Logo


English

திருக்குமர கோட்டம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

நீர் அகம் கொண்ட ஆவர்த்தம் மிக்கு அணியா
       நெருங்கித் தவழ்ந்து உலாவா
நிற்கும் பரங்கிரியும் அம்பணம் கந்தி இலை
       நீள்கேளி குலைகள் சாய்க்கக்
கோரகைகள் முதலிய பதங்கங்கள் நாளும்
       குலாவ உள செந்தில் நகரும்
குயில் அரிய தகுதியோர் உரை பழநி மலையும்
       குளிர்ந்த செங்கமலம் அவிழும்
ஏரகமும் உயர் குன்று தோறாடலும் புவனம்
       எங்கும் புகழ்ந்து பரவ
இலகும் ஒரு சோலைமலையும் தமியனேன் நெஞ்சம்
       என்று நீ குடியிருந்து
வர ஊனம் தபுத்து ஆளின் அன்றோ உனைக்
       கூடினேன் என்று உவப்பேன்
கூற்றன் உயிர் உண்ட பரமேட்டி சுதன் என் குமர
       கோட்டம்அது அமர்ந்த குகனே

1.

   இயமனது உயிரைக் குடித்த கடவுளின் புதல்வன் என்று கூறப்படும் திருக்குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள குகப் பெருமானே! நீரைத் தன்னிடம் கொண்ட ஆவர்த்தம் என்னுமேகம் மிகுந்து வரிசையாக நெருங்கித் தவழ்ந்து சஞ்சரிக்கும் திருப்பரங்குன்றமும், வாழை, கமுகு, நீண்ட ஓலையுடைய தென்னை ஆகிய மரங்கள் குலைகள் சாய்க்கவும், குயில்கள் முதலிய பறவைக் கூட்டங்கள் குலாவிக் கொண்டிருக்கவும் உள்ள செந்தில் நகரமும், சொல்லுதற்கரிய பெருஞ்சிறப்புடையோர் வாழுகின்ற திருப்பழநிமலையும், குளிர்ந்த செந்தாமரைகள் மலரும் திருவேரகமும், மேலான குன்றுதோறாடலும், உலகமெங்கும் புகழ்ந்து துதிக்கப்படுமாறு விளங்குகின்ற ஒப்பற்ற திருச்சோலை மலையும் ஆகிய இவ்வாறு படைவீடுகளுமே அடியேனுடைய மனம் என்று நீ குடியிருந்து, பொறாமை என்னும் என் குற்றத்தை நீக்கி எனக்கு அருள் புரிந்தால் அல்லவா உன்னோடு நான் என்றும் பிரியாது கலந்து விட்டதாக எண்ணி மகிழ்வேன்!

உற்ற உடல் நீர்மையால் உன்தனுக்கு அடிமை என்று
       உள்ளி நற் பணிபுரியவும்
உலவி வரு சீவன் எனும் நீர்மையால் மலைவுஅற்ற
       உனது அமிசமா நின்று சீர்
பெற்று உயவும் அத்துவிதம் எனும் நீர்மையாலே
       பிரித்து இரண்டு ஒன்று எனாது
பேசு அரிய சின்முத்திரைத் துணிவில் நிற்கவும்
       பேதையேன் ஆகி அருளான்
முற்று பொழுது அன்றோ எனக்கு உள வியாபாரம்
       மூலம் துமிக்க எங்கண்
முதல் ஞான வெய்யோன் உதித்தான் எனப்பறை
       முழக்குவேன் யாரும் அறியக்
குற்றம் இல் சதானந்த சிற்சபையில் நிர்த்தம் இடு
       குழகா அனாதி மழவா
கூற்றன் உயிர் உண்ட பரமேட்டி சுதன் என் குமர
       கோட்டம்அது அமர்ந்த குகனே

2.

   யாரும் கண்டுகளிக்கும்படிக் குறைவில்லாத சதானந்த சிற்சபையில் நடனம் செய்கின்ற குழந்தை வேலனே! அனாதியான இளையோனே! இயமனது உயிரைக் குடித்த கடவுளின் புதல்வன் என்று கூறப்படும் திருக்குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள குகப் பெருமானே! உடம்பைப் பெற்றுள்ள தன்மையால் உனக்கு நான் என்று அடிமையாவேன் என நினைத்து உனக்கு நல்ல தொண்டுகளைச் செய்யவும், இயங்கும் உயிராக உள்ள தன்மையால் மயக்கமற்ற உனது அமிசமாக இருந்த சிறப்புப் பெற்று உய்தி பெறவும், அத்துவிதம் என்னும் தன்மையால் இரண்டு அல்லது ஒன்று என்று பிரித்துக் கூறமுடியாத அரிய சின்முத்திரை முடிவில் நிலைபெறவும், அறிவில்லாத நான் ஆக்கப்பெற்று அருளினால் நிறைவடையும் பொழுதல்லவா எனக்குள்ள உலகப்பற்றுகளுக்குரிய மூலமான ஆணவமலத்தை ஒழிக்க, எங்கள் முதற்பொருளான ஞானசூரியன் என் உள்ளத்தில் உதித்துவிட்டான் எனப் பறையை முழக்குவேன்!

புலன் வென்ற சிவயோக ஆட்டியர்கள் உறழ்வில்
       பொதிந்து வெளியாகின்ற நீ
புன்பத்தி ஒல்லுநர் கடைத்தேறுவான் இப்
       புவிப் புலத்து அங்கு அங்கு எழில்
இலகிடு திருக்கோவில் கொண்டு உற்ற கருணைதனை
       எண்ணி யோசிக்கின் இங்கே
எவருக்கு உன் அருள் உறாது என்னலாம் இப்பெரிய
       ஈரத்தில் அன்னியன் போல்
விலகுவது நான் மட்டும் எந்த விதம் எவ்விதமும்
       மேவுவது திண்ணம் அன்றோ
விசேட மண் ஆதி பரநாத பரியநதமா
       விரியும் முப்பாத்தாறினும்
குலம் அற அளாவி அவைகட்கும் அப்பால் நிலவு
       கோதுஅற்ற பரமபதியே
கூற்றன் உயிர் உண்ட பரமேட்டி சுதன் என் குமர
       கோட்டம்அது அமர்ந்த குகனே

3.

   சிறந்த மண்முதலாக மேலான நாதம் வரையிலும் பரவியுள்ள முப்பத்தாறு தத்துவங்களிலும், இனவேற்றுமையில்லாமல் கலந்து அவைகட்கு அப்பாலும் கடந்த நிலையிலும் இருந்து வரும் குற்றமற்ற மேலான தலைவனே! இயமனது உயிரைக் குடித்த கடவுளின் புதல்வன் என்று கூறப்படும் திருக்குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள குகப் பெருமானே! ஐம்புலன்களையும் வென்ற சிவராஜயோகச் செல்வர்களின் மெய்யுணர்வில் விம்மி வெளியாகின்ற நீ, எளிமையான பத்தியினைச் செய்யக்கூடியவரான பக்தர்கள் கடைத்தேறும் பொருட்டு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள கருணையைச் சிந்தித்து ஆராயின், இவ்வுலகில் எவருக்கு உனது அருள் கிடைக்காமற் போகும் என்று கூறமுடியுமா? இப் பெரிய மேன்மையில் பிறன் ஒரவனைப் போல் நான் மட்டும் விலகியிருப்பது எந்த விதத்தில் முடியும்? எவ்விதத்திலும் நீ கட்டளையிடுவது உறுதியல்லவா!

ஒரு கொம்பிலே இருந்து ஒரு கொம்பிலே தாவி
       உழல்கின்ற வானரம் போல்
ஒன்றினை நினைந்து மற்று ஒன்றினைக் கருதுமனம்
       ஒயுமாறு அமலயோகம்
புரிகின்ற நிலைமையில் கருவி கரணங்களைப்
       பொன்றிட விழைந்து உன் அருளில்
பொலிந்து நின்னோடு புணராது நாம் முதல் என்று
       புந்தி அற்பமும் அடங்கா
மருள் கொண்டு சுழல்கின்ற வம்பர்வழி வீண் வேறு
       மார்க்கமும் எனக்கு வேண்டா
மாறாத சிவராச யோகத்தில் என் மனம்
       அடங்க அருள் தந்து கோடி
குருமணி எவர்க்கும் குரத்துவம் அளிக்கும் ஒரு
       குருவே குமாரகுருவே
கூற்றன் உயிர் உண்ட பரமேட்டி சுதன் என் குமர
       கோட்டம்அது அமர்ந்த குகனே

4.

   ஞானியாகிய மாணிக்கமே! எத்தன்மையோர்க்கும் ஞானாசிரியத் தன்மையை வழங்கியருளும் ஒப்பற்ற ஞானாசிரியனே! இளைய ஞானாசிரியனே! இயமனது உயிரைக் குடித்த கடவுளின் புதல்வன் என்று கூறப்படும் திருக்குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள குகப் பெருமானே! மரங்களில் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவிக் கொண்டே திரிகின்ற குரங்குகள் போன்று, ஒரு பொருளை நினைக்கும் போதே மற்றொரு பொருளை நினைக்கும் மனத்தை இவ்வாறு தாவவிடாமல், அது அடங்கும் பொருட்டுக் குற்றமற்ற இராசயோகத்தைப் புரிகின்ற நிலையில் ஐம்பொறிகளும் அந்தக் கரணங்களும் ஒழியச் செய்து, உன் திருவருளில் விளங்கி உன்னுடன் இரண்டறக் கலவாது நாமே முதற்பொருள் என்று கூறி, மனமானது ஒரு சிறிதும் அடங்காத மனமயக்கம் கொண்டு திரிகின்ற தீயோர் வழியானது பயனற்றதாகும். பிறநெறிகளும் எனக்கு வேண்டா! மாறுபடாத சிவராசயோகத்தில் எனது மனமானது அடங்கும்படித் திருவருளை வழங்கி அடிமை கொண்டருள்வாயாக!

