Logo


English

திருக்கயிலாசமலை

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

சாதுக்கள் அடிகளை வணங்காத தலை என்ன
       தலை ஞான சற்குரு முகம்
தரிசனம் செய்யாத கண் என்ன கண் அமல
       தந்திரம் சுருதி முறைகள்
ஓதும் உரை கேளாத செவி என்ன செவி என்றும்
       உறுதி உள தெய்வஸ்துதி
உண்மையொடு செய்யாத வாய் என்னவாய் பற்று
       ஒழித்து இரப்போர்களுக்குக்
காதலால் ஈயாத கை என்ன கை பெரிய
       கர்த்தர் வாசத்தலத்தைக்
கருதி வழி நடவாத கால் என்ன கால் கொடிய
       கம்பலைக்கு ஏது ஆய
தீது கண்டு ஒருவாத சிந்தை என் சிந்தை என்
       சிந்தையில் அமர்ந்த பொருளே
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

1.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! துறவிகளின் திருவடிகளை வணங்காத தலை என்ன பயனுடைய தலை? ஞானசற்குருவின் திருமுகத்தைத் தரிசிக்காத கண்கள் என்ன பயனுடைய கண்கள்? குற்றமற்ற வேதங்கள் ஆகமங்கள், திருமுறைகள் ஆகியவை கூறிய உரைகளைக் கேளாத செவிகள் என்ன பயனுடைய செவிகள் என்றும் அழியாதுள்ள இறைவனை உண்மையுடன் துதிக்காத வாய் என்ன பயனுடைய வாய்? அகப்பற்றுப் புறப்பற்றுக்களை ஒழித்து முற்றுந்துறந்த துறவிகளாகிய இரப்போர்க்கு அன்புடன் ஈயாத கை என்ன பயனுடைய கை? பெரிய கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தலத்தை நினைத்து யாத்திரை செய்யாத கால் என்ன பயனுடைய கால்? கொடிய துன்பத்திற்குக் காரணமாயுள்ள தீவினைகளை நீங்காத மனம் என்ன பயனுடைய மனம்?

மைக்கண் உடை விலைமாதர்கட்கு நாண் இன்று முடி
       மன்னர்க்கு நேயம் இன்ற
வலிய கொலையாளர்க்கு இரக்கம் இன்று ஒவாத
       மாதவர்க்கு ஏதம் இன்று
விக்கினம் இலா இரசவாதிக்கு மிடி இன்று
       விண்ணவர்க்கு இறுதி இன்று
வேரி நுகர்வோர்க்கு முறை இன்று அடங்காமோக
       வெறியர்க்கு ரோசம் இன்று
மக்களைப் பெற்றவர்களுக்கு மலடு இன்று அரிவை
       மக்களே பெற்றவர்கக்கு
மானம் இன்று அடர்கடன் பட்ட பெயர்கட்கு இகு
       மன மகிழ்வு சற்றும் இன்று
திக்கு அனைத்தும் பரவு உன் அடி தொழுபவர்க்கு மறு
       சென்ம நோய் என்பது இன்று
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

2.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! மைதீட்டிய கண்களுடைய விலைமாதர்களுக்கு நாணம் இல்லை; முடியணிந்த மன்னர்களுக்கு அன்பு இல்லை; வலிமையான கொலையாளிகட்கு மனத்தில் இரக்கம் சிறுதும் இல்லை; இடையறாத பெருந்தவமுடையவர்கக்குத் துன்பம் இல்லை; இடையூறில்லாத இரசவாதிக்கு வறுமையில்லை; தேவர்களுக்கு மரணமில்லை; கள்ளுண்பவர்க்கு ஒழுக்கம் இல்லை; அடங்காத காமவெறியர்க்கு ரோசம் இல்லை; மக்களைப் பெற்றவர்களுக்கு மலடு என்ற குறையில்லை; பெண்மக்களே பெற்றவர்க்கு மானம் இல்லை; மிகுதியான கடன்பட்டவர்க்கு மனமகிழ்வு சிறிதும் இல்லை; திசைகள் அனைத்தும் பரந்துள்ள உன் திருவடிகளைத் தொழுபவர்களுக்கு மீண்டும் பிறத்தல் என்னும் பிறவி நோய் இல்லை என்க!

