Logo


English

சண்முகானந்தசிவம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.


தவனனில் கிரணம் உள்ளது போலும் அப்புவில்
      தட்பம் அது இருத்தல் போலும்
சலரகித மலரகித அவிரோத அவிகார
      சலம்ப ரகித சத்திய
அவித ஏகாகாரர் தத்து வாதீத மாய்
      அவர் பரப்பிரமம் அதனில்
அனாதியாய் ஒரு சக்தி உண்டு அதனை அருள் என்றும்
      அளவிலா ஞானம் என்றும்
உவமானம் இல் பிரம கிரணம் என்றும் சுருதி
      ஒதும் இதையே அம்மையென்று
உரைதருவர் அப்பெரிய பிரமத்தை அப்பன்எனும்
      ஒர சிவன் எனத் தெரிப்பார்
தவம் மருவு விழுமியோர் அவ் அம்மை அப்பரைத்
      தனியனேன் அறிவது என்றோ
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

1

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உள்ள உலகம் முழுவதும் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் நடனம் செய்து கொண்டிருப்பவனே! சூரியனில் ஒளிக்கதிர் இருப்பது போலும், நீரில் குளிர்ச்சி இருப்பது போலும், அசைவற்றதும் மலங்கள் அற்றதும், பகையற்றதும், வேற்றுமையற்றதும், வஞ்சனையற்றதும், மெய்ப்பொருளாய் அழிவற்றதும், ஓர் ஆகாசமானதும், தத்துவங்களைக் கடந்ததும் ஆக விளங்கும் பரப்பிரமத்தில் அனாதியாக ஒரு சத்தி உண்டு; அதனை அருள் என்றும், எல்லையற்ற ஞானம் என்றும் உவமையில்லாத பிரம கிரணம் என்றும் வேதங்கள் கூறும். இதையே “அம்மை” என்று கூறுவர். அந்தப் பெரிய பொருளான பிரமத்தை “அப்பன்” என்னும் ஒரு சிவன் எனக் கூறுவர் தவத்தைச ்சார்ந்த சிறந்தோர். தனியாக ஒரு துணையுமின்றி உள்ள யான் அந்த அம்மையையும் அப்பரையும் அறிவது எக்காலத்தில் கூடும்?

ஞானம் இல் அசேதனப் பிரபஞ்ச உற்பன்ன
      நந்து ஆதிகாரணம் எனா
நவில் மாயையைத் துணைக் காரணம் எனும் தனது
      நல் அருளினால் நடத்தும்
ஊனம் இல் நிமித்த காரணமாகவும் சொற்ற
      உபய காரணமும் தனை
ஒழித்திலா நிலைமையால் அவைகட்கு முதல் என
      உரைக்கும் ஓர் சிரேட்டம் அதனால்
மானம் அறு மூலகாரணம் ஆகவும் கிஞ்ச
      மதி உடைப் புற்கலர் எலாம்
மலர் அடிக்கு அனவரதம் அடிமையாகவும் மன்னு
      மாதேவ அருள்க என்னுமா
தான இருதய மேதையர்க்கு இனிய நீ எனைத்
      தந்து உள் கலந்து கோடி
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

2

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உள்ள உலகங்கள் முழுவதும் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்யும் சண்முகானந்த சிவமே! அறிவில்லாத அசேதனப் பிரபஞ்சத்தின் தோற்றமும் அழிவும் ஆகியவற்றிற்கு மூலகாரணம் என்று கூறப்படுகின்ற மாயையைத் துணைக்காரணம் என்னும் தனது சிறந்த அருளினால் நடத்துகின்ற குறைவில்லாத நிமித்த காரணமாகவும், சொன்ன இரண்டு காரணங்களும் தன்னை ஒழிக்காமையால் மூல காரணம் ஆகவும், சிறுமதியுடைய ஆன்மாக்கள் எல்லாம் மலர்போலும் திருவடிக்கு எப்போதும் அடிமையாகவும் நிலைபெறும் மகாதேவனே! அருள்புரிவாயாக என்னும் பெரிய இடமான இருதயமுடைய ஞானிகட்கு இனியவனான நீ எனைக் கொண்டு உள்ளே இரண்டறக் கலந்து கொள்வாயாக!

