Logo


English

திருக்குன்று தோறாடல்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாலத்து உதித்து அம்மை அம்மம் சுவைத்தபின்
       உணா மிக்கு அயின்ற வாய்மை
நவிலும் ஓர் அகலியம் போல் வளர்ந்து அறிவான
       நலம் ஏதும் அறியா எனக்கு
ஆல்அத் தம்ஆலத்திலே துயின்றோனும் மறை
       அயனும் புகழ்ந்த உன் சே
வடிஒன்று அலாது பிற தெய்வம் தொழா மனது
       அளித்த அருள் போல் இன்னும் என்
காலத்தை வாளா கழிக்காது அதீத சிவ
       கைவல்லியம் மருவ அருளாய்
கண்இணைக்கு எட்டாத விண் என விரிந்துமெய்க்
       கண்ணாளர் காணுமாறு
மாலைத் துணங்கு அறலும் நீமத் திவாவும் மின்
       மகா நிட்டை நிலையில் வருவோய்
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும்தகையனே.

1.

   இரு கண்களுக்கும் எட்டாத ஆகாசம் என விரிந்து ஞானக்கண் உடையவர்கள் காணுமாறு மாலை இருளும், ஒளியான பகலும் இல்லாத மகாநிட்டை நிலையில் வருவோனே! குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல் புரியம் அழகு நிறைந்த பெருந்தகையனே! உலகில் பிறந்து அன்னையின் பாலைக் குடித்து வளர்ந்து பின்பு, சுவையான உணவுகளை உண்டு உண்மை பேசும் ஒரு மரம்போல் வளர்ந்து அறிவான நன்மை ஒன்றும் அறியாத எனக்கு, ஆலிலைமேல் துயின்ற திருமாலும் வேதமோதும் பிரமதேவனும் புகழ்ந்து கூறும் உன் செய்ய திருவடி ஒன்றல்லாமல் வேறு தெய்வம் தொழாத மனத்தை அளித்த அருள் போல், இன்னும் காலத்தை வீணாகக் கழிக்காமல் எல்லாம் கடந்த சிவசாயுச்சியம் என்னும் பரமுத்தி அளித்தருள்வாயாக.

ஆச்சரிய உலகங்கள் அத்தனையும் உண்டுசெய்து
       அங்கு இங்கு எனாத வண்ணம்
அகண்டமாய் நின்று முக்காலும் அழிவு அற்றசத்
       தாய் உள்ள பரமபதியே
தீச்செயல் தணந்துளோர் தேடு குருமணியே
       சிறந்த அளிகொடுவந்து நீ
செங்கழைச் சாறோ கனிந்த முக்கனியோ
       திரண்ட கண்டோ அமுதமோ
காய்ச்சி அறவற்றிய பயத்தில் இன் சக்கரை
       கலந்து செய்துள்ளபாகோ
கட்டி மகரந்தமோ என்ன ஒரு மொழிசொலக்
       கருணையின் உணர்ந்து அதனை நான்
மாச்சிறுகு விபுலை வாழ்வைத் தள்ளி விழிமூடி
       மெளனியாய் வாழ்வது எந்நாள்
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும்தகையனே.

2.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! ஆச்சரியமான உலகங்கள் அத்தனையும் படைத்து அங்கு இங்கு என்று கூற முடியாதபடி எங்கும் எல்லையற்று நிறைந்து முக்காலத்திலும் அழிவில்லாத மெய்ப்பொருளாயுள்ள மேலான முதல்வனே! தீய செயல்களை நீக்கினோர் தேடி வழிபடுகின்ற குருமாணிக்கமே! சிறந்த கருணை கொண்டு நேரில் வந்த நீ, செங்கரும்பின் சாறோ, பழுத்த மா பலா வாழை என்னும் முப்பழங்களோ, கட்டியான கற்கண்டோ, அமுதமோ, காய்ச்சி நன்கு வற்றிய பாலில் சக்கரை கலந்த செய்துள்ள பாகோ, இனிய தேனோ என்னும் ஒரு மொழியை எனக்குச் சொல்லுதற்குள்ள உனது கருணையை உணர்ந்த நான், பெருந்துன்பத்திற்கு இடமான இவ்வுலக வாழ்வை விட்டு இரு கண்களையும் மூடி மெளனியாய் வாழ்வது எந்நாள்?

