Logo


English

திருக்கைலாயத் திருவிளையாடல்
முதற்பத்து

1. முற்றறிவுடைய முதல்வன், சரவணப்பொய்கையிலே தூய்மை பொருந்திய தாமரைமலர்களின் மீது ஆறு திருக்குழந்தைகளாய் விளங்கியமர்ந்திருந்தபோது, நீண்ட கூந்தலையுடைய பார்வதிதேவி, ‘நீவிர் அறுமுகத்திருவுருவனாய் அமையுங்கள்’ என்று திருவாய்மலர்ந்தருளி, நெடிய தன்னுடைய திருக்கரங்களால் அக்குழந்தைகளை ஒரு சேர அணைத்தனள். அவை அவ்வாறே திரண்டது கண்டு திருவுளத்திலே மகிழ்ச்சி கொண்டருளினாள்.

2. (அவ்வறுமுகக் குழந்தைக்கு) உமாதேவி தன்றிருப்பயோதரப் பாலையூட்ட அதுவுமுண்டது. பின்னர் அது, பார்வதி பரமேச்சுவரரோடு ஒள்ளிய திருக்கைலாய மலையையடைந்தது. அங்கு நலங்கள் எவற்றினுந் திருத்தமுற்ற குழந்தைப் பருவத்து (மாணிக்க நிறமுடைய வீரபாகு, தரள நிறமுடைய வீரகேசரி, புட்பராக நிறமுடைய வீரமகேந்திரன், கோமேதக நிறமுடைய வீரமகேசன், வைடூரிய நிறமுடைய வீரபுரந்தரன், வயிர நிறமுறைய வீரராக்கதன், மரகத நிறமுடைய வீரமார்த்தாண்டன், பவள நிறமுடைய வீராந்தகன், நீல நிறமுடைய வீரதீரனெனும் பெயரிய) நவவீரர்களோடும் இலக்ஷம் வீரர்களோடும் பின்னமில்லாப் பிரியத்தோடு நேயமுங் கொள்வதாயிற்று அக்குழந்தை.

3. அது, தனது தாளினால் ஏழு கடல்களையும் உடைத்துப் பெருக்கெடுக்க விட்டது. கூர்மை மிக்க ஆயுதத்தினால், பெருமை கெடாத வானளாவிய சத்த குலகிரிகளையுந் தகர்த்து விட்டது. பெரிய திசைக்கரிகள் யாவற்றையும் வீரிட்டோடுஞ் சிறுபந்தெனும்படி மகிழ்ச்சியோடு விண்ணிலெறிந்து விளையாடியது.

4. இந்த விதமாகப் ‘பல்பெருந் திருவாடல்கள்’ புரிந்தருளிய துன்பமணுவுமில்லாத அம்முழுமுதற் கடவுளான பெருமான், ‘எனது இலீலையினாற் சிதைவுற்ற எல்லாம் முன்புபோலவே பொலிவுறுவனவாகுக’ என்று திருவுள்ளத் தெண்ணி, அவ்வாறே ஆக்கிய அவ்வற்புதப் பெருமையை அவனன்றி வேறெவர்தாங் கொள்ளவல்லார்!

5. பின்பு அழகு விளங்குகின்ற இயற்கையாகவே கடவுள் மணம் வீசுகின்ற திருமேனியையுடைய இளம்பூரணனாகிய கடவுள், ஸ்ரீ மஹா கைலாஸத்தையடைந்து ஆங்கமர்ந்திருக்குநாளில், ‘சிவபெருமானைக்குறித்து நாரதர் செய்கின்ற ஒரு யாகத்திற் செய்யுமுறை தவறின காரணத்தால் அதனினின்றும் யாட்டுக்கடாவென்று தோன்றியது. 6. தண்டையுஞ் சிலம்பு அணிந்த கால்களோடு விளங்கும் அக்கடாவானது. தனது சிவந்த உடம்பைக் குலுக்கிக் கொண்டு எல்லாப் புவனமு நடுங்கும்பட

ி விரைந்தார்ப்பரித்து வருகின்றது; அதனை அடக்கியருளல்வேண்டும் என்று மாட்சிமை வாய்ந்த தேவர்களும், முனிவர்களும் முருகப்பெருமான் சன்னிதியில் விண்ணப்பித்து அவனடிபணிந்தனர்.

7. அவ்வாறு வந்த யாட்டுக்கடாவை, வலிய அதன் உடற்பொலிவு அழியா வகையில் வீரபாகுதேவர் தம்முடைய கைகளாற் பிடித்துக் கொண்டு வருதலும், மக்களறிவிற்கு எட்டாததாகிய பிரணவத்தைத் தனது திருமேனியாகக் கொண்டுள்ள கந்தவேள், அதன்மேல் ஆரோகணித்து அதனுடைய நலத்தை அழிக்காமலே பல புவனங்களிலும் உலாவி வந்து, ‘இஃதெனது வாகனம்’ என்று கூறியருளினன்.

8. அதுகேட்ட அக்கடாவும் அவ்வாறு வாகனமா யமர்ந்தபின்பு, சிவபெருமான் திருவடிகளை மெய்யன்போடு மலர்களைக் கொண்டருச்சித்து வணங்கி மிக்க களிப்புடன் சிவசன்னிதானத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த அழகிய பிரம தேவன் சருவவல்லமையும் பொருந்திய செவ்வெட்பரமன்றிருவடிகளை வணங்காது உதாசீனனாய் அப்பரமன திருக்கையினைக் கடந்துபோயினன்.

9. அங்ஙனஞ்சென்ற பிரமனைக் குகக்கடவுள் அழைத்து, ‘வேதத்தின் முற்பட்டுள்ள பிரணவத்தின் பொருளை இனிது கூறுவாயாக’ என்றுபணித்தருள;l அவனும் ‘செவ்வனே படைப்புத் தொழில் நடாத்தும் நானே அதன்பொருள்’ என்று கூறினன். கூறவே, அத்தனிமுதல்வன் அயனது தலைகள் புண்ணுறும்படி நன்கு குட்டினன்.

10. குட்டியதோடு தனது தாளால் அவ்வயனதுடம்பிலுமுதைத்து, ‘இவனுக்குப் பெரிய தளைகளைப் பூட்டித் தப்பவிடாது கொண்டுபோய்க் கந்தகிரியிலே சிறையிலிருத்துங்கோள்’ என்று பணிக்க; கணநாதரும் அவ்வாறே செய்துமுடித்தார்கள். (பின்னர்) அருணகிரிநாதர் புகழும்படியான ஒப்பற்ற முருகப்பெருமான், சருவேசுவரனாகிய சிவபெருமானுக்கு அப்பிரணவத்தின் உண்மைப் பொருளை உபதேசக் கிரமத்தாலெடுத்துரைத்தனன்.


Home    |    Top   |    Back