Logo


English

திருவிராமேச்சுரம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவளர் சதாசிவ சொருபமாய் அவிர்கின்ற
       சிவலிங்க வடிவத்தை என்
திட்டி கண்டிடுபோது நம் கடவுள் ஈது என்று
       சிந்தனை செய்து ஐந்து முகமோடு
உருவளர் அதோமுகமும் ஆக நனி பாவித்து என்
       உள்ள நடுவினும் அமர்த்தி
உபயம் இன்று ஏகமா நோக்கும் என் நோக்கு அறிந்து
       உள்குமாறு அருள் செய்வையேல்
அருளினை வியந்து கவிபாடுவேன் ஆடுவேன்
       ஆ இது விசித்திரம் என்பேன்
ஆனந்தம் ஆனந்தம் என்று குதி போடுவேன்
       அன்பர்காள் வம்மின் என்பேன்
மருமலர் வனத்தில் உறை முனிவர் வள்ளால் அருள்
       வராவிடின் யாது செய்வேன்
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

1.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! அழகுடைய சதாசிவர் சொரூபமாய் விளங்குகின்ற சிவலிங்க வடிவத்தை என் கண் காணும்போது, இவர் நமது கடவுளே என்று நினைத்து ஐந்த முகத்துடன் அழகுடைய அதோ முகமும் உள்ளதாகப் பாவனை செய்து, என் மனத்தின் நடுவில் நிறுத்தி, இரண்டில்லை ஒன்றே என்று நோக்கும் என் நோக்கத்தை அறிந்து நினையும்படி அரள்புரிவையேல் உனது அருளினை வியந்து கவிபாடுவேன்; ஆடுவேன்; ஆகா! இது விசித்திரம் என்று கூறுவேன்; ஆனந்தம் ஆனந்தம் என்று குதிப்பேன்; அன்பர்களே! வாருங்கள் என்பேன். மணம் கமழும் மலருடைய காட்டில் வாழும் முனிவர்கட்கு வரம் அருளும் வள்ளலே! உன் அருள் கிடைக்காவிடில் என் செய்வேன்?

தந்தையும் தாயும் சகோதரங்களும் நல்ல
       தயவாக இங்கு இருந்து என்
சடம் அதை விடுத்து இயமன் உயிர் வலித்து ஏகு எல்லை
       சற்றும் உதவார் ஆயிடை
எந்தை எனும் நீ உதவுவாய் அல்லவோ உன்னை
       எப்படி மறந்திருப்பேன்
இடர் ஈயும் முன்வினைத் தொடர்பால் மறக்கினும் என்
       இதயத்து இருந்து தூண்டி
வெம்தழல் சருகு எனச் செய்து அந்த வினையையும்
       விதேக கைவல்லிய வாழ்வு ஆம்
வீடு பெற ஞானபர யோகினின் நிறுத்தல் உன்
       மேல் உள்ள கடமை அன்றோ
மந்தமதி உயிர்களுக்கு அருளுமாறு இன்ப அருள்
       வடிவான பெரிய பொருளே
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

2.

   சிற்றறிவுடைய உயிர்களுக்கு அருளுமாறு இன்ப அருள் வடிவான பெரிய பொருளே! வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! தாயும் தந்தையும், சகோதர, சகோதரரிகளும் நல்ல துணையாக இவ்வுல வாழ்க்கையில் நமக்கு அமைந்திருந்தாலும் என்ன பயன்? இவ்வுடம்பை விட்டு உயிரானது இயமனால் பாசத்தால் பிடித்துச் செல்லும்போது, இவர்கள் சிறிதும் உதவார்கள்; அக்காலத்தில் எம் தந்தை என்னும் நீ உதவுவாய் அல்லவா? உன்னை நான் எப்படி மறந்திருப்பேன்? துன்பத்தைத் தரும் முன் வினைத் தொடர்பால் மறந்தாலும், என் இருதயத்தில் இருந்து தூண்டி வெம்மை மிகுந்த நெருப்பிலிட்ட சருகு போல் அந்த வினையையும் எரித்து, விதேசமுத்தியான வாழ்வாம் வீடு பெறுதற்கு ஞானயோகத்தில் நிலைபெறச் செய்தல் உன்பாலுள்ள கடமை அல்லவா?

