Logo


English

திருப்பழநிமலைத் திருவிளையாடல்
(நான்காம்பத்து)
நடிப்பு
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம். எழுத்தளவுடையன.

1. பாரமான தோட்சுமை யென்னும் பெயரையுடைய காவடியைச் சுமந்து செவ்வோரைப்போல நடக்கும் மனவுறுதி கூடிய அவ்விடும்பன், தனது வலிய நீண்ட அரைப்பட்டிகை யிறுக்கிக் கட்டப்பட்ட அரைக்குக்கீழே விளக்கம் பொருந்திய சுமைகளிரண்டுந் தொங்கும்படி அழகிய அடிகளைத் தூக்கிவைத்த அளவிலே பூமியானது உயிர்கள் நடுக்குறும்படி அதிர்ந்தது. அப்போது, செவ்வேட்பரமனருளினால் அப்பாரம், சுமத்தற் கெளியதாயிற்று.

2. அச்சமயத்துத் திருநீற்றினொளிவிளங்கு மேனிபடைத்த இடும்பன், தனதகன்ற மார்பில் விளங்கும் அழகிய உருத்திராக்ஷமாலைகளாடவும் ஒளிவீசும் வீரக் கழல்கள் ஆடவும் பொன்னாலாகிய அழகிய காதணிகளாடவும் ஒப்பணைந்த தோட்சுமையுமாடவும் மகிழ்ச்சியோடு தானுமாடத் தலைப்பட்டான். இச்செய்கையோடு விளங்குமவனது நாவின் கண்ணே தான் சொல்லியறியாத புதிய சொற்களும் ஓலிடவே பாடற்கரிய பாடல்களைப் பாடினான்.

3. எம்மலையினு முயர்வுடையதென்னும் பெருஞ்சிறப்பெய்தி உயரிய வானத்தையளாவி விளங்கிய பருவதத்தைப் பூமியிலமிழும்படி செய்த பெருமை வாய்ந்த அகத்தியமாமுனிவரடிகளைச் சிந்திக்கும் எனது நெஞ்சங்களிகூரும்படிக்கு மகிமை திகழுமிவ்விரு குவடுகளும் யான் சுமக்கும் பாரங்களாக இப்போது பொருந்துதற்குச் சிறியேன் செய்த தவமென்னோ? அறிவிலிகளாயுள்ளோர் பொதிகை முனிவர் கடலைக் குடித்துத் தம்மை யடைந்தார்க்கருள்புரி மகத்துவத்தையும் அறியறிவைப் பெறுவர் கொல்லோ? (பெறார் என்றபடி)

4. நறிய அதிமதுரக் குயின்மொழியினளும் அன்ன நடையுறழ்ந்த நடையினளுமாகிய மாவடுப்போன்ற விழிகள் விளங்குகின்ற உமாதேவி (அவன் என்) சுதனென்று சொல்லிக் கொள்ளவும், அழகார்ந்த மானையேந்தியுள்ள கரத்தினையுடைய மகா சிரேஷ்டன் (அவன் என்) புதல்வனென்று புகன்றுகொள்ளவும் திசைகளில் மயிலைச் செலுத்திவரும் பரமா! செங்கிடைச்சியை யொத்த இதழ்களையுடைய இலக்குமி தேவியின் மருகா! பண்டைத் தேவர்கள் தம் தலைவனென்று சொல்லிக் கொள்ளுமாறு இவை போன்ற வேற்படையேந்திய முருகா! துசங்களின் அரசிது வென்னும்படி தேர்முடியிலே கூவுகொடி அசையுமொரு தேரில்வதியும் பெருமிதமே!

5. கனத்த பொன்னாபரணங்கள் விளங்கப் பெற்ற மயில் வாகனமானது கலகவென வர; அதன்மீதாரோகணிக்கும் இளமைப் பருவ ஒயிலே! ஞாயிற்றைப் பழிக்குங் காந்திகொண்ட வீரக்கழல் புனைந்த அமரா! சிறந்த கிரீடத்தையும் மார்பணிகளையுந் தோள்வளைகளையு மணிந்த குமரா! ஆன்மாக்களுடைய இருதயாகாசத்தின் கண்ணே நடனஞ் செய்யுங் குகனே! இனிய மொழியியம்பும் அழகிய பரிசுத்த கங்கையின் மகனே! என்று துதிக்கும் அகத்திய மாமுனிவர்க்கு இறைவனே! இணையில்லாத் தியான ஞானங்களென்னும் மணிகளைத் தராநின்ற திருவருட் கடற்றுறையிலிருக்குந் துறைவனே!

