய எனக்குத் தாயும், தந்தையும் உடன்பிறந்த தம்பியும், அண்ணனும், அன்புமிக்க மகனும், குருவும், ஆறெழுத்திறைவனாகிய நீயே என்று கருதிப் பலநூறு எழுத்துக்களால் அமையும் பாடல்களைக் கூறி,

16. இவ்வுலகில் திரிகின்ற எனது உள்ளத்தில் நிலவும் குரவர் முதல்வனே! தமிழ்ப் புலவர் சங்கத்தில் அழகிய சங்கப் பலகையில் வீற்றிருந்த ஒப்பற்ற திருவுடைய புலவனே! வேடர் ஆர்வத்தோடு வழிபடும் இறைவனே! துடிக்கூத்து ஆடும் பெரிய தேவனே!

(இது காறும் முருகன் திருப்புகழ் வழுத்தப்பட்டது)

பாடல்கள் 17 முதல் 32 வரை பாடல் விகற்பங்கள் கூறப்பட்டன) இதில் பல்வேறு இலக்கணம் முறையில் இயற்றப்பட்டது. இதுகாறும் கூறிய பாடல் வகைகளை முருகன் திருவடியே புகழும் நோன்போடு, ஓதியவர் புகழும்படி விளங்கும் திருப்புகழை அருளிய அருணகிரிநாதப் பெருமானுக்குத் திருவருள் புரிந்த இனிய அமுதக் கடலே! அழகுடைய தாமரை மலரில் வாழும் செல்வத்தின் தெய்வமாகிய திருமகளின் மருகனே! விருப்போடு எனது உள்ளத்தினுள்ளே தொடரும் அச்சம் நீங்கும்படி பேரருள் புரிவாயாக. பிறப்பையும் இறப்பையும் விளைவிக்கும் ஒப்பற்ற ஆணவமலத்தின் செருக்கு ஒழியும்படி களைவாயாக. சூரனை ஒழித்த உனது உயர்ந்த திருவருளே இனி எனக்கு உறவாகும்படி செய்தருள்வாயாக.

33. மந்திர விதிவழாது பால், தயிர், நீண்ட கரும்பிலிருந்து பெறப்படும் தெளிந்த கருப்பஞ்சாறு, இளநீர், நறியமணப் பொருள்கள் கலந்த நீர் வகைகள் யாவற்றையும் கொண்டு ஒருமனப்பட்டுச் செய்கின்ற திருமுழுக்கும்.

34. இனி தேனும், விருப்பமூட்டும் பழங்களும் கொண்டு அறிவார்ந்த இந்திரன், பிரமன், திருமால், வஞ்சகமற்ற உருத்திரப் பெருமான் ஆகியவர் எல்லாம் தங்கள் திருமேனிகளில் அணிகின்ற புகழ்வாய்ந்த திருநீற்றைக் கொண்டும் செய்யப்படும் திருமுழுக்கும்.

35. யாதொரு குற்றமும் நேராதபடி பெரிதும் பண்ணி உரிய (வண்ண) ஆடையை உடுப்பித்துப் பழுதில்லாது முறுக்கிய பொன்னாலான முந்நூலை மார்பிலே அணிவித்து மணம் கமழும் சாந்துகளையிட்டு.

36. மல்லிகை, வில்வம், கடம்பு, அசோகு, செங்கழுநீர், தாமரை முதலிய மண மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட புதிய மாலையை அணிவித்து மங்கல அரிசி தூவி.

(இதுவரை முறைவனை முழுக்காட்டி அணி செய்தல் கூறப்பட்டது)

37. மணம் நிறைந்த புகை எழுப்பி, ஒளிதரும் விளக்குகள் சுடர் விடும்படி செய்து, நன்கு பழுத்த வாழை, பலா, விளா, உதிர்ந்த கிச்சிலி, அத்திப்பழம்.

38. மா, இனிய முந்திரிப்பழம், புளிப்பில்லாத இலந்தை, ஈரப்பலா முதலிய கனிகளை குவியலாக வைத்து, எள், பொரி, வடை, அதிரசம், இடித்தமா, அப்பம், மோதகம், அகன்ற இலையடை, அவல், பிட்டுமா,

39. இன்சுவையுடைய பானகம், இனிய தயிர்ச்சோறு, கடலை, பயறு வகைகள் சேர்ந்த உவர்ப்பு முதலிய அறுசுவை சிறக்கும்படி, பிறைமதியை ஒத்த பாகற்காய், உயர்ந்த புளி மாங்காய், எலிபோன்றுள்ள வாழை

40. பசிய நிறமுடைய அவரை, கத்தரி, துவரை, புடல், பூச்சுணை, கொடி வெள்ளரி, கீரைக்காய் ஆகியவற்றின் காய்த்திரளும், வானில் செல்லும் முனிவரும் விரும்பும்படி ஒப்பற்ற சுவை நிரம்பிய பலவகைக் கிழங்குகளும் திரட்டி,

