Logo


English

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

நவரத்தின மீக்கூற்று

சந்தப்பா
தந்தன தானன தந்தன தானத்
தந்தன தானன தானா தானா
தந்தன தானன தந்தன தானத்
தந்தன தானன தானா தானா - தனதானா

இந்து பாகீரதி தங்கிய வேணிக்
குன்ற விலான் அருள் பாலா சீலா
இந்திரையாளன் எனும் திருமாலிற்கு
இன்புள மாமரு மானே தேனே. மயில் ஏறீ

இந்துள மாலை இலங்கிடு மார்புக்
கந்தகிர்பேச விசாகா நாகா
எங்கு நிலாவிடு ஆனந்தர தேசுக்
குண்டல மாமறை மூலா சாலா வடிவேலா

அந்தம் இலாத வசுந்தரை மீதில்
தொந்தரையே தரு தீது ஏறாதே
ஐம்பொறி சேர்மனம் மிஞ்ச விடாது உள்
கொண்டவர் காணும் மகா போதாநூ புரபாதா

அம்புய யோனி அருந்தொழில் பேணிக்
கொண்டவனே மதி நாதா நீதா
அம்பு நிசாசரர் கும்புகள் மாளத்
திண்படை ஏவிய வீரா தீரா எளியேன் நான்

இந்திய வாதைகள் மண்டுதலால் நல்
சிந்தனை வாடுபு கூ கூ கூ கூ
என்று கணீர் விடல் உன் பெரு நீர்மைக்கு
ஒன்றும் அரோ ஐய வா வா வா வா விரைவாயே

எங்கணு மேய துரந்தர மேதைத்
துங்க பராபர வேதா தாதா
என் குருவே அருள் அன்பர் சதாநச்சு
இன் குருவே பர மாயா வீயா நெடுவாழ்வோய்

சந்ததம் நீ என் உள் நின்று கெடா அப்
பந்தம் எலாம் நனி தீ தீ தீ தீ
சம்பு சதாசிவ அம்பரம் ஈ பொன்
செங்கழல் மாமலர் தாதா தாதா சருவேசா

சங்கரி ஆயி திகம்பரி காமர்ச்
சுந்தரி மாலினி சேயா தூயா
தண்டமிழ் மாமுனி கும்பிடு கோலப்
பங்கய பாத பகேசா ஈசா இறையோனே.

1

1. பிறைநிலவும் கங்கையும் தங்கிய சடையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டவன் அருள் பாலனே! சீலனே! திருமகள் கணவன் எனும் திருமாலுக்கு இன்பமுள்ள மருமகனே! தேனே! மயிலேறுபவனே! கடம்பமாலை விளங்கிடும் திருமார்புடைய கந்தனே! கிருபை ஈசனே! விசாகனே! தேவனே! எங்கும் நிலவிடும் நித்திய ஒளியுடையக் குண்டலம் அணிந்தவனே! பெரிய வேதங்களுக்கு மூலமானவனே! மேலானவனே! வடிவேலவனே! அழிவில்லாத மண்ணுலகு மீது, துன்பமே தரும் தீவினை மிகாது ஐம்பொறிகளுடன் சேரும் மனத்தை மீறிவிடாமல், உள்ளே அடக்கியவர் காணுகின்ற மகா ஞானாசிரியனே! சிலம்பணிந்த திருவடியுடையவனே! தாமரையில் பிறந்த பிரமதேவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துதொழில்களையும் செய்தவனே! அறிவுத் தலைவா! நீதிமானே! கரிய அசுரர் கூட்டங்கள் இறக்க வலிய ஆயுதத்தைச் செலுத்திய வீரனே! தீரனே! எளியேனாகிய நான், ஐம்பொறிகளினால் வேதனை மிகுதலால் நல்ல சிந்தனை வாடப் பெற்றுக் கூகூகூகூ என்று கண்ணீர் விடுதல் உன் பெரிய தன்மைக்குப் பொருந்துமோ? ஐயனே! வா வா வா வா, விரைவாயாக! எங்கும் இருக்கும் வல்லவனே! அறிவுமிக்க தூய பராபரனே! வேதமே! தந்தையே! எனது குருவே! அருளுடைய மெய்யன்பர்கள் எப்போதும் விரும்பும் இனிய குருவே! மேலான மாயனே! இறவாது நீண்டு வாழ்வோனே! எப்போதும் நீ என் மனத்துள் இருந்து அழியாத அந்தப் பற்றுக்கள் எல்லாவற்றையும் நன்கு எரித்துவிடு! சம்புவே! சதாசிவனே! வானுலகம் அளிக்கும் அழகிய சிவந்த திருவடியைத் தந்தருள்வாயாக சருவேசா! சங்கரி, அன்னை, திகம்பரி, அழகிய சுந்தரி, காளி, மகனே! தூயனே! குளிந்த தமிழ் மாமுனியான அகத்தியர் கும்பிடும் தாமரை போலும் திருவடியுடையவனே! அழகு, ஈசுரத்தன்மை, புகழ், செல்வம், ஞானம், வீரியம் எனும் ஆறு குணங்களுடைய ஈசனே! இறையவனே!