6. அமரர் சிறைமீட்டிய விமலா! அடியார்களலக்கணுறுங் காலத்து அதனை அகற்றியருளும் அமலா! சமநிலை வாய்ந்தவர்களுடைய கருத்திலுறையும் பொருளே! தக்க பெருமையுடையோர் பணியும் பரிசுத்தமுடைய அகத்திய மாமுனிவர்க்குக் கிடைத்துள்ள அருளே! பிரமதேவ னறியமாட்டாத சிவனே! விநாயகற்கிளவலென விளங்கும் பரம பவனே! “குமரகுரு” “குமரகுரு” என்று ஜெபிப்பவர்களுடைய இதய கமலங்களில் எஞ்ஞான்றுமிருக்கும் நினைவே!

7. சீவர்கட்குப் பொருந்து மிறப்பும் பிறப்புமில்லாத மழவா! வளம் பொருந்திய பல மலைகளிலும் வீற்றிருக்கும் ஒரு கிழவா! போற்றத்தக்க பொருள்செறிந்த பாக்களை இரவும் பகலும் இன்போடு பாடுவோர்கள் நின்றிருவடிகளை யடையும்படிக் கருள்செய்யும் நிருபா! சரவணமென்னும் பெயரிய தாமரை வாவியிற்றோன்றிய நிதியே! இயங்கியற்பொருளும் நிலையியற்பொருளுமாகிய எல்லாமும் ஒருங்கு தங்கியுள்ளபாரமேச்சுவா வடிவ பதியே! தேவர்கள் குழுமு சபையின் நடுநாயக மென்னும் மணியே! ஆனந்தானுபவ மெய்ஞ்ஞானிகள் போற்றும் அகத்திய மாமுனிவர் துதிக்குமொரு முனியே!

8. பிரம ஞானிக ளெல்லோருந் தியானிக்குஞ் சமானமற்ற தனியே! அவர்களுக்கு இனிமையை நன்களிக்கும் அமுத சொரூபமென்னும் பெரிய கனியே! மெய்யன்பர் விரும்புவன வெல்லாந் தந்தருளுங் கற்பக தருவே! வலிய நெற்றிகளிற் கண்களாகிய மலர்கள் விளங்குங் குமர குருவே! அரைஞாண் கட்டிய அரையினையுடைய அழகே! இன்பம் பயக்கும் மழலைச் சொல்லை இனிது கூறவுள்ள குழகே! வாசனையுள்ள மலர்கள் கமழ எழுந்தருளுந் துரையே! பிழையற்ற வேதங்கள் போற்றும் அரும் பெருங்குண வரையே!

9. முனிவரர் பணிய விளங்கும் அறுமுகனே! எக்காலத்திலும் பேரறிவுப் பிரகாசத்தின் மிளிர்சுகனே! மணம் வீசு மாலைகள் புரளும் அகலா! நமவீர ரோடும் பூதகணர்களோடும் ஆரவாரத்தோ டெழுந்தருளும் இகலா! பொருந்துதல் விலகுதலென்னு மிருதன்மையு மற்று யாண்டு மிருந்து கேட்கும் பெரிய செவியா! சிறந்த கலைகண் முழுதுமுண ரியல்பினை யுரைக்குங் கவியா! பிணக்கு, வறுமை, நோய், மூப்பு என்னு மிவைகளில்லாத உருவா! யமபயம் அற்ற சுகுர்தர்கள் தொழுதடையும் ஒருவா!

10. என்று போற்றிசைக்கு முறைமையோடு களி நடம்புரியு மிடும்பன் நெடுந் தூரம் வழி நடந்த பின்பு எதிரிற் றோன்றிய காட்டின் நடுவில் வழியறியாதவனாகித் திகைக்கும்போது அவனெதிரே தான் இனிது செல்லு முறையைக் குமர குருபரன் திருவுள்ளத்துன்னினான். இருவினையும் மலமும் இரிந்தொழிய முருகனடி ஏத்திய அருணகிரிநாத முனீந்திரர் நெறியை விரும்புநர்காள்! அம்முழுமுதற் கடவுளருளால் இனிக் கூறவேண்டியவற்றையுங் கூறக்கடவேன்.


Home    |    Top   |    Back