Logo


English
வேண்டுகோள்
துதிபரம்


வேறு பன்னிரு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்


சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

போச உலாச விலாச பகேச அபூர்வ சதா சிவனே
போத விபூ பரிபூ சிகிவாகன பூத கிர்பாகரனே
ஈச மகேச விசேட விசாக சுரேச பராபரனே
ஏக கியாத தயாள அகாதம் இலாது சதா நினைவோர்
நேச வர உதய பீம இராம அநேக கலாநிதியே
நீத விவேக சொரூப பிராமணனே பிரசாத சிதா
காச சகார ரகார வகார ணகார பவா குகமா
காரண பூரண தாரகனே கறை காதி விராவுதியே.

1

இயற்கை நலம் உள்ளவனே! உள்ளக் களிப்பு உள்ளவனே! அழகனே! அறுகுணத்து ஈசனே! அருமையானவனே! சதாசிவப் பெருமானே! அறிவானவனே! நிறைவானவனே! பேரழகு வடிவானவனே! மயில்வாகனனே! உயிர்களிடம் கருணை உள்ளவனே! ஈசனே! மேலோனே! விசாக நட்சத்திரத்தில் தோன்றியவனே! தேவர்களின் அரசனே! பரம்பொருளே! ஏகனான விளக்கமே! கருணையுடையவனே! உள் வஞ்சம் இல்லாது எப்போதும் நினைப்பவர்கள் அன்பனே! வரமருள்வோனே! பெரியோனே! இராமனே! அனேகனே! கலைகளின் செல்வனே! நீதியனே! அறிவின் சொரூபனே! அந்தணனே! அமுதனே! அறிவாகாசமே! சரவணபவனே! குகனே! மகா காரணனே! பூரணனே! பிரணவனே! குற்றம் நீக்கி என்னுடன் இரண்டறக் கலந்தருள்வாயாக!

விது எழில் நறும் தும்பை முதலை அரவம் கமடம்
விறல் உம்பல் வியாள அதளார்
நதி எறுழியின் கொம்பு வளர் அறுகு வெள் என்பு
நவியம் அணிகின்ற இறையோன்
இதவோடு விரும்பும் உமை மகன் எனும் அகண்ட குகன்
இணையில் அருள் இன்பம் உறநீ
அது இது எனும் பெரிய சுழலில் உழலாமல் அயில்
அரையன் அடி நாடு மனமே.

2

மனமே! பிறை நிலவு, அழகும் மணமும் உள்ள தும்பை மலர், கொன்றை மலர், பாம்பு, ஆமையோடு, (வலிமை பொருந்திய யானை, புலித் தோல்களை ஆடையாக உடுத்தவும்) கங்கை நதி, பன்றியின் கொம்பு, வளரும் அறுகம்புல், வெண்மையான எலும்பு, மழு ஆகியவற்றை அணிபவரும் ஆன இறைவன், இனிமையுடன் விரும்பும் உமை மகன் என்னும் எல்லையில்லாத குகப்பெருமானின் இணையற்ற இன்பத்தை நான் பெறவும், நீ சுட்டி அறிவதாகிய அது எனும் படர்க்கைக் பொருளையும், இது எனும் முன்னிலைப் பொருளையும் தேடித்தேடி, அந்தப் பெரிய சுழற்சியில் அகப்பட்டு வருந்தாமல் வேலைப் பிடித்த அரசனான முருகனின் திருவடியை நாடுவாயாக!

இதி என உழன்று உலக மயல் விழை முசுண்டர் உறவு
எனும் நிலை நிலாது பரம
நிதி எனும் நலம் சததம் அருள் ஒரு கடம்பன் அது
நிறை கருணை மேவ அடியார்
துதிபணி இறைஞ்சும் ஒரு பெரிய பொருள் அங்கி அவி
சொரிகுநர் அவாவும் உலகர்
அதிபதி சிறந்த குருபரன் நிமலன் ஆன அயில்
அரையன் அடி நாடு மனமே.

3

மனமே! வேதனை நோய் என உழன்று உலக வாழ்வில் மயக்கத்தை விரும்பி அலையும் கீழ்மக்களின் உறவெனும் நிலையை மேற்கொள்ளாமல், மேலான அருட்செல்வம் என்னும் நன்மையை அருளும் ஒப்பற்ற கடம்பனுடைய நிறைந்த கருணை பொருந்தும் அடியார் துதி செய்து வணங்கும் ஒரு பெரிய பொருளும், வேள்வித்தீயில் அவிசொரிபவரை விரும்பும் உலகரின் அதிபதியும், சிறந்த குருபரனும், நிமலனும் ஆன வேற்படை பிடித்த அரசனின் திருவடியை நாடுவாயாக!

கடல் கவி அனந்தை மிசை முடை உரு அணைந்து வரு
கருமம் அற வரைகள் துகள் ஆம்
படலம் உயர் உம்பர் உறை பதியினை வளைந்து மிளிர்
பரிதியை மறைக்க விறல் சால்
நடனம் இடும் அம் சிகியின் முதுகிடை இருந்து மர
ணம் இலர் இடம் நணுகி உயுமாறு
அடல் அசுரன் நெஞ்சம் பிளந்த இகல் உடைய அயில்
அரையன் அடி நாடு மனமே.

4

மனமே! கடல்சூழ்ந்த இப்பூமியின் புலால் நாற்றமுடைய ஊனுடம்பைப் பெற்றுத் தோன்றும் செயலற மலைகள் எல்லாம், துகளாகிப் புழுதிப்படலம் உயரச் சென்று பரவு தேவர் வாழும் தேவலோகத்தைச் சூழ்ந்து, மிளிரும் சூரியனை மறைக்க வீரம் மிகுந்த நடனத்தைச் செய்கின்ற அழகிய மயிலின் முதுகின் மேல் அமர்ந்து, தேவர்களிடத்தைச் சென்றடைந்து அவர்கள் பிழைக்குமாறு, சூரனாகிய அசுரன் நெஞ்சத்தைப் பிளந்த வீமுடைய வேற்படை ஏந்திய அரசனான முருகன் திருவடியை நாடுவாயாக!

பொய் ஒன்றை விட்டவரிடம் கலுடம் இலை கெட்ட
பொய் ஒன்று இருக்கும் எனினோ
மெய் அன்பர் என் உரை பொருந்தார் அரும் தவமும்
வீயும் அதனால் முதலில் நீ
செய்யும் செயற்கண் ஒரு பொய் இன்றி முன் சொன பொய்
சிதையும் படிக்கும் அதன் மேல்
ஐயம் தணந்த அருள் அணவும் படிக்கும் அயில்
அரையன் அடி நாடு மனமே.

5

மனமே! பொய் என்னும் ஒன்றை விட்டுவிட்டவருக்குப் பாவம் இல்லை; தீயதான பொய் என்பது ஒருவரிடம் இருக்குமாயின், அவரை மெய்யன்பர் என்று கூறும் சொல் பொருந்தாது; அவர் செய்த அரிய தவமும் ஒழியும். அதனால் முதலில் நீ செய்யும் செய்கையில் ஒரு பொய் இல்லாமல், அதற்கு முன்னே சொன்ன பொய்யும் ஒழியும் படிக்கும், அதன் மேல் ஐயம் நீங்கிய அருளைப் பெறும்படிக்கும் வேலைப் பிடித்த அரசன் முருகனை நாடுவாயாக!

விவேக விறல் ஏறு திசை நாதர் அருளாள அ
விநாசி பரமேச அருளீ
உவா என நிலாவு கனியால் உலகையே கணம்
உளே மயிலிலே வரு மனா
துவாதச புயாசல எனா நனி பராவிய
சுவாமி பதம் மேவ உலகு ஆம்
அவா இனி வராதபடி வேத குரு நாதன் அயில்
அரையன் அடி நாடு மனமே.

6

மனமே! அறிவுடையவனே! வலிமை மிக்க திக்குப் பாலகர்கட்கு அருள் புரிபவனே! அவிநாசி என்னும் பயனற்றவற்றை ஒழிப்பவனே! பரமேசுவரனே! அருளை ஈந்தருள்! நிறைவு என விளங்கும் பழத்தால் உலகை ஒரு கணப்பொழுதில் மயில் மீதேறி வந்த அரசே! பன்னிரண்டு மலை போன்ற தோள் உடையவனே என்று நான் நன்கு துதித்த சுவாமி திருவடியை அடைய இவ்வுலக ஆசை இனி வராதபடி, வேதகுருநாதனான வேலைப் பிடித்த அரசன் திருவடியை நாடுவாயாக!

மிடி உடைய நினது பழ வினை கிழிய முனை கிழிய
மிகை கிழிய அசுரன் ஒலியாம்
இடி கிழிய முடி கிழிய மிடறு அணியும் அணி கிழிய
இணையில் அக வலி கிழிய மா
மடி கிழிய நடி கிழிய அகடு முதுகு இடை கிழிய
மதி கிழிய விதி கிழிய ஒடு
அடியொடு உயிரது கிழிய நொடியில் எழுதரும் ஒர் அயில்
அரையன் அடி நாடு மனமே.

7

மனமே! துன்பமுடைய உனது பழவினையான சஞ்சித கன்மம் ஒழியவும், செருக்கு ஒழியவும், குற்றம் ஒழியவும், அசுரன் ஒலியாகும் இடி ஒழியவும், முடி சிதறவும், கழுத்து அணிகலன் ஒழியவும், இணையில்லாத வலிமை ஒழியவும், பெரிய வயிறு கிழியவும், நாடிகள் கிழியவும், வயிறு, முதுகு, இடை ஆகியவை கிழியவும், சிற்றறிவு கிழியவும், ஊழ்வினை கிழியவும், ஓடும் அடியோடு உயிர் ஒழியவும், ஆக ஒரு நொடியில் புறப்பட்டுவரும் வேற்படை தாங்கிய அரசன் முருகன் திருவடியை நாடுவாயாக!

வழிவிட்டு விசுவத்தில் உழல் நிற்குள் உள பெரிய
மருள் இரிய மாதவம் இலார்
மொழிபற்றி மருவுற்ற பவம் அற்று உள் அலைவு படு
முரண் இரிய வாதை மிக வீ
கழிவு அற்று வரவு அற்று நிலை நிற்க அருணகிரி
கவி அணிய அவாவி அணிதே
அழிவுஅற்ற பரண் ஒப்பில் துடி கொட்டு முருகன் அயில்
அரையன் அடி நாடு மனமே.

8

மனமே! நல்ல வழியை விட்டுவிட்டு இப்பிரபஞ்சத்தில் உழலுகின்ற உனக்குள்ளே உள்ள பெரிய மயக்கம் ஒழியப் பெருந்தவம் இல்லாதவர் உரைகளைப் பற்றிக்கொண்டு, அதனால் சேரும் பிறப்பு அற்று உள்ளே வருத்தும் பகை ஒழியத் துன்பத்தை மிகவும் தரும் இறப்பற்றுப் பிறப்பற்று நிலையாகவிருக்க, அருணகிரிநாதர் கவிமாலைகளை அணிந்துகொள்ள அவாக் கொண்டு அணிந்த கடவுள், அழிவில்லாத பரன், ஒப்பில்லாத உடுக்கையைக் கொட்டும் முருகன், வேற்படை தாங்கும் அரசன், திருவடியை நாடுவாயாக!


Home    |    Top   |    Back