முன்னுரை
இத் திருப்பதிகம் முதல் மண்டலத்தைச் சார்ந்ததாகும். இதில் முப்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் ஒரு மலராகக் கொண்டு முப்பது மலர்களால் ஒரு பாமாலை தொடுத்து அதற்குச் சிவலோக சுந்தரமாலை எனப் பெயர் சூட்டியுள்ளார்கள். சிவலோக சுந்தரனே என்று ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் விளித்துள்ளார்கள். சிவலோகத்தில் மிக்க அழகுடையவன் முருகனே! ஆதலால் அழகு என்னும் பொருள்தரும் சொல்லான சுந்தரம் என்பதையே முருகன் பெயராக வைத்துச் சுந்தரனே என்று அழைக்கிறார்கள். அந்தச் சுந்தரனுக்குச் சூட்டப்பெற்ற பாமாலை ஆதலால் சிவலோக சுந்தரமாலை என இத்திருப்திகத்திற்கு பெயர் சூட்டியுள்ளார்கள்.
இந்நூலில் சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்தும் அந்த பாடல்களுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
சிவலோக சுந்தரனே! ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்னும் நவகோள்களும் ஒளியுடைய நாளில் உள்ள பலவகையான காலங்களும் (இராகு, எமகண்டம், குளிகை போன்றவை) பிறவி என்னும் பெரிய துன்பத்தை ஒழிக்கும் உன் அடியார்களக்குத் தேவையான நன்மைகளைச் செய்யுமன்றி ஒருபோதும் துன்பத்தைச் செய்யமாட்டா. அறிவிலார்தாம் கோள்களினாலும் நாட்களில் வரும் கெட்ட காலங்களினாலும் தமக்குத் துன்பம் வாராதிருக்கப் பரிகாரம் செய்வார்கள். நாளும், கோளும் நல்லவர்களை என் செயும்?
என் உள்ளத்தின் செயலைக்கவரும் சிவலோக சுந்தரனே! பக்தர்களுக்கும், யோகிகளுக்கும் மேலான சிவஞானிகட்கும் பொய் இல்லாத மெய் அருளாகிய செல்வத்தை அளித்து ஆட்கொள்ளும்இறைவன் நீ. பைத்தியமான அடியேனை ஆட்கொள்ளாமல் சிறுமையில் வைப்பாயோ?
சிவலோக சுந்தரனே! எத்தனையோ வகை தெய்வங்களும் எத்தனையோ வகையான செய்யப்படுகின்ற வினைகளும் எத்தனையோ வகையான சமயங்களும் இவ்வுலகில் உள்ளன. என்னை அத்தனையிலும் விருப்பம் கொள்ளச் செய்யாமல் உன் அருளையே நாடும் வழியில் செல்லுமாறு செய்தனை. அந்த அழகிய கருணையை நான் என்றும் மறக்கமாட்டேன்.
சிவலோக சுந்தரனே! கல், இரும்பு, ஆகியவற்றைக் காட்டிலும் வலிமையும் கடினமுமான வைரம் ஆன என் மனத்தை நன்மை தரும் திருவருளை விரும்பும்படி அடக்கிவிட்ட உன் கருணையினால் பகலும் இரவும் என் இரண்டு கண்களும் நீரைப்பொழிய உள்ள, பேய் போன்ற இழிந்தவனாகிய நான் இறக்கும் காலம் வரை உன்னை மறக்கமாட்டேன்.
அடியார்தம் பாவங்கள் ஒழிய அருள் எனும் தீயை மூட்டுகின்ற சிவலோக சுந்தரனே! மனம் மொழி மெய் ஆகிய மூன்றாலும் செய்த தீமையான பாவத்தால் அருவருப்பான மலத்தையே உண்ணும் இழிந்த நாய்க்கும் கேடான என்னை நெருங்கி வந்த பெருங்கருணை உபகாரத்தை நான் மறக்கத் தான் தகுமோ?
உறுதியான பாவநாசம் என்னும் சங்கார கிருத்தியனே! சிவலோக சுந்தரனே! மனைவி, மக்கள், ஆசை என்கின்ற பேய்கள் பிடித்து இவ்வுலகில் ஆட்டிவைக்காமல் என்னை இவ்வாசைகளில் இருந்து பிரிக்க என் அகத்தில் எழுந்தருளிப் பகல் இரவாகத் தொண்டர்கள் புகழ்ந்துரைக்கும் உன் பெருமையைச் சொல்ல வைத்த உன்னை நான் மறக்கமாட்டேன்.