மாமந்திர வாதிக்கு மமதை உண்டு எத்துணையும்
       மாசு அற்ற கவிஞர்கட்கு
மண்டலம் இருக்கும்வரை புகழுண்டு பின்னிடா
       வலிகொள் போர் வீரருக்குப்
பூமியில் கீர்த்தி உண்டு இருவள்ளியோர்க்கு உரிய
       புண்ய போகங்கள் உண்டு
பொய்க்கிளவி கனவினும் புகலாதவர்கக்கு நல்
       புந்தியில் புனிதம் உண்டு
தூமருவு காய கற்பம் துய்த்தவர்க்கு முக்கால நிலை
       சொல்ல வல்ல ஆண்மை உண்டு
சேமம் தழைக்கும் நின் அடியவர்க்குச் சகல
       செல்வப் பெருக்கும் உண்டே
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

3.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! பெரிய மந்திரவாதிக்கு மமதை உண்டு; எள்ளளவும் குற்றமில்லாத கவிஞர்கட்கு இவ்வுலகம் உள்ளவரை புகழ் உண்டு; பின்வாங்காது வலிமையுடன் போரிடும் போர் வீரருக்குப் பூமியில் புகழ் உண்டு; பெரிய வள்ளலுக்குப் புண்ணியமும் போகங்களும் உண்டு; கனவிலும் பொய்ச் சொல் சொல்லாதவர்கக்கு நல்ல மனத்தில் புனிதம் உண்டு; தூய்மை பொருந்திய காயகற்பம் உண்டவர்க்கு நரை தோன்றாத உடம்பு உண்டு; சோதிடம் கற்றவர்க்கு முக்காலத்திலும் நடப்பவற்றைச் சொல்லக்கூடிய ஆற்றலுண்டு; நலம் வளரும் உன் அடியவர்க்கு்ச் சகல செல்வப் பெருக்கும் உண்டே!

ஊன் பொதி அழுக்கு உடம்பிற்கும் உயிரிற்கும் இங்கு
       உதவு தின்பண்டங்களில்
ஒதுக்காதவை கொளல் ஒதுக்கியவை தள்ளல் இறை
       ஒருவனைச் சிந்தை புரிதல்
மான் மருள் மயக்கு எலாம் எற்றுதல் நறும் பத்தி
       மாறாது நிலை கொள்ளுதல்
மற்றும் உள இயல்பு அனைத்தும் புறம்போகவிடல்
       மனதில் தன் இயல்பு கண்டு
தான் கவலைமிக்கு உறுதல் தன் பிழை பொறுக்கும் ஒரு
       தகைமை என்பது தேடுதல்
தலைவனார் வல்லமைக்கு ஒல்லாத முறைகண்டு
       சந்ததம் இரங்கல் என்னும்
தேன்மலர்க் கழல் அன்பர் செய்கை ஒன்பதையும் இச்
       சிறியனேன் மருவல் என்றோ
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

4.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! தசை பொதிந்த அழுக்கான உடம்பிற்கும் உயிருக்கும் வாழ்வதற்குதவும் உணவுப் பண்டங்களில் ஒதுக்க வேண்டாதவற்றை உண்ணல், ஒதுக்க வேண்டியவற்றை உண்ணாமல் விடுதல், இறைவன் ஒருவனை மட்டும் மனத்தில் வழிபடுதல், உருவ மருட்சியால் வரும் அறிவு மயக்கமெல்லாம் ஒழித்தல், நல்லபத்தி மாறாமல் நிலைபெற்றிருத்தல், மற்றுமுள தன்மைகள் அனைத்தையும் நீக்குதல், மனத்தில் தன் குணம் கண்டு கவலை மிகுதி கொள்ளுதல், தன் குற்றம் பொறுக்கின்ற குணத்தைத் தேடுதல், தலைவனாராகிய இறைவன் வல்லமைக்குப் பொருந்தாத முறைகண்டு எப்பொழுதும் இரங்குதல் என்று கூறப்படும் தேன் சிந்தும் மலர் அடிக்கு அன்பர்தம் செய்கை ஒன்பதும் அறிவிற் சிறியவனாகிய நான் மேற்கொள்ளுதல் என்றோ!