அருளான சிவசத்திதனில் ஆயிரத்தில் ஒன்று
      ஆய பரையோடு நின்றுஓர்
ஐந்து தொழிலைப் பரம உள்ளத்து அடைப்பதையும்
      அப்பரையில் ஆயிரத்து ஓர்
பிரிவு ஆன ஆதியோடு நின்று தளை நீப்பினும்
      பிரிவு அற வியாபித்திடு
பெற்றியையும் அவ் ஆதிதனில் ஆயிரத்து ஒன்று
      பேச உள இச்சையோடு நின்று
உருவான வடிவைப் பிரேரிக்கும் நிரையையும்
      உரைத்த இச்சையில் ஆயிரத்து
ஒன்றாய அறிவில் நின்று அறிவு அருளும் நிலையையும்
      உணர்த்து அறிவில் அத்துணைக்கீர்
தரவான கிரியை நின்று அயரும் ஐந்தொழிலையும்
      தனியனேன் அறிவது என்றோ
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகானந்த சிவமே.

3

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உள்ள உலகங்கள் எல்லாம் நிறைந்த பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! அருளான சிவசத்தி வடிவத்திலிருந்து ஆயிரத்தில் ஒரு கூறாகத் தோன்றும் “பரை” எனும் பராசத்தியுடன் நிலைபெற்று, ஒப்பற்ற ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றைப் பரம உள்ளத்து நினைப்பதையும், அப்பராசத்தியின் ஆயிரத்து ஓர் பிரிவான ஆதிசத்தியுடன் நின்று பந்தம், முத்தியினும் பிரிவில்லாது வியாபித்திருக்கும் இயல்பினையும், அந்த ஆதிசக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு எனச் சொல்லத்தக்க இச்சா சக்தியுடன் நிலைபெற்று உருவான வடிவைக் காரியப்படுத்தும் வரிசையும், கூறப்பட்ட இச்சா சக்தியில் ஆயிரத்தில் ஒரு கூறான ஞானசக்தியில் நிலை பெற்று அறிவினை அளித்தருளும் நிலையினையும், அறிவிக்கும் ஞான சக்தியில் அந்த அளவு சொல்லத் தக்கதான கிரியாசத்தியில் நிலை பெற்றுச் செய்கின்ற ஐந்து தொழில்களையும், ஒரு துணையுமின்றியுள்ள தனியான யான் அறிந்து கொள்வது எப்போது?

பரை முதல் கிரியை வரை உள ஐந்து சத்திசம்
      பந்தத்தினால் அழுக்கு இல்
பரமாயை தன்னில் முறையே அனாசிருதை அம்
      பரவியாபினி வியோமை
கரைவிரி அனந்தை நல் அனாதை என் பரநாத
      கலைகள் நனி வந்து அவைகளால்
காரியப்படும் அபரநாத கலை ஐந்தையும்
      கறை அற்ற சூக்குமை முதல்
உரை தரும் ஓர் ஐந்து பரவிந்து கலையால் நடை
      உயர்ந்திடு நிவிர்த்தி ஆதி
ஓது அபரவிந்துவின் கலைகள் ஓர்ஐந்தையும்
      உயர்த்தும் அருள் நெறியில் நின்று
தரையில் இனிது உய்கின்ற விழுமியோர் தன்மை இத்
      தாசற்கும் வருவது எந்நாள்
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

4

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உலகங்கள் எல்லாம் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! பராசத்தி முதல் கிரியாசத்தி வரை உள்ள ஐந்து சக்திகளின் தொடர்பினால் குற்றமில்லாத பரமாயையில் முறையே அனாசிருதை, வியாபினி, வியோமை, அனந்தை, அனாதை எனப்படும் பரநாத கலைகள் நன்கு வந்து, அவைகளால் காரியப்படும் அபர நாத கலை ஐந்தையும் குற்றமற்ற சூக்குமை, அதி சூக்குமை, மிருதை, அமிருதை, வியாபினி எனக் கூறப்பட்ட பரவிந்து கலையால் செயல் உயர்ந்திடும் நிவிர்த்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை முதலாகிய அபரவிந்து கலைகள் ஐந்தையும் உணர்த்தும் அருள் நெறியில் நின்று, இவ்வுலகில் உய்திபெறுகின்ற சிறந்தோர் தன்மை இத்தாசனுக்கும் வருவது எந்நாளில்?

