நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » நான்காம் மண்டலம் இசை
நான்காம் மண்டலம் இசை
| வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 1. | திருத்தொடையல் | ||
| பலன் | ஸ்ரீ விசாகப் பெருமானுக்குரிய விரததினங்களிலும், மற்றைத் தினங்களிலும் இத் திருத்தொடையல் பாடும் போழ்து கவிக்கொரு கற்பூரதீப மேற்றுக.
-ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
|
||
திருத்தொடையல்
அனந்தமறை யுன்னறிவாய் விளங்கவென
வாறுமுக வடிவே காட்டித்
தனந்தனியா வந்தசிவ சரவணனே
பிரணவனே சாமீ யுன்றன்
மனங்கனிய யானொழுகும் வகையையுணர்ந்
தெனையறிய வரமீந் தென்னைக்
கனம்படவும் வைப்பதுநின் கடனேயென்
றனுதினமுங் கருதா நின்றேன். (1)
விளக்கம்: எண்ணற்ற வேதங்களும் உன்னையே அறிவிக்கும் ஞானக் கருவூலங்கள் என்று விளங்கும்படி ஆறுமுகத் திருமேனி கொண்டு காட்சியருளி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பொருளாக எழுந்தருளிய சிவ சரவணனே! ஓங்காரப் பொருள் ஆனவனே! குருபரனே! நின் திருவுள்ளம் என்பால் இரங்கும்படி நான் ஒழுகும் வகையை உணர்ந்து அதன்பயனாய் என்னை நான் அறியும்படி வரம் அருளி, அடியவனை மேம்பட வைப்பதும் நினது கடமையே என்னும் உறுதி கொண்டு நினது திருவடிமலரை நாடோறும் மனத்தால் சிந்தித்து (வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி) வருபவனாய் உள்ளேன். அருள்புரிவாயாக.
(ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்படும் சிவபிரானது ஐந்துமுகங்களும், தேவியின் ஒருமுகமும் ஆக ஆறுமுகங்கள் கொண்டு விளங்குபவன் முருகன். எனவே திசைகளாய எவ்விடத்தும் இருப்போனே ஆறுமுகன் என்பதும் அவனே எம் முகத்தும் வணங்கப்படுவோன் என்பதும் அறியப்படும். எனவே அனந்தமறை யுன்னறிவாய் விளங்க, என்று அருளிச்செய்தார். யசுர்வேத முக்திகோபநிடதம் ஊர்த்வ பூர்ண மத: பூர்ணம் மத்ய பூர்ணம சிவாத்மகம் (மேலும் நிறைந்து கீழும் நிறைந்து நடுவும் நிறைந்துள்ளது சிவசொரூபம்) எனல் காண்க. நடு என்பதில் நாற்றிசையும் அடங்கும். தேசோபிந்து உபநிடதம் "குமாரச் சிவம்" எனல் அறிக. யாவருக்கும் குரு ஆகிய சிவபிரானுக்கே குரு வாயுண்மையும், அவனுக்கு ஒரு குரு இன்மையும் கருதி "சாமி" எனப்படுகின்றனன். "ஸ்வாமி கஜமுகாநுஜ என்று அமரசிம்மமும் "கடம்பன் சாமி கார்த்திகேயன்" என்று பிங்கலந்தையும் பேசும்.
ஆணவமல இருளானது, ஆன்ம அறிவை மறைக்கத்தக்க தனது வலி ஒழிந்து அங்ஙனம் கெடாது கெட்டு நிற்கவும், அவ்விருளுக்குள்ளேயே தொழிற்படும் போதம், கரணம் முதலியன தொழில் மங்கி நிற்கவும் திருவருள் ஒளிசெய்யுங்கால் அவ்வொளியில் ஆன்மா தன்னை இத்தன்மைப் பொருள் என அறிதலையே "எனையறிய வரமீந்து" என்றார்,
கம்பன்முத னற்கவிஞர்க் கரசியென
விருந்தமுதிர் கலைமா தெளவை
தம்புலமைத் திடனறியக் காரெருமை
மேய்த்திடுவோன் றனைப்போல் வந்து
சம்புமிசை யேறிநறுங் கனியுதிர்த்துப்
பரிகாசம் தனைச்செய் செவ்வேள்
எம்பெருமா னியாயி னுன்சீர்த்தி
யான்புகல்வ தெவ்வா றன்றே. (2)
விளக்கம்: கம்பர், ஒட்டக்கூத்தர், சயங்கொண்டான் முதலிய நல்ல கவிஞர்களுக்கு எல்லாம் அரசியாக விளங்கிக், கலையறிவு முதிர்ந்த ஒளவைப் பெருமாட்டியின் புலமைத் திட்பம் காணுமாறு, கரிய எருமைகளை மேய்க்கும் சிறுவனைப் போல வந்து நாவல் மரத்தின் மீது ஏறி, அம்மூதாட்டிக்காக நறிய கனிகளை உதிர்த்துப் பாட்டி! பழம் சுடுகிறதா என்று நகையாடும் செவ்வேட்பரமன் ஆகிய எம்பிரான் நீயே என்றால், அப்புலமைத்திட்பம் வாயாத நான் உன் புகழை முற்றக் கூறுதல் எங்ஙனம் முடியும்? முடியாதே.