கம்மியர்கள் செய் உருக்களிலும் சுயம்பு லிங்
       கங்களிலும் மாமனுவிலும்
கயிலாச கிரியிலும் பகிர் அண்ட வெளியிலும்
       கனவிந்து நாதத்திலும்
மும்மவுன நிபுணர்கள் நினைப்பிலும் மறா அன்பர்
       மொய் கொண்ட பேரவையிலும்
முளரி ரவி மதியிலும் பசு என்னும் உயிரிலும்
       முயங்கி நீ நிற்பை எனினும்
சும்மா இராமலே சம்மா இருக்கும் ஒரு
       சுத்தநிலை தன்னில் எற்குத்
தொடர்போடு எழுந்துஅருளி எங்கும் நிறைவாய் உள்ள
       சூக்கத்தை அறிவித்து அறா
மம்மர்கள் எலாம் அறப் புரிதி மெய் அறிவான
       மதர் மழைப் பெருவாரியே
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

3.

   மெய்யறிவான பெரும் மழையும் பெருங்கடலுமானவனே! வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! கம்மாளர் செய்யும் உருவங்களிலும், சுயம்புலிங்கங்களிலும், மகாமந்திரத்திலும், திருக்கயிலை மலையிலும், புற அண்ட வெளியிலும், பெருமயான விந்துவிலும் நாதத்திலும், மனம், வாக்கு, காயங்கள் மூன்றையும் அடக்கிய மெளனயோகிகளின் நினைப்பிலும், உன்னை எப்போதும் மறவாத மெய்யன்பர் பேரவையிலும், நெருப்பு, ஞாயிறு, நிலவு, பசு என்னும் உயிர் ஆகியவற்றிலும் கலந்து நீ இருப்பை என்றாலும், சும்மா இல்லாமல் சும்மா இருக்கும் ஒரு தூயநிலை தன்னில் எனக்குத் தொடர்புடன் எழுந்தருளி, எங்கும் நிறைந்துள்ள சூக்குமத்தை உணர்த்தி அறியாமை எல்லாம் நீங்க அருள்புரிவாயாக!

அயன் அரி வலாரிகள் அடைந்த பவுள்சு எல்லாம்
       அடங்காத உன் பவுள்சிலே
அற்பபாகங்கள் என்று அறைகின்ற மெய்ந்நூல்
       அறிந்து உறுதி கொண்ட தமியேன்
சுயம்பிரகாசத்தேசு அடர்ந்த சததள கமல
       சோபிதச் சரணங்களைத்
துதி பண்ணி ஆளாகலாம் என்று அனாரதம்
       சொல்வது எல்லாம் அறியும் நீ
உயர் கிரிக்கல் என்ன உள்ளமது காட்டினால்
       உய்யும் வகைஉண்டோ இதற்கு
ஒரு ஞாய நீயே பணிக்கில் எற்கு அனுகூலம்
       ஒழியாது உதிக்கும் அன்றோ
வயவான அல்லலில் படியாமல் அடியாரை
       வம்மின் என்று எதிர் அழைப்போய்
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

4.

   வலிமையான துன்பத்தில் வீழாமல் அடியார்களைத் தம்பக்கம் வாருங்கள் என்று எதிர்கொண்டு அழைப்பவனே! வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! பிரமதேவன், திருமால், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் அடைந்த பெருமையெல்லாம் அடங்காத உன் பெருமையில் அற்ப பாகங்கள் தாம் என்று கூறுகின்ற மெய்ந்நூல்களை அறிந்து உறுதிகொண்ட நான், சுயம்பிரகாசமான ஒளிசெறிந்த நூறிதழ்த்தாமரையான அழகிய உன் திருவடிகளைத் துதித்து, அடிமையாகலாம் என்று எப்போதும் சொல்வதெல்லாம் அறியும் நீ, உயர்ந்த மலைக்கல்லைப் போன்ற திருவுளத்தைக் காட்டினால் நான் பிழைக்கும் வகை உண்டோ? இதற்கொரு நியாயம் நீ கொடுத்தால் எனக்கு அனுகூலம் தவறாது தோன்றுமல்லவா!