அழகு விளங்கும் ஒளி உடையவனே, சிவலோக சுந்தரனே! மின்னலைப் போன்று தோன்றி மறையும் இவ்வுலக ஆசை எனப்படும் பொய்யான வாழ்வை நினைத்து உன்னை நினைக்காமல் இங்கு நல்ல விதியை இழந்த நான் வாழும் பொருட்டுத் திருவுளம் கொண்டு இந்நாளில் உன் பக்கம் என்னை இழுத்தற்குக் கொண்ட அன்பினை நான் மறக்கமாட்டேன்.
உறியை அறுக்கும் அருட்செல்வம் மிகுந்த சிவலோக சுந்தரனே! மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் என்னும் பாவி எக்காலத்தும் இருப்பதற்கு தூக்காகப் பயன்பட்ட என்னை விடுதலை செய்து அடிமை கொண்ட அன்பினை நான் விலகிச் செல்லப் பார்பபேனோ? திருக்கண்ணோக்கம் செய்தருள்வாயாக!.
திண்மையான கணங்கள் வணங்கும் சிவலோக சுந்தரனே! எண்ணுதற்கு அரிய குற்றமுடைய நாய்போன்ற அற்பனாகிய என்னை ஒன்றும் செய்யமாட்டா. என்னை நெருங்கி வரும் அன்பு உருவம் எக்காலத்தும் நிலையாக உள்ள புண்ணிய மூர்த்தியே! உன்னை மறப்பதற்கு என் புத்தி இனி ஒத்துக் கொள்ளுமோ? கொள்ளாது.
தெய்வத்தன்மை இருந்த அழகு விளங்கும் சிவலோக சுந்தரனே! ஒப்புமையில்லாத அறிஞர் உரையான ஞானம் எந்த அளவும் இல்லாமல் அறியாமை இருந்த இருதயமே மிகுந்திருக்க இருந்த நான் வாழும் பொருட்டுப் பெருகும் அன்பை உன்மீது பெருகும்படி வைத்த இறைவனாகிய உன்னை நான் மறக்க மாட்டேன்.
வணங்குவார் துதிக்கும் சிவலோக சுந்தரனே! திருமால், பிரமன், இந்திரன், வானோர், பெரும்தவத்தோர் கண்டு அளவிடற்கு அரிய பெருமை உடைய நீ எளியேனாகிய என்னையும் தொண்டன் ஆக்கியமைக்கு நான் முற்பிறப்பில் என்ன தவம் செய்தேனோ?
சிவலோக சுந்தரனே! காலமாக இருப்பவன் நீ. நாள் அனைத்தும் இயமனுடைய நாள் என்று பெரிய மனத்தில் நினைக்காமல் தன் நிலைகெட்டு அறிவுமயங்கி மரணம் அடையும் மனமுடைய அறியாமைக் குருடர் வழிக்கு என்னை அன்னியமாக வைத்துக் காத்தருளிய கடவுளான உன் திருவடியை என்றும் மறவேன்.
அழகு விளங்கும் கடவுளே! சிவலோக சுந்தரனே! நிலைபெற்ற இவ்வுலகில் ஒருபொழுது மறந்துவிட்டால் அப்பொழுது மீண்டும் பிறகு எக்காலத்தும் வராது என்று அறிந்தபின்பும் அடியேன் உன்னை எந்தவகையில் மறந்துவிடு ஐயகோ! இங்கு வாழ மனம் துணிவேன்?
சிவலோக சுந்தரனே! அமர்ந்திருக்கும் நிலையிலும் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் இருகண்களை மூடித் தூங்கும் நிலையிலும் மண்மேல் நடக்கும் நிலையிலும், கண், காது, வாய் ஆகியவை பார்த்தல், கேட்டல், பேசுதல் அல்லது உண்ணுதல் என்னும் செயல்களைச் செய்யும் நிலையிலும், பசியால் வாடி உணவு உண்ணும் நிலையிலும் உன்னை மறவாது நினைக்கச் செய்துள்ள உன் அழகிய கருணைக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?
எல்லாத் தெய்வங்களும் தமக்குத் தலைமைத் தெய்வம் எனக் கருதி நன்றாகத் துதிக்கும் சிவலோக சுந்தரனே! முத்தி எனும் அழியாத வாழ்வை விரும்பாமல் வினைகள் திரண்டு வரும் இவ்வுலகில் பொய்யான வாழ்வுக்கு ஆசைப்படும் வழியில் செல்லாமல் ஒப்பற்ற நீ சிறிய மாயத்தைச் செய்ததற்கும் இங்கு கைம்மாறு ஒன்று உண்டோ? இல்லை என்க.