அரிபகவ னிந்திரனவா னவர்முனிவர்
சித்தருமே யத்தா வென்றுன்
திருவடியைப் பரவியருஞ் சீர்த்திபடைத்
தார்களெனத் திகழ்மா வேத
உருவனைத்து மனந்தமுறை யுரைத்துரைத்து
முன்பெருமை யொழிவே யின்றிப்
பெருகுமெனிற் குகனேயிங் கதுசிறிது
மேயென்னாற் பேசற் பாற்றோ. (3)
விளக்கம்: குகப்பரமனே! திருமால், பிரமன், இந்திரன், தேவர், முனிவர், சித்தர் முதலியோர் "எம்கடவுளே" என்று நின்திருவடியைப்புகழ்ந்துபெறுதற்கரிய புகழை அடைந்தார்கள் என்று பெருமை திகழும் வேதக் கலைகள்யாவும் பல முறை எடுத்து எடுத்துக் கூறியும், உன் பெருமை முற்றப் பெறாது மேலும் பெருகுவதாய் உள்ளது என்றால், அப்பெருமையில் சிறிதேனும் இந்நூலில் என்னால் கூறுதல் கூடுமோ? கூடாதே.
(ஸ்ரீமத் குமார சுவாமியத்துத் தேவலோகத் திருவிளையாடலில்
"ஆத லாலவிரிந்த மூர்த்தியினாற்ற லெண்ணறு காலம்யான்
ஒதி னாலும் அரன்சொ னாலும டங்கி டாதுயர்வாம்"
என்று பிரமன் கூறுதலையும் காண்க. ஸ்காந்த மஹா புராணத்துச் சம்பவ காண்டத்து 36 ஆம் அத்தியாயத்தில் "பிரியமுள்ள கல்யாணி! புவனேசுவரி! உலகிடை வைகும் தேவர், மக்கள், மாக்கள் முதலிய உயிர்கள் மாட்டே வீரியம், செல்வம், காந்தி, கல்வி, அறிவு என்பனவற்றுள் எத்துணை எத்துணை உளவோ அவையனைத்தும் குமாரனுடைய மாட்சிமையே என்பது உறுதி என இங்ஙனம் சுருங்கச் சொன்னேன். விரித்து விளம்பத்துணியில்நூறுகோடி வருடகாலத்தும் முடிவுறாதே" என்று பரமசிவன் பார்வதிக்கு உரைத்தலை அறிக).
கயறாவு கமலநிறை பூம்பொழில்கொள்
காசிநகர்க் கடவுண் முன்பு
பயமேது மின்றிமுதற் பரமரியென்
றசத்தியமே பகர்ந்தோ னீட்டு
புயமிரண்டுந் தம்பமென நின்றிடுகா
னன்னடுவிற் புரக்க வேகைச்
சயவுவணி யாற்கரங்கொய் நந்திபரன்
சரணஞ்செய் தனிவே லோனே. (4)
விளக்கம்: கயல் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்வளம் நிறைந்த அழகிய சோலைகளையுடைய காசிநகரில், யாவர்க்கும் கடவுளால் விளங்கும் விசுவநாதப் பொருமான் திருமுன் சிறிதேனும் அச்சம் இல்லாமல் "முதற் கடவுள் விட்டுணுவே" என்று பொய் உரைத்த வியாச முனிவர் தூக்கிய கைகள் இரண்டும் தம்பம் போன்று அசைக்கமுடியாதபடி நிற்குமாறுமுனிந்தருளி நடுவு நிலைமையை நன்கு ஒம்புமாறு அம்முனிவரின் கைகளைத் தமது கைவாளால் துணித்தருளிய நந்தி யம்பெருமான் "எம்சிவனே! அருளுக" என்று புகலாக வந்து அடைந்த ஒப்பற்ற வேற்பரமனே! (அந்நந்தியெம்பெருமானுக்கு அருளியதுபோல் அடியவனுக்கும் அருள்வாயாக).
(முனிவர்கள் வியாச முனிவரை நோக்கி "வேதத்தின் முடிந்த பொருள் இதுவே என்று தொகுத்துக் கூறியருளுக என்ற காலை, வியாச முனிவர் "நாராயணனே பரப்பிரமம் எல்லா நூல்களின் முடிபும் இதுவே" என்று கூறினர். அது கேட்டு மருண்ட முனிவர்கள் வியாசரைப் பார்த்து "நீர் உரைத்த இந்த முடிபைக் காசி நகரில் எழுந்தருளியுள்ள விசுவநாதப் பெருமான் திரு முன்பு கூறுக" எனலும் வியாசரும் இணங்கி அம் முனிவர்களோடு காசி நகர் எய்தி எம்பெருமான் திருமுன் தமது இரண்டு கைகளையும் மேலே தூக்கி "விட்டுனுவே பரம்" என்றனர். அது கேட்ட நந்தியெம்பெருமான் உங்காரம் செய்து வியாசர் தூக்கிய கைகளை மடக்க முடியாதபடி செய்தனர். அவ்வியாசர் இங்ஙனம் பொய் கூறிய குற்றத்திற்காக அவரது தூக்கிய இரண்டுகைகளையும் நந்திதேவர் தம் கைவாளால் துணித்தனர்.
நந்திதேவர் திருத்தணிகையில் நெடுநாள் முருகனை நோக்கித் தவமிருந்து அவனால் உபதேசம் செய்யப்பெற்றார். அதனால் "நந்திபரன் சரணஞ்செய் தனிவே லோனே" என்றார்).
வாசமலி நறுங்கடப்பந் தார்புனையுந்
தடங்கரவேன் மன்னா மெந்தாய்
காசிநகர் மான்மியத்திற் கழறுவண்ண
மானெறியிற் கரங்க டூக்கிப்
பேசியவொர் வியாதனைநீ மூடனெனத்
திருப்பிருந்தைப் பெருமான் சொல்லி
ஈசனெமக் கொருவனுள னென்றபொரு
ணீயலதொன் றிலையே யாண்டும். (5)
விளக்கம்: மணம் நிறைந்த நறிய கடப்பமாலையணிந்து (வேண்டுவார் வேண்டுவன வழங்கும்) பெருமையுடைய திருக்கையில் வேல் கொண்ட இறைவனாகிய எந்தாய்! காசிநகர் மான்மியத்தில் கூறப்பட்டுள்ளபடி அறிவு மயங்கிய நெறியில் திருமாலே முழுமுதல்வன் என்று தம்கைகளை மேலே தூக்கிப்பேசிய வியாத முனிவரைப் பார்த்து "நீ மூடனே" என்று துழாய் அணியும் திருமால் கூறி மேலும் "எம்மை நடத்தும் இறைவன் ஒருவன் உளன்" என்று அம்முனிவருக்கு அறிவுறுத்திய பரம் பொருள் நீயன்றி வேறு எப்பொருளும் எவ்விடத்தும் இல்லையே.
அகத்தியனக் கீரனனி தவத்தினுயர்
நாரதனல் லருளே பெற்று
மிகுத்ததிருப் புகழ்புகன்ற கருத்துளனு
மேனையவுண் மெய்யோ ரெல்லாம்
மகத்துவமுற் றுய்யவடி யளித்தசிவ
னேயெழில்கொண் மயிலி லேறும்
பகத்தரள மேயுனது பதப்போது
பழிச்சவருள் பண்ணா யெற்கே. (6)
விளக்கம்: அகத்தியர், நக்கீரர், தவத்தால் நல்ல உயர்வு பெற்ற நாரதர், நினது நறிய திருவருளைப்பெற்று, ஞானத்தால் உயர்ந்த திருப்புகழை அருளிய திருவுள்ளம் உடைய அருணகிரிநாதர், மற்றுமுள்ள மெய்ஞ்ஞானிகள் யாவரும் பெருநிலை பெற்று உய்யுமாறு நின்திருவடியை அளித்த சிவனே! அழகிய மயிலில் ஏறி நடத்துகின்ற ஞான மணியே! நினது திருவடி மலரை வழுத்தும் பேற்றை அடியவனுக்கு அருள் செய்வாயாக.
("பகச் ஸ்ரீ காம மாஹாத்ம்ய வீர்ய யத்நார்க்க கீர்த்திஷூ" என்று அமர சிம்மம் நாநாவர்க்கம் கூறுமாற்றால் ஸ்ரீ, காமம், மகாத்மியம், வீரியம், (ப்ர) யத்நம், அர்க்கன், கீர்த்தி என்பவை பகம் என்று அறியப்படும். எனவே பகம் என்னும் ஆறு பண்புகளையும் உடைய மணியே" எனலும் பொருந்தும்).
பரமலைபொற் செந்திவளம் பதியெனுநற்
சாமிவரை படர்பூஞ் சோலை
விரியுமடற் கமலநிரை காண்பழநி
யேனையநல் விரையார் வெற்பும்
மருமலர்ச்செம் பாதமெனு நின்கழலைத்
தான்பரவென் மனமே யென்றின்
னருணிலவக் குடியிருக்க வேண்டுமயில்
பரித்துளவிண் ணமர்வோ ரேறே. (7)
விளக்கம்: வேலைத் தாங்கியுள்ள தேவதேவனே! திருப்பரங்குன்றம், அழகிய திருச்செந்தூர், வளம் நிறைந்த ஊர் எனப்படுகின்ற நலமுடைய சுவாமிமலை, அழகுபடர்ந்து விளங்கும் பழமுதிர்சோலை, இதழ்கள் மலர்ந்த தாமரைமலர்கள் நிரம்பிக் காணப்படும் பழநி, மற்றும் உள்ள மணம் செறிந்து விளங்கும் குன்று தோறாடல், எனப்படும் திருத்தலங்கள் யாவும் (கற்கள் நிரம்பிய மலைகளே ஆகும், ஆகவே) மணம் நிரம்பிய மலர் போன்ற சிவந்த பாதம் எனப்படும் நினது கழலணிந்த திருவடிகளைப் போற்றுகின்ற (கல்லாகிய) எனது மனமே என்று கருதி எளியேன் உள்ளத்தில் எழுந்தருளி நினது இனிய திருவருள் நிலவும்படி குடியிருப்பாயாக.
அண்டமுத லணுக்கடையாய்க் கண்டசரா
சரங்களெலா மருளா முன்றன்
பண்டமெனத் தெரிதலினா லுனக்கிவணா
னிசைக்கவொரு பரிசுங் காணேன்
கொண்டதமி யேன்வணக்கந் தனைத்திருத்தி
யாகவிங்கே கொள்வா யென்னா
அண்டிநின்றே னின்னடிக்கே பொலம்பொலிந்த
வயில்சிகண்டிக் கரசே யன்றே. (8)
விளக்கம்: அழகு பொலியும் வேலும் மயிலும் உடைய அரசே! பலவகைப்பட்ட பெரிய அண்டங்கள் முதலாக அணுக்கள் கடையாக விளங்கும் சராசரப் பொருள்கள் எல்லாம் நினது அருளால் உண்டான பொருள்கள் என்று விளங்குவதால் உனக்கு உரிமையாகும் படி செய்ய உன்னுடையதல்லாத எந்தப் பொருளையும் அடியவனால் காணமுடியவில்லை. உன்னையே குலதெய்வம் என்ற கொண்ட அடியவனின் வணக்கத்தை இங்கு உளமார ஏற்றுக் கொள்வாயாக என்று உனது திருவடியை அண்டி நிற்பவனாயுள்ளேன்.
நின்னடிததொண் டானதிரு மாலாதி
தேவரெல்லா நின்க டைக்கண்
தன்னருளைக் கொண்டலவோ சருவநவ
சித்திகளுந் தடத்த மாக
இன்னமிருந் தாற்றிடவு மிகல்படைத்தா
ரேரயிற்கை யீசா வுன்றன்
நன்னயப்பொன் னடித்துணைகொ ளென்போல்வார்
நலமெனென நவில்வேன் மன்னோ. (9)
விளக்கம்: அழகிய வேலைக் கையில் கொண்ட ஈசனே! நின் திருவடித்தொழும்பு செய்வோரான திருமால் முதலிய தேவரெல்லாம் உனது கடைக்கண் அருளைத் துணையாகக் கொண்டல்லவா எல்லா நவசித்திகளையும் இன்னும் நன்கு செய்து கொண்டிருக்கும் ஆற்றலுடையவராயிருக்கின்றனர். உனது நலம் நல்கும் திருவடிகளைத் துணையாகக் கொண்டுள்ள என் போன்றவர் பெரும் பேறு எத்தன்மைத்து என்று நான் கூற இயலுமா?
அண்டருக்கு முனிவருக்கு மகிலநிரை
படைப்பவற்கு மையார் சீவை
குண்டனுக்கும் வாழ்வேதவ் வசுரருயிர்
நீவந்து குடியா விட்டாற்
பண்டுமறை நனிறுவன்ற படிதரையி
லுன்னருளைப் படையார் தாவே
கொண்டுழல்வார் கதிபுகுதா ரெற்கருள்செய்
யருளுருவக் குகனே யன்றே. (10)
விளக்கம்: அடியவனுக்கும் திருவருள் புரிகின்ற அருளே திருமேனியாகக் கொண்ட குகப்பரமனே! 1008 அண்டங்களையும் 108 யுகம் ஆட்சிபுரிந்த சூரபதுமன் முதலிய அசுரர்களை நீ எழுந்தருளி அழிக்காவிட்டால் தேவர்களுக்கோ, முனிவர்களுக்கோ, உலகைப் படைக்கும் நான் முகனுக்கோ மேகவண்ணனாய் வைகுண்டத்தில் வாழும் நாராயணனுக்கோ வாழ்வு ஏது? இன்றே. பழைய வேதங்கள் உறுதியாகக் கூறியபடி உனது திருவருளைப் பெறாதவர் உலகத்தில் துன்பமே கொண்டு உழல்வார்கள். அன்னோர் வீடுபேற்றையும் அடையமாட்டார்.
எங்குமொரு கருத்தனென விருக்குமுனைக்
குலக்கடவு ளென்றே கொண்ட
புங்கவர்க ளொருகாலும் வேறுதெய்வங்
குரங்கார்கள புகரொன் றின்றி
மங்கலமுற் றுய்ந்திகத்தி லுயர்சீவன்
முத்திதன்னை மருவி நின்றே
துங்கபர முத்தியையு மேபெறுவ
ரிந்துளப்பூந் தொடைமார் போனே. (11)
விளக்கம்: அழகிய கடப்பமாலையணிந்த திருமார்புடைய கடவுளே! எங்கும் நிறைந்த ஒப்பற்ற கடவுளாக உள்ள உன்னைத் தங்களின் குலதெய்வம் என்று கொண்ட தூயவர்கள் வேறு தெய்வத்தை ஒருகாலும் பணியமாட்டார்கள். இவ்வுலகத்தில் யாதொரு குற்றமும் சேராமல் நலத்தை அடைந்து உய்வாராய்ச் சிவன் முத்தியாகிய பெருநிலையைக் கூடிநின்று பின்னர்த் தூய பரமுத்தியையும் அடைவார்கள்.
நினமலச்செஞ் சோதிவடி வுடையவுனை
யனவரத நினைப்போர்க் கென்றும்
பொன்மயச்செம் மேனியுடம் புண்டாகு
நரைதிரைகள் பொருந்தா புன்கண்
தன்னுரத்தி னாலுயிர்கொள் கூற்றுமணு
காதெதினுஞ் சத்தாய் நிற்குஞ்
சின்மயத்தின் றெருட்பிழம்பே யான்றொழுமோர்
வேற்சமர்த்தா சிவச்சீர்க் குன்றே. (12)
விளக்கம்: எல்லாப் பொருள்களிலும் நீங்காதிருக்கும் சத்துப் பொருளாய் ஞானமயமான பிழம்பாகி நிற்பவனே! அடியவன் வழிபாட்டுக்கு உரிய ஒப்பற்ற வேற்படை வீரனே! சிவம் என்னும் சிறப்பைக் கொண்ட மலையே! மலமுடைய எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்றும் நின்மலனாய்ச் சிவந்த சோதி, வடிவினன் ஆகிய உன்னை எஞ்ஞான்றும் சிந்திப்பவர்க்கு என்றும் அழியாத பொன்னிறமான சிவந்த உடம்பு கூடும். நரையும் திரையும் அவரை அணுகா. அச்சத்தை விளைவிக்கும் தனது வலிமையால் உயிர்களைக் கவருகின்ற கூற்றமும் அவரை அணுகாது.
பிரமனைத்தாள் கொண்டுதைத்தாய் பிரணவத்தின்
பொருளானாய் பிறைமா கங்கை
திருமுடிக்கண் ணணியுமுக்கட் கடவுளுக்கு
முபதேசஞ் செய்தா யிந்த்ரன்
பருவரலை நீக்கியருந் துறக்கமளித்
தாய்விபுதர் பதியே யார்க்குங்
குருகுகனென் றணிமறைகள் குயிலும்வண
மெனக்குமருள் குயிற்றொண் ணாயோ. (13)
விளக்கம்: தேவர்களின் தேவனே! பிரணவத்தின் பொருளை அறியாத பிரம தேவனைத் தலையில் குட்டித் தாளால் உதைத்தாய். பிரணவத்தின் பொருளாகி விளங்குகின்றாய். இளம் பிறையையும் பெருமையுடைய கங்கையையும் திருமுடியில் அணிந்துள்ள முக்கட்பிரானாகிய சிவனார்க்கும் அப்பிரணவப் பொருளை உபதேசம் செய்தாய். சூரபதுமனால் அடைந்த துன்பத்தைப் போக்கி இந்திரனுக்குத் தேவலோக ஆட்சியைக் கொடுத்தாய். அழகிய வேதங்கள் யாவருக்கும் குருவாவான் குகனே என்று கூறும் வண்ணம் எனக்கும் குருவாகி நின்று அருள்மொழி கூறுதல் கூடாதோ? சொல்லியருள்.