வெடிதரும் கொடிய குண வீணரொடு பொருது வெகு
       வீரவாதம் புகலவும்
வேசை கொள் உலுத்தர் குவி கூட்டத்திலே கூடி
       மிறைமிஞ்சு பழி கொள்ளவும்
கொடி தரும் பிணிகள் அனுதினமும் என் உடல்தனைக்
       கொள்ளைகொண்டு உண்டுமிகவும்
கூழ் எனும் பொருளின் மேல் வேணவா உற்று உழல்
       குரங்கினும் கேடாகவும்
துடி இடை மடந்தையர்கள் மோகவாரிதியிலே
       தோயவும் இருந்தேன் அலால்
சுவாமி அருள் ஆனந்தம் வேட்டு அகோராத்திரம்
       தொழ நன்கு இருந்தேன் இல்லை
மடி அறு மகா ஞான தேசிகஆனந்த இவை
       மன்னித்து அளாவி அருள்வாய்
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

5.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! அச்சம் தரும் கொடிய குணமுடைய வீணர்களுடன் சண்டையிட்டு அதிக வீர வாதங்கள் கூறவும், வேசையர்களுடன் உறவுகொண்ட உலோபிகள் கூடும் கூட்டத்திலே சேர்ந்து குற்றமிகுந்த பழியைக் கொள்ளவும், கொடிய நோய்கள் தினமும் என் உடலைக்கொண்டு உண்ணவும், மிகவும் செல்வம் என்னும் பொருளின் மீது மிகுந்த ஆசைகொண்டு வருந்தித் திரிகின்ற ‘கூழ்’ என்ற நீர்ம உணவின் மீது மிகுந்த வேட்கை கொண்ட குரங்கினும் கேடாகவும், உடுக்கை போன்ற இடையுடைய மாதர்களின் மோகக் கடலில் மூழ்கவும் இருந்தேனேயல்லால் சுவாமியாகிய நீ அருளும் ஆனந்தத்தை விரும்பிப் பகலிலும் இரவிலும் உன்னைத் தொழ நன்கு இருந்தேனில்லை! கேடற்ற மகாஞான குருவாகிய ஆனந்தமே! இக்குற்றங்களையெல்லாம் மன்னித்து என்னைக் கலந்து அருள்வாயாக!

கத்தியும் கதறியும் பாடியும் தேடியும்
       கண்டபடி தண்டன் இட்டும்
கண்ணீர் வடித்தும் உயிர் நிலை ஒடுக்கியும் என்
       கருத்து முற்றாது பற்றிச்
சித்தம் சலித்து உனை விடாமல் பிடித்தபிடி
       செவ்வனே நிற்க நீதான்
செய்த கருணைக்கு மாறு இன்று எனினும் எனையே
       திருட்டு அற்ற நின் அடிமையாப்
பத்தியொடே கையடைத்தேன் அடைத்தேன் வி
       பாத முதல் அடைதல் அந்தம்
பண்ணு குற்றேவல்களை இட்டு அருள்தி இனி எனது
       பாழ்த்த நெஞ்சால் நாயினேன்
மத்தியில் ஏதேனும் மிறை செயினும் மன்னிப்பது உன்
       மாட்சிமைக்கு உரிய கடனே
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

6.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! கத்தியும் கதறியும் பாடியும் தேடியும் கண்டபடி வணக்கம் செய்தும் கண்ணீரை வடித்தும் பிராணனை ஒடுக்கியும் என் கருத்து முற்றுப்பெறவில்லை என்பதால், மனம் இளைத்து உன்னை விடாமல் பிடித்தபிடியானது, சரியாக நிலைபெற நீதான் செய்த கருணைக்கு வேற கைம்மாறில்லை; என்றாலும், என்னைக் கள்ளமற்ற உனது அடிமையாக முறைப்படி ஒப்படைத்தேன்; உன்னுடைய மேலான திருவடி முதல் திருமுடிவரை நான் செய்யத்தக்க குற்றேவல்களைக் கட்டளையிட்டருள்வாயாக! நாய் போன்ற நான் இனி எனது பாழான மனத்தால் இடையில் ஏதேனும் குற்றம் செய்யினும் என்னை மன்னிப்பது உன் பெருமைக்குரிய கடனாகும்!