உன்னுடைய மேன்மையான அருள் உரிமையினால் சிவலோக சுந்தரனே! ஏட்டில் உள்ள எழுத்துக்களைத் தக்கபடி ஒன்று சேர்த்து இயற்சொல்லாக ஆக்க அறியாத அறிவில்லாத அற்பனாகிய நான் பாட்டுக்களினால் உன்னைத்துதிக்க ஒப்பில்லாத ஒரு பாக்கியத்தைப் பெற்றேன். அன்றியும், வீடுபேற்றை நினைத்து நன்கு பிழைக்கவும் பெரிய ஞானத்தையும் பெற்றேன்.
மரக்கலம் மிதந்து செல்லும் கடலின் சுழற்சியுடைய அறிவினை எனக்குப் படைத்துள்ள கம்மாளனே! என் பிணியை நீக்கி என்னை ஆளுகின்ற சிவலோக சுந்தரனே! கீழ்மக்கள் இனத்தைச் சேராது பல வீண் கதைகள் பேசாமல் எப்போதும் உன்னைப் புகழ வந்த என் குணம் இனிவிட்டு விடுமோ? கூறுவாய்.
சிவலோக சுந்தரனே! பொய்யும் பொறாமையும் கூடும் இந்தக் கலிகாலத்தில் பைத்தியமான என்னை ஆட்கொள்ள வந்த எம் கடவுளே! எம் இறைவனே! தினமும் உன்னை நான் மறக்க மாட்டேன். நீ வேறு நான் வேறு அல்ல என்ற ஒரு வடிவத்தை எனக்குக் காட்டியருள்வாயாக.
என்றும் அழிவில்லாத சிவக்கொழுந்தே! சிவலோக சுந்தரனே! கற்றதனால் உண்டான அறிவையும் கேட்டதனால் உண்டான அறிவையும் வீணாகச் சுடுகாட்டிற்குக் கொண்டு போகாமல் கல்வி கேள்விகளால் அறிந்து கொண்ட இறைவனுக்கு அன்பு செய்ய வேண்டும் என உணர்ந்து உனக்கு அன்பு செய்து எப்போதும் உன்னை நினைத்தற்குரிய நன்மையை நான் பெற்றதுபோல் உன் திருவடியிற் கலந்து வாழும் வாழ்வு பெறச் சிறிதளவேனும் கடைக்கண் பார்த்து அருள்வாயாக.
என் மனத்தில் எழுந்தருளியுள்ள சிவலோக சுந்தரனே! பத்தி மார்க்கத்தை கடைப்பிடித்து உயர்நிலை அடையாதார் மரணம் வரப்போகின்றதே என்று பயந்து பயந்து சாவார்கள். பக்தியுடன் இறைவனை மனத்தில் தியானிபோர் ஞானம் பெற்று உயர்ந்து வெற்றி வெற்றி என்று கூறி இறைவன் திருவடியைச் சேர்வார். (இயமன் உலகு செல்லமாட்டார்) அனுதினம் உன்னை நினைத்து இன்னும் அடைய முடியவில்லையே என்னும் வருத்தம் மேலிடக் கத்தியும், மனம் உருகியும் வாடும் என்னைச் சற்று உன் கடைக்கண்ணால் பார்த்தருள்வாயாக.
சிறியவனாகிய என்னைத் தேடி வந்த சிவலோக சுந்தரனே! அறியக்கூடிய ஆன்மாவின் அறிவுக்கு அறிவாக விளங்கி அதற்குத் தலைப் பொருளாகி (பதி) அறியும் அந்த ஆன்ம அறிவுக்கும் எட்டாத ஓர் சிதாகாசமாகிய அரங்கத்தில் எழுந்தருளும் சோதியே! உன்னை நெருங்குவதற்குரிய சமாதியில் என்னை நீ நிலைபெறச் செய்து உன்னுடன் சேர்த்துக் கொள்வது உன்பக்கமே உள்ளதாகும்.
மெய்ஞ்ஞானத்தின் இன்பம் தங்கும் மனத்தின் தலைவனான சிவலோக சுந்தரனே! மாறுபடாமல் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுவெள்ளம் போல் எனது மனத்தை நன்மை பொருந்தும் உன் திருவடியில் வளரச் செய்து விளையும் பேரின்பம் ஆகிய பெருமை மிக அனுபவிக்காது இங்கு பிழைப்பேனோ?