அப்புமிலை சடையன் அன்பர்க்கு இனிய அன்ப நின்
       அடியவர்க்கு எளிய உன்பேர்
ஆனந்த நடன அடி இச்சையோ மிக எனக்கு
       அங்ஙனே வஞ்சநெஞ்சம்
செப்பு ஒன்று எழுப்பு முனம் எண்ணிலா விடயங்கள்
       சிந்தித்து மலைகிறது இதைத்
தேற்றி என் வலிகொண்டு மாற்றி விட்டானும் நல்
       செங்கதிர் மறைந்து கங்குல்
கப்பிய பின் உண்டு சயனிக்கும் அப்போழ்து என்
       கருத்து அழிய மதிமருண்டு
கண்டனவும் காணதனவுமாம் விகாரங்கள்
       காண் நிலைமை ஒயவிலையே
மப்பு அற்ற கூவலர்கள் மனது குடிகொண்ட நீ
       வந்து சரி பண்ணவேண்டும்
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும்தகையனே.

3.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! கங்கையைச் சடையில் தாங்கியுள்ள சிவபெருமானுடைய அன்பர்களிடத்தெல்லாம் அன்ப பூண்டவனே! உனது அடியார்கட்கு எளியவனே! பேரானந்த நடனத்தைச் செய்யும் உனது திருவடியைக் காணவோ எனக்கு அதிக விருப்பம். அவ்விருப்பம் மனத்தில் தோன்றும் போது சொல்லுமுன்னே, வஞ்சமனம் அளவில்லாத விஷயங்களைச் சிந்தித்து மயங்குகின்றது. இதனை ஒருவாறு தேற்றி என் வலிமையைக் கொண்டு மாற்றிவிட்டாலும், நல்ல சூரியன் மறைந்து இரவு வந்து பரவும் போது உண்டு உறங்கும் அப்போது என் நினைவு அழிய அறிவு மயங்கிக் கண்டனவும் காணாதனவுமான வேற்றுமை நிகழ்ச்சிகள் காணும் நிலைமையோ ஓய்ந்தபாடில்லை! செருக்கற்ற உலகப்பற்றை நீத்தவர்களின் மனத்தில் குடி கொண்டுள்ள நீதான் வந்து என் மனத்தைச் சரி செய்ய வேண்டும்!

நிலையாத இக்காயம் உயிரோடு இருக்கும்வரை
       நெடிய பிரபஞ்ச வெறியால்
நீதி கிஞ்சித்தும் இன்று அனியாயமே தேட
       நேரும் என்று இச்சரீரம்
தொலைய ஒரு தந்திரம் பண்ண என்றாலும் என்
       சொல்லுக்கு அடங்காமனம்
துடித்து வாதிக்கிறது பிறிதொரு நினைப்பு ஏழு
       தோற்றத்தினுள் துப்புடைத்
தலைவன் நம்பால் அபயம் வைத்து மானவயோனி
       தனில் நுழைத்து எனை நினைஎனாத்
தந்த உடல் நீங்கும் எனின் எந்த உடல் வாய்க்குமோ
       சரி அன்று இது என்கின்றது
மலைவுஇல் குக சம்புவாம் உனை நம்புவோரும் இம்
       மாதிரி மயங்கல் முறையோ
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும் தகையனே.

4.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! நிலையில்லாத இவ்வுடம்பு உயிருடன் கூடி இருக்கும்வரையில் பெரிய உலக ஆசையால் நீதி சிறிதுமின்றி அநீதியையே தேட நேரும் என்று, இவ்வுடம்பு தொலைய வேண்டும் என ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும் என்றாலும் என் சொல்லுக்கு அடங்காத மனம் துடித்து வாதம் செய்கின்றது. வேறொரு நினைப்பு, ஏழு பிறப்புக்களும் தூய்மையான தலைவன் நம்மீது அடைக்கலம் வைத்து மனிதப் பிறப்பில் நுழைத்து என்னை நினை என்று கொடுத்த இந்த உடம்பு அழியுமானால், இனி வரும் பிறப்பினில் எந்த உடம்பு வாய்க்குமோ? இந்த உடம்பை விடுதல் சரியன்று என்கிறது. மயக்கமில்லாத குகசம்புவான உன்னை நம்பும் அடியார்களும் இம்மாதிரி மயங்குதல் முறையாகுமா?