பாசத்து அமிழ்த்திய பசுக்களின் நிமித்தம் அருள்
       பாலித்து நூல்கள் அருள்பு
பண்ணியும் காட்டிய ஓர் புண்ணிய குருமூர்த்தி நின்
       பழநெறியை மீறியே இத்
தேசத்தில் இழிதொழில் கொடுங்காதை புரிகுநர்
       திருந்து நடைகொண்டுளார்பால்
சிக்குறு பொறாமை கொண்டு உயர் நூல் அருத்தங்கள்
       செய்கைக்கு இணங்கவேறு
பேசி அவ்விதிகளைத் தம் வழி நடத்த உள
       பேயருக்கு எய்துகதியைப்
பிரிவு செய்து ஒதவோ நஞ்சு அமுதம் ஆகப்
       பிறங்கும்கொல் எந்தநாளும்
கோசிகம் புகழும் நின் ஆணை வழுவா வழி
       கொடுத்தி என் ஆசை அரசே
கூற்றன் உயிர் உண்ட பரமேட்டி சுதன் என் குமர
       கோட்டம்அது அமர்ந்த குகனே

5.

   இயமனது உயிரைக் குடித்த கடவுளின் புதல்வன் என்று கூறப்படும் திருக்குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள குகப் பெருமானே! மும்மலங்களில் மூழ்கிய உயிர்களின் பொருட்டு அருள்கொண்டு ஞானநூல்களை அளித்தருளிக் காட்டிய ஒரு புண்ணிய வடிவான ஞானாசிரியனே! உனது பழைமையான வழியை மீறி, இந்த நாட்டில் இழிவான செயல்களையும் கொடிய கொலைகளையும் செய்கின்றவர்கள், நல்லொழுக்கத்தைக் கொண்டவர்களிடத்தில் கெட்ட பொறாமை கொண்டு மேலான அந்த நூல்கள் கூறும் கருத்துக்களைச் செயல் முறைக்கு ஒப்ப, வேற வேறாக வகுத்துக் கூறிய அதன் விதிமுறைகளைத் தமக்கு ஒத்த வழியில் செய்துகொள்ளத் துணியும் பேய் போன்ற இழிந்த குணமுடையவர்க்குக் கிடைக்கத்தக்க கொடிய கதியை வகுத்து இதுதான் என்று சொல்லவோ? (சொல்ல முடியாது) நஞ்சானது அமுதமாக விளங்குமோ? அடியேனது ஆசைக்குரிய அரசே! எக்காலத்தும் சாமவேதம் புகழும் உனது கட்டளையைத் தவறாத வழியை அளித்தருள்வாயாக!

சீவஞானக் கிரியைகளை மறைத்துள வாம
       தேவரது திரோத சத்தி
சிறிது மாறிய போதும் அர்த்த பாகம் தணந்திடு
       போதும் அற்பபாகம்
ஒவுறாது எஞ்சி நின்றிடு போதும் உயிர்கட்கு
       உயர்ந்த சத்தினிபாதமாய்
ஒதுகுறி உண்டாகும் என்று மிருகேந்திரம்
       உரைக்கின்ற விவரத்திலே
பாவியேனுக்கு ஏதும் இலைகொலோ நின் அருள்
       பவுள் சினை அவாவி ஒன்றும்
பலியாது வறியனா நிற்கவோ இப்பெரிய
       பாழ் உருவம் வந்தது என்று
கூவி இங்கு அழும் எனக்கு ஆர்தஞ்சமாம் ஒகை
       கூர் அருணகிரி ஈசனே
கூற்றன் உயிர் உண்ட பரமேட்டி சுதன் என் குமர
       கோட்டம்அது அமர்ந்த குகனே

6.

   இயமனது உயிரைக் குடித்த கடவுளின் புதல்வன் என்று கூறப்படும் திருக்குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ள குகப் பெருமானே! களிப்புமிகுந்த அருணகிரிநாதரின் இறைவனே! ஆன்மாவின் இச்சாசத்தி, கிரியாசத்தி ஞானசத்தி ஆகிய மூன்றையும் மறைத்துள்ள சிவபெருமானது திரோதானசத்தி மறைத்தலைச் செய்வதிலிருந்து, சிறிதளவு மாறிய போதும் அல்லது அரைப்பகுதி அளவு நீங்கிய போதும், ஆன்மாக்களுக்கு மேலான திருவருள் வீழ்ச்சியாகக் கூறப்படுகின்ற அடையாளம் உண்டாகும் என்று மிருகேந்திர ஆகமம் கூறும் விளக்கத்தில், பாவியாகிய எனக்குச் சிறிதளவேனும் இல்லையோ? உனது அருளான சம்பத்தை விரும்பி ஒரு பயனின்றி ஒன்றுமில்லாதவனாக இருக்கவோ இந்தப் பெரிய பாழான உடம்பு எனக்கு வந்து சேர்ந்தது என்று நினைத்து, இவ்வுலகில் அழுகின்ற எளியேனுக்கு யார்தான் அடைக்கலமாவார் கூறுவாயாக.


Home    |    Top   |    Back