வகுத்தமுதற் சரியையொடு கிரியையுநன்
றாநடக்கும் வழியா யுள்ள
அகத்தறம்வ ழாதிகத்தில் வளர்க்கவருட்
சத்திதனை யருகே வைத்து
மிகுத்ததிருக் கொலுவிருப்பை யோகமுடன்
ஞானமதும் மேன்மே லோங்கச்
சகத்தையிகழ் துறவறமுற் றேதவசி
வடிவெடுப்பை சயவே லோனே. (14)
விளக்கம்: வெற்றி ஒன்றையே உடைய வேலையுடைய இறைவனே! உயிர்கள் ஈடேறுமாறு படிமுறைகளாய் வகுக்கப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளில் சரியையும் கிரியையும் நன்கு நடைபெறுதற்கு வழியாக விளங்கும் இல்லறம் வழுவாது இவ்வுலகத்தில் வளருமாறு அருட்சத்தியினை பக்கத்தில்வைத்து மேம்பட்ட திருக்கொலு வீற்றிருப்பாய். யோகமும் ஞானமும் மேலும் மேலும் ஒங்குமாறு உலக வாழ்வை இகழ்கின்ற துறவற நிலையில் உள்ள தவ முனிவரின் திருக்கோலமும் கொள்வாய்.
குறமகளைக்* கரிமகளை யிருமருங்கும்
வதியவருள் கூர்ந்தே யென்றும்
மறமொழித்த நின்னடியர்க் கருள்செயுமா
றனந்தமுக மருவா நிற்கும்
இறையுனக்கிங் கறுமுகமென் றரற்றுமனி
யாயமது மென்னே பன்னும்
மறைகளுக்கு முடிவுரைத்த சிவகுருவென்
றுள்ளாமன் மருண்டே யன்றே. (15)
*(கரத்தையுடையது கரி - துதிக்கையையுடைய யானை.)
விளக்கம்: வள்ளிப் பிராட்டியை வலப்பக்கத்தும் தெய்வயானைப் பெருமாட்டியை இடப்பக்கத்தும் விளங்கும்படி பேரருள் புரிந்து தீவினையை எஞ்ஞான்றும் விலக்கிவரும் நினது அடியவர்களுக்கு அருள் செய்வதற்காக பல திருமுகங்களைக் கொண்டு விளங்கும் முதல்வனாகிய உனக்கு ஆறு முகங்கள் உள்ளன என்று இவ்வுலகத்தில் புலம்புகின்ற அனியாயமும் என்னவோ? மெய்ப்பொருளைக் கூறும் வேதங்களின் முடிபைத் தக்கிணா மூர்த்தியாய் எழுந்தருளி உணர்த்தும் சிவபிரானுக்கும் குரு என்பதை நினையாமல் மருள்கொண்டு கூறுவதன்றோ அவ்வுரை.
திருப்பெறுநான் முகக்கிழவன் றிருநாத
னுவணைவளஞ் சேர்ந்தோர் மற்றும்
உருப்படைத்த பசுக்களுக்கெல் லாஞ்சுகுர்த
வபயகர முதவா நின்ற
அருட்படைத்த நினக்கனந்தங் கரங்களென
வுன்னாதீ ராறு கையென்
றிருப்புரைப்ப தவிவேக மன்றோவென்
னிதயநடு விருந்திட் டோனே. (16)
விளக்கம்: என் உள்ளத் தாமரையின் நடுவில் திகழும் கடவுளே! திருமகள் மகன் ஆகிய பிரமதேவன், திருமகள் கணவனாகிய திருமால், தேவலோக வாழ்வை நுகரும் தேவர்கள், மற்றும் அசுத்தமாயையால் உடம்பு பெற்ற பசுக்கள் ஆகிய யாவருக்கும் இன்பம் வழங்குகின்ற அபயகரம் காட்டி நிற்கும் அருள் நிரம்பிய நினக்கு எண்ணற்றகைகள் உள்ளன என்பது நினையாது பன்னிரண்டு கைகள் உள்ளன என்று ஒரு எல்லை கூறும் திறம் மடமையே ஆகுமன்றோ!
ஆறுமுகப் படுமுனநீ யைந்துமுகத்
துடனிலவி யழியா நூல்கள்
கூறுமுறைப் படியதன்பின் குறைவில்சிவ
சத்தியொடுங் குறைவொன் றின்றி
ஈறுமுத லொருவிடநின் றுருக்காட்ட
னாதியுன்னை யீசன் சேயென்
றூறில்லா துரைத்திடுத லுபசார
மல்லால்வே றொழுங்குண் டோவே. (17)
விளக்கம்: நீ ஆறுமுகங்கள் கொண்டு வெளிப்படுவதற்கு முன்னர் ஐந்து புலங்கள் கொண்டுவிளங்கி அழிவற்ற வேதங்கள், ஆகமங்கள் முதலிய கூறும் ஒழுங்கின்படி அதற்குப் பிறகு குறைவற்ற சிவசத்தியோடு யாதொரு குறைபாடும் இன்றி முடிவும் முதலும் இல்லாத திருமேனி கொண்டு காட்சிதரும் அனாதிப் பழம் பொருளாகிய உன்னைச் சிவகுமாரன் என்று எளிதாகக் கூறுதல் உபசார மொழி என்று கொள்ளப்படுவதேயல்லாமல் வேறோர் அமைதியும் உள்ளதா? இல்லை.