‘தத்’ என்னும் வசனம் அது துவம் என்னும் வசனம் நீ
      தத்துவ இரண்டு பொருளும்
சார்தல் ஆனாய் என்னும் அசி என்று குருசொலும்
      சரத வேதாந்த மொழியை
வித்தக விவேகிகள் உணர்ந்து மாயா மோக
      விளைவு என்னும் மனது அடக்கி
விவேகமே பிரம வடிவு என்று அதை அறிந்து உயும்
      விதேக கைவல்லிய இன்பை
நத்தி முது சஞ்சிதமொடு ஆகாமியத்தையும்
      நசித்து எய்தும் ஆளியாக
நாளிலே தொலை பிராரத்தம் அது தீரும் வரை
      ஞானியாய் வாழ்வர் அன்றோ
சத்தான கடவுளே அத்தகைய வாழ்வை நீ
      தர என்று கண்டு மகிழ்வேன்
சராசரம் எலாநிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

5

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உள்ள உலகங்கள் எல்லாம் நிறைந்த பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! தத்து என்னும் சொல்’அது’ என்னும் பொருளையும், துவம் எனும் சொல் ‘நீ’ என்ற பொருளையும், தத், துவம், ஆகிய இரு சொற்களும் சேர்தலால் ‘ஆனாய்’ என்னும் பொருள் தரும் ‘அசி’ என்ற சொல்லும் சற்குருவானர் விளக்கிக் கூறுவார்; அவர் கூறும் இந்த சாமவேத மகாவாக்கியத்தைக் கலையுணர் ஞானிகள் அறிந்து, அழியாத பற்று எனப்படும் மனத்தை அடக்கிச் சுத்த அறிவே பிரமத்தின் சொரூபம் என்று, அந்த உண்மையை அறிந்து உய்கின்ற விதேக முத்தி என்னும் பேரின்பத்தை விரும்பிப் பழைமையான வினை என்னும் சஞ்சித கன்மத்துடன் புதிதாக ஈட்டப்படுகின்ற ஆகாமிய கன்மத்தையும் ஒழித்து அடையும் ஒழுங்காக, இம்மையில் வாழும் நாட்களில் ஒழியும் நிகழ்வினையான பிராரத்த கன்மத்தை, அது தீரும் வரை சீவன் முத்தராய் வாழ்வர் அல்லவோ? ‘மெய்யான கடவுளே! அத்தகைய சீவன் முத்தர் வாழ்வை நீ எனக்குத் தா!’ என்று கண்டு மகிழ்வேன்!

சருவ சங்கார காலத்தும் சிதாபாசர்
      தம் இயல்பு உணர்ந்திடாமல்
தண்ணிய அசுத்த மாயா காரணத்திலே
      தங்கல் காரண கேவலம்
சருவ உலகம் சிருட்டித்து வருகால் உயிர்கள்
      சதுர்யோனி புக்கு மரண
சனனங்கள் ஒயாது கொண்டு உழலல் காரண
      சகலம் அச் சகலம் அதிலே
கரும மலபரிபாக இருவினையின் ஒப்பு நீ
      கண்ட காலத்து அவைகளைக்
காருண்ணிய மெய்க்குரவ னாக வந்து அருளில்
      கடாக்ஷித்து மலம் அறத்துத்
தரும நிமிர் தன் அடியில் வைத்தல் உயர் சுத்தம் இது
      தானே எனக்கும் வேண்டும்
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

6

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உலகங்கள் எல்லாம் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! எல்லாவற்றையும் அழிக்கின்ற பேரூழிக் காலத்தில், உயிர்கள் தம் உண்மைத் தன்மையை உணர்ந்திடாமல் குளிர்ந்த அசுத்தமாயா காரணத்திலே தங்குதல் காரண கேவலம் எனப்படும்; எல்லா உலகங்களையும் படைத்து வரும் போது உயிர்கள், கருப்பை, முட்டை, வியர்வை, வித்து ஆகிய நான்கு வகையான பிறப்புக்களை அடைந்து, இறப்புப் பிறப்புக்களை ஓயாமல் கொண்டு உழல்வது காரண சகலம் எனப்படும்; அந்தக் காரண சகலத்தில் மலபரிபாகம், இருவினை ஒப்பு-நீ கண்ட காலத்தில் அவைகளைக் காருண்ணியமுடைய ஞானாசிரியனாக வந்து, தன் திருவருளினால் கருணை புரிந்து மலம் அறுத்து அறம் மிகுந்த தன் திருவடியில் வைத்தல் உயர்வான சுத்தம் எனப்படும். இச்சுத்தம்தான் எனக்கும் வேண்டும்!