அல் இருளை ஒத்த அளகக் கொப்பிலே அணியும்
       அணியிலே பணியிலே மை
அஞ்சனக் கீற்றிலே கிஞ்சுக உதட்டிலே
       அம்புஅகப் பார்வை தனிலே
பல்லிலே சக்கரைச் சொல்லிலே வட்டப்
       பறம்பிலே கண்டைஇட்ட
பட்டுவட்டத்திலே பட்டை அரை ஞாணிலே
       பாத சாலக் குழகிலே
கல் அனைய மனமும் கரைந்திட நடந்துகை
       காட்டிப் பகட்டல் தனிலே
சுதும் என என் நெஞ்சு சென்று உனைமறந்து இழிநசைக்
       கடல்இடை அமுங்கல் நலமோ
மல்லை உற்று அனுதினம் மனத்தை உன்பால் நன்கு
       வைக்க அருள் தந்து கோடி
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும்தகையனே.

5.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! கரிய இருளைப் போன்ற கூந்தல் முடியிலே, அணிந்துள்ள மலர் மாலைகளிலே, அணிகலன்களிலே, மைக்கோட்டிலே, சிவந்த உதட்டிலே கண் பார்வையிலே, பல்லிலே, சருக்கரை போன்று இனிக்கும் மொழியிலே, வட்டமான தனங்களிலே, சரிகையிட்ட பாட்டாடையிலே, பட்டை அரைஞாணிலே, காலணி அழகிலே, கல்லைப் போன்ற மனமும் கரையும்படி நடந்து கைகாட்டிப் பகட்டுவதிலே விரைந்து சென்று, என் மனமானது உன்னை மறந்து இழிவான ஆசைக்கடலில் மூழ்குதல் நன்மையாமோ? மெளனமுற்று நாள்தோறும் மனத்தை உன் பால் நன்றாக வைப்பதற்கு எனக்கு உன் அருளைத் தந்து என்னை அடிமை கொள்வாயாக!

வண்ணம் உடை ஒரு துரும்பால் அமரர் வலிஎலாம்
       மக்கினம் அடையப் பண்ணியும்
மழு மிருகம் உழுவை அதன் மதகரிப் போர்வை பிறை
       வாரி அரவம் தரித்தும்
விண்ணவர் அலக்கண் அற என்று பெரு முந்நகரம்
       வேவமுறுவல் இளைத்தும்
வேந்தன் அரியும் தேடி அறிவு அரிய பேரொளி
       விரித்தும் உள ஒருவன் முன்னே
தண்ணவக் குடையன் நின்று அலர் விடுத்தான் எனும்
       சரிதம் இவ் உலகில் உளதேல்
சரகு அனைய எற்கு அந்தமதன் அஞ்சுவன்கொல் உன்
       தண்ணிளி கிடைக்கும் ஆயின்
மண்ணவரும் விண்ணவரும் என் வயம் எனச் சொல்
       வாய் உண்டு வாழ்வும் உண்டே
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும் தகையனே.

6.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! அழகுடைய ஒரு துரும்பினால் தேவர் வலிமையெல்லாம் வெட்கமடையச் செய்தும், மழு, மான், புலித்தோல், மதம் பொருந்திய யானையின் தோல், பிறைநிலவு, கங்கை, பாம்பு ஆகியவற்றைத் தரித்தும், தேவர்களின் துன்பம் தீரவென்று பெரிய திரிபுரங்கள் எரியும்படிப் புன்முறுவல் செய்தும், பிரமனும் திருமாலும் தேடியும் அறிதற்கு அரிய பேரொளி விரித்தும் உள்ள ஒருவன் முன்னே சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன் மலர் அம்புகளை எய்தான் என்னும் சரிதம் இவ்வுலகில் உள்ளதென்றால், காய்ந்துபோன சருகைப் போன்ற எனக்கு அந்த மன்மதன் அஞ்சுவானா? உன் குளிர்ந்த அருள் கிடைக்குமாயின், மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் என் வயப்படுவர் எனச் சொல்ல வாயுண்டு; வாழ்வு உண்டு!

