Logo


English
சமாதான சங்கீதம்

இராகம் – முகாரி, அடதாளம்.


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்லவி

சஞ்சலம் ஏன் மனமே சிவன்அடித்
தஞ்சம் ஆன பினுமே.


அறுமுகச் சிவனுடைய திருவடிக்கு அடைக்கலம் ஆன பிறகும் ஏ மனமே! கவலை ஏன்?

என் செயலால் ஒன்றும் இல்லைஎன்றே நின்றால்
ஏதம் துயர் இல்லையே - இந்தச்
சூதை அறிகில்லையே. (சஞ்சல)


என்னுடைய செயல்களினால் எந்த ஒரு செயலும் நடப்பதில்லை என்று இருந்தால் கேடும் துன்பமும் இல்லை அல்லவா? இந்த நாடகத்தை ஏ மனமே! நீ அறியவில்லையே?

சரணம்

வானம் இடிந்து தலையில் விழும்படி
வம்பு வந்தாலும் என்னை - அந்தக்
கான மயில் முருகு அய்யன் திருவருள்
கைவிட மாட்டாதே. (சஞ்சல)


ஆகாயமே இடிந்து என் தலைமேல் விழும்படியாக ஏதேனும் பெரிய தீமை வந்தாலும், அப்போதும் என்னை அந்தச் சோலை மயில்மீது வரும் முருகப் பெருமானின் திருவருள் கைவிடாமல் காப்பாற்றும்!

பன்னிரு சூரியர் ஒன்றாய் எரிக்கும்கற்
பாந்தம் வந்தாலும் என்னை - அந்தப்
பன்னிரு கண் சிவன் தண்ணளி நம்மைப்
பராமரித்துக் கொள்ளுமே. (சஞ்சல)


பன்னிரண்டு சூரியர்களும் ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு எரிக்கின்ற கற்ப காலத்தின் முடிவு வந்தாலும் என்ன? அந்தச் சோலை மயில்வாகனன் ஆன முருகப் பெருமானின் குளிர்ந்த அருளானது ஆதரித்துக் கொள்ளும்.

செப்ப ஒனாப் பிழை எத்தனையோ முன்னர்ச்
செய்து இருந்தாலும் என்னை - நம்மை
எப்பொழுதும் புரந்து ஆள் குகப்பிரமத்து
இகல் அருள் முன் இறுமே. (சஞ்சல)


சொல்ல முடியாத அளவு குற்றங்கள் எவ்வளவோ முன்பு செய்திருந்தாலும் என்ன? அவன் அடியாராகிய நம்மை எப்பொழுதும் காத்தருளும் குகப் பிரமத்தின் வலிமையான அருளால் அக்குற்றங்கள் அனைத்தும் ஒழியும்.

நால் ஏழு நாலும் தெளிவாக ஓதி மெய்ஞ்
ஞானம் சொன்னாலும் என்னை - அந்த
மூலப் பிரணவசாமி தயா இன்றி
முன்னேறுவது இல்லையே. (சஞ்சல)


நான்கு ஏழு = இருபத்தெட்டு. மேலும் நான்கு கூட்ட மொத்தம் = 32. இநத் முப்பத்திரண்டு ஞான நூல்களையும் ஐயம் திரிபறக் கற்றுப் பிறருக்கு மெய்யறிவை எடுத்துச் சொன்னாலும், அந்த மூலப்பொருளான ஓங்கார குருநாதன் திருவருள் இன்றி முத்திப்பேற்றை அடையும் முயற்சியில் முன்னேற முடியாது! (28 சிவாகமம் + 4 வேதங்கள் = 32)

காஷாயம் வற்கலை பூண்டு சன்னாசியாய்க்
காடு உறைந்தாலும் என்னை - அந்தக்
காலும் தலையும் கடந்தநிலை தன்னைக்
கண்ட பின்பு அன்றோ கிட்டும். (சஞ்சல)


காவி ஆடை அல்லது மரப்பட்டையினால் ஆன ஆடை அணிந்து துறவியாகிக் காட்டிலே வசித்தாலும் என்ன பயன்? அந்தப் பிராணவாயுவும் ஆகாசமும் ஆகிய இரண்டையும் கடந்த நிலையை அறிந்த பின்பல்லவோ, அந்த முத்திப் பேறு கிடைக்கும்! (பிராணவாயு = சாகாக்கலை; சிதாகாசம் = வேகாத்தலை).

பொன் ஆசை பெண் ஆசை மண் ஆசை மூன்றையும்
போக்கடித்தாலும் என்னை - கேள் உன்
தன ஆணை ஞானம் ஒன்றே தன்னைக் காட்டும்
தலைவனிடம் கூட்டும். (சஞ்சல)


பொன்னின் மீதும், பெண்ணின் மீதும் வைத்துள்ள மூவகை ஆசைகளையும் நீக்கி விட்டாலும் என்ன பயன்? கேட்பாயாக! உன்னுடைய சத்தியால் வழங்கப்படும் அருள் என்னும் ஞானம் ஒன்றே உன்னையும் காட்டும்; பின்பு உன் தலைவனிடம் சேர்க்கும்!

ஒன்பது பத்து ஆறு தத்துவம் எல்லாம்
ஒடுக்கி இருத்தலினும் - குகன்
அன்பு அருள் கொண்டு சின்முத்திரை தன்னில்நில்
ஆனந்தம் கைவல்யமே. (சஞ்சல)


தொண்ணூற்றாறு தத்துவங்கள் எனப்படும் அனைத்தையும் வென்று ஒடுக்கி இருத்தலைக் காட்டிலும், குகப்பெருமானிடம் அன்பு செய்து அவன் அருளுக்குப் பாத்திரமாகி, மெளன ஞான யோகத்தைக் கடைப்பிடித்தால் பேரின்ப முத்தி நிச்சயம்.

முத்தி தரும் குகப்பிரமத்தை வாழ்த்திய
முத்தன் அண்ணாமலையான் - இரு
பத்ம அடிக்கு அன்பு பண்ணிடு தாசர்
பரகதி எய்துவரே. (சஞ்சல)


பேரின்ப முத்தியை அளித்தருளும் குகப்பிரமத்தை வணங்கி முத்திப் பேற்றை அடைந்த அருணகிரிநாதருடைய இரண்டு தாமரைத் திருவடிகளுக்கு, அன்பு செய்திடும் அடியார் மேலான கதியை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

சுபானு ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் (14.4.2003) திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பஞ்சவிம்சதிஅதிகசதபங்கி உரை சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களால் உரை எழுதி முடிக்கப்பெற்றது.

Home    |    Top   |    Back