காமம் அதி போஜனப் பிரீதி பகை லோபமும்
       காய்தல் மடி மாயா அகங்
காரம் எனும் எழுபாதங்களை அகற்றிக்
       கலங்காத கூர்த்த புத்தி
ஏமனை உறுக்கு நல் ஒர்ப்பு இகல் கடைப்பிடி
       எனும் குணம் இரண்டு இரண்டும்
எய்தி நீர் ஊண் நசை இரண்டும் இன்று உண் இயல்பும்
       இடையிட்டு வாய்மொழிதலும்
பூமிதனில் வெப்பமொடு தட்பம் பொறுத்தலும்
       புது மணம் விரும்பாமையும்
புடைவரை அறுத்து உறையும் ஆதஒனத்து அமர்தலும்
       பொருவறு தவத்து அங்கம் ஆம்
தேமலர் அடித்தொண்டர் இவைகளை மதித்து உறுவர்
       சிறியனேன் உறுவது என்றோ
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

5.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! காமம், அதி உணவு விருப்பம், பகை, உலோபம், பொறாமை, சோம்பல், ஒழியாத அகங்காரம் என்னும் ஏழு பாதங்களை நீக்கி, கலங்காத கூர்மையான அறிவு, இயமனை அதட்டும் வினையாற்றல், வலிமை, முயற்சி என்னும் குணங்கள் நான்கும், நுண்மையான தன்மையும் இடையிட்டுப் பேசுதலும், பூமியில் வெட்பத்தையும் தட்பத்தையும் பொறுத்தலும், புதிய மணத்தை விரும்பாமையும், திரண்ட மலையை அறுத்து உண்டான ஆசனத்தமர்தலும் ஆகிய இவை ஒப்பற்ற தவத்தின் அங்கங்களாகும். தேன்சிந்து மலர் அடித்தொண்டர் இவைகளை மதித்துச் செய்வர்! அவ்வாறே சிறியவனாகிய நானும் செய்வது என்றோ?

பத்தைப் பெருக்குவார் எட்டு ஒன்றை மூடுவார்
       பதினாறில் ஒரு பாதியில்
பாயாது கட்டுவார் ஏழை வலிபண்ணுவார்
       பகை ஆறையும் துறப்பார்
சத்தம் முதல் ஐந்தையும் அடக்குவார் நான்கைத்
       தகைந்து ஒன்று இரண்டை வெல்வார்
தாவு அற இரண்டையும் கூட்டுவார் ஒன்றையே
       சாருவார் தலையில் ஏறி
எத்தலமும் அங்ஙனே பார்ப்பார் உதிப்பு நொறில்
       எல்லாம் நின் அருளின் செயல்
என்று பெரிதும் சிந்தை பூரிப்பார் நிபுணர் இவ்
       ஏழையேன் என் கொடுஉய்வேன்
சித்தனே அத்துவித முத்தனே நித்தனே
       தேசமிக்கார் கத்தனே
திருநீடு பதியாய கயிலசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

6.

   சித்தனே! அத்துவித முத்தனே! நித்தனே! ஒளிமிகுந்தார் தலைவனே! அழகுமிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! நிபுணர், பத்து நற்குணத்தை மிகுதியாக்குவார்; ஒன்பதை மூடுவார்: எட்டில் செல்லாது கட்டுவார்; ஏழை வலிமை ஆக்குவார்; பகையாயுள்ள ஆறையும் விடுவார்; சத்தமுதல் ஐந்தையும் அடக்குவார்; நான்கையும் அடக்குவார்; மூன்றை வெல்வார்; குற்றமற இரண்டையும் கூட்டுவார்; ஒன்றையே சாருவார்; தலைமேல் ஏறி எத்தலத்தையும் அவ்விடமிருந்து பார்ப்பார்; பிறப்பும் ஒடுக்கமும் எல்லாம் உன் அருளின் செயல் என்று மகிழ்வார்; அறிவில் ஏழையான நான் எந்தச் செயலைக் கொண்டு பிழைப்பேன்?

அங்கமது பழுது என்னை உறுமாறி எச்செயலும்
       அற்றவரை ஒப்ப வருவார்
ஐந்து தலம் நீண்டு மற்று ஐந்து தலம் மிருதுவாய்
       ஆறிடம் உயர்ந்து செவ்வி
தங்க ஒர் ஏழிடம் சிந்துரம் போல் நிறம்
       தர இரண்டு ஒன்று குறுகிச்
சாரும் ஒரு மூவிடம் விசாலமாம் மூன்றிடம்
       தாழ லட்சணம் அதாக
எங்கும் வருவார் ஏதும் அறிகிலார் போலவும்
       இருப்பார்கள் யாவும் அறைவார்
இதயத்தில் அன்பு இலா எருமைகட்கு அருள் செயார்
       இதமானவர்க்கு அருளுவார்
செங்கமல பாதமுருகைய நின் அன்பர் அவர்
       தெரிசனம் எனக்கும் எஙனோ
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

7.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! தமது உடம்பு பழுதாகிவிட்டது போல் தம் உருவத்தை மாற்றிக் கொண்டு எந்தச் செயலும் இல்லாதவரைப் போல வருவார். கண், கன்னம், கை, மூக்கு, மார்பு ஆகிய ஐந்து உறுப்புக்களும் நீண்டும், தலைமயிர் தோள், விரல்கணு (அங்குலாஸ்தி) நகம், பல் ஆகிய ஐந்து உறுப்புகளும் மிருதுவாகவும், வயிறு, தோள், நெற்றி, நாசி, மார்பு, புறங்கை ஆகிய ஆறு உறுப்புக்களும் உயர்ந்தும், அழகு நிலைபெறும்படி உள்ளங்கால், உள்ளங்கை, கடைக்கண், அண்ணம், நாக்கு, நகம், உதடு ஆகிய ஏழு உறுப்புக்களும் சிவப்பு நிறமாகவும், ஆண்குறி, கணைக்கால், முதுகு ஆகிய மூன்றும் குறுகியும், தலையும் நெற்றியும் மார்பும் ஆகிய மூன்றும் அகன்றும், இகல்வலி, ஓசை, நாபி மூன்றும் தமாழ்ந்தும் ஒன்றையும் அறியாதவர்கள் போலவும் இருப்பார்கள்; எல்லாவற்றையும் அறிந்து கூறுவார்கள், மனத்தில் அன்பில்லாத எருமை போன்றவர்களுக்கு அருள்புரிய மாட்டார்கள்; செந்தாமரை போலும் திருவடிகளுடைய முருகையேனே! உன் அன்பர்களான அன்னார் தரிசனம் எனக்கும் எப்படியோ?

காட்டிலும் நலம் கிளரும் நாட்டிலும் இருப்பார்கள்
       ககன நிலையிலும் இருப்பார்
கருதரிய வத்துவொடு சேர என்று உடல்தனைக்
       கருதார்கள் கற்பம் உண்பார்
ஓட்டிலும் கையிலும் பொற்பு ஆசனத்திலும்
       உளம் கனிந்து உண்டு மகிழ்வார்
ஒன்றும் உண்ணாமலும் இருப்பார்கள் நல் உலவை
       உண்பார்கள் அமுதம் உண்பார்
தாட்டிகரை எளிமைப் படுத்துவார் தாபந்தர்
       தமை அரசர் ஆக்கி வைப்பார்
தையலரை வேண்டுவார் தள்ளியும் பேசுவார்
       தாவி வேறு உலலுள் நுழைவார்
தேட்டம் உள யாவும் படைப்பார் உன் அருள்உளார்
       சிறியனேன் என்கொடு உய்வேன்
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

8.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! காட்டிலும் நன்மை மிகும் நாட்டிலும் இருப்பார்கள்; விண்ணிலும் இருப்பார்கள்; நினைத்தற்கரிய பொருளான இறைவனை அடைதலே இம்மானிட உடம்பு எடுத்ததன் பயன் என உடம்பை வளர்க்க எண்ண மாட்டார்கள்; உடம்பு அழியாதிருக்க ஆசைப்பட்டுக் காயகல்பம் உண்பார்கள்; ஓட்டிலும், கையிலும், பொன்னாலான உண்கலத்திலும் உளம் கனிந்து உண்டு மகிழ்வார்கள்; நல்ல காற்றை உண்பார்கள்; அமுதமும் உண்பார்கள்; வலியாரை எளியவராக்குவார்கள்; அவர்களைத் தொடாமல் புறக்கணிக்கவும் செய்வார்கள்; கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்றபடி ஒர் உடலில் இருந்து மற்றோர் உடலுக்குள் புகுவார்கள்; உன்னுடைய அருளைப் பெற்றவர்கள் தெளிவான எல்லாப் பொருள்களையும் படைப்பார்கள். சிறியேனாகிய நான் எதைக் கொண்டு உய்வேன்?