குலம் விதி விகாரம் உரு இன்றி எவையும் கண்டு
       கொள் சருவ சாட்சி ஆகிக்
கோவரர் எவர்க்கும் இறையாய் ஏக் கழுத்தம் உளர்
       கொள்கைக்கும் ஓர் குரவனாய்க்
கவிவிஞ்சு கலியுகம் தனினும் மங்காமகிமை
       காட்டும் ஒரு கர்த்தவ்வியமாக்
கவினோடு விளங்கியுள என் பரம தந்தையே
       கருள் எல்லும் உனை உள்ளி நான்
மெலிநீர்மையைச் சிறிதும் அறியாத மக்கள் போல்
       வியன் உள்ளம் இனும் இருப்பின்
மெய் அடிமை ஆகி நான் உய்யு நிலைமேவநல்
       விரத்தியும் தான் எய்துமோ
மலினமனம் ஆனதும் துலை ஒத்து நிற்குமோ
       மாயுமே வீணில் அந்தோ
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும் தகையனே.

7.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! குலம், விதி, வேறுபாடு அடையும் உருவம் ஆகிய எவையும் இல்லாமல், எவையும் அறிந்து கொள்ளும் சருவ சாட்சியாகியும் தேவலோகத் தேவர் எவர்க்கும் கடவுளாயும் இறுமாப்புள்ளோர் கொள்கைக்கும் ஓர் குருவாகியும், துன்பம் மிகுந்த கலியுகத்திலும் குறையாத மகிமையைக் காட்டும் ஒரு முதல்வனாயும் அழகொடு விளங்கியுள்ள எனது மேலான தந்தையே! இரவும் பகலும் உன்னை நினைத்து நான் மெலியும் தன்மையைச் சிறிதும் அறியாத மக்கள் போல், உனது திருவுள்ளம் இன்னும் இருந்தால் உண்மையான அடிமையாகி நான் உய்யும் நிலையைப் பொருந்த துறவும் கூடுமோ? சஞ்சலமுள்ள மனமும் துலாக்கோல் போல் சமநிலையில் நிற்குமோ? நிற்காமல் வீணில் மடிந்து போகுமே!

ஆர்கலிகள் நீர் சுவற அசலவன் சிலை துகள்கள்
       ஆகி ஆகாச மூச
அண்ட பகிரண்டம் எனும் உண்டைகள் குலுங்கவிறல்
       அட்டமத கரி இரட்டப்
பார்முழுதும் ஒருதலைப் பாரமாகக் கொண்ட
       பவன ராசேந்திரன் நெளியப்
பலபலென விண் மீனம் உதிரத் தயித்திய
       பதாதி இறை நெஞ்சம் அஞ்ச
ஏர்மல்கு நெடிய சதம் வீசிப் பறக்கும் மயில்
       ஏறும் குமார வீர
என்றைக்கு எழுந்தருளி வரவையோ என் தலையில்
       இணை அடிப் பூவை இட்டு
வார்நிலையில் எந்நாளும் எம் அடிமை நீ எனா
       வாய்மலர்ந்து அமுது நல்க
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும் தகையனே.

8.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! கடல்கள் எல்லாம் நீர் வற்றவும், அசையாத மலைகள் எல்லாம் தூளாகி ஆகாசம் முழுவதும் நிறையவும், அண்டங்கள், புற அண்டங்கள் என்னும் உருண்டைகள் எல்லாம் குலுங்கவும், வலிமையும் எட்டு மதம் பொருந்திய யானைகள் பிளிறவும், உலகம் முழுவதையும் தனக்கு ஒரு தலைப்பாரமாகச் சுமக்கின்ற நாகலோகத்து இராசேந்திரனான ஆதிசேடன் நெளியவும், பலபலென நட்சத்திரங்கள் உதிரவும், அசுரர் தம் படைகளின் அரசன் ஏறு குமார வீரனே! என் தலைமேல் உன் இரு திருவடி மலர்களை வைத்து அன்பு நிலையில் எக்காலத்தும் நீ என்னுடைய அடிமை என்று திருவாய் மலர்ந்து அமுதமொழியைச் சொல்ல என்றைக்கு எழுந்தருள்வாயோ? அறிகிலேனே!

