Logo


English

திருச்செந்தில்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

கார் ஒத்த குழலிலே மேரு ஒத்த முகையிலே
       கஞ்சமலர் வதனத்திலே
கன்னல் நிகர் மொழியிலே கயல் அனைய விழியிலே
       கமழ்கின்ற ஆடைதனிலே
சீர் அற்ற மனதைச் செலுத்தி அஙன் வருதுன்பு
       தெரியாது இதேத சுகம் எனச்
சிக்கி இனம் அலைவனோ தெருள்தரு விரத்தியைச்
       சிந்தை செய்து ஆளாவனோ
கூர் உற்ற குசலரோடு கூடி இனிது உய்வனோ
       கோளர்வழி நின்று உழல்வனோ
கூர்த்த உணர்வு இல்லாத ஏழை அறியேன் எனைக்
       கொள்ள உள்ள நீ கசுருணையால்
ஈரத்திரம் கொடுத்து ஆசு அறுத்து அருளும் நாள்
       எந்த நாள் சொல்லி அருளே
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்த சிவமே.

1

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! விலை மாதரின் கரிய மேகம் போன்ற கூந்தலிலே, மேருமலை போன்ற தனங்களிலே, தாமரை போன்ற முகத்திலே, கரும்பு போன்ற இனிய மொழியிலே, கயல் மீன் போன்ற கண்களிலே, மணம் வீசும் ஆடையிலே, ஒழுங்கில்லாத மனத்தைச் செலுத்தி அதனால் வரும் துன்பத்தை அறிந்து கொள்ளாமல், இதுவே இன்பம் எனச் சிக்கி இன்னும் அலைந்து திரிவேனோ? தெளிவு தரும் துறவறத்தை நினைத்து அடிமையாவேனோ? கூர்மையான அறிவுடையோருடன் சேர்ந்து நன்கு உய்வேனோ? கூர்மையான அறிவில்லா ஏழையாகிய நான் அறியேன்; என்னை அடிமைகொள்ள உள்ள நீ கருணையினால் அன்பு கொண்டு என் குற்றங்களைப் போக்கி அருள் புரியும் நாள் எந்த நாள்? எனக்கு அருள் கூர்ந்து சொல்லியருள்வாயாக!

கருப்பை உழை அதி அற்ப சுக்கிலம் தங்க அது
       கதழ்வாகி மதிபத்தில் ஓர்
களன் இலா இளவலாய் வந்து உதித்து உற்றவர்கள்
       கனகமணி அணிகள் இட்டு
விரும்புவகையொடு வளர்க்கச் சடம் வளர்ந்து மதம்
       மீக் கொண்டு மாதர் புழையில்
விழுந்து கிழம் மடி உற்று அயர்ந்து உயிர் பிரிந்தபினர்
       மெல்லியர் அரற்ற உரியோர்
உரப்பு உள பிணப்பறை சிறப்பொடு முழக்கி எரி
       உண்ணுநிலை சேர்த்து வசுவிட்டு
ஊத ஒரு பிடிபூதியாகும் இதுவே இந்த
       உலக வாழ்வு ஐய இதனை
இருட்டுமனம் உள்ளார் மதித்து உனை எணார் என்றன்
       எண்ணமும் அவ்வாறு செலுமோ
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

2

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள உழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! கருப்பையுள் மிகவும் அற்ப அளவு சக்கிலம் தங்கும்;அது பெருத்துப் பத்து மாதங்களில் வளர்ந்து உன்மத்தமில்லாத குழந்தையாய் வந்து பிறந்து, உறவினர்கள் பொன்மணி அணிகலன்கள் அணிவித்து மிக்க விருப்பத்துடன் வளர்க்க உடம்பு வளர்ந்து, இளமைச் செருக்குமிக மாதர் துளையில் விழுந்து முதுமையும் நோயும் அடைந்து வருந்தி உயிர் பிரிந்த பின்னர் மாதர்கள்மேல் விழுந்து புலம்புவர்; உற்றாரும் உரியவர்களும் வலிய பிணப்பறை சிறப்பாக முழக்கிச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரியூட்டுவர்; அத்தீயில் எரிந்து ஒரு பிடி சாம்பலாகும்; இதுதான் ஐயனே இந்த உலக வாழ்வு! இதனை அறியாமை இருள் சூழ்ந்த மனம் உடையார் பெரிதாக மதிப்பார்; மதித்து உன்னை நினைக்கமாட்டார்கள்; என்னுடைய நினைப்பும் அவ்வாறு செல்லுமோ?