எளியேனின் ஆதரவாக உள்ளவனே! அழகிய அடியாருடைய தெய்வமுதற்பொருளே! சிவலோக சுந்தரனே! நன்மை மிகுந்த திருப்பழநி மலையை விரும்பிச் சென்றடைய நின்ற என்னைத் தடுத்து “உன்னை இன்னநாளில் வருக என்று அழைப்பேன், அப்போது நீ வரலாம், அதுவரை நீ வரக்கூடாது” என்று சொன்ன வாக்கின்படி நீ அழைக்க உனக்கு அடிமையான நான் உன்னைக் காணவருநாள் இன்னநாள் என்று இதுவரையிலும் நான் அறியேனே!
தெளிந்த அறிவுடையயோரைக் காத்தருளும் சிவலோக சுந்தரனே! துர்நாற்றம் வீசும் இந்த மாமிசத்தால் ஆகிய உடம்பு மெலியாது இங்கு ஒரு வேளைச் சோறு உண்ணும் தொல்லையும் தொலைந்து திருவருளால் துன்பம் ஒழிந்து பிழைக்க மாமிச உடம்பு மென்மை ஆவது எந்த நாளில்?
அழிவில்லாப் பெருந்தகையே! சிவலோக சுந்தரனே! பொருள்களைக் காணக்கூடிய அறிவுள்ள எனக்கு எப்பொருளையும் காட்டுகின்ற அறிவாய் எனக்கு அமைந்துள்ள நீ உன்னைக் காணும்படி காட்டாயானால் எனக்குக் காணும் பெருமை உண்டாகுமோ? என்னைக் காத்தருளும் அருளை எனக்கு அளித்து உன்னைப் பிரியாத நிலையில் வைத்தருள்வாயாக.
சிவலோக சுந்தரனே! வினைப்படி உயிரையும் உடம்பையும் சேர்த்து அந்த உயிருக்குள் உயிராய் இருக்கும் பெரிய பொருளாகும் உன்னை அடியேன் பொருந்தி என்றும் பிறவி நோயின்றியும் சுயம்பிரம ஞானமான சுக முனிவரைப் போலப் பூரணமாகக் குறைவு இன்றி இருக்க அருள்புரிவாயாக.
சிவலோக சுந்தரனே! தந்தை ஆன வியாசமுனிவர் மகனே! என்ற போது அங்கு “ஏன்? ஏன்? என்று ஆகாயத்தோடு செடி மரங்கள் எதிரொலித்தன. அமல முத்தி என்று கூறப்படும் பற்றில்லாப் பூரணத்தை அடைந்தவரும் எண்ணில்லாதவர் ஆவர். அதுபோல் எனக்குத் திருவுளம் மகிழ்ந்து பூரணத்துவத்தை அருள்வது எந்நாள்?
நல்ல சிறப்புக்கள் அனைத்தும் உள்ளவனே! சிவலோக சுந்தரனே! காரணம் அழியாமல் இருக்க அதனால் உண்டாகும் காரியம் ஆன பொய்யை ஒழித்து அந்தக் காரணத்தை நான் அறிந்துகொண்டு எண்ணுவதற்கு முடியாதச் சம்பூரணத்தை அடைவதற்கு இனி அருள்புரிவது எக்காலமோ?
எங்களை அடிமைகொண்ட தெய்வமான முதற்பொருளே! சைவத்தைச் செய்யும் சிவலோக சுந்தரனே! சைவம் என்னும் சொல் சிவத்தொடர்பு எனப் பொருள் தருவதற்கு ஒரு சிறிதும் ஐயம் இல்லை. ஆதலால் உன் அடியேனாகிய நான் அவ்வாறு இல்லாமல் இவ்வுலகில் சைவன் எனக் கூறிக் கொள்ளுதல் ஒரு சிறிதும் பொருந்தாது.
சிவலோக சுந்தரனே! ஞானமுடைய அருணகிரிநாதர் துதித்த மாட்சியையே இந்தக் குமரகுருதாசனுக்கும் குற்றமில்லாத அருளால் அளித்தருள் எம் கடவுளே! ஒன்றும் தன்மையில் எழுந்தருளும் குகக் கடவுளே! பேரொலிநிலையை எனக்குத் தந்தருள்வாயாக.