பரமன் அருள் மொழி ஆய ரெளரவச் சுருதியின்
       பனிரண்டு சூத்திரத்தைப்
பற்றியுள தென்மொழிச் சிவஞானபோதம் நல்
       பனுவல் பொருட்கு இயைந்த
திருஉந்தியார் நெஞ்சவிடு தூது சிவஞான
       சித்தியார் மெய்விளக்கம்
திருவருட்பயன் உண்மை நெறிவிளக்கம் புகழ்
       சிறந்த இருபாஇருபது
சரத நுவல் பஃறொடை கொடிக்கவி சிவப்பிரகா
       சம்வினா வெண்பா உரன்
தரு களிற்றுப்படி நிராகரணம் எனும் இனிய
       சைவசித்தாந்த நூல்கள்
மரபாய் விளக்கு நெறி தெளிவே மயக்கு அன்று
       மனம் வைத்து அம்முடிவை அருள்வாய்
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

7.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! இறைவன் அருள்மொழி எனப்படும் ரெளரவ ஆகமத்தின் பன்னிரண்டு சூத்திரத்தைப் பற்றியுள்ள, தமிழ்மொழிச் சிவஞான போதமெனும் சிறந்த நூலிலுள்ள பொருளுக்குப் பொருந்தி அமைந்துள்ள திருவுந்தியார், நெஞ்சுவிடுதூது, சிவஞன சித்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், உண்மைநெறி விளக்கம், புகழ்மிக்க இருபாவிருபது. உண்மை கூறும் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, சிவப்பிரகாசம், வினாவெண்பா, அறிவுதரும் திருக்களிற்றுப்படியார், சங்கற்ப நிராகரணம் என்னும் நல்ல சைவ சித்தாந்த நூல்கள் விளக்கும், விளக்கம் தெளிவானதேயாகும். அறிவு மயக்கத்தை இந்நெறி தராது; திருவுளம்பற்றி அம்முடிவை எனக்கு அருள்வாயாக!

முத்தமிழ் காதலார் சீகாழி மாமுனி
       முதுக்குறைவு விஞ்சும் அப்பர்
முருகு கிளர் ஆரூரர் திருவாதவூரார்
       முடங்குகடி ஒன்பதின்மர்
தத்துவத் தெளிவுடைய பட்டினத்து அடிகள் உயர்
       தகைகொண்ட அருணகிரியார்
தாவில் சிவாக்கியர் தவம் பெருக திருமூலர்
       தாயுமானவர் என்பவர்
சுத்தம் உறு வேதாந்த சித்தாந்த சமரச
       சுபாவமாய் அமுத நெறியாய்ச்
சொற்ற உயர் வாக்குகளும் என் சம்மதத்தில் உள
       துணிபுக்கு இயைந்த துணிபே
மத்தம் உடை என்னை நீ அத்துணிபில் மாறாது
       வைத்து அருளவேண்டும் அன்றோ
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

8.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! முத்தமிழ் அன்புடையவரான சீர்காழி மாமுனிவர் திருஞானசம்பந்தர், அகமையில் முதிர்ந்த அறிவு மிகுந்த திருநாவுக்கரசர், அழகு விளங்கும் நம்பியாரூரர், திருவாதவூரர், பிறவி நோயற்ற ஒன்பதின்மர் மெய்ப்பொருளைத் தெளிவாய் அறிந்தவரான பட்டினத்தடிகள், உயர்ந்த பெருமையுடைய அருணகிரிநாதர், குற்றமில்லாத சிவவாக்கியர், தவம் மிகுந்த திருமூலர், தாயுமானவர் என்று கூறப்படும் இந்த அருளாளர் தூய்மையுள்ள வேதாந்த சித்தாந்த சமரசத் தன்மையான அமுத நெறியாகச் சொன்ன உயர்ந்த வாக்குக்கள், என் சம்மதத்திலுள்ள முடிவுக்கு ஏற்ற முடிவேயாகும். மகிழ்வுடைய என்னை நீ அந்த முடிவிலிருந்து என்றும் மாறாது வைத்தருள வேண்டும் அல்லவா!