முரசகேதனன் அனும கேதனன் சகதேவன்
       முனை பொங்கு தண்ட வீமன்
மொய்ந் நகுலன் எனும் ஐவர் தூதனாய் எண்ணறு
       முனைந்தோரை முடிவு செய்தோற்கு
உரிமையுடன் உபமந்யர் செய்த தீக்கைவகை
       உணராத மக்கள் மேல் நாள்
உவகையொடு பரமனார் வடநிழலில் நால்வர்க்கு
       உரைத்ததே முத்தி வடிவு ஆம்
அருள்நெறி எனத் தெளிய வல்லுநர் கொலோ அந்த
       அறிவையே என் சம்மதத்து
அறிவு நெறியாய்க் கொள்ள அருளினை அதே இரண்டு
       அற்ற அத்துவித நிலையாய்
இரிபு அற இலங்கு சன்மார்க்க நலனாம் அதனையே
       எனக்கு அருளல் வேண்டும்
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

3

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! முரசக் கொடியோனாகிய தருமனும், அனுமக் கொடியோனாகிய அருச்சுனனும், சகதேவனும், போருக்குப் பொங்கி எழும் கதையுடைய வீமனும், போர்க்களம் செல்லும் நகுலனும் என்று கூறப்படும் பாண்டவர் ஐவருடைய தூதனாயும், எண்ணற்றவராய்ப் போர் செய்தோரை மடித்தவராயும் உள்ள திருமாலுக்கு உரிமையுடன் உபமந்யு முனிவர் செய்த சிவதீக்கை முறை அறியாத மக்கள், முற்காலத்தில் மகிழ்வுடன் சிவனார் கல்லால மரநிழலில் சனகர் முதலான முனிவர் நால்வருக்கும் உபதேசம் செய்ததே முத்தி வடிவாகும் அருள்நெறி என அறிய வல்லவர்களோ? அந்த அறிவையே என் சம்மதத்திலுள்ள அறிவு நெறியாய் ஏற்றுக் கொள்ள அருள் புரிந்தனை! அதுவே இரண்டற்ற நிலை என்னும் அத்துவித நிலையாகும்; அழிவின்றி விளங்கும் சன்மார்க்கம் எனும் நன்னெறியாகும். அதனையே எனக்கு அருள் புரிதல் வேண்டும்.

காலம் ஒரு மூன்றினும் பொன்றாத சத்துஆய
       கர்த்தவ்வியம் என்னும் உன்னைக்
கனவினும் காணாத மைந்தர் மறை முடிவின்
       கருத்தைப் படித்த அளவிலே
மேலவர்கள் தொழும் பிரமம்நாம் என நினைத்து அகம்
       விளம்பி அருள் நெறியை விட்டு
வியன் அற்ற புன் தொழில் விடாத இழி பதிதராய்
       விசுவத்து உழன்று கெடுவார்
சீலம் உள தெய்வமே அந்நடவை என் அருகு
       சேர ஒரு சிறிதும் ஒப்பேன்
தெய்வ கக நிட்டையில் உயர்ந்து ஒன்று இரண்டெனும்
       செப்பு அற நிலைக்க என்னால்
ஏலும் இனி ஏலும் என நனி துணிந்து உய்ய நான்
       எண்ணினேன் அவணம் அருள்வாய்
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

4

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தில் இறவாத மெய்ப்பொருளான தலைவனாகிய உன்னைக் கனவிற்கூடக் காணாத மனிதர்கள், வேதாந்தத்தின் கருத்தைப் படித்த அளவிலேயே மேலானவர்கள் வணங்கும் பிரமம் நாம்தான் என்று நினைத்துச் செருக்கைக் கூறி அருள் நெறியை விட்டுப் பயனில்லாத அற்பத் தொழிலை விடாத கீழான ஒழுக்கம் கெட்டவராய் இவ்வுலகில் வருந்திக் கெடுவார்கள். அழகுள்ள தெய்வமே அந்தக் கெட்ட வழி என்னிடம் சேர ஒரு சிறிதும் ஒப்பேன்; தெய்வத்தன்மையுடைய இன்ப நிட்டையில் என்னால் இனி முடியும் என்று நன்கு துணிந்து உய்ய நான் நினைத்தேன். அவ்வண்ணமே அருள் புரிவாயாக!