தனதன தானத் தனத்த தனதன
தனதன தானத் தனத்த தனதன
தனதன தானத் தனத்த தனதன - தனதானா

அறுமுடி மேவத் தரித்த முடிகளொடு
அலர் முகம் ஆறில் சொலிக்கும் ஒளியையும்
அழகு உள காதில் தொடுத்த குழையையும் மணிமார்மேல்

அனலி நிலாவைப் பழித்த பணியையும்
அளிவிழு வாசக் கடப்ப அரியையும்
அயில் வடிவேல் கைப் பரித்த எழிலையும் அரை மீதார்

செறிமணி ஆரச் சரப் பெருமையையும்
விரை கமழ தாளில் தொனிக்கும் அரவொடு
சிகிமிசை நேர்உற்று இருக்கும் இயலையும் ஒருபாலே

சிலைநுதலாள் வச்சிரத்தன் மகளையும்
ஒருபுறம் ஏனல் குறத்தி தனையும் ஓர்
தெருளொடு காணக் கிடைக்கு நெறியினில் நடவாமே

மறு நெறியாளர்க்கு உரித்து மிகஉள
மடர் சொல் உலாசப் பிதற்றல்இடை உழல்
மனம் அதை வீணில் செலுத்தி அனுதின நிலையாம் ஒர்

வழி தெரியாமல் சகத்து வெறி எனும்
இருவினை ஆசைப் பரப்புள் இனும் விழ
வலைதனை வீசிப் பிணிக்க விறல் நமன் உகமாயா

முறியவன் ஆகித் திகைத் திடுதல் அலது
அடியவன் ஆகிப் பிழைத்திடுதல் எனும்
முடிவு அறியாமல் பதைக்கும் எளியனது இடர்தீராய்

முகில் அன கூரல் படைத்த உமையவள்
திரிபுரை காணக் குசத்தி கரம் அமர்
முருக சரோசப் பதத்து விமல எம் இறையோனே.

2

2. (மேகம் போலும் கரிய கூந்தலையும், மணம் வீசும் தனங்களையும் உடைய உமையவளான திரிபுரையின் திருக்கரங்களில் அமரும் முருகனே! தாமரைத் திருவடியுடைய விமலனே! எமது இறைவனே!)

ஆறு சிரசுகளிலும் பொருந்தச் சூடிய ஆறு கிரீடங்களுடன் தாமரை மலர் போலும் திருமுகங்கள் ஆறிலும் சொலிக்கும் ஒளியையும், அழகு உள்ள திருச்செவிகளில் அணிந்த காதணிகளையும், அழகிய திருமார்பில் சூரியனையும் சந்திரனையும் தாழ்வுறச் செய்யும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மணமுள்ள கடப்ப மாலையையும் கூடிய வடிவேலைத் திருக்கையில் பிடித்த அழகினையும், திரு இடையின்மீது கட்டிய நெருங்கிய நவமணிகளாலான அணிகலமான நாணையும் (அரைஞாண்), மணம் வீசும் திருவடியில் ஒலிக்கும் ஓசையுடன் மயில்மீது அமர்ந்திருக்கும் தன்மையினையும், ஒரு பக்கம் வில்போலும் புருவத்தாளான வச்சிராயுதமுடைய இந்திரன் மகளான தெய்வயானையும், ஒரு பக்கம் தினைப் புனங்காத்த குறத்தியான வள்ளியையும் ஒரு தெளிவோடு காணக் கிடைத்தற்குரிய வழியில் செல்லாமல், பிற சமயத்தவர்க்கு உரியதாக மிக உள் அறியாதவர் சொல்லும் மகிழ்வான பிதற்றல் இடையே உழலும் மனத்தை வீணாகச் செலுத்தி, நாள்தோறும் நிலையான ஒரு வழி தெரியாமல், உலகப்பற்று எனும் நல்வினை தீவினை என்னும் ஆசைக் கடலினுள் இன்னும் விழ வலைதனை வீசிக் கட்டுகின்ற வலிய இயமன், உலகில் மாயாத அடிமையாகித் திகைத்திடுதல் அல்லாமல், அடியவனாகி உய்தி பெறுதல் என்னும் முடிவு அறியாமல் மனம் பதைக்கும் எளியேனுடைய துன்பத்தைத் தீர்த்தருள்வாயாக!