நாலு ஆறு தீக்குணமும் மாயாத வன்மனதி
       னாலே விளத் விடலை
நல் அருள் பார்வை எனும் மழைபொழிந்து அதில் என்னை
       நனையவிட்டுக் கழுவி அன்
பாலே அணைத்து நின் பாலே இருத்தி
       பாலைப் புகட்டி அந்தப்
பாலினது மகிமையில் போதம் குளிர்ந்து பொன்
       பண்பு ஏறி உற்ற தேகம்
கோல அசலம் போலவே திமிர வைக்கும் ஒரு
       கொள்கை எனை என்று குறுகும்
கோது அற்ற செல்வச் சிரோரத்தினமே வைத்த
       குறியில் விரி அறிவு வெளியில்
வாலாமை இன்றிப் பிரகாசித்து நிற்பவர்கள்
       மருவு பேரின்ப வைப்பே
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும் தகையனே.

9.

   குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! குற்றமற்ற செல்வச் சிகாமணியே! தாம் தியானிக்கும் பொருளில் விரிவாயுள்ள சிதாகாசமெனும் அறிவு வெளியில் அசுத்தமின்றிப் பிரகாசித்து நிற்பவர்கள் பொருந்தும் பேரின்பச் செல்வமே! பத்து வகையான தீக்குணங்களும் ஒழியாத வலிய மனத்தினால் விளைந்த குற்றத்தை, நல்ல அருள் நோக்கம் என்னும் மழை பொழிந்து, அதில் என்னை நனையவிட்டுக் கழுவி அன்பால் அணைத்தும் உன்னிடம் இருக்கச் செய்து, மெய் என்னும் பாலைப் புகட்டி அந்தப் பாலினது மகிமையில் அறிவு குளிர்ந்து அழகிய குணம் உற்ற உடம்பு, அழகிய மலைபோல் உறுதியாக வைக்கும் நிறை என்று நிகழும்?

மின் ஆயினும் வந்து வந்து அவண் ஒளித்திடும்
       வீடக்கு டல் ஒரீஇ ஆவி
வெளிஏறின் மீண்டும் அதிலே வருவது இன்று இதனை
       மெய் என்று இருந்து செளரி
தன் ஆணையின்படி பிடிக்க உட்பட்டு உறுவல்
       பால் நிலையில் நான் உழலவோ
சராக உலகினர் இவன் பேயனோ பித்தனோ
       சனியன் பிடித்த உயிரோ
எந்நாளும் அறிவு அற்ற பேதையோ என்று இகழ
       எம்பிரான் உன்னை நாடி
இகத்தைத் துறந்து துறவற இருஞ்செல்வத்து
       இருக்க அருளாய்கொல் விபுதர்
மன்ஆர் குழாம் அடு கணாள திர அருணகிரி
       மனத்துக்கு இயைந்த குருவே
மங்காத இன்பர்செறி குன்று தோறு ஆடல்வதி
       மஞ்சு ஆர் பெரும் தகையனே.

10.

   அறிஞர்களின் பகைவர்களைக் கொல்லும் அன்பனே! திரு அருணகிரிநாதர் மனதுக்குப் பொருந்திய குருவே! குறையாத இன்பமுடையார் நெருங்கி வாழும் குன்றுதோறும் ஆடல்புரியும் அழகு நிறைந்த பெருந்தகையனே! மின்னல் ஆயினும் வந்து வந்து அது தோன்றிய இடத்திலேயே மறைந்திடும்; ஊன் உடம்பைவிட்டு உயிர் நீங்கினால் அது மீண்டும் அதில் வந்து தங்குவதில்லை. இத்தகைய உடம்பை மெய் என்று நம்பியிருந்த இராமன் தன் ஆணையின்படிப் பிடிக்க உட்பட்டுத் துன்பப்படும் நிலையில் வருந்தவோ? சண்டைபுரியும் உலகினர் இவன் பேயனோ, பைத்தியமோ, சனிபிடித்த உயிரோ, எக்காலத்திலும் அறிவில்லாத பேதையோ என்று இகழ்ந்து பேச, எமது கடவுளாகிய உன்னை நாடி இவ்வுலக வாழ்வைத் துறந்து துறவறம் என்னும் பெருஞ் செல்வத்தில் இருக்க அருள்வாயோ?


Home    |    Top   |    Back