தண்டிகையில் ஏறுவார் தரைமிசை நடப்பார்
       தளங்கள் புடை சூழ வருவார்
தனியாயும் நிற்பார் தராதரம் கெட்டுத்
       தயங்குபவர் போல் உழலுவார்
சண்டித்தனம் செய்து தெருவில் கிடப்பார்
       சதானந்தமாய் ஆடுவார்
தரையினில் துயிலுவார் அணையில்படுப்பார்
       சமாதியில் இனிது இருப்பார்
அண்டம் எல்லாம் நொடியிலே சுற்றுவார் பின்னும்
       அசையா ஒர் நிலையில் நிற்பார்
அசல புவனத்தை அங்கையிலே காட்டுவார்
       அங்கே அடக்கிவிடுவார்
தெண்திரைக்கடல் சுலாம் உலகில் நின் சீடர் அவர்
       சித்து அளவை கூறுபவரார்
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

9.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! பல்லக்கில் ஏறிச் செல்வார்கள்; தரையிலும் நடந்து செல்வார்கள்; பரிவாரங்கள் புடை சூழ வருவார்கள்; ஒரு துணையுமின்றித் தனியாக நிற்பார்கள்; தன் தன்மை கெட்டுத் தயங்குபவர்கள் போல வருந்துவார்கள்; சண்டித்தனம் செய்து தெருவிலும் வீழ்ந்து கிடப்பார்கள்; எப்போதும் ஆனந்தமாகவும் கூத்தாடுவார்கள்; தரையிலும் உறங்குவார்கள்; மெத்தையிலும் படுப்பார்கள்; சமாதி நிலையிலும் நன்றாக இருப்பார்கள்; உலகம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் சுற்றி வருவார்கள்; அசையாத ஒரு நிலையிலும் இருப்பார்கள்; அசையாத உலகங்களையும் தம் கையில் காட்டுவார்கள்; அங்கேயே அடக்கியும் விடுவார்கள்; தெளிந்த அலைகள் வீசும் கடல் சூழ்ந்த இவ்வுலகில் உன் கீடர்களான அவர்களின் சித்துக்களின் அளவை இவ்வளவு என்று கூற வல்லவர் யார்?

பருவம் ஒரு மூன்றையும் மாறுவார் விண்ணில்
       பறப்பார் தம் உடல் மறைப்பார்
பகலை இரவு ஆக்குவார் இரவு பகல் ஆக்குவார்
       பார்ப்பு அரிய பரமாணுவைப்
பெருமுண்டம் ஆக்குவார் அதனை அணு ஆக்குவார்
       பின்னும் முன்னும் செல்லுவார்
பீதகத் தட்டை ஒடாக வனைவார் அதைப்
       பீதகம் எனப் பண்ணுவார்
அருமை ஆகிய அட்டசித்தியும் கண்டு உளம்
       அடங்கி மெய்ஞ்ஞான பீடத்து
அமர்ந்து உனது பத நலன் சேருவார் நின் சீடர்
       அருள்இலேன் யாது செய்வேன்
தெருள் அருணகிரிநாதன் மளமளென என்று அறை
       திருப்புகழ் துளைத்த செவியோய்
திருநீடு பதியாய கயிலாசமலை மேவு
       சிவஞான குருசாமியே.

10.

   அழகு மிகுந்த பதியாகிய திருக்கயிலாச மலைமேல் எழுந்தருளியுள்ள சிவஞான குருசாமியே! என் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பரம்பொருளே! உன்னுடைய சீடர்கள் பாலப் பருவம், காளைப் பருவம், முதுமைப் பருவம் எனும் மூன்றனையும் மாறுவார்கள்; வானவெளியில் பறப்பார்கள்; தம் உடம்பை ஒருவரும் காணாதபடி மறைப்பார்கள்; பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும் ஆக்குவார்கள்; கண்ணால் காண்பதற்கரிய பரமாணுவை அதற்கு மாறாகப் பெரிய பொருளாகவும் ஆக்குவார்கள்; அதனை மீண்டும் அணுவாக மாற்றுவார்கள்; பின்னாலும் முன்னாலும் செல்வார்கள்; பொன் தட்டை வெறும் ஓடாக வனைவார்கள்; மீண்டும் பொன் தட்டாக மாற்றுவார்கள்; அருமையான அட்டமா சித்திகளைச் செய்து பின் மனம் அடங்கி மெய்ஞ்ஞான பீடத்திலமர்ந்து உன் திருவடி நன்மையைச் சேருவார்கள். உன் அருளைப் பெறாத யான் என்ன செய்வேன்?


Home    |    Top   |    Back