பாகசாலைப் பண்டம் எவ்வளவு இருப்பினும்
      பாவகத் தீ முதன்மை போல்
பரகதி பெறற்கு ஆய பத்தி தவம் யோகம் ஆதி
      பல தொழில் இருந்தானும் ஓர்
தோகமும் இலா நல் விவேகப திஞான ஒண்
      சோதியே முதன்மை இதனைத்
தொடராத பத்தி வைராக்கியமும் இருவகைத்
      தொடர்பையே மருவும் அதனால்
ஆகுநெறி உய்த்து உணர்ந்து அறிவைப் பிடித்தபிடி
      யாக நனி பற்ற எங்கள்
அத்தனாம் உன் இரு பதத்துணையை உற்றே
      அனாரதம் சாதிக்குமா
தாகம் உள மேதாவியோர் நெறியில் என்னை நீ
      சந்ததம் நிறீஇ அருளாய்
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

7

  அசையும் பொருள் அசையாப்பொருள் என உள்ள உலகங்கள் எல்லாம் நிறைந்த பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! மடைப்பள்ளியில் உணவு தயாரித்தற்குரிய பண்டங்கள் எவ்வளவு இருப்பினும், அக்கினியாகிய நெருப்பு அவற்றைச் சமைப்பதற்குரிய முதன்மைப் பொருளாக இருப்பது போல், மேலான கதியைப் பெறுவதற்கான பத்தி நெறி, தவ நெறி, யோக நெறி முதலான பல தொழில்கள் இருந்தாலும், ஒரு குற்றமிலாத நல்ல அறிவான பதிஞானப் பேரொளியே முதன்மையதாகும். இதனைத் தொடராத பத்தி வைராக்கியமும் இறப்பு, பிறப்பு எனும் இருவகைத் தொடர்பையே பொருந்தும். அதனால், பயன் தரத்தக்க நெறியை உய்த்து உணர்ந்து அறிவைப் பிடித்த பிடியாக நன்கு பற்றுதற், எங்கள் அத்தனாம் உன் இரண்டு திருவடித் துணையை அடைந்து, எப்போதும் சாதனைபுரியும் மிகுந்த தாகமுள்ள ஞானியோர் நெறியில் என்னை நீ எப்போதும் நிறுத்தி அருள்புரிவாயாக!.


பற்று அற்று இருத்தலே பிறவாத பேறு என்று
      பரமன் அருள் உற்று வாழாப்
பாடுஉடைய துறவிகட்கு எங்ஙனம் தம் அறிவு
      பரிபூரணத்தை எய்தும்
முற்றத் துறந்த திருவாத வூரார் மூவர்
      மூலர் வெண்காடர் கிரியார்
முதுவள்ளல் தாயுமானவர் ஆதி பெரியோர்கள்
      முதல்வன் தனைப் பிடித்துத்
தெற்றுஉற்ற முத்திநிலை சேர்ந்ததையும் இவ்வுலகு
      செவ்வெனத் தெரியும் அன்றோ
செய்கரும யக்கி ஆதி பொதுவல்ல பத்தியும்
      தெளிவுமே பொதுவாம் இதைச்
சற்றுநான் அணவாமல் நிற்பது என்றால் உனது
      தாசர் பேறு அண்ணு வேனா
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

8

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உலகங்கள் எல்லாம் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! உலகப் பற்றை முற்றும் துறந்திருத்தலே பிறவாத பேறு அளிக்கும் என்று உணர்ந்து பரமனின் திருவருள் பெற்று வாழாத குணமுடைய துறவிகளுக்கு எப்படி அவர் அறிவு முழுநிறைவை அடையும்? முற்றுந்துறந்த திருவாதவூரடிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகியோரும், திருமூலர், பட்டினத்தடிகள், பத்திரகிரியார் கண்ணுடைய வள்ளல் தாயுமானவ அடிகள் முதலான பெரியோர்களும் இறைவனைப் பற்றிக் கொண்டு தெளிவான முத்திநிலை அடைந்ததையும் இவ்வுலகு செம்மையாகத் தெரிந்துள்ளதல்லவா? செய்யும் கருமங்கள் வேள்விகள் முதலானவை பொதுவல்ல; பத்தியும் ஞானமுமே பொதுவாகும். இதைச் சிறிதும் நான் சாராமல் நிற்பது என்றால்உனது தாசர் பெறும் பேற்றைச் சார்வேனோ?

