Logo


English

திருவருணை

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை சூழ் இஞ் ஞால வாழ்வு ஒரு துரும்பு என்று
       மேலான அறிவை நாடி
வெற்பு உயர் சுரத்து ஏகி விளை கந்தமுலம் உதிர்
       மென் சருகு அயின்று எல்லிலும்
மாலையிலும் நிற்குநிலை பிசகாது எடுத்து அம்மெய்
       வருந்த வழிபட்டு நாளும்
வாழ்பவர்கள் இருதயம் குடிகொண்ட தெய்வமே
       மாடு வீடு என்று தேடிச்
சேலை தொடர் மகளிர் படு குழிதனில் விழுந்து அன்று
       செய்த பல்கறியும் அமுதும்
திருத்திகரம் ஆக முப்போதும் புசித்து அறிவு
       திரிதர உழன்று துயில் இக்
காலம் நின் அருள் பெறுவது ஏது என மலைக்கும் என்
       கவல் எந்தவாறு பாறும்
கருணை அடியவர் பரவ விலகு திருவருணை வளர்
       கருதரிய முருகையனே.

1.

   கருணையுள்ள அடியார்கள் துதிக்க விளங்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளிய நினைத்தற்கரிய முருகையனே! கடல் சூழ்ந்த இவ்வுலக வாழ்வு ஒரு துரும்பென்று கருதி அதைவிட்டு மேலான இறை ஞானத்தை நாடி மலைகள் உயர்ந்த வனத்திற்குச் சென்று, அங்கு விளைகின்ற கிழங்குகள், உதிரும் மெல்லிய சருகுகள் ஆகியவற்றை உணவாக உண்டு, பகலும் இரவிலும் தம் உடம்பு நிற்கும் நிலை சிறிதும் பிசகாமல் மெய்வருந்த வழிபட்டு, அனுதினமும் வாழ்பவர்கள் இருதயத்தில் குடிகொண்ட தெய்வமே! மாடு, வீடு என்று தேடிச் சேலை உடுத்துத் தொடரும் மாதர் என்னும் படுகுழியில் விழுந்து, அன்று சமைத்த பலகறிகளும் உணவும் திருப்திகரமாக மூன்று வேளையும் உண்டு, அறிவுகெடத் திரிந்து உறங்கும் இக்காலத்தில் உன் அருள் பெறுவது ஏது என மயங்கும் என் துன்பம் எந்த வகையில் ஒழியும்?

வாக்கு மனதால் உளப்பரிய உனை நேசிக்கும்
       மார்க்கங்களோ அனந்த
வகை அவையுள் உள் ஈரம் இன்று ஊன் அருந்தரிலும்
       வாழ் உயிர் சவட்டு வழுவும்
தேக்குவெறி உண் இழிவு நற்சீவன் முத்தியைச்
       சேர்ந்தபின் விதேகமுத்தி
சேரும் முறை சொல்லாது செத்தபின் முத்தியது
       சேரலாம் என்று சொல்லும்
போக்கு வரவு ஆன இழி முத்தி முடிவுகளும்
       பொருந்தி உள மார்க்கங்களைப்
புந்தியில் சிறிது நான் அங்கிகரியேன் முன்
       புகன்றவை முரண்டாமல்
காக்கின்ற சைவசித்தாந்தம் ஒன்றே என்
       கருத்துக்கு இசைந்த நெறிகாண்
கருணை அடியவர் பரவ இலகு திருவருணை வளர்
       கருதரிய முருகையனே.

2.

   கருணையுள்ள அடியார்கள் துதிக்க விளங்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளிய நினைத்தற்கரிய முருகையனே! மொழியாலும் மனத்தாலும் அளந்தறிய முடியாத அரிய உன்னை நேசிக்கும் சமயங்களோ அநேகம் உள்ளன; அவை மனத்தில் சிறிதும் இரக்கமின்றிப் புலால் உண்ணுதலும் வாழும் உயிர்களை அடித்துத் துன்புறுத்தும் குற்றமும் புரிதலும், தித்திக்கும் கள்ளுண்டலும் முதலியன சிறந்த சீவன் முத்தியைச் சேர்ந்தபின்பு விதேகமுத்தியைச் சேரு முறையைச் சொல்லாது, செத்தபின்பு முத்தியை அடையலாம் என்று கூறும். பிறத்தலும் இறத்தலும் தரும் முத்தி முடிவுகளைப் பொருந்திய சமயங்களை என் மனத்தில் சிறிதளவும் ஏற்க மாட்டேன்; முன்னே வறியவை முரண்படாமல் காக்கின்ற சைவசித்தாந்தம் ஒன்றே என் கருத்திற்கு ஏற்புடையதாகும் சமயமாகும்!