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன - தனதானா

நெடிய எழு நரலை கொதிகொளவும் அலைகள்
கட கட கட என நிலமிசை விழவும் அவ
னியும் நபமும் உழளவும் அசுரர் பரிகரி தவிடாயே

நிகழும் அழல் அனலி கிரணம் முழுதுமறை
யநிறையவும் அமரர் சயசய என அவ
நிசிசரர் அலறி உள் உயிர் விடவும் ஒர் அயில் கொடுவீறார்

கொடிய கரி முகவன் வரைமுகன் உரமுள்
அறி முகன் அசுரரின் அரசனொடு அவன் அடர்
குலம் முழுவதும் அற நிமிடம் உள் அமர்தரும் ஒருவீரா

குளிர் அலர் அடவி செறி வரைதனில் உறை கு
றவர் மகள்தனை அருள் விரகொடு மருவிய
குமர குருபர சரவணபவ குக அ னகநாதா

படியிடை அனுதினம் அறநெறி ஒழுகி உன்
இருசரண் நினையவும் அருளது பெறவும் வி
பல நினைவு ஒழியவும் அருள் புரிகிற விதி அறியாயோ

பகவதி மதுபதி விமலை அமலை திரி
புரைபரை புவனை கவுரி குமரி பதுமை
பயிரவி அருமறை தொழுசிவை மரகத அயிராணீ

அடிகள் சனனி பிரயுதரவி ஒளிவிடு
கயிலை மலையில் வளர் சடை அரன் மனம் மகிழ்
அரிய உமை முருகன் எனும் இமையவர் பணி பரமேசா

அகிலம் அதில் அலையும் அவல மனதை உள
அடியன் உனை அறியும் வகையை உணர இனி
அருள்புரி அருள்புரி எழில் உறும் அறுமுக இறையோனே.

3

3. ஏழு பெரிய கடல்களும் கொதிக்கவும், அலைகள் கட கட கட எனும் ஒலியுடன் விரைந்து நிலத்தின் மேல் விழவும், உலகமும் ஆகாயமும் வருந்தவும், அசுரர்களும் குதிரைகளும் யானைகளும் தவிடாகவும், நெருப்பு, சூரியன் ஆகியவற்றினுடைய ஒளி முற்றும் மறையவும், நிறையவும், தேவர்கள் சய சய எனப் போற்றவும், அசுரர்கள் அலறிக்கொண்டு உள்ளே உயிரை விட்டுவிடவும், ஒரு வேற்படையைக் கொண்டு பகை மிகுந்த கொடிய அசுரர்களான யானை முகமுடைய தாரகாசுரன், மலையாகவுள கிரெளஞ்சன், வலிமையுள்ள சிங்கமுகன், அசுரர்களின் அரசனான சூரபன்மன், அவனைச் சேர்ந்த செறிந்த குலம் முழுவதும் ஓழிய, ஒரு நிமிடத்திற்குள் போர் செய்யும் ஒப்பற்ற வீரனே! குளிர்ச்சியும் மலர்களும் நிறைந்த காடு செறிந்த மலையில் வாழும் குறவர்களின் இளைய மகளை அருள் உபாயத்தோடு தழுவிய குமரகுருபரனே! சரவணபவனே! குகனே! கடவுள் தலைவனே! நிலவுலகில் நாள்தோறும் அறவழி நடக்கவும், உன் இரு திருவடிகளை நினையவும், அருளினைப் பெறவும், பயனற்ற நினைவுகள் ஒழியவும், அருள்புரிகின்ற முறையை நீ அறியாயோ? பகவதி, காளி, விமலை, அமலை, திரிபுரை, பரை, புவனை, கவுரி, குமரி, பதுமை, பயிரவி. அரிய வேதங்கள் தொழுகின்ற சிவை, மரகத அயிராணி குமாரக் கடவுளின் தாய், பத்துலட்சம் சூரியர்கள் ஒளிவீசுகின்ற திருக்கயிலை மலையில் எழுந்தருளிய சடையுடைய சிவபெருமானின் மனம் மகிழும் அரிய உமை அம்மையின் முருகன் என்னும் தேவர்கள் வணங்கும் பரமேசனே! உலகில் அலையும் துன்பமான மனத்தைக் கொண்டுள்ள அடியன், உன்னை அறியும் துன்பமான மனத்தைக் கொண்டுள்ள அடியன், உன்னை அறியும் வகையை உணர அழகுறும் அறுமுகனே! இறையோனே! இனி அருள்புரிவாயாக!

தனன தந்தன தானன தந்தன
தனன தந்தன தானன தந்தன
தனனதந்தன தானை தந்தன - தனதானா

உசித அம்பலவாணர் விரும்புப
கவதி அம்பிகை மாலினி மங்கள
உமை பரம்பரை யாமளை சங்கரி சகன்மாதா

ஒளிர் இருங்குய ஆரியை அந்தரி
அமலை குண்டலி தேவி திகம்பரி
ஒசி மருங்கு உடை நாரி மதங்கயின் மருமானே

கசாமுகம் திகழ் சோனித ஐங்கரம்
உடையவன் துணைவா வெகு சுந்தர
கனக குண்டல சீதள சண்முக சகதீசா

ககன உம்பர்கள் மேய அரந்தைகள்
தொலைய வெம்சின மாயவள் மைந்தர்கள்
கடக கங்கணமோடு அவர் வன்கைகள் பொடியாமா