பங்கயம் போல் நல்ல விழிதான் இருப்பினும்
       பகலவன் வெளிச்சம் இன்றிப்
பார்ப்பது உண்டோ ஒன்றை அன்னணம் பார்க்கும் அது
       பக்கல் எதிர் உற்ற பொருளை
அங்கமொடு நோக்குமே அல்லாது தன் வடிவை
       அறியுமோ தன் தனுஉளே
அறிவாய் இருந்து அம்பர் நோக்கி உள உயிர் தனையும்
       அறியுமோ ஐய இந்தச்
சங்கிரகம் ஆகவே மண்உயிர்கள் தம்மையும்
       தலைவனையும் அறியாது எதிர்
சந்தித்த பொருள் அறியும் ஆனாலும் விழி ஆடி
       தன்முன் அறிந்து கொளல் போல்
மங்காத உன் அருள் கண்ணாடி முன் முதல் கண்
       மறையாது கண்டுகொளலாம்
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

9.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! தாமரைபோல் நல்ல கண்கள் இருந்தாலும் ஒரு பொருளைச் சூரிய வெளிச்சமின்றிப் பார்ப்பதுண்டோ? அவ்வாறு பார்க்கும் கண்கள் அவற்றின் எதிரிலுள்ள பொருளை அவ்வுருவத்துடன் பார்க்கும்; ஆனால், அவ்வாறு பார்க்கும் கண்கள் தன் வடிவத்தை அறிவதுண்டோ? தன் உடம்பினுள் அறிவாய் இருந்து அங்கிருந்து நோக்கும் உயிர் தன்னை அறியுமோ? ஐயனே! எதிரில் காணும் பொருளைத்தான் அறியும்! ஆனாலும், கண்ணாடி முன்னுள்ள பொருளை நாம் அறிவது போல், குறையாத உனது அருளாகிய கண்ணாடி முன் தன்னையும் காணலாம்; தலைவனையும் காணலாம்; கண் மறையாதபடி கண்டு கொள்ளலாம்!

கல்லினும் இரும்பிலும் கடுவயிர வாயிலும்
       காசினியில் நார் உரிக்கக்
கற்றவர்கள் வந்தாலும் என் மனக் கல்லினைக்
       கண்டு பின்இடுவர் அந்தோ
சொல் அரிய நின் சரண பங்கேசம் அக்கலில்
       சுகம் ஆக மலரும் கொலோ
துகள் அற்ற ஒரு கருணை புரியில் நான் உய்யும் வகை
       தோன்றும் இஞ்ஞால வாழ்வு
நில்லாது எனக் கருதி முதல் நூல் உரைக்கும் நெறி
       நிஜம் என்று உணர்ந்து அனுதினம்
நேசித்த வாருணியும் நிஜ அருணை முனிவனும்
       நிரம்ப வந்தித்த பெரிய
வல்லபம் மிருந்த ஓர் சிதாகாசராச என்
       மன வெம்பல் காதி அருளாய்
வளம்ஒழுகு இராமேசர் தளி மேலை வாயிலில்
       வளர் குமர குருநாதனே.

10.

   வளம் நிறைந்த இராமேசர் திருக்கோயிலின் மேற்குத் திருவாயிலில் எழுந்தருளியுள்ள குமர குருநாதனே! கல், இரும்பு, வைரம் முதலியவற்றில் கூட, இவ்வுலகில் நார் உரிக்கக் கற்றவர்கள் வந்தாலும், என் மனமாகிய கல்லைக்கண்டு நார் உரிக்க முடியாமல் பின்வாங்குவர்; அவ்வளவு கடினமானது என்மனம்! சொல்லுதற்கரிய உனது திருவடியான தாமரை என் மனக்கல்லில் சுகமாக மலருமோ? (மலராதன்றோ?) நீ குற்றமற்ற ஒரு கருணை புரிந்தால், நான் உய்யும் வகை தோன்றும்; இவ்வுலக வாழ்வு நிலையானது எனக்கருதி வேதாகமங்கள் உரைக்கும் நெறி உண்மை என்று உணர்ந்து, நாள்தோறும் அன்பு செய்த அகத்தியமாமுனிவரும் மெய்யான அருணகிரிநாத முனிவரும், மிகுதியாக வணங்கிய பெரிய ஆற்றல் மிகுந்த சிதாகாசமாயுள்ள அரசனே! எனது மனவாட்டத்தைப் போக்கியருள்வாயாக.


Home    |    Top   |    Back