இவ் உலகு மேல் உலகு கீழ் உலகு பகிர் அண்ட
       எல்லைகளினும் சனித்த
எப்பொருளினும் பெருகி நிற்பதாகச் சுருதி
       எல்லாம் இயம்பு மிடியால்
பவ்வமது சூழ் இந்த வசுமதியில் என் திட்டி
       பட்டவரை பகலும் அல்லும்
பார்த்து உன்னைக் காணா ஒர் பித்தம் பிடித்து என்ன
       பணுவோம் எனச் சுலவு கால்
செவ்வனே நின்னுடைய அகத்தின் கண் நோக்கு என்று
       தேற்றி நுண்ணறிவு தந்து
சிந்தனைக்கு எட்டாமல் எங்ஙனம் ஒளித்தனை
       சிதாகாச பரதெய்வமே
கவ்வை அற்று அவ்விடம் கண்டு உன் விபூதி என்
       கண்ணே இருக்க அருளாய்
கருணை அடியவர் பரவ விலகு திருவருணை வளர்
       கருதரிய முருகையனே.

3.

   கருணையுள்ள அடியார்கள் துதிக்க விளங்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளிய நினைத்தற்கரிய முருகையனே! நீ இம்மண்ணுலகம், விண்ணுலகம், பாதள உலகம், புற அண்டம் ஆகிய உலகங்களிலும் பிறந்த எப்பொருளிலும் பரந்து நிற்பதாக வேதங்கள் எல்லாம் கூறும். ஓசையுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் என் பார்வைபட்டவரை பகலும் இரவும் பார்த்து உன்னைக் காணாததால் பைத்தியம் பிடித்து என்ன செய்வோம் எனச் சுழன்று திரியும் போது, செம்மையாக உன் “மனத்தின் கண் நோக்கு” என்று நீ தெளிவித்து நுண்மையான அறிவு தந்து சிந்தனைக்கெட்டாமல் எவ்விடம் ஒளிந்து கொண்டாய்? சிதாகாச பரதெய்வமே! துன்பம் அற்ற அவ்விடத்தை நான் கண்டு உன் அருட்செல்வம் என்னிடம் இருக்க அருள் புரிவாயாக!

நீரிழிவு குட்டம் அதிசாரம் கிராணி சுரம்
       நீங்கா அகட்டுவலிகண்
நீழல் படுவன் கொடிய சன்னி குன்மம் பல்நோய்
       நெஞ்சு இருமல் காசம்மூலம்
சீர் இழிய அடர்வாதம் வெட்டை விளர் சோகை புண்
       தீராத பிணி பலவும் உன்
திரு நாம மந்திரம் செப்பின் அச் செவ்வியே
       செயல் அற்று வீயும் அதனை
மாரிபோல் நனி உச்சரித்துப் பழிச்சு எனது
       மனமாரி வீய இலையே
மலிகின்ற காளிதச் செம்பு உறழ உயிர்களின்
       மதிதனை மறைத்த பாசக்
கார் இருள் துறக்கும் மெய்ச் சோதியே எனையும்
       கடைக்கணித்து அருள நினையாய்
கருணை அடியவர் பரவ விலகு திருவருணை வளர்
       கருதரிய முருகையனே.

4.

   கருணையுள்ள அடியார்கள் துதிக்க விளங்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளிய நினைத்தற்கரிய முருகையனே! நீரிழிவு, குட்டம், பேதி, கிராணி, சுரம், நீங்காத வயிற்றுவலி, கண்நோய், படுவன், கொடிய சன்னி, குன்மம், பல்நோய், நெஞ்சு இருமல், காசநோய், மூலநோய், கேடுதரும் அடர்வாதம், வெட்டை, வெளிறும் சோகை, புண், தீராத பிணி எனப்பல நோய்களும் உன் திருநாமமந்திரம் சொன்ன உடனேயே தம் செயல் அற்று ஒழிந்து போகும்; அதனை மழைபோல் நன்கு உச்சரித்துத் துதிக்கும் எனது மனநோய் ஒழியவில்லையே! மிகுதியான களிம்புள்ள செம்புபோல் உயிர்களின் அறிவை மறைத்த கரிய பாச இருளை ஒழிக்கும் மெய்ச்சோதியே! என்னையும் கடைக்கண்ணால் நோக்கி அருள்புரிய நினைத்தருள்வாயாக!