பிரிவு அற விளங்கு அருளை அடையாமல் எங்கும் நிறை
       பிரமத்தை அடைவதாகப்
பேசுபவர் பேச்சுக்கு அணுத் துணையும் ஒத்துப்
       பிதற்ற என் நெஞ்சம் இசையாது
அரிய திருவருள்வரின் அளக்கர்தசை ஏது உற்ற
       அறியாமை ஏது துதிப்போடு
அழிவுஏது மெலிவு ஏது பழி ஏது இவ் அதிருய்யம்
       அன்பிலார் அறிவர் கொல்லோ
ஒரு நிமிடம் ஏனும் உள் உருகி நின்பால் நிற்க
       உரன்இலார் அமரர் எனினும்
உன் அடிமை நான் ஒரு விதத்திலும் மதிக்கிலேன்
       உனை நினைவர் சிறியர் எனினும்
இருடிகள் எனக் கருதி அவர் அடி வணங்குவேன்
       எனை அடிமை கொண்ட பரமே
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

5

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! பிரிவில்லாமல் விளங்கும் அருளை அடையாமல் எங்கும் நிறைந்துள்ள பிரமத்தைத் தாம் அடைவதாகப் பேசுவதற்கு என் மனம் இசையாது; அடைதற்கு அரிய திருவருள் வருமாயின் உலகத்தின் மீது ஆசை ஏது? தம்மிடமுள்ள அறியாமை ஏது? பிறப்போடு இறப்பு ஏது? மெலிதல் ஏது? பழி ஏது?இந்த அதிமுக்கியமான இரகசியத்தை இறையன்பில்லாதவர் அறிவார்களோ? என்னை அடிமைகொண்ட பரம்பொருளே! ஒரு நிமிட நோமேனும் மனம் உருகி நின்பால் நிற்கும் அறிவிலார் தேவர்கள் ஆனாலும், உன் அடிமையாகிய நான் அவர்களை ஒருவிதத்திலும் மதிக்கமாட்டேன்; உன்னை அன்புடன் நினைப்பவர் சிறியவராயினும் முனிவர்கள் எனக் கருதி அவர் அடிகளை வணங்குவேன்.

கண்ணும் கருத்தும் அறியாத பொருளாகவும்
       கண்டம் அது இலாத அகண்ட
ககனம் ஆகவும் நிறைந்து இடையறாது உள்ள நீ
       கண்டிதப் பட்ட உடலில்
நுண் உணர்வு இலாது சிற்றுணர்வாய் விளங்குஉயிர்கள்
       நோக்கு அறிந்து அவைகள் தம்மை
நுங்கு அறிவுகொடு தெளிந்து அருளிலே கூடி ஒரு
       நூனம் இல் ஆனந்தம் ஆம்
விண்ணிடை உலாவி எமை அடைவீர் அம் முறைமை
       விவரிக்க அறிதிர் என்னா
மெய்யான திருமேனி இலக உருவம் கொண்டு
       மெய் அருள் பெருக்கி அருளும்
எண்ணம் உணராத புன் மதத்தர் உரு இலை என்பர்
       யாங்கள் உனை விடுவது உண்டோ
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

6

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! தூலக் கண்களாலும் மனத்தின் நினைப்பாலும் அறிய முடியாத பொருளாகவும். எல்லை இல்லாது எல்லையற்ற ஆகாசமாகவும் நிறைந்து இடையறாது நீ உள்ளாய். அத்தகைய நீ அளவுக்குட்பட்ட பிண்டமான உடம்பில் நுண்ணறிவிலாது சிற்றறிவு மட்டுமே கொண்டு தெளிவான அருளிலே கூடி ஒரு குறைவில்லாத இன்பமாகும் விண்ணுலகில் வாழ்ந்து, “எமை அடைவீர்களாக! அதனை அறிவீர்களாக!” என்று உண்மையான திருமேனி விளங்கத் திருவுருவம் கொண்டு உண்மை அருளைப் பெருக்கி அருளுகின்ற கருத்தை அறியாதவர்களான அற்ப அறிவுடைய மதத்தினர், உனக்கு உருவம் இல்லை என்று கூறுவர்; நாங்கள் உன்னை விடுவதுண்டோ? உருவாகவும் வழிபடுவோம்!