ஐந்துவகைப் படுபூத வியல்பினைக்கொண்
டளவிலுல காக்கி வாங்க
ஐந்துமுகத் துடன்விளங்கி யைந்தெழுத்தி
னுருவாகி யவற்றோ டுள்ள
பந்தமொன்று சால்குடிலை யருவமுக
மென்பதையும் பரித்தே மஞ்ஞை
உந்துமறு முகனான வாறெழுத்துக்
கிறையேயென்* னுறுவ றீராய். (18)
*உறுவல் = துக்கம்; பிங்கல நிகண்டு
விளக்கம்: மண், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களின் பண்பைக் கொண்டு எண்ணற்ற உலகங்களைப் படைத்தற்கும், ஒடுக்கற்கும் ஐந்து முகங்களோடு சிவபிரானாய் விளங்கி நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தின் வடிவமாகி அந்தஐந்து முகங்களோடு அருவமாய் நின்ற சாலபுடைய குடிலை என்னும் முகத்தையும் வெளிப்படக்கொண்டு மயில்மீது ஏறி வரும் ஆறுமுகனாகி சரவணபவ என்னும் ஆறெழுத்துக்கு இறைவனாகி விளங்குபவனே! என் துன்பத்தைத் தீர்த்தருள்.
பிருதிவிகம் வாயுவனல் வெளியருக்கன்
விதுவுயிராப் பிறங்கோ ரெட்டுந்
திருவுருவ மாமுனக்கென் றரியசைவ
நூனுவல றெளிவே யந்தச்
சரவசர விதப்பனைத்து நின்னனவே
யாகலினச் சார்நீத் தெந்தப்
பரசமய மும்வாழா தன்றோபொற்
சிகியூரும்* பவுள்சு ளானே. (19)
* புஷ்ய : என்னும் வடசொல் ஆதிவிருத்தி சந்தியிற் பௌஷ்ய; எனவாம். இது "பவுள்சு" என விகாரப்பட்டது. இதுதானே அருணகிரிநாதனாரது திருப்புகழில் "மறையும் பொய்ப் பவுஷோ டுழல்வது" எனுத் தொடரிலே "பவுஷூ" என்றும், தாயுமானாரது பாடவில் "பவிசுண்டு தவிசுண்டு" எனுந்தொடரிலே பவிசு என்றும் வருவதாயிற்று. புஷ்ய 'மங்களம்' என நிகண்டு விச்வப்ரகாசம் விளக்குநெறியானே இது, சம்பத்தெனும் பொருளுடைத்து.
விளக்கம்: அழகிய மயிலில் செல்வங்களின் இருப்பிடமாய் வருபவனே! நிலம், நீர், தீ, காற்று, வான், ஞாயிறு, திங்கள், உயிர் என்று விளங்குகின்ற ஒப்பற்ற எட்டுப் பொருள்களும் உனக்குத் திருவுருவங்கள் ஆகும் என்று அருமையான சைவ நூல்கள் கூறுதல் தெளிவான செய்தியே ஆகும். ஆகவே கூறப்பட்ட நிலைத்திணைப் பொருள், இயங்குதிணைப்பொருள் யாவும் உன்னுடையனவே. எனவே இந்த எட்டின் சார்பும் இல்லாமல் எந்தப் பரசமயமும் வாழ இயலாது என்பது உண்மையேயாகும்.
சகளமதி லயனரிருத் திரன்மயேச்
சுரனெனுநற் றகைத்தே வாகி
நிகரறுநிட் களசகளத் தோங்குசதா
சிவனாகி நிறைவா யெங்குந்
திகழருவ நிட்களத்தி னிமலவிந்து
நாதமுமை சிவமாய் நின்றே
இகபரத்து மிருந்தரசு புரிகுகநின்
னடிமதர்வி லெனைச்சே ரன்றே. (20)
விளக்கம்: உருவத் திருமேனி கொண்ட நிலையில் பிரமதேவன், விட்டுணு, உருத்திரன், மகேசன் என்று கூறப்படும் நல்ல தகைமையுடைய தேவர்களாகி, ஒப்பு இல்லாத உருவருவ நிலையில் உயர்ந்த சதாசிவனாகி, எங்கும் நிறைந்து விளங்கும் அருவ நிலையில் மலம் பற்றாத விந்து, நாதம், சத்தி, சிவம் என விளங்கி இவ்வுலகத்தும் வீட்டுலகத்தும் எக்காலத்தும் இருந்து ஆட்சி புரியும் குகப்பரமனே! உனது திருவடிச் செம்மாப்பில் என்னைச் சேர்ப்பாயாக.
ஒண்கலைப்பெண் கொழுநனுமோர் வெண்பரப்பிற்
றுயில்பவனு மொளிர்தீ நெற்றிக்
கண்படைத்து நல்லறத்தின் றெய்வமெனும்
வெள்விடையுட் கனிந்தூர் தேவும்
பண்படைத்த வாரணஞ்சொல் வண்ணமரு
ளெனுந்திரித்வ பாத்தி யந்தான்
விண்படைத்த வுனக்கல்லால் வேறுசொல்ல
றிரிபாகு மிளிர்வேன் மன்னே. (21)
விளக்கம்: ஒளிசெய்யும் வேலுடைய அரசே! ஒட்பம் உடைய நாமகள் காதலனாகிய பிரமனும், பாற்கடலில் துயிலும் நாராயணனும் விளக்கமுடைய நெருப்புடைய கண்ணை நெற்றியில் கொண்ட நல்ல தரும தேவதை என்னும் வெள்ளெருதை உள்ள மகிழ்ந்து ஊரும் சிவபிரானும் பண்டைய வேதங்கள் கூறும் வண்ணம் அருளால் உயிர்களை உய்விப்பதற்காக முத்தொழில் செய்யும் முத்தெய்வமாய் விளங்குபவராவர். சூரபதுமனால் அழிக்கப்பட்ட தேவலோகத்தை மீண்டும் பண்டுபோல் ஆக்கிய உனக்கே அங்ஙனம் முத்தெய்வமாய் விளங்கும் உரிமையுண்டு வேறு கூறுதல் திரிபுணர்ச்சியாகும்.
ஆடகப்பொன் னேபணிக ளாயிருக்கு
முறைமையைப்போ லான்மா வெல்லாம்
பாடுடைக்கோண் மாயையினைப் பலபேத
வுடலாகப் பரித்தே நிற்கும்
பீடிருக்கு நின்வடிவ நிட்களத்தி
லான்மாவாய்ப் பிறிதொன் றின்றிக்
கூடிநிற்ற லாலெவையு நின்வசமே
யாமயிற்கைக் குகனே யன்றே. (22)
விளக்கம்: கையில் வேலைப்பிடித்துள்ள குகப்பரமனே! ஆடகம் ஆகிய பொன்னே அணிகலன்களாக அமையும் முறையைப் போல எல்லா உயிர்களும் ஆற்றல் மிக்க உயிர்களைப் பற்றும் மாயையினைப் பலவகைப்பட்ட உடம்புகளாகக் கொண்டு விளங்குவன. பெருமை மிக்க நினது சொரூபலக்கணத்தில் பிறிதொருபொருள் ஆன்மாவாய் இல்லாமல் நீயே எல்லாப் பொருள்களிலும் கலந்து நிற்பதால் எல்லாப் பொருள்களும் உன் உடைமைகளே ஆகும்.
நித்தியத்தை யுடையபசுக் களைமாயை
கன்மமென நிகழ்ந்தே பற்று
நித்தியத்தை யுடையவிருண் மலப்பாச
மகற்றியின்ப நீங்கா முத்தி
நித்தியத்துக் கிடமதெனு நின்பதத்தி
லென்னைவைக்க நீவா ராயோ
நித்தியச்சொல் லொன்றைவந்து சொலப்பதியென்
றேயான நெடுவேன் மன்னே. (23)
விளக்கம்: உயிர்களின் பக்குவம் கண்டு எழுந்தருளி அழிவில்லாத ஒரு சொல்லை உபதேசம் செய்ய பதி என்று உள்ள, நீண்ட வேல் பிடித்த இறைவனே! அனாதியாகிய பசுக்கள் ஆகிய உயிர்களை மாயை எனவும், கன்மம் எனவும் தோன்றிப் பிடிக்கும் அழிவற்ற இருள்மலமாகிய ஆணவத்தின் பிணிப்பை விலக்கி இன்பம் ஒழியாத முத்தி என்னும் அழிவற்ற வாழ்வுக்கு இடமாய் இருப்பது எனப்படும் நின் திருவடியில் என்னைக் கூட்டுதற்கு நீ எழுந்தருளி வரமாட்டாயா? சொல்லியருள்.
உலப்புதிப்பி லாவுனடி யடைதலன்றிக்
கதிபிறிதொன் றுண்டே யென்று
பலத்துழல்வ தேபெருத்த வஞ்ஞான
மஞ்ஞானம் பரமார்த் தத்தைத்
தலத்திலுறை பசுக்கடரத் தளவாக
வருளவுருத் தானே காட்டு
நலக்கடவு ளேயெனது நவைதீர்க்க
வொகரமதி னடியா யன்றே. (24)
விளக்கம்: உலகில் உள்ள உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு பரம் பொருள் உண்மையை உணர்த்த திருமேனி கொள்ளும் நல்ல கடவுளே! பிறப்பும் இறப்பும் இல்லாத உன் திருவடி யடைவதே யன்றி வீடுபேறு ஒன்று தனியாக உள்ளது என்று பெரிதும் உழல்வதே பெருத்த மடமை. பெருத்த மடமை. எளியேனது குறை தரும்படி எழுந்தருளி மயிலின் மீது திருநடனம் செய்தருள்வாயாக.
பரங்கடலென் றதன்குமிழி யொளிர்பசுவென்
றதுதகரப் படர்நீ ரொன்றாய்த்
திரம்படல்போன் முத்தியென்று விளம்பினவர்
கருத்தைநனி தெளியா ரெல்லாம்
புரந்தரனச் சுதன்பணியுன் பதஞ்சேரன்
முத்தியெனப் பொருள்கா ணாதிங்
கருந்துயர மடைதலன்றிப் பெறும்பயனென்
னறுங்கடம்பை யணிமா தேவே. (25)
விளக்கம்: நறிய கடப்பமாலையணியும் மகாதேவனே! பிரமம் கடல். அதில் எழும் குமிழி விளங்குகின்ற உயிர். குமிழி உடைய அது நீரில் கூடி நீராதல் போல்வது முத்தி என்று கூறியவரின் கருத்தை நன்கு உணராதவர் எல்லாம் இந்திரன், திருமால் முதலியோர் வழிபடும் உன் திருவடியைச் சேர்தலே முத்தி என்று பொருள் கொள்ளார். அதனால் இவ்வுலகத்தில் அன்னோர் அருந்துயரமடைவரேயன்றி வேறு எப்பயன் காண்பர்.
