Logo


English

குந்துகால்

தந்தனன தந்தனன தந்தனன தந்தனன
தந்தனன தந்ததான

அம்பு உதம் நிறைந்து விரி வெண்திரை உலம்பு விழு
      மம் பெருகு குந்துகாலில்
அந்தணர் விரும்பு மலர் தந்திடு மரம் பல
      அடர்ந்திட வளம் பொயாத
பம்பரம் உறழ்ந்து அவிர் குரும்பைகள் தரும் சிறு
      பசுந்தழை செறிந்த கேளி
பம்பி நிழல் தந்திட அமைந்த தளியின் கணை
      படும் சடை நிலம் துழாவச்
செம்பு நிற அம்பரம் அணிந்து கரம் ஒன்றில் ஒரு
      தெண்டு அது விளங்க வாசச்
செங்கழலில் ஒண் குறடு இலங்க அளி அன்பர்கள்
      தினம் தினம் இறைஞ்சி வாழச்
சம்ப்ரமம் உடன் திகழ் அருந்தவன் இரும்பரம
      சங்கரி பயந்த சூர
சண்டன் முருகன் குமரன் என்று தொழுகின்றவர்கள்
      சஞ்சலம் அகன்று போகும்.

1

தன்னத்த தத்ததன தன்னத்த தத்ததன
தன்னத்த தத்ததன

கம்மல் சிமிக்கி மிலை மென்மெய்ப் பரத்தையர்கள்
      கண்மைக்கு அகன்று மோக
கன்மப் பவக் கவையை உண்மைப் பதத்து இறைமை
      கண்ணிச் சிறந்த வீர
அம்மைக் கடுத்தலையின் உன்னித் தறிக்கும் உரம்
      அண்ணிக் கடிந்து அறாத
அந்நிற்க மெய்ப்பரம நன்மைப் பயிர் செயும்
      நலன் மக்கள் வந்து சேரும்
செம்மைச் சிவப்பு இதழி மென்முள் கடுக்கை புனை
      தென் மொய்த்த குந்துகாலில்
சின்முத்திரைக் கரம் உடன் மத்தகச் சடை
      நிலன் முட்ட நின்ற தேவை
இம்மைக்கண் உற்று இறுதியில் முற்று அளிக்கும் இறை
      எம்மைக்கொள் அந்த காரி
இன்மைத் துனிக்கு முருகு எண்ணத் துதிப்பர் துயர்
      எண்ணிப் பறந்து போகும்.

2

தனதனன தானதன தனதனன தானதன
தனதனன தானதனனா

அமரர்களை ஏவல் கொள்ள அதிவலிமை சால் நிருதர்
      அற ஓர் கணை ஏவும் விறலோன்
அனலி இன மீளி தவ வியன் மருவு இராகவனது
      அணை எனும் ஓர் சேது இடையே
விமல விரை மாமலர்கள் அவிழும் அடர் கா நிறையும்
      விரதர் குவிகாலின் அரி தீர்
விசதம் மலி நீறு உருவம் முழுது நனி தோய எழில்
      விளை விரத வேடம் ஒடு வாழ்
சுமவதன மாமுனியை அரிமருக வேல் முருக
      சுரர் நரர்கள் மாதவர்கள் தாம்
தொழ மிளிறு நீல ஞமலியில் இவரும் ஈச அறு
      சுடரும் ஒரு சோதி வடிவாக்
குமரகுரு தாசன் நிதம் வழிபடு சுரேச சிவ
      குருபர சுவாமி எனவே
குணமொடு சதா நணுகி அடிபரவு மானுடர்கள்
      குறை கடுகி ஒடியிடுமே.

3

தனதாந்த தந்தனா தனதாந்த தந்தனா
தனதாந்த தந்ததான

முடிபூண்ட மண்டலீ கரும் மாண் தொழும்பர் ஊன்
      முடை மாந்துகின்ற பேயின்
முகையாம் கணங்களோடு அருள் மாந்து அரும்பையார்
      முனியாண்டியும் பனாளும்
அடியாம் பதங்களே தொழ ஊங்கு அலர்ந்த பூ
      அணிவேய்ந்து இலங்குவேணி
அதுதான் துலங்கவே அணி சான்ற செங்கை மீது
      அடல் சேர்ந்த தண்டம் ஒடு
வடிவு ஏய்ந்த வண்டு பாடு அடர் பூங்கடம் சதா
      வளர் பாம்பன் என்ற தீவுள்
மடல் நீண்ட கந்த கேதகை ஈந்து சம்புமா
      மணல் ஓங்கு குந்துகாலில்
குடி ஆண்டு அமர்ந்ததே வனை ஆம்பல் அந்தண் ஆர்
      குழை நான்ற கொன்றை சூடும்
குழகு ஆர்ந்த ஒண்கணாள் பொருள் சேந்தன் என்று உளே
      கொளும் மாண்பர் துன்பு போகும்.

4

தத்தான தந்தத்த தத்தான தந்தத்த
தத்தான தந்தந்தனா

உப்பு ஏறு சிந்துத் திரைத் தூவல் விஞ்சிப் பொன்
      ஒப்பாய் மலிந்து எங்குமா
ஒப்பு எறு மண் திட்டு உறச் சேது அரங்கிற்கு
      அண் உள்கா இரும் குந்துகால்
எப்போதும் நன்கு உற்றிடக் காவல் கொண்டு அத்த
      எஃகோடு இயங்கும் பிரான்
எட்டு ஏறு பந்தக் குழுப் பாற அன்பர்க்குள்
      எக்காலமும் தங்குவோன்
அப்பாவு சந்தத்தில் இப்பா விளம்பிக்கொள்
      அத்தா எனும் கந்தவேள்
அஃகாத இன்பத்து அருள் தேவன் என்று உள் கொள்
      அச்சோடு இறைஞ்சு அன்புளோர்
தப்பாது துன்பு அற்று இமிழ்ப்பா இனம் சொற்ற
      தக்கோன் உரம் கண்டு அரோ
சற்போத சம்பத்து மெய்ப்போகமும் பெற்றார்
      சத்தாவர் இங்கு அங்குமே.

5


Home    |    Top   |    Back