கண்ட பொருள் தன்னிலும் காணாத பொருளிலும்
       கரையில் விண்இடையும் எங்கும்
கவி அற நிறைந்து அகண்டாகார அவிகார
       கருணை வானாக நிலவி
விண்தலமம் மண்தலமும் வந்திக்க உளநீ
       விழுக்கருணையின் பெருக்கால்
வேதத்தில் வெளியிட்ட விக்கிரக வழி நீ
       விளங்குவதை இலை என்பதும்
அண்டர் முதல் எழுவகை உயிர்க்குழுவையும் தன் உள்
       அடக்கி ஆள் சருவவலிமை
அயர்விலாது உள உனக்கு உர எடுக்கும் திறமை
       அணுவும் ஒல்லாது என்பதம்
எண்டிகையினும் தகுதி அற்ற சொல்லாய் முடியும்
       என்பதற்கு ஆசங்கையோ
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

7

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! கண்ணுக்குத் தெரிகின்ற பொருள்களிலும், தெரியாத பொருள்களிலும் எல்லையில்லா ஆகாசத்திடத்தும் ஆக, எங்கும் குறைவின்றி நிறைந்து எல்லையற்ற ஆகாசமாயும், வேற்றுமையற்ற கருணை மேகமாவும் இருந்து விண்ணுலகும் துதிக்க உள்ள நீ, சிறந்த கருணை மிகுதியால் வேதங்களில் கூறப்பட்டுள்ள உருவங்களின்படி நீ விளங்குவதை இல்லை என்று கூறுவதும், தேவர் முதல் ஏழு வகையான பிறப்புக் கூட்டத்தையும் தன்னுள் அடக்கி ஆளுகின்ற சருவ வல்லமையும் குறைவிலாது உள்ள உனக்கு உருவம் எடுத்துக் கொள்ளும் திறமையும் அணுவளவும் முடியாது என்று கூறுவதும், எட்டுத் திக்குகளிலும் தகுதியற்ற சொல்லாய் முடியும் என்பதற்கு ஐயமுண்டோ?

பல நறு மலர்த்தொடை சமர்ப்பித்து அரும் கனிகள்
       பலகார வர்க்கம் அசனம்
படைத்து இனிய தேங்காய் உடைத்து உரிய பூசனம்
       பண்ணினவர்கட்கு மட்டும்
கலகலென அணி ஞெகிழி குமிலம்இட வந்து நீ
       கருணை செய்து அருள்வை என்றும்
கண்ட இடன் எல்லாம் நினைந்து கலுழ் அன்பரைக்
       கருதாது இருப்பை என்றும்
உலகமிசை ஒரு நூல் இருந்து வரை அறை இட்டு
       உரைப்பதின்று உள் அன்பு எனா
ஓதும் ஒரு கண்ணியில் அகண்ட பரமது சிக்கல்
       உறுதி எனும் நூல்கள் அதனால்
இலகு திருவடி அருளில் எனது எதிர் எழுந்து அருளி
       என்னை நீ வைத்தல் முறையே
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

8

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! பல வேறுவகையான மணம் கமழ் மலர்மாலைகள் சமர்ப்பித்தும், அரிய சுவைமிக்க கனிகள், பல காரவகைகள் படைத்தும், இனிய தேங்காய் உடைத்தும், தகுந்த பூசைகள் செய்தவர்களுக்கு மட்டுமே கலகலென அழகிய சிலம்பு ஒலிக்க வந்து நீ கருணை செய்தருள்வாய் என்றும், கண்ட இடத்திலெல்லாம் உன்னை நினைத்து அன்பின் பெருக்கால் கண்ணீரைப் பொழியும் அன்பரைத் திருவுளத்தில் நினைக்கமாட்டாய் என்றும், இவ்வுலகில் ஒரு நூல் கூட அறுதியிட்டு உரைப்பதில்லை; உள்ளன்பு என்று கூறப்படும் ஒரு வலையில் எல்லையற்ற பரம்பொருள் சிக்குவது உறுதி என்றுதான் நூல்கள் கூறுகின்றன. அதனால் விளங்கும் உனது திருவடியை எனக்கு அளித்தருளி என் எதிரில் எழுந்தருளி என்னை உன் திருவடியில் வைத்தலே முறையாகும்.