நிசித வெஞ்சர வாளி சொரிந்து ஒரு
நொடியில் வென்றவனே அருள் என்று உனை
நினையும் அன்பின் எநாளும் இறைஞ்சு எனை மகிநோவே

நிதம் மலிந்து இடரே தருகின்றது
இது அகல இன்று ஒரு உபாயம் இடும்படி
நினை வணங்கினனே இது சங்கதி அறியாயோ

பசி எழுந்து அமுது ஆனது அருந்திட
மிகு பயங்கர மோ கொளும் என்று அன
பல அகந்தைகள் யாவும் இருந்து அற அருள்தாராய்

பல குரங்கிகள் போல் ஒளிரும் திரு
முக நறும் குறமாதை மணந்து அருள்
பரவ எங்கணும் ஆக நிறைந்த எம் இறையோனே.

4

4. பொருத்தமான அம்பலவாணர் விரும்புகின்ற பசுவதி, அம்பிகை, மாலினி, மங்களமான உமை, பரம்பரை, யாமளை, சங்கரி, உலகமாதா, ஒளிவீசும் பெரிய இரு தனங்களுடைய ஆரியை, அந்தரி, அமலை, குண்டலி, தேவி, திகம்பரி, வளையும் அரையுடைய நாரி, மதங்கி ஆகிய திருப்பெயர்களுடைய அம்மையின் மகனே! யானைமுகம் விளங்குகின்ற சிவந்த நிறமும் ஐந்து கரங்களும் உடையவன் தம்பியே! மிகுந்த அழகனே! பொற்குண்டலம் அணிந்தவனே! குளிர்ந்த ஆறுமுகனே! உலகக் கடவுளே! வானுலகத் தேவர் பொருந்திய துன்பங்கள் தொலைய வெஞ்சினம் உடைய மாயை என்னும் அரக்கியின் மைந்தர்களின் துன்பங்கள், கங்கணங்கள் உடன் அவர்களுடைய வலிய கைகளும் பொடியாகுமாறு, கூர்மையான கொடிய அம்புகளை எய்து ஒரு நொடிப்பொழுதில் வென்றவனே எனக்கு அருள்புரிவாயாக! என்று உனை நினைக்கும் அன்பில் எந்த நாளும் துதிக்கும் என்னை, உலகத் துன்பம் தினம் மிகுகின்றது. இஃது அகலுவதற்கு இன்று ஒரு வழியை அருளும்படி உன்னை வணங்கினேன்; இச்செய்தியை நீ அறியாயோ? பசி உண்டாகி அமுதை உண்டிட மிக்க அச்சமே கொள்ளும் என்றன் பல செருக்குகள் யாவும் ஓடி ஒழிய அருள் தாராய்! பல சந்திரர்கள் போல் ஒளிவீசும் திருமுகமுடைய மணமிக்க குறப் பெண்ணைத் திருமணம் புரிந்து அருள் பரவ எவ்விடமும் நிறைந்துள்ள எம் இறையோனே!

தனனதன தனனதன தனதந்த தத்தன
தனைதன தனனதன தனதந்த தந்தன
தனனதன தனனதன தனதந்த தந்தனன - தனதானா

கரியகுழல் மிசை அலர்கள் மிகவும் தரித்து உபய
செவிகள் இடை நறிய செவி மலர் நன்கு அமர்த்தி அளி
கம் அதிம ஒளி பெருகு சிறு திலகங்கள் இட்டு முகை உரம்மேலே

கனகனக பணி அணிகள் எவையும் கிடக்க இரு
கரம் மருவு வளைகள் கல கல என்று ஒலிக்க வரி
கலசம் எயிறு உயர் சிகரிகளை வென்று முட்டும் இரு முகைவாரார்

சரிகைகளின் அரிகள் பளபள என்று இமைக்க வரை
தனில் கலை இரதன மணி கிரணம் தரச் சிறிய
சரணமிசை பரிபுரபரியகம் சொலிக்க நெடு மறுகூடே

சபர இருவிழி அசி அயிலும் கதிக்க நகை
களின் மறுவில் அரி நறிய தரளம் பிறக்கவன
சமலர் முகம் அதில் இனிய குழகம் குதிக்க இடை துடிபோலே

தெரிய இள அனம் அனைய நடைகொண்டு தக்கபயில்
அதுவிளைய உலவு கையில் மயல் தந்து எவர்க்கும் அனு
தினம் அணையும் முறைமை உழியுள செம்பொன் அத்தனையும் வருமாறே

செயும் வகை பல்பணி அளவுஇல் விசனம் கொடுக்க உள
பழி மனதைஉடை மகளிர் சுகம் நஞ்சு எனக் கருது
தெளிவை இனி நினது அடிமை பெற உன் திருக்கருணை அதுதாராய்

அரிய திருஅரி விதியும் அமரம் தொடுத்த பொழுது
அரை நொடியில் அருணகிரி வடிவு ஒன்று எடுத்த சடை
அரண் உடைய இடமருவும் உமை சங்கரிக்கு இனிய முருகோனே

அசுரர் உரம் நெறிவுபட நடனம் செய் நற்பசிய
தழை ஞமலி தனில் இவரும் அகளங்க சித்தன் என
அடிபுகழும் அடியவரை உளம் நின்று அளிக்கும் அருள் இறையோனே.

