Logo


English

திருமலை

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

விரிகடல் திரைமணல் கொழிக்கும் அம்செந்திலில்
       விரிஞ்சன் இந்திரன் ஆதியோர்
விருப்புற்றபடி பூசை செய்தவுடன் உங்கட்கு
       வேண்டும் வரம் அருள்வல் என்னாத்
திருவாய் மலர்ந்த போழ்து உன் அடியை மறவாத
       செல்வமே அருள்க என்று அவர்
செய்த விண்ணப்பமே எனது விண்ணப்பமும்
       திருவுளத்து எனை அடக்கும்
புரிவு ஆன பேர்அருள் புரிந்து எனைக் கோடி என்
       போதம் விளையாத நிலையில்
பூரண வியோமமா நிறைவான தெய்வமே
       பொறி கரணம் என்பவைகளுக்கு
அரிய துரியாதீத அறிவுச் சுகஆனந்த
       ஆழியே அன்பர் மன்னே
அளிசெறிந்து அறைவளம் பெருகு திருமலைமிசை
       அமர்ந்த சிவ குகசம்புவே.

1.

   பூரண ஆகாசமாய் நிறைவான தெய்வமே! ஐம்பொறிகளுக்கும் அந்தக் கரணங்களுக்கும் எட்டுதற்கரிய நான்காவதைக் கடந்த அறிவுச் சுகானந்தக் கடலே! அன்பர்தம் அரசே! வண்டுகள் நிறைந்து ஒலிக்கும் வளம் பொருந்திய திருமலைமேல் எழுந்தருளியுள்ள சிவகுகசம்புவே! பரந்த கடல் அலைகள் மணலைக் கரையிற் சேர்க்கும் அழகிய செந்திலில் பிரமதேவன் இந்திரன் முதலியோர் நீ விரும்பியபடி பூசை செய்தபின்பு அதற்கு மகிழ்ந்து, “உங்களுக்கு வேண்டும் வரத்தை அருள்வோம்” என்று நீ கூறியருளினாய். அதற்கவர், “உன் திருவடியை மறவாத செல்வமே வேண்டும்; அதனை அருள்க” என்றார். அவர்கள் செய்த விண்ணப்பமே எனது விண்ணப்பமுமாகும்! உன் திருவுளத்தில் நினைத்து என் தற்போதம் விளையாத நிலையில் அன்பான பேரருள் புரிந்து எனை அடிமைகொள்வாயாக!

கண் ஒன்று பார்க்கக் கருத்து ஒன்று நேடிடக்
       கை ஒன்று செய்ய உரைகொள்
காது ஒன்று கேட்க நடு நா ஒன்று பேசநின்
       கழல் இணை மறந்து பூசை
பண்ணில் பயன்படாது என்று உலகு இயம்பினும்
       பழுது அறு பதார்த்தங்களைப்
பரமனுக்கு என்று ஈவதில் சிறிது புண்ணியம்
       பரிவொடு எய்தாதேமா எனா
எண்ணியது செய்ய எனினும் பத்தி வேண்டும் அதை
       எய்திடின் விதுப்பு விட்ட
எழிலாய யோகமே ஆகும் அப்பத்தியும்
       எனக்குச் சிறக்க இலையால்
அண்ணலே என் பூசை எவ்வழியினால் உனக்கு
       ஆனதாகக் களிப்பேன்
அளிசெறிந்து அறைவளம் பெருகு திருமலைமிசை
       அமர்ந்த சிவ குகசம்புவே.

2.

   வண்டுகள் நிறைந்து ஒலிக்கும் வளமிகுந்த திருமலைமேல் எழுந்தருளியுள்ள சிவகுகசம்புவே! கண் ஒரு பொருளைப் பார்க்கவும், நினைப்பு ஒரு பொருளை நாடவும், கை ஒரு பணியைச் செய்யவும், உரையைக் கேட்கும் காது ஒன்றைக் கேட்கவும், நாக்கு ஒன்றைப் பேசவும், உன் இருதிருவடிகளை மறந்து செய்யும் பூசை பயன்படாது என்று உலகத்தார் கூறினாலும், குற்றமற்ற பதார்த்தங்களைப் பரமனுக்குப் படைப்பதால் சிறிது புண்ணியம் அன்புடன் கிடைக்காதோ என்று நினைத்து, அது செய்தாலும் அதற்கும் பத்தி வேண்டும்; அப்பத்தியை அடைந்தால் நடுக்கமற்ற அழகிய யோகமேயாகும். அந்தப்பத்தியும் எனக்குச் சிறப்பாகவில்லையே? அண்ணலே! என் பூசை உனக்கு அமைந்தது என்று எவ்வாறு மகிழ்வேன்?

மங்கல சிவஆகமம் உரைக்கின்றபடி தாச
       மார்க்கத்திலே குறித்த
வடிவினின் மறைந்து இருந்தும் புத்திர நெறியில் நன்
       மந்திர உருப் பெருக்கால்
தங்காத கடைதலில் பொறி என விளங்கியும்
       சகச சகமார்க்கம் அதனில்
தண் கரை பிதுக்குழி யிறங்குபால் போலவும்
       தாவில்சன் மார்க்கம் அதனில்
பங்கம் இல் இளம் கன்றினைப் பூர்வ ஈற்றுப்
       பசுத்தான் அணைத்து அணைத்துப்
பரிவொடு நினைத்த போதெல்லாம் அருந்தும் ஒரு
       பண்பு எனவும் நீ அருள்வதில்
அங்கதம் இலாத சன்மார்க்க இன்பே எற்கு
       அளித்தி என் ஆசை அமுதே
அளிசெறிந்து அறைவளம் பெருகு திருமலைமிசை
       அமர்ந்த சிவ குகசம்புவே.

3.

   வண்டுகள் நிறைந்து ஒலிக்கும் வளமிகுந்த திருமலைமேல் எழுந்தருளியுள்ள சிவகுகசம்புவே! மங்கலமுள்ள சிவாகமம் உரைக்கின்றபடி, தாசமார்க்கத்திலே குறிப்பிட்ட ஓர் உருவத்தில் மறைந்திருந்தும், சற்புத்திர மார்க்கத்திலே நல்ல மந்திர செபத்தினால் விடாது கடைவதால் தீப்பொறி வெளிப்படுவது போல் வெளிப்பட்டும், தோழமையான சகமார்க்கத்தில் குளிர்ந்த காம்பைப் பிதுக்கும் போதெல்லாம் வெளிப்பட்டு விளங்கும் பால் போலவும், குறைவில்லாத சன்மார்க்கத்தில் குறைவில்லாத இளங்கன்றினை ஈன்ற பசுவானது, நினைத்தபோதெல்லாம் கன்றினை அணைத்து அணைத்து அருத்துவிக்கும் ஒரு பண்பு போலவும் நீ அருள்வதில், என் ஆசை அமுதே பொய்யில்லாத சன்மார்க்க இன்பத்தையே எனக்கு அளித்தருள்வாயாக!

ஞானம் இல்லாது கதி சேர ஒணாது என்று அந்த
       ஞானத்தை எய்து பருவம்
நால் என வகுத்த நிரையில் சரியை கிரியையிலும்
       நாசிவரு வாசி அருகல்
சால் நிநதயோகிலும் வரும் பத இடம் பெறச்
       சம்மதம் இலாது ஞான
சாயுச்சிய சத்திய பரமுத்தியை விரும்புவோர்
       தரணி ஆள் செல்வத்தையும்
வானவர்கள் பேற்றையும் பிரமனார் வாழ்வையும்
       வைகுந்த ஆக்கத்தையும்
மருவ நினைவாரோ மடங்கல் சிறு தேரையை
       வலிக்குமோ பசிமல்கினும்
ஆனி இல்லாத அப்பர முத்தி தன்னையே
       அடைய என்று உனை அடைந்தேன்
அளிசெறிந்து அறைவளம் பெருகு திருமலைமிசை
       அமர்ந்த சிவ குகசம்புவே.

4.

   வண்டுகள் நிறைந்து ஒலிக்கும் வளமிகுந்த திருமலைமேல் எழுந்தருளியுள்ள சிவகுகசம்புவே! ஞானமில்லாமல் முத்தியை அடையமுடியாது என்ற அந்த ஞானத்தை அடையும் பருவங்கள் நான்கென வகுத்துக் கூறுவர்; அந்த வரிசைப்படி, சரியை, கிரியையிலும் மூக்கில் வரு பிராணவாயுவை அடக்கி ஒலியுண்டாம் யோகிலும் வரும் பதமுத்தியைப் பெறச் சம்மதமில்லாமல், ஞான சாயுச்சிய சத்திய பரமுத்தியை விரும்புவோர் உலகை ஆளும் செல்வத்தையும், தேவர்கள் பேற்றையும், பிரமதேவன் வாழ்வையும் வைகுந்த நன்மையையும் அடைய விரும்புவார்களோ? பசி மிகுந்தாலும் சிங்கம் ஒரு சிறு தவளையை வேட்டையாடுமோ? குறைவில்லாத அந்தப் பரமுத்தியை அடையவே நான் உன்னை அடைந்தேன்!

விண்ணில் ஒளிர் கோள்நிலை கணித்துப் பலாபலன்
       விளம்பிப் பிழைத்திடு தொழில்
வித்துவத் திறமை கொண்டு உலகில் எவர்பேரினும்
       வினோதம் உள பாடல்பாடி
எண்ணற்ற புளுகராய் உய்கின்ற தொழில் சுகுர்தம்
       இதில் என மருத்துவம் செய்து
இன்புற்று வாழ் தொழில் இழிந்த லோகங்களை
       இலங்கு அரும் பொன் எனச் செய்து
உண்ணு தொழில் ஆலம்ப யோகத்தினால் சித்து
       உஞற்றி நாள் அட்டிடு தொழில்
உணர்வில் மாயா இழிதொழில் எல்லாம் அவாவுற்று
       உழன்று திரி பேய்க் கோலமாம்
அண்ணரிய நின் அருள் விரும்பு அறிவுளாரும் இவ்
       அலைதொழில்கள் நச்சுவாரோ
அளிசெறிந்து அறைவளம் பெருகு திருமலைமிசை
       அமர்ந்த சிவ குகசம்புவே.

5.

   வண்டுகள் நிறைந்து ஒலிக்கும் வளமிகுந்த திருமலைமேல் எழுந்தருளியுள்ள சிவகுகசம்புவே! வானத்தில் ஒளி வீசும் கோள்களின் நிலையைக் கணித்துப் பலாபலன் கூறிப் பிழைத்திடும் சோதிடத் தொழிலும், புலமைத் திறம்கொண்டு உலகில் ஏவர்மீதும் புகழ்ந்து வினோதமான பாடல்கள் பாடி, எண்ணற்ற புளுகராய்ப் பிழைக்கின்ற கவித் தொழிலும், இதில் நன்மை என எண்ணி மருத்துவம் செய்து இன்புற்று வாழும் மருத்துவத் தொழிலும், கீழான உலோகங்களை உயர்ந்த அரிய பொன்னாகச் செய்து சீவனம் செய்யும் இரசவாதமும், ஆதார யோகத்தினால் சித்துக்கள் செய்து தினமும் சமைத்து உண்ணும் தொழிலும், அறிவில்லா மாயாவித் (சாலவித்தை) தொழிலும் ஆகிய எல்லாவற்றையும் விரும்பிச் செய்து திரிகின்ற பேய்க்கோலம் இவ்வுலகில் உண்டு. அடைதற்கரிய உன் அருளை விரும்பும் அறிவுளாரும் இவ்வாறு அலையும் பேய்க் கோலத் தொழில்களை விரும்புவார்களோ? விரும்பார்!

தனியே இருந்து எண் மூடி ஐம்புலவழித்
       தடம் அடைத்து உள் இயங்கும்
சதுர்வித மன ஆதி கரணங்களை ஒடுக்கி ஒரு
       சமநிலையில் நின்ற உன் அருளில்
கனிவுற்று இராத புன் மதியனேன் எனினும் உன்
       கருணைப் பிரதாபமகிமை
கழறு நன்னூல்களின் சம்மதப்படி நிதம்
       கத்துவதை விட்டது உண்டோ
புனிதமொடு கேட்டவர்கள் கண்டவர்கள் பாலில் உன்
       புகழினை மதித்து விரிவாய்ப்
போதித்து மகிழ் முறைமை நீத்தது உண்டோ நீ
       புறம்பு என்று எனைக் கழிக்க
அனிமாலினம் சனிப்பு அற்ற பரதெய்வமே
       அருணகிரி புகழ் அண்ணலே
அளிசெறிந்து அறைவளம் பெருகு திருமலைமிசை
       அமர்ந்த சிவ குகசம்புவே.

6.

   கேடான மயக்கமும் பிறப்பும் இல்லாத பரதெய்வமே! அருணகிரிநாதர் புகழ்ந்த அண்ணலே! வண்டுகள் நிறைந்து ஒலிக்கும் வளமிகுந்த திருமலைமேல் எழுந்தருளியுள்ள சிவகுகசம்புவே! தனித்திருந்து இரு கண்களை மூடி ஐம்புலன்கள் செல்லும் வழிகளை அடைத்து, உள்ளே இயங்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு விதக் கரணங்களை ஒடுக்கி, ஒரு சமநிலையில் இருந்து உன் அருளைப் பெறப் பக்குவமடையாத அற்ப மதியனே ஆயினும், உன் கருணைப் பெருமையைக் கூறும் நல்ல நூல்களின் சம்மதப்படி நிதம் கத்துவதை விட்டதுண்டோ? புண்ணியத்துடன் கேட்டவர்கள், கண்டவர்கள் இடம் உன் புகழினை மதித்து விரிவாகப் போதித்து மகிழும் செயலை நீத்ததுண்டோ! நீ புறம்பென எனைக் கழிக்க!.


Home    |    Top   |    Back