பெரிதினுக்கெ லாம்பெரிய சிவனடிய
ருள்ளடக்கம் பெறுவா னென்னா
அரியவெளவை சொன்னபடி நின்னடிய
ருள்ளடக்க மாவா யன்னோர்
திருவடியை யடிமைமுடி பொருந்துமெனிற்
பிரமலிபி சிதைவா காதோ
சரவணசன் மயதுரிய வமலசிவ
னேகருணை தாராய் மன்னோ. (26)
விளக்கம்: சரவணனே! சத்துருவனே! துரிய அமல சிவனே! பெரிய பொருளுக்கு எல்லாம் பெரிய பொருளாகிய சிவபெருமான் தொண்டர் உள்ளத்தில் அடக்கம் ஆவான் என்று நின் திருமுன் பேரறிவுடைய ஒளவைப் பெருமாட்டி கூறியவாறு நீ உன் தொண்டர் உள்ளத்தில் அடக்கம் ஆவாய். அத்தொண்டர்களின் திருவடிகளை அடியேனது தலையானது சென்று பொருந்துமானால் பிரமனது எழுத்து அழிந்து போகாதோ? போகும். அப்பேறு அடைய நீ அருள் தருவாயாக.
தண்ணிருக்கும் பூங்கமல சுமனசமெல்
லாமுனிந்து தாதெய் யென்று
விண்ணடிக்க மண்ணடிக்கக் கிங்கிணியு
நூபுரமு மேலே தாங்கிக்
கண்ணிருக்கு மெய்த்தவசர் முன்னடிக்கு
நின்சரணென் கருத்தாய் நிற்கப்
பண்ணியவென் னோன்மை யென்கொல் குக்குடப்ப
தாகையுடைப் பரனே முன்னே. (27)
விளக்கம்: சேவற் கொடியுடைய பரமனே! அழகிய குளிர்ச்சியுடைய மலர்களைத் தனது அழகால் வென்று தா, தை, என்று விண்ணிலும் மண்ணிலும் ஒலியுண்டாகுமாறு கிண்கிணியும் நூபுரமும் அணிந்து ஞானம் நிரம்பிய உண்மைத்தவத்தரின் முன்பு நடனம் செய்யும் நின் திருவடியே என் நினைவாய் விளங்கும் பெருமைக்கு நான் முற்பிறவியில் செய்த தவம்தான் ஏதோ? அறிகிலேன்.
இனித்தவலர் முடித்தசுர ரெவர்க்குமருட்
குருவெனவுற் றிருந்தா யன்றி
உனக்கொருவ ரிருக்கவிருந் திலையாத
லாலுனடி யுளமே கொண்ட
கனத்தவடி யவருடைய கழற்கமல
முள்ளுகினுங் கறைபோ மீண்டு
செனிப்பதுவு மரிப்பதுவு மொழிந்திடுமே
குறக்கொடியைச் சேர்ந்திட் டோனே. (28)
விளக்கம்: கொடிபோன்ற குறத்தியாகிய வள்ளிப் பிராட்டியைக் கூடினவனே! தேன் நிரம்பிய மாலைகளை அணிந்த தேவர்கள் யாவருக்கும் அருள் புரியும் குருபரனாக நீ விளங்குகின்றாயே அல்லாமல் உனக்கு ஒருவர் குருவாக இல்லை. ஆதலால் உனது திருவடியை உள்ளத்தில் கொண்ட பெருமையுடைய அடியார்களின் திருவடித் தாமரைகளை நினைத்தாலும் குற்றங்கள் போய்விடும். இவ்வுலகத்தில் பிறப்பதும் சாவதுமாகிய துன்பமும் போய்விடும்.
சொலற்கரிய விழுப்பொருளென் றடிக்கடிசொல்
லாரணங்க டுதியே பண்ண
நிலைப்புடைய குருத்துவமு மருட்கடலு
மாரமுது நினைவோர் நெஞ்சஞ்
சலப்படவி டாதிருக்கை விளக்கறிவு
மாயிருக்குந் தனிவே லீசா
குலக்கடவு ளாயெனக்கன் றதிர்த்தபடி
யேயருள்செய் குணமாய் வந்தே. (29)
விளக்கம்: இப்படிப்பட்டது என்ற சொல்வதற்கு அரிய விழுப்ப முடைய பொருள் என்று வேதங்கள் பல முறை துதிக்க, நிலைபேறுடைய ஆசிரியத் தகைமையும் கடல் ஒத்த திருவருளும், இன்பமூட்டும் ஆரமுதும், தன்னை நினைப்பவர் உள்ளம் கலக்கமடையாமல் இருக்குமாறு தன் உண்மையை விளக்குகின்ற ஞானப்பொருளுமாயிருக்கும் ஒப்பற்ற வேலிறைவனே! எனது குல தெய்வமாகி எனக்கு நீ முன்பு கூறியபடியே நயந்து வந்து அருள் புரிவாயாக.
தமருகத்தை மூவிலையை யெழிற்பிணையைப்
பிடித்ததிருச் சயமா தேவன்
அமர்கயிலைப் பதியெமக்குத் திருக்கோயி
லென்னினுமெம் மடியார் நெஞ்சே
எமதிருப்பென் றெஞ்ஞான்று மிருந்தெங்கு
மேநிறைந்த விறையே யிந்தக்
குமரகுரு தாசனைக் கை விட்டுவிடா
மற்காத்துக் கோடி யன்றே. (30)
விளக்கம்: உடுக்கை, சூலம், அழகிய இளமான், ஆகியவற்றைக் கையில் தாங்கிய மேம்பட்ட வெற்றிப்பாடு உடைய மகாதேவராகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள கயிலை மலையே எமக்குத் திருக்கோயிலாகும். ஆனாலும் எமது அடியவர்களின் இருதயமே எஞ்ஞான்றும் யாம் இருக்கும் இடமாகும் என்று அங்ஙனம் இருந்து எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறைவனே!. குமரகுருதாசன் ஆகிய அடியவனைக் கைவிட்டு விடாமல் காத்தருளி ஆட்கொள்வாயாக.

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)