5

5. கருங்கூந்தலின் மேல் மலர்கள் மிகுதியாகத் தரித்து, இரு காதுகளிலும் மணமுடைய செவியில் அணியத்தக்க மலர்களை நன்றாக இருக்கச் செய்து, நெற்றியில் ஒளியை மிகுதியாக வீசும் சிறு திலகங்கள் இட்டுத் தனம், மார்பு ஆகியவற்றின் மேல் கனமான பொன் அணிகலன்கள் எல்லாம் கிடைக்க, இரு கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, ஒளியுடைய தனங்கள் நீண்ட தந்தங்களுடைய மலைபோன்ற யானைகளை வென்று முட்டும், அந்த இரு தனங்களில் கட்டிய கச்சில் பொருந்திய சரிகைகளின் ஒளிகள் பள பள என்று இமைக்க, இடையில் அரைப்பட்டிகையில் கிண்கிணி மணி ஒலியைத் தரச் சிறிய அடிகளில் பாத கிங்கிணி, காற்கரி சொலிக்க நெடு வீதி நடுவே, கெண்டை மீன் போன்ற இரு கண்களும் படைக்கருவியான வேலினும் விரையப் புல்வகைகளில் குற்றமில்லாத ஒளியுடைய நல்ல முத்துக்கள் தோன்றத் தாமரை மலர் போலும் முகத்தில் இனிய அழகு தோன்ற, இடையானது உடுக்கைபோன்று தெரிய, இளம் அன்னம் போன்று நடை கொண்டு தக்க சொல் தோன்றும்படி உலவுகையில் மயக்கம் தந்து, எவர்க்கும் நாள்தோறும் சேரும் முறைமையில் சேர்ந்த காமுகரிடத்துள்ள செம்பொன் அத்தனையும் தம்மிடம் வரும்படியாகச் செய்யும் வகை பல செயல்கள், அளவில்லாத துன்பத்தைக் கொடுக்கவுள்ளதாகிய பழிக்கத் தக்க மனத்தையுடைய மகளிர் இன்பத்தை, நஞ்சு போல் கருதும் அறிவை, இனி உனது அடிமையாகிய யான் பெற உன் திருவருள் தாராய்!

தாந்த தந்தன தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன - தனதானா

நீண்ட சம்ப மகேந்திரன்களை
ஓங்கும் அங்கம் எலாம் பகம் பெற
நேர்ந்ததும் துணிசான்ற சந்திரன் ஒளிதானே

நீங்கி அஞ்சனமாம் கரும் கறை
சார்ந்ததும் கடற் சூழ்ந்த லங்கையில்
நீண்ட சண்டையின் ஆண்ட கண்டகன் அடியோடே

மாண்டதும் கபி வேந்தன் நெஞ்சில்எ
லோன் குலன் கணை பாய்ந்ததும் குண
வாஞ்சை மிஞ்சிய பாண்டு மைந்தர்கள் பகைராசா

மாய்ந்ததும் தவர் நோன்ற செந்தவம்
ஒய்ந்ததும் கடியாம் குழம்புகள்
தோய்ந்த கொங்கையர் வீம்பின் என்று இருள் மலநூறுஒர்

ஆண்டவன் கழல் சேர்ந்த தொண்டர்கள்
தேர்ந்து அறைந்ததை ஓர்ந்து கொண்ட என்
ஆந்தரங்க நிஜ அம்புஜம் தனில் வளர்தேவே

ஆழ்ந்த தண்கடல் போன்ற கங்கையில்
நீந்தி வந்து அகிலாண்டம் எங்கணும்
ஆண்டு அருந்தவர் வேண்டு சங்கரி உடை ஏர்வார்

பூண்ட தின் கதை மாந்தி இந்துளம்
வேய்ந்து புங்கவர் வேண்டல் கண்டு ஒளிர்
பூங்கரம் தனில் ஞாங்கர் கொண்டு அடு களன்ஊடே

போந்து எதிர்ந்தவர் சாய்ந்து இறும்படிக்
காய்ந்த கந்த சுரேந்திர நின்கழல்
பூண்பதம் தர வேண்டும் எம் குல இறையோனே.

6

6. பெரிய வச்சிராயுதம் ஏந்திய மகேந்திரன் அழகு விளங்கும் உடம்பு முழுவதும் பெண்குறியைப் பெற நேர்ந்ததும், சந்திரனது ஒளியானது நீங்கி மைபோன்ற கரிய கறையைச் சார்ந்ததும், கடல் சூழ்ந்த இலங்கையில் நீண்ட காலம் போர் செய்து ஆண்ட அசுரனான இராவணன் அடியோடு இறந்ததும், குரங்கு அரசனான வாலியின் மார்பில் சூரிய குலத்தவனான இராமனது அம்பு பாய்ந்ததும், நற்குணமான அன்பு மிகுந்த பஞ்சபாண்டவர்கள் ஆகிய பாண்டுவின் புதல்வர்களின் பகை அரசனான துரியோதனன் இறந்ததும், தவத்தோர் செய்த செம்மையான தவ ஒழுக்கம் ஒய்ந்ததும், பின்பு, மணக் குழம்புகள் தோய்ந்த மாதர் கொங்கை மோகத்தில் வீழ்வர் என்று அவருடைய இருள் மலம் எனும் ஆணவமலத்தை அழிக்கும் ஓர் ஆண்டவனுடைய திருவடிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆராய்ந்து கூறிய கருத்துகளை, அறிந்துகொண்ட எனது மனம் எனும் உள் இடமாகிய உண்மைத் தாமரை மலர் மேல் எழுந்தருளிய தேவனே! ஆழமான குளிர்ந்த கடல் போன்ற கங்கையில் நீந்தி வந்து, அகில அண்டங்கள் எங்கும் ஆட்சிபுரிந்து அருந்தவம் உடையவர் துதிக்கின்ற சங்ககரியுடைய அழகிய கச்சணிந்த தனங்களில் பாலைப் பருகிக்கடம்ப மாலை அணிந்து, தேவர்கள் வேண்டுதல் கண்டு, ஒளி வீசும் மலர்க் கைகளில் வேற்படை தாங்கிப் போர்க்களத்திடைச் சென்று, எதிர்த்தவர்கள் மாண்டு ஒழியும்படிக் கோபித்த கந்தனே! என் குலக்கடவுளே! உன்னுடைய கழல் பூண்ட திருவடிகளை எனக்குத் தரவேண்டும்.

தானன தானத் தனத்த தந்தன
தானன தானத் தனத்த தந்தன
தானன தானத் தனத்த தந்தன - தனதானா

பூவையர் மோடு உற்று இருக்கவும் தடம்
ஆகிய தாலத்து உதிக்கவும் பல
பூடணம் மேலில் தரிக்கவும் தவழ் சிலபோதே

போளி உணாவைப் புசிக்கவும் துகள்
ஏறிடுதூசைத் தொடுக்கவும் சிறு
போதகர் ஒடு எக்களிக்கவும் புவி நடைகூடா

மேவிய சோரித் துவக்கு எலும்பு உள
பூதியம் ஓடிப் பெருக்கவும் செழு
மேதைகள் ஊறித் தடிக்கவும் பொது மகள் வீடு ஆம்

வீதி இராவில் கிடக்கவும் தெளி
வாளிகள் காணில் சிரிக்கவும் பொரு
வேள் சரம் மார்பைத் துளைக்கவும் பெரு மயல்ஆமா

ஆவலின் மாதர்க் கலக்கவும் பிதிர்
தேடிய காசைத் தொலைக்கவும் குடி
யார் பலர் ஏசிப் பழிக்கவும் பினர் உரியோர்தாம்

ஆடவள் தேடித் பிணிக்கவும் சமு
சாரம் உள் ஆடித் திகைக்கவும் படர்
ஆமயம் மீறிக் குறைக்கவும் கடை சியில் ஏமா

தீவிரம் ஆகக் கணிச்சி அந்தகன்
நாதனை நாடிப் பிடிக்கவும் புதை
தீமுது கானில் படுக்கவும் கரு நுழையாமே

சீதள நாரைத் துதிக்கவும் சுக
வாரியை வாரிக் குடிக்கவும் புகழ்
சேர் அருள்தா சிற்சபைக் கடம்ப எம் இறையோனே.

7

7.மாதர்களின் வயிற்றுள் கருவாக இருக்கவும் பின்பு பெரிய உலகத்தில் வந்து பிறக்கவும், பல அணிகலன்களை உடம்பில் அணிந்துகொள்ளவும் ஆக வளர்ந்து தவழ்கின்ற பருவத்தில் சில பொழுதுகளில் போளி போன்ற உணவைப் புசிக்கவும், சிறு இளையவர்களுடன் குலாவியிருக்கவும், மண்ணுலகில் வாழுதற்கு அமைந்த கூடாப்பொருந்திய இரத்தம், தோல், எழும்பு ஆகியவை அமைந்த உடம்பு விரைவாகப் பெருக்கவும், செழுமையான தசை மிகுதியாக வளர்ந்து தடிக்கவும், விலைமாதர்களுடைய வீடுகளான வீதிகளில் இரவில் கிடக்கவும், அறிவாளிகள் கண்டால் சிரிக்கவும், போர் செய்யும் மன்மதவேளின் மலர் அம்புகள் மார்பினைத் துளைக்கவும், மயக்கம் மிகுதியான பெரிய ஆவலில் பெண்களைக் கூடவும், முன்னோர்கள் தேடிய செல்வத்தைத் தொலைக்கவும், குடிகள் பலரும் ஏசிப் பழிக்கவும், பின்னர் உரியவர்கள் தாம் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்விக்கவும், அதனால் சமுசாரத்தில் வீழ்ந்து கரையேற முடியாமல் திகைக்கவும், துன்பந்தரும் நோய்கள் மிகுந்து உடல் நலத்தையும் ஆயுளையும் குறைக்கவும், கடைசியிலே, மிக்க தீவிரமாகக் கோடரி ஏந்தி இயமன் உயிரைப் பிடிக்கவும் மறைவிடமான சுடுகாட்டுள் வைக்கவும் வழி செய்யும் கருவில் நுழையாமல், குளிர்ந்த அன்பானவரைத் துதிக்கவும், இன்பக்கடலை வாரிக் குடிக்கவும், சிற்சபைக் கடம்பனே! எனது இறையோனே, புகழ் சேர்ந்த அருளைத் தந்தருள்வாயாக!

தத்தத் தத்தன தத்தன தந்தன
தத்தத் தத்தன தத்தன தந்தன
தத்தத் தத்தன தத்தன தந்தன - தனதானா

தட்டச் சக்கிரியைப் புனை சங்கரர்
பக்கத்து உற்று இணை அற்று ஒளிர் அம்பிகை
சத்துச் சத்தி பருப்பதி தந்த நன் முருகோனே

தத்தித் தத்திதி தத்தத திங்கண
தத்தித் தத்திதி தத்தத திங்கண
தத்தித் தத்திதி தத்தன என்று எழில் நடமேதான்

எட்டுத் திக்கும் நடித்த சிகண்டியில்
எக்கிப் புத்து அமுதக் கனி என்பது
தொட்டுப் பொற்புவி சுற்றிய சம்ப்ரம சகதீசா

எற்கைச் சத்தி பிடித்து அசுரன்கக
னத்துக் குப்பைகள் முற்றும் ஒழிந்திட
இட்டப் பத்தர் தழைத்திட வந்த சண் முகதேவே

சுட்டுக் கொட்டை பரப்பி இலங்கை ஒர்
பத்துச் சித்ர முடித்தலையன் திரள்
சுற்றத்தைக் கணைவிட்டு அடல் கொண்டவன் மருமானே

துக்கத்தைத் தெறு பொற்கிரி செந்தில்
வளத்தைப் பெற்று உயர் பொற்புறு குன்றுகள்
சொர்க்கத்துக்கண் அனைத்தும் இருந்து உள குருநாதா

பட்டுப் பட்டு முளைத்திடும் அங்கம் எ
டுத்துப் பெற்ற பலத்தினை அண்டர் வி
பத்துச் செற்று உளசித்தம் அறிந்து அது இலையோம்

பக்கத்தைப் பெரும் இச்சை மலிந்த எ
னைச் சுத்தத்து உழி வைத்து அருள் அன்பர்கள்
பத்திக்குட்படு பெற்றிகொள் எண்குண இறையோனே.

8

8. நச்சுப்பல்லுடைய பாம்பை அணிந்துள்ள சங்கரனின் இடப்பாகத்தில் உறைந்து இணையில்லாமல் ஒளிவீசும் அம்பிகை சத்தான சிவனும் சத்தியான பார்வதியும் பெற்ற சிறந்த முருகோனே! தத்தித் தத்திதி தத்தத திங்கண தத்தித் தத்திதி தத்தன என்று அழகிய கூத்தினை எட்டுத் திசையிலும் செய்த மயில் வாகனத்தைச் செலுத்திப் புதிய அமுதமயமான பழத்தைப் பெறுதற்பொருட்டு, அழகிய அலகினைச் சுற்றி வந்த தீவிரமான சகதீசனே! ஒளி பொருந்திய திருக்கையில் வேற்படையைப் பிடித்து, அசுரனுடைய வானுலகச் செல்வங்கள் முழுவதும் ஒழிந்திடவும், தமக்கு விருப்பமான பக்தர் வளமுடன் வாழ வந்த சண்முகக் கடவுளே! சுட்டுக் கொட்டை பரப்பி இலங்கையில் வேலைப் பாடமைந்த பத்து முடியணிந்த தலைகளுடைய இராவணனுடைய திரளான சுற்றத்தை அம்பெய்து வெற்றிகொண்ட இராமபிரானின் மருமகனே! துக்கத்தை ஒழிக்கும் அழகிய மலையான திருச்செந்திலிலும், வளத்தைப் பெற்று உயர்ந்து விளங்கும் அழகிய குன்றுகளிலும் சொர்க்கலோகத்திலும் ஆகிய அனைத்து இடங்களிலும் இருந்துள்ள குருநாதனே! செத்துச் செத்துப் பிறக்கும் உடம்பினைப் பெற்ற பயனைத் தேவர்களின் துன்பம் மிகுந்த மனத்தின் மூலம் நீ அறியவில்லையோ? அன்பர்களின் பக்திக்கு வயப்படும் தன்மை கொண்ட எண்குணக் கடவுளே! உன் அன்பைப் பெறும் விருப்பம் மிகுந்த என்னைச் சுத்தத்துள் வைத்தருள்வாயாக!