பெருந்துறவில் ஏறினும் பத்தி வைராக்கியம்
      பிசகாது இருக்க வேண்டும்
பிறழாத பிரம நிட்டானுபவம் நாளும்
      பிறங்க நனி புரிய வேண்டும்
கருதும் இந் நெறி அற்ற ஊகம் அது பூரணம்
      காணாது கண்ணப்பனார்
கனிவுற்ற பத்தியாலே ஆறுநாளில்
      கருப்புகா வீடு பெற்றார்
அருந்தவம் உளார் பலரும் அது கொண்டு நல்வீடு
      அடைந்ததும் பிராமாணியம்
ஆதல்தொட்டு அளிகொண்டு உபாசனா மூர்த்தி அரு
      ளால் எவரும் முத்தி பெறலாம்
தரும குண தெய்வமே தயவு செய்து என்னை உன்
      தாசர் களின்மேல் நிறுத்தாய்
சராசரம் எலாம் நிறை பராபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

9

  அசையும் பொருள் அசையாப் பொருள் என உலகங்கள் எல்லாம் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! பெருந்துறவு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தாலும், பத்தி வைராக்கியம் பிசகாமல் இருத்தல் வேண்டும்; மாறுபடாத பிரமநிட்டை கூடும் அனுபவத்தை நாள்தோறும் விளங்க நன்கு புரிந்துவரவேண்டும்; செய்யத்தக்க இவற்றைக் கருதாமல் வேறு நெறிகளால் பூரணம் காணமுடியாது. ஆறே நாட்களில் முதிர்ந்த பத்தியினால் கண்ணப்பர் பிறப்பில்லாத வீடு பெற்றார். அரிய தவம் செய்த பல்லோரும் அதுகொண்டு சிறந்த வீடு அடைந்ததும் சான்றாம். ஆதலால், மெய்யன்பு கொண்டு எவரும் உபாசனாமூர்த்தி அருளால் முத்தி பெறலாம். அறமெனும் பண்புள்ள தெய்வமே! தயவு செய்து என்னை உன் அடியார்கள் இன்பத்தின் மேல் நிறுத்துவாயாக!

துயர் ஆர் புறப்பற்று அறாதவர்க்கு உள் விழைவு
      தொலையாது தொலையும் ஆயின்
சத்த வீடு அடைவதும் சத்தியம் அசத்தியம்
      துவ்வாத துறவு எய்துபு
முயல்நிலையில் எய்து அறிவு பொன்னில் பதித்துஉள்ள
      முழுமணியை ஒக்கும் மாதர்
மூசிவனள இல்லறத்து எய்து பேர் அறிவாம்
      முதுக்குறைவு இரும்பின் மணியாம்
இயல் இவ் இரண்டு அறிவும் வழிபடு தெய்வத்தினுடை
      இணை அடித் தகவு கொண்டே
ஏற்று உய்ய வேண்டும் இல்லாவிடில் அவம் போம்
      எனும் துணிவில் நிற்கும்எற்கு உன்
தயவு இரங்காவிடின் வரும்கதி எதோ சோண
      சயில நாமத்தன் அரசே
சராசரம் எலாம் நிறை பாரபர சதாநடன
      சண்முகஆனந்த சிவமே.

10

  சோணசயிலம் எனும் மலையின் பெயரைக் கொண்ட அருணகிரிநாதரின் அரசனே! அசையும் பொருள் அசையாப் பொருள் என உலகங்கள் எல்லாம் நிறைந்துள்ள பராபரனே! எப்போதும் கூத்தினைச் செய்கின்ற சண்முகானந்த சிவமே! துன்பம் நிறைந்த புறப்பற்று நீங்காதவர்க்கு அகப்பற்று நீங்காது; நீங்குமாயின் சுத்த வீட்டை அடைவது சத்தியம். பொய்ம்மையில்லாத் துறவு அடையும் போது, முயல்கின்ற நிலையில் அடையும் அறிவு, பொன்னில் பதித்துள்ள முழுமணியைப் போன்றதாகும். மாதரை மொய்த்து வளைக்கும் இல்லறத்தால் அடையும் பேரறிவு ஆகிய ஞானம் இரும்பில் பதித்த மணி போன்றதாகும். அடையத்தக்க இவ்விரண்டு அறிவும் தாம் வழிபடு தெய்வத்தினுடைய இரு திருவடிகளின் கருணை கொண்டே ஏற்று உய்ய வேண்டும். இல்லாவிடில் வீணாகிவிடும் எனும் உறுதியில் நிற்கும் எனக்கு, உன் கருணை இரங்காவிடின் வரக்கூடிய கதி எதுவோ? அறிகிலேன்!


Home    |    Top   |    Back