Logo


English

பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றத்தின் சமுதாயச் சேவைகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றத்தின் சார்பாக பல்வேறு விதமான பொது நல சேவைகள் செய்யப்பட்டு வருவதற்கு இறையருள் கூட்டுவித்தற்க்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

இம் மன்றத்தின் மூலம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் பாடல்களை கற்பதற்கும், கேட்பதற்கும், இந்த தமிழ் மண்ணில் உள்ள தமிழ்ர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றோம். இந்த நோக்கத்தை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த வலைபூண் மூலம் பரவச் செய்வது மிக முக்கிய சேவையாக செய்வதற்கு இறையருள் கூட்டுவித்ததற்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

பலர் தங்கள் துயரங்களை தீர்த்துக் கொள்வதற்கு பல வழிகளை கையாளுக்கின்றனர். இதற்காக, பரிகாரங்கள் செய்து தம் துயர்களை துடைத்துக் கொள்வதற்கு பல ஆயிரக் கணக்கான செல்வத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த பரிகாரங்களின் மூலம் பயன் அடைந்தோம் என்று நினைப்பவர்கள் ஒரு சிலரே. உதாரணமாக சிலருக்கு கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்துக் கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கின்றனர். ஆனால் அந்த கண்ணாடியை அணியாவிட்டால் அவர்களால் எந்த ஒரு வேலையையும் செய்ய இயலாது. சில நேரங்களில் மட்டும் கண்ணாடி அணியாமல் சில சொந்த வேலைச் செய்பவர்கள் சிலர். இது போன்றுதான் பரிகாரங்களும் செயல்படுகின்றன. பரிகாரம் செய்துவிட்டதால் அந்த குறை முழுவதுமாக நீங்கிவிட்டதாக கூறிவிடமுடியாது.

மெய்யடியார்கள் தங்கள் துயரங்களை தீர்த்துக் கொள்வதற்கு, எங்களுக்கு தெரிந்தும், அறிந்தும், நடந்த உண்மை நிகழ்ச்சிகளுக்கு ஓரே வழி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் நமக்காக அருளிய பாடல்கள் ஆகும். இந்த பாடல்கள் அனைத்தும் மகா மந்திரங்கள் ஆகும். இந்த பாடல்களை நாம் மனம் உருகி பாடினால் நிச்சயம் அந்த துயர் நம்மை விட்டு ஓடிவிடும் என்பது எங்களது கருத்தாகும். இதற்காக நாம் செலவிடப்படுவது நம்முடைய நேரம் மட்டும் தான்.

சுவாமிகளின் திருக்கரத்தால் தீட்டப்பட்ட முப்பத்திரண்டு வசன நூல்களுள் பெரும்பாலானவை இப்பொழுது கிடைப்பதற்கு அரிதாகி விட்டன. கிடைக்கும் ஒரு சில நூல்களையாவது பழுதறப் பயின்று பக்குவம் அடைந்து பரமனின் அருளைப் பெற உளம் கொண்டு உழைப்பது அடியார்களின் கடமையாகும்.

“பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத் திருத்து”

என, அருணகிரிப் பெருமான் உரைத்தருள்வது போன்று நன்னெறி நின்று நலம்பல பெற்று வாழ்வதற்கு சுவாமிகளின் வசன நூல்களையும் ஒருமுறை அன்றி, இருமுறை அன்றிப் பலநூறு முறையும் அவசியம் படித்துணர வேண்டும். இந்த நூல்களுள் ஸ்ரீ சுப்பிரமணிய வியாசம் என்பது தன்னிகரற்ற தமிழ் வேதமாகும். இந்நூலை ஒருமுறை பயின்றாலும், பயில்பவர் உள்ளத்தே உண்மை ஒளி பெருக்கெடுக்கும்; அரிய பெரிய தத்துவ நுட்பங்கள், விரிந்து மணம்பரப்பும் மலர்க் கூட்டங்களாக அன்னாரின் உள்ளத்தில் உருவெடுக்கும்; குகநெறியில் திடமாகக் காலூன்றி நிற்கும் உறுதிப்பாடு அன்னாரின் இதயத்தே வச்சிரத் தூண் என விளங்கி நிற்கும்; ஊழ்வலியால் நேர உள்ள உபத்திரங்களையும் தூசென உதறித் தள்ள வல்ல மனோபலம் அன்னார்க்கு வழுவற வாய்த்து நிற்கும். சுவாமிகளின் திருப்பாடல்களை நன்கு உணர்ந்து கொள்ளக் கூடிய ஞானபலம் அன்னார்க்கு நவையற வாய்த்து நிற்கும்.

இந்த மன்றத்தின் மூலம் கோயில்களில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் பாடல்களை பாடுவது. அடியார்களின் துயர் எது என்று தெரிந்தால் சுவாமிகள் அருளிய பாடல்களை அவர்களுக்கு எடுத்துரைப்பது. பள்ளிக் கூடங்களில் இறைவணக்கமாக சுவாமிகளின் பாடல்களை குழைந்தைகளுக்கு போதிப்பது. தமிழில் முதல் மார்க்கு வாங்கும் மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது, முடிந்தால் மருத்துவ முகாம் நடத்துவது போன்றவையாகும்.

மேலும் பல்வேறு சமுதாய நலப்பணிகள் செய்வதற்கு குருவருள் கூட்டுவிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் ஆகும்.