பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » நான்காவது மண்டலம் இசை

நான்காவது மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
10. அனவரத பாராயணாஷ்டகம்  

அனவரத பாராயணாஷ்டகம்

அனவரதபாராயணாஷ்டகம் - எப்போதும் பாடற்கரிய எட்டுப் பாடல்கள் என்று பொருள். வலப்பக்கமேனும், இடப்பக்கமேனும் சுற்றிப்படித்தால் ஒரே வகையாக நிகழும் ஆறறை அமைப்பே இதன் தனிச் சிறப்பாகும்.கணபதி, முருகன், சிவன், உமை - இந்நால்வரும் ஒருவரே, பேதம் எள்ளளவும் இல்லை எனக் கருதவேண்டிய அடிப்படையான மனோபாவம் அவசியம் வேண்டும் எனப் புலப்படுத்துவது அனவரத பாராயண அஷ்டகம்.

சிவன் முருகன் சிவன்
உமை விநாயகன் உமை


மன்றெனும் பதியுறை மழவிப முகவனு
நன்றெனும் பிரணவ வவனிளை ஞனுமறை
தொன்றெனும் பொருளெனச் சுடர்சிவ னுமுமையு
மொன்றெனும் பெரியவ ருயர்பதம் பணிவேன். (1)

விளக்கம்: ஞானத்திருமன்று எனப்படும் பொன்னம்பலத்தில் எழுந்தருளித்திகழும் இளமை நலம் பொருந்திய யானை முகத்தை உடைய விநாயகப் பெருமானும், எப்பொழுதும் மங்கள நாதமாக உள்ள பிரணவத்தின் வடிவாக உள்ள விநாயகப் பெருமானின் இளவலான குகப்பெருமானும், வேதாகமங்களில் புகழ்ந்து கூறப்படுகின்ற, முன்னைப் பழம் பொருளுக்கும் பழம் பொருளாகத் திகழ்பவனான சிவபெருமானும், அவ்வாறே சிவத்தோடு ஒத்துப் பழம் பொருளாக விளங்கும் உமையும் உண்மையில் ஒரே பரம் பொருளே; வேறுபட்ட தெய்வங்கள் அல்ல என உணரும் ஞானப் பெரியோர்களின் உயர்ந்த பெருநிலையில் விளங்கும் திருவடிகளை நான் வணங்குவேன்.

அள்ளுலை யாப்படை யறுமுக வனுமனந்
துள்ளுலை வோட்டுதண் சுடரணி பரமனும்
வள்ளுலை யாக்கிரி மகளுமைங் கரனுமெ
னுள்ளுலை யாப்பொரு ளொன்றெனத் தொழுதேன். (2)

விளக்கம்: கூர்மையில் சிறிதும் குறைந்து விளங்காத வேற்படையைக் கொண்டுள்ள அறுமுகப் பெருமானும்; மனம் துள்ளி அலைபாய்வதையும், வருத்தமுறுவதையும் தவர்த்து விடுபவனும், குளிர்ந்த பிறைச் சந்திரனை அணிந்திருப்பவனுமான சிவபெருமானும், அழகு அல்லது அருள்வளம் என்றும் குறைவு படாமல் உள்ள மலைமகளாம் உமையும், ஐந்து திருக்கரங்களை உடைய கணபதியும், என் உள்ளத்துள் எப்பொழுதும் அணையாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஒரு பரம்பொருளே எனக் கருதி வணங்குகிறேன்.

ஆதித்தன் மதியன லாகுமுந் நயனனஞ்
சோதித்தண் முகவுமை தோமிலைங் கரன்முரண்
காதித்தன் களிதரு கடம்பனொன் றெனுநிச
மோதித்தண் ணளிமிக வுறுதுயர் களைவேன். (3)

விளக்கம்: சூரியன், சந்திரன், அக்கினி இவர்களையே தனது மூன்று கண்களாகக் கொண்டிருக்கும் சிவபெருமானும், அழகிய சந்திரன் போன்ற திருமுகம் உடைய உமையும், வணங்குவாருடைய குற்றங்களைப் போக்கி விடுகின்ற ஐங்கரனான கணபதியும், பகையை வென்று தனது ஆனந்த நிலையை அடியார்க்கு அளித்தருள் கடம்ப மாலை அணிந்த கந்தப் பெருமானும், உண்மையில் ஒரு பரம் பொருளே எனும் உண்மையை ஓதுவதன் மூலம், இறைவனின் குளிர்ந்த கருணை மேன்மேலும் மிகுந்து விளங்க, பெருகி வரும் துன்பங்களெல்லாம் நீங்கி வாழ்வேன்.

மயல்களை சிவையையு மதகரி முகனையு
மயல்களை யயிலர சனையுமொன் னலர்கடம்
மியல்களை சிவனையு மொருபொரு ளெனினிடர்ப்
புயல்களை யருளுறு மெனநனி புகழ்வேன். (4)

விளக்கம்: அடியார்களின் மனமயக்கத்தை நீக்குகின்ற உமை அம்பிகையையும், மதம்வாய்ந்த யானை முகம் உடைய கணபதியையும், அன்னியம் எனப்படும் துவிதநிலையை அழித்து அத்துவிதப் பேற்றை அருளும் வேற்படை அரசனான குகப்பெருமானையும், பகைவர்களின் தீமைகளை நீக்கிவிடுகின்ற சிவபெருமானையும், ஒரு பரம் பொருளே எனக் கருதி வழிபட்டால், துன்பமாகிய புயற்காற்றை நீக்கிவிடுவதான அருளானது வந்து சேரும் என்று கருதி மிகவும் நன்றாகப் புகழ்ந்து துதிப்பேன்.

மாலொடு விதியறி யாதசெம் மரைமலர்க்
காலொடு நவிரமு மாரிறை களியுமை
வேலொடு வருகுக வேள்கள பமுகன்மெய்
வாலொடு மிளிரறி வினிதென மகிழ்வேன். (5)

விளக்கம்: திருமாலும், நான்முகனும் கண்டு அறியாத செந்தாமரை மலர் போன்ற திருவடியும், திருமுடