Logo


English

பராபரம்

1. பரமும் அபரமும் ஆக (வடிவு தாங்கியவனாகவும் வடிவு நீங்கியவனாகவும்) விளங்கும் முழுமுதற் பொருளே! இந்நிலவுலகில் அஃறிணை வர்க்கத்துள் ஒன்றாகப் பிறவி எடுக்காமல் உயர்ந்த குறிக்கோள் வாய்த்த மானுடப்பிறவி எடுத்து நல்ல உடல் அமைப்பு வாய்க்கப் பெற்றும், எந்நெறிக்கும் மேலாகித் தலைமையாக விளங்கும் சைவசித்தாந்த மெய்ந்நெறி ஒபக்கம் பொருந்தியும், எப்பொழுதும் உன்னைப்பற்றிய தியானமாகவே இருக்கும் நான் சுகநிலை அடையவில்லை எனின், உலகில் என்னைப் போன்று மலினங்களுக்கு உட்பட்டிருப்பார் வேறுயார்?

2. பராபரமாக விளங்கும் முழுமுதற் பொருளே! நினது கருணை காரணமாக உனக்கே ஆட்பட்டு உனக்கு அஞ்சி நடக்கம் விவேக உணர்வு எனக்குப் பொருந்திய நாளிலிருந்து, இவ்வுலகம் பலவாறாக வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் உனது பரிபூரண வியாபகத்துள் அடங்கியுள்ளன என உளப்பூர்வமாக உணர்ந்து, உன்னையே தியானித்திருக்கும் எளியேனுக்கு, இப்பொழுது நீ அன்புடன் அருள்புரியவில்லை எனில் வேறு யார் துணையாவார்?

3. ஐயனே! பராபரமாக விளங்கும் முழுமுதற்பொருளே! மனைவி, பிள்ளை, உறவு, ஊர் முதலான பந்தங்களையெல்லாம் உதறி எறிந்து உனது பேரருளே எனக்குற்ற பெரும்துணை எனக்கருதித் தலம்தொறும் அலைந்திடும் என்னை உன்னோடு அணைத்துக்கொண்டு அருள்புரியவில்லை எனில், ஆதரவோடு எனது உளப்பாங்கு அறிந்து வேறு யார் அருள்புரிய முடியும்? வேறு யார் துணையாவர்?

4. நற்பேறுகளாகிய அருட்கொடை வழங்கும் பராபரமாகிய முழுமுதற் பொருளே! உறங்குவதம் விழிப்பதும் போன்றுள்ள மரணம், பிறப்பு என்னும் பெரும் சுழற்சியிலிருந்து நீங்கி (நிரந்தரமாக உன்னோடு இரண்டறக் கலந்து உய்திபெற வேண்டி இடையறாது உன்னையே தியானித்திருக்கும் எனது உண்மையான நோக்கத்தை வேறு யார் அறிவார்? தொடர்ந்து வரும் இருவினைத் துன்பம் என்பதிலிருந்து என்னை விடுவித்து ஆதரிப்பார், உன்னைத் தவிர வேறு யார்?

5. என் அறிவுமயமாக விளங்கும் பராபரமே! ஒன்றுமே அறியாமல் இருக்கும் மூடனுக்கும், அனைத்தையும் அறிந்துள்ள பெரிய ஞானிக்கும் இவ்வுலகில்’நன்று இது’ ‘தீயது இது’ எனப் பிரித்துப் பார்க்கும் உணர்வுநெறி எப்பொழுதும் கிடையாது. “உன் அடியன் நான்” எனக் கருதும் எளியேன், மூடனுமாக இல்லாமல் ஞானியுமாக இல்லாமல் இடைப்பட்டுள்ளேன். இப்படிப்பட்ட நான் உனது திருவருள் துணையின்றி எவ்வாறு உய்வேன்? அன்று எனக்கு வாக்களித்த வண்ணம் விரைந்து அருள்புரி.

6. பராபரமாக விளங்கும் முழுமுதற் பொருளே! நீ என்னை ஆட்கொள்ளும் முறையில் கருணைகாட்டி என் உள்ளத்தை உன்வயப்படுத்தி ஈர்த்தும் இதுவரை அனேக நாள்கள் என்னை மறந்து இருக்கின்றாய். ‘ இவன் தூயவன் அல்லன்; தீயவன்’ என்று கருதி நீ என்னைப் புறக்கணித்து விட்டாயோ என்று எண்ணி நான் நைந்து போய் உளம் கலங்குகின்றேன். உன்னைத் தவிர எனக்கு வேறு புகல் ஏது?

7. பாரபரமாக விளங்கும் முழுமுதற் பொருளே! வடிவுடன் இருக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் இந்தப் பூமி எப்படி ஆதாரமாகத் திகழ்கின்றதோ அப்படியே, வடிவுடைப் பொருள், வடிவில்லாத பொருள் ஆகிய அனைத்துப் பொருள்களுக்கும் நீயே ஆதாரம். இவ்வாறே இன்பநிலைக்குத் தடையாக உள்ள திரிபுடி நீத்து, அருள் பேறு பெற்று உன்னோடு கலக்கும் அடியார்க்கெல்லாம், முதன்மையான ஆதாரமாக எப்பொழுதும் விளங்கும் நீ என்னைத் தனியே பிரிந்து இருக்கச் செய்து நீங்குவது எதற்கு?

8. சிவமாக, சுப்பிரமணியமாக, பராபரமாக விளங்கும் முழுமுதற் பொருளே! இச்சமயத்தில் என்னை ஆட்கொண்டு நீ அருளவில்லை எனில் நான் மனம் மிகவும் வருந்தி எள்ளளவேனும் ஆனந்தப் பேறு இல்லாமல் துன்பக்கடலுள் ஆழ்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இதுமட்டுமன்றி என்னைப் போன்றுள்ள அடியார்களும்” துன்பம்தான் மிஞ்சுகிறது” எனத் தளர்ந்து அன்புநிலையிலிருந்து பின்னிடும் படியான துர்ப்பாக்கிய நிலை பொருந்தும். ஐயனே! உள்ளக்களிப்பு மிகும் வண்ணம் உனது அருளாகிய இன்பக்கிளர்ச்சியை நான் பொருந்துமாறு செய்க!

9. சுப்பிரமணியமாகவும் பராபரமாகவும் விளங்கும் முழுமுதற் பொருளே! கேட்டல், நினைத்தல் (சிரவணம், மனனம்) ஆகிய இரண்டு பயிற்சிகளும் குறைவற்ற ஞானத்தைத் தரும் தலைமை நெறிக்குரியவை எனக் கூறலாமே தவிர, அவை பிறப்பைத் தடுக்க வல்லவை ஆகுமோ? தெளிதல் என்பதோடு திடமான நிட்டை நிலையைப் பொருந்தினால் பிறப்பு என்பது நீங்கும் எனக் கூறுதல், மாறாத உண்மையே. எனவே குறைவு படாத அந்த உயர்ந்த நிட்டைநிலையில் என்னை இருக்கச் செய்து அருள்.

10. அருள்நெறியை விளக்கும் திருப்புகழ்ப்பாக்களைப் பாடி அருளிய அருணகிரிப் பெருமானுக்கு பேரின்பப் பேற்றை அளித்தருளிய பராபர முழுமுதற்பொருளே! பரம நிட்டையின் பொருட்டு என்னிடம் முன்பு பொருந்தி இருந்த பாசக் குற்றங்களெல்லாம் நீங்கும்படி இதயநடுவண் உள்ள சிற்றம்பலம் என்பதில் என் சிந்தனை முழுவதும் லயிக்கும் படி நீ கட்டளை இட்டருளிய வண்ணம் நான் செய்து உயர்கதியைப் பெற, உனது திருவருளை வழங்குக!


Home    |    Top   |    Back