தனதன தானந் தனதன தனதன
தனதன தானந் தனதன தனதன
தனதன தானந் தனதன தனதன - தனதானா

நவமணி ஆர் சந்திர அரி புனை பதம்
உடைய குகா சுந்தர உரம் அதில் அதி
நறை சொரி நீபம் புரள் சுரபதி எனும் வடிவேலா

நறும் அமுதோர் சந்ததம் அடி பணி முதல்
அவ மறை யாவும் துதிபணும் ஒருபதி
நடன உலாசம் பெருகிடும் அவை அமர் நடநாதா

எவர் தொழுதானும் திருவருள் தரும் இக
பர குருவே குன்றவர் மகள் மகிழ்வுற
எழில் மயில் ஏறும் சரவணபவசிவ சுகதேவா

எனை ஒரு போதும் பிரிவு அற இருளென
உறை மலம் யாவும் கெடுகெடு கெடுகெடு
இகல் இடர் யாவும் சுடுசுடு சுடுசுடு மலைவாமா

கவலைகள் யாவும் பொடிபொடி பொடிபொடி
தொடர் பவம் யாவும் தடுதடு தடுதடு
கமழ் பதம் நாளும் கொடுகொடு கொடுகொடு பரிவாலே

கனைகடல் சூழும் புவியில் உன் அடியவர்
இருதயம் மேவும் பரம சின்மய மிகு
கடிமணம் நாறும் குழல்மலைமகள் உமை முதல்மாதா

சிவை அணி ஆர் சங்கரி பயிரவி திரி
புரை பரை மீனம் கணி மரகத வலி
சிலை நுதலார் அம்பிகை உடை ஒருதிரு முருகோனே

திசைமுகனார் தம் கெருவம் அழிய உயர்
பிரணவம் ஆகும் பொருளை வினவு அனக
சிறுமை இலா இன்பு அருணகிரி புகழும் இறையோனே.

9

9. நவரத்தினங்கள் பொருந்திய ஒளி வீசும் சிலம்பினை அணியும் திருவடிகளையுடைய குகனே! அழகனே! திருமார்பில் மிக்க தேன் சொரியும் கடப்பமாலை புரளும் தேவர்கள் தலைவன் எனும் வடிவேலனே! இன்சுவைமிக்க அமுதத்தை உண்ணும் தேவர்கள் எக்காலத்தும் உன் திருவடியை வணங்கும் முதல்வனே! வேதங்கள் எல்லாம் துதி செய்யும் ஒரு தலைவனே! திருக்கூத்து ஆனந்தம் மிகுந்திடும் பொற்சபையில் எழுந்தருளியுள்ள இம்மண்ணுலகத்திற்கும் அந்த விண்ணுலகத்திற்கும் குருவே! குன்றில் வாழும் குறவர் மகள் மகிழ்ச்சி அடைய அழகிய மயில்வாகனத்தில் ஏறும் சரவணபவனே! சிவனே! சுகதேவனே! என்னை ஒரு பொழுதும் பிரியாமல் இருள் போன்ற ஆணவமலத்தையும் பிறமலத்தையும் கெடுப்பாயாக! கெடுப்பாயாக! பகைத்துன்பம் எரித்தருள்வாயாக! எரித்தருள்வாயாக! மயக்கத்தைச் செய்யும் பெரும் கவலைகள் யாவற்றையும் பொடிப்பொடியாக்கி யருள்வாயாக! தொடர்ந்து வருகின்ற பிறப்புக்கள் எல்லாவற்றையும் தடுத்தருள்வாயாக! தடுத்தருள்வாயாக! மணம் கமழும் உன் திருவடிகளை எனக்குக் கொடுத்தருள்வாயாக! கொடுத்தருள்வாயாக! ஒலிக்கும் கடல் சூழ்ந்த மண்ணுலகில் அன்பினால் உன்னுடைய அடியார்களின் இருதயத்தில் எழுந்தருளும் பரமனே! சின்மயனே! மிக்க மணம் வீசும் கூந்தலையுடைய மலைமகளான உமையம்மை முதல் அன்னை, சிவை, அழகுநிறை சங்கரி, பயிரவி, திரிபுரை, பரை, அங்கயற்கண்ணி, மரகதவல்லி, விற்போலும் நுதலுடைய அம்பிகையுடைய ஒப்பற்ற திருமுருகோனே! நான்முகனாரின் கருவம் அழியும்படி உயர்ந்த பிரணவத்தின் பொருளைக் கேட்ட தூய கடவுளே! துன்பம் இல்லாத இன்பத்தை நுகரும் அருணகிரிநாதர் புகழும் இறையோனே!


Home    |    Top   |    Back