41. நன்கு விளங்குபடி நறுக்கி, மூண்டு எரியும் தீயில் உரிய பக்குவம் அடையும்படி வேகவைத்து, சிறுசேற்றில் முளைக்கும் சேம்பு, ஆரைக் கீரை, பசலைக் கீரை, பொன்னை ஒத்ததாய் உள்ள

42. வாடாத பொன்னாங்கண்ணிக்கீரை, கொய்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை முதலியவும் வதக்கப்பட்டு நன்கு மூடியிட்டு, வாழையிலையிட்டு நறிய வயல்களையுடைய ஊர்களிலே

43. வாய்ப்புடைய குளிர்ந்த நீர் பாய்ந்த பசிய பயிரில் விளைந்த இனிய சுவை நிரம்பிச் சிறந்த சிறுமணிச் சம்பா, மிளகுச் சம்பா, விலையுயர்ந்த சீரகச் சம்பா அரிசியால் அடப்பட்ட சோற்றை, திருவடி வழிபடும் அன்பில்லாத

44. குற்றமுடையோன், அலி, ஆரவாரம் புரிவோன், கொலைக் குணமுடையவன், வம்பன், துன்பில் உழல்பவன் (அல்லது பிறரைத் துன்புறுத்துவோன்), எங்கும் திரிபவன், தீமை செய்யும் இழிந்தோர் முதலியோர் பாராத வகையில் கட்டப்பட்ட திரையினுள்ளே (முற்கூறிய) பொருள்களை எல்லாம்

45. வரிசையாக ஒழுங்கும் அழகும் மிகுந்து விளங்கும்படி குற்றமற்ற தூய்மையோடு வைத்து அன்புள்ளத்தோடு படைத்து நல்ல வெற்றிலைபாக்கு,

46. வட்டமான தட்டில் நன்கு பொருந்த வைத்து தூய்மையும் மணமும் உடைய மலர் கொண்டு அருச்சித்து புகழ் நிரம்பிய சிவனே! பெருமை மிக்க தலையில் மகிழம்பூ அணிந்த தேவ தேவனே! அடியார்கள் போற்ற (ஆணவம் மாயை கன்மம் ஆகிய) முப்புரங்களை அழித்தவனே!

47. வன்னி, மத்தம், வெள்ளெருக்கு ஆகிய மாலைகள் தங்கிய திருத்தோளையுடைய சிவனார் விரும்பும் ஒப்பற்ற அம்பிகையின் திருக்கையில் தங்கும் பெருமையுடைய மாணிக்க ஒளி வீசும் விளக்கை ஒத்தவனே! வள்ளிப் பிராட்டியையும் ஆயிரம் கண் படைத்த இந்திரன் மகளாகிய தேவயானையையும்

48. திருமணம் கொண்ட அருளார்ந்த குமரனே! வேதங்கள் போற்றும் முழுமுதற் பொருளே என்று நன்கு வாழ்த்தி எம் துன்பம் ஒழியும்படி திருவருள் செய்க என்று பணியும் மாதவர் தலைவனே! இன்ப வடிவனே! நறுமணம் வீசுகின்ற பச்சைக் கற்பூரமும் சந்தனச் சாந்து மணிந்துள்ள மல நோயற்றவனே!

(மேல் சென்ற 16 அடிகளிலும் பூசை முறை கூறப்பட்டது)

49. இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், திருமால், சூரியன், இயமன், வருணன், ஈசானன், சந்திரன், தீக்கடவுள், குபேரன், வாயு, வலிமை மிக்க நிரதி, முக்காலமும் உணரும் முனிவர், பூதகணங்கள்,

50. விருப்பமுடைய கருடர்கள், சித்துக்கள் வல்லோர், வெட்சியணியும் கின்னரர்கள், செல்வமிக்க நாகர்கள், கொலையிச்சையுடைய பைசாசர், சடைமுடியுடைய முனிவர், வித்தியாதரர், யாழோர்

51. இயக்கர் முதலிய பலரும் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஏவல் பணிகளைச் செய்ய உடுக்கை, பம்பைகள், பெரிய ஒருகண் பகுவாய்ப்பறைகள், விழைவைக் கூட்டும் சிறுபறை, பேரிகை, பெரிய முரசு, தூரியம், பெரிய முழா

52. திண்மை கொண்ட ஆனகம் முதலியன வானத்தின் இடிபோல முழங்க பலவகை ஊது கொம்புகள், எக்காளம் முதலியன மிக்க ஒலி செய்யவும் அழகிய குழல், ஏழுகோல் உள்ள பொற்கலம் எனும் கோடிக் கைத்தாளங்கள்.

53. ஒலியைத் தனந்த தானன தனதன தனன தனந்தனா என்று இசைக்கவும் வான் அளாவும் உருவமுடைய ஒரு கோடி யானைகள்

54. குற்றமற்ற பெரிய மலைகளைத் தாவும் குதிரைகள், முதுகு வளைந்துள்ள விலங்காகிய ஒட்டகம் எழுநூறு ஆகச் செல்ல, எண்ணற்ற விளக்குகளும் முழுமதியை ஒத்தவெண்கொற்றக் குடைகளும்

55. குஞ்சம் அமைந்துள்ள சிற்றாலவட்டம் பேரால வட்டங்களும் முருகனின் திருவடியைச் சிந்திக்கும் அடியவரை வருக என அழகிய கையால் அழைப்பது போல அசைந்தாடும் கொடிகளையுடைய தேர்களும் முரிவுபடாத நீண்ட கழைகளின் உச்சியில் அருகருகே பறந்து கொண்டு நெருங்கி வரும் ஏழு இலட்சம் நீண்ட கொடிகளும்

56. இருபுறங்களிலும் சூழ ஒரு பெரிய கொடி நிறுவப்பட்ட தேரின் கண் இணையில்லாத பவளமலைபோல வேற்படை ஏந்திவரும் வேந்தர் வேந்தனே! கிரவுஞ்சமலை அழியும்படி வேலை ஏவிய எப்பொருட்கும் தலைவனே!

57. பகைவருக்குக் கூற்றாகிய ஒப்பற்ற சடக்கர மந்திரப் பொருளே! அன்பு செய்வார்க்கு இன்பம் விளைக்கும் எண் குணங்கள் தங்கும் இருக்கையானவனே! தேவர்கள் மகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டு தேவ லோகத்தைச் சூரனிடமிருந்து மீட்டுத் தந்த மங்களனே!

58. திருநீற்றின் அணி விளங்குபவனே! நல்வாழ்வின் உறைவிடமானவனே! தேவர்களின் உள்ளத்தில் கொண்டுள்ள ஒப்பற்ற ஏந்தலே! துன்பம் துடைக்கும் தவராசனே! வேதமுடிவில் விளங்கும் பேரொளி வடிவினனே!

59. என் நெஞ்சின் ஏக்கத்தை ஆராய்ந்து தீர்க்கம் அருள்சான்ற இன்பப் பொருளே! அழகிய சதங்கைகள் விளங்கும் திருவடியோனே! பேரின்ப உலகத் தலைவனே! ஞாயிறு போன்று ஒளிதரும் மகரகுண்டலம் அணிந்தவனே!

60. எங்கும் நிறைந்துள்ள வானமும் சிறிது எனும்படி வீறிநிற்கும் ஒள்ளிய பண்போடு யாண்டும் நிறைந்து நின்று தனக்கு இணையொரு பொருள் இல்லாத ஒருவனே! தோற்றம் இல்லாதவனே! குற்றம் தீண்டாத உண்மைப் பொருளே! நிலைபெற்ற முதற்பொருளே!

61. துன்பில்லா அகத்திய முனிவர், பக்குவம்பெற்ற சுகமுனிவர், முசுகுந்த மன்னன், நறியநந்தியெம்பெருமான், இவ்வுலகம் புகழும் ஒப்பற்ற நக்கீரன் ஆகியோர் விருப்பத்தோடு இடைவிடாது போற்றும் குருவோ!

62. எட்டு மலையும் தூளாகச் செய்த வெற்றி விளங்கும் அழகிய கைகளில் எட்டுத்திக்கு யானைகளையும் பந்தாடிய வன்மை நிறைந்த இளையோனே! மாட்சி நிறைந்த பொன் மலையாகிய மேருமலையைப் பெயர்த்து எடுத்து விளையாடிப் பின்னர் அம்மலையில் பொருந்திய கோடு

63. எனப்படும் மலையுச்சியை வானத்தில் சிறு தூள்களாக இறைத்திட்ட திருக்கைகளையுடைய நிலைபேறுடைய பெருமானே! ஐப்பசித் திங்களில் நிகழ்கின்ற சஷ்டி நாளில் விதிமுறை வழுவாது நோன்பு பூண்டு நின்திருவருளை நுகரும் பெரியோரின் உள்ளத்தில் எழுந்தருளும் திருவுள்ளமே! என்னை ஆதரித்து ஆண்டு கொள்ளும் அருள் வெள்ளமே!

64. முற்றுமுணரும் சித்துவடிவனே! பொன்முடியணிந்த மன்னவர் தொழும் சடைமுடியணிந்த செல்வராகிய முனிவரின் புரவலனே! முத்தொழில் செய்தற்குரிய பண்புகளை மேற்கொண்டவனே! குற்ற மற்ற ஆயிரம் பெயர்களைத் தாங்கியுள்ள பாவகியே! மேம்பாடுடைய பராபரமே!

இது காறும் இறைவன் சிறப்பு கூறப்பட்டது


Home    |    Top   |    Back