திரைகடல் இமிழ் முரசம் மதிய ஒண் கொடை இளம்
       தென்றல் அம்தேர் கதலி மீன்
தீஒழுகு கன்னல் முனி நாரி அளி ஒதை எழில்
       சேர் பகழி ஆலம் வரி ஆர்
பரபிருதம் எக்காளம் இரத முறி புட்கரம்
       பணைநகிலம் உள கோமளப்
பாவையர்கள் தந்திரம் சூழ்வோன் வசந்தன் ரதி
       பாரி என உள்ள மோகன்
பிரதி தினமும் பெரிய போராடி என்றன் நல்
       பெற்றியைப் பிரமை செய்து
பித்தம் பிடித்த நாய் போலவே அயர்கின்ற
       பிசகை நீ கண்டியாத
கரணம் தனைப் பன்ன வேண்டும் அன்றோ அடிமை
       காதலித்திட்ட வண்ணம்
கருணை அடியவர் பரவ இலகு திருவருணை வளர்
       கருதரிய முருகையனே.

5.

   கருணையுள்ள அடியார்கள் துதிக்க விளங்கும் திருவண்ணா மலையில் எழுந்தருளிய நினைத்தற்கரிய முருகையனே! அலைகடலே முழங்கு முரசு! நிலவே வண்கொற்றக் குடை! இளந்தென்றலே தேர்! மீனே கொடி, தீஞ்சுவைக் கரும்பிலே வண்டு நாண்! அழகுடைய மலர்களே அம்புகள்! இசைக்குயிலே எக்காளம்! தாழைமுறியே வாள்! பெரிய தனங்களுடைய அழகிய மகளிரே படை! இத்தகைய பரிவாரங்கள் சூழப்பெற்ற வசந்தன், இரதி கணவன் என்னும் மன்மதன் நாள்தோறும் பெரும் போர் செய்து எனது நல்ல தன்மையை மயக்கிப் பைத்தியம் பிடித்த நாள் போலச் செய்கின்ற குற்றத்தை உன் அடிமையாகி உன்னைக் காதலித்த பின் நீ கண்டிக்காத காரணத்தை எனக்குச் சொல்ல வேண்டும் அல்லவா?

வெள்ளைமலி வெள்ளைமிலை வெள்ளைவிடை வள்ளல் உடை
       வெள்ளைமலை ஞெள்ளல் ஆய
விபூதி எல்லாம் அருளும் அபிராமி சிவகாமி
       விதரணச் சித்திபலவும்
உள்ள நல சித்தர்கணம் எல்லாம் உன் அடிமையே
       ஓங்கார உருவம் உற்றுஇவ்
உலகினில் உலாவும் உயிர் முத்தரொடு பத்தர்களும்
       உன் அடிமை அன்றி வேறோ
வள்ளிபுனை வள்ளி சுர குஞ்சரி மனோகரா
       மதர்வு அருணகிரிபுங்கவா
வாசாமகோசர விலாச கருணாலய என்
       மனதிடை நிமிர்ந்த பொல்லாக்
கள்ளவலி காதி உயர் உள்ளம் தனைத் தந்து
       கரில் அற்ற நிலையில் வையாய்
கருணை அடியவர் பரவ விலகு திருவருணை வளர்
       கருதரிய முருகையனே.

6.

   கருணையுள்ள அடியார்கள் துதிக்க விளங்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளிய நினைத்தற்கரிய முருகையனே! வெண்ணீறணிந்தவனும், வெண்பிறையைச் சூடியவனும், வெள்ளை நிறக் காளை வாகனம் உடையவனும் ஆன வள்ளலுடைய வெள்ளைமலையான திருக்கயிலாய மலையின் மேன்மையான செல்வமெல்லாம் அருளும் அபிராமி, சிவகாமி அழகிய சித்திகள் பலவும் உள்ள நல்ல சித்தர்கள் எல்லாம் உன் அடிமையே! பிரணவ தேகம் கொண்டு இவ்வுலகில் உயிருடன் வாழுகின்ற சீவன் முத்தர்களுடன் பக்தர்களும் உன் அடிமை அன்றி வேறோ? வள்ளிக் கொடியை அணிந்த வள்ளியம்மை, தெய்வானை ஆகியோரின் மணவாளனே! அழகிய அருணகிரிநாதரின் கடவுளே! வாக்கு மனங்களுக்கு எட்டாத அழகனே! கருணாலயனே! என் மனத்தில் மிகுந்துள்ள பொல்லாத வஞ்சனையின் ஆற்றலை ஒழித்து உயர்ந்த உள்ளத்தைக் கொடுத்துக் குற்றமற்ற நிலையில் வைத்தருள்வாயாக.


Home    |    Top   |    Back