காலனை உதைத்து விதி முடி கொய்து மலர் எய்த
       காமராசனை எரித்துக்
கலைமதியொடு அரி அண்டர் எவரையும் வெகுண்டமுக்
       கண்ணன் ஒரு பாதி என்னும்
மூலகாரணி சருவலோக ரட்சகி துழாய்
       முடி மகா விஷ்ணு பகினி
முக்கோண சக்கரி சடக்கரி பருப்பதி
       முகைப் பயசு அருந்தி மகிழும்
சீலமே அண்டநிரை வைக்கின்ற பரவெளித்
       திட்பமும் விரிந்து சூழும்
சித்த வெளி தன்னிலே நான் உள்ள நிலைமையும்
       தெற்றென உணர்ந்து அதீதம்
ஏலவே எய்தாத தாழ்வால் உதித்த எற்கு
       இனிவரா நெறியை அருளாய்
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

9

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! பிரமதேவன் தலை ஒன்றைக் கொய்து, மலர் எய்திய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கி, கலைகளுடைய சந்திரனுடன், சூரியன், தேவர்கள் முதலிய எல்லோரையும் கோபித்தவரான முக்கண்ணுடைய சிவபெருமானின் திருமேனியில் அணிந்த மகாவிஷ்ணுவின் தங்கை, முக்கோணசக்கரி, சடாக்கரி, பருப்பதி என்னும் உமையம்மையின் திருமுலைப்பாலை அருந்தி மகிழும் சீலமே! அண்டங்களை வரிசையாக வைக்கின்ற பரவெளித் திண்மையும், விரிந்து சூழ்கின்ற சிதாகாசத்திலே நானுள்ள நிலைமையும் தெயிவாக அறிந்து அதீதம் முன்பே அடையாத தாழ்வினால் பிறந்த எனக்கு மீண்டும் இவ்வுலகில் பிறவாத நெறியை அருள்வாயாக.

திரளாய திரவியப் பிரபுவை அடுத்து எளிஞர்
       சீவனம் செய்யும் முறைபோல்
தேவாதி தேவன் எனும் உனை நான் அடுத்து எனது
       சிந்தையின் அலக்கண் எல்லாம்
அரைநொடியிலே அவித்து அத்துவித முத்தி நிறைவு
       அடைய என்று உறுதி கொண்டேன்
அறையும் இம்முறையில் ஒரு நீயும் நானும் தொந்த
       ஆட்டியனும் பூத்தியனும் என்ற
உரைஇடற்கு ஓர் ஐயம் இன்று உனது இயற்கையின்
       உவகை என் கண்ணில் வளர
ஒரு கிருபை புரிதி அருள் அருணகிரி புகழ் ஈச
       உபநிடத முனைவர் முதலே
இரவு பகல் அற்ற பரவெளியில் எக்காலமும்
       இருக்கும் இன்பப் பெருக்கே
இஞ்சிவளை மந்த்ரமலி செந்திலில் அமர்ந்த எழில்
       எந்தையே கந்தசிவமே.

10

   மதில் சூழ்ந்த வீடுகள் மிகுந்த திருச்செந்திலில் எழுந்தருளியுள்ள அழகு பொருந்திய எம் தந்தையே! கந்த சிவமே! திரண்ட பெருஞ் செல்வமுடைய ஒரு செல்வரை அண்டி ஓர் ஏழை சீவனம் செய்யும் முறையைப் போல் தேவர்களுக்கெல்லாம் தேவன் என்னும் உன்னை நான் அண்டி என்னுடைய மனத்துன்பம் எல்லாம் அரைநொடியில் ஒழித்து அத்துவித முத்தியை அடைய வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளேன். கூறப்படும் இம்முறையில் நீயும் நானும் தொடர்புடைய ஒரு செல்வனும் அவனுடைய ஒரு வேலைக்காரனும் போல் என்று கூறுதற்கு ஓர் ஐயமில்லை. உனது இயல்பான இன்பம் என்னிடம் வளர ஒரு கிருபை புரிந்தருள்வாயாக! அருணகிரிநாதர் புகழும் ஈசனே! உபநிடதங்கள் கூறும் முனிவர்களின் தலைவனே! இரவு பகல் என்னும் இருபொழுதுகளும் இல்லாத பரவெளியில் எல்லாக் காலத்திலும் இருக்கும் பேரின்ப வெள்ளமே!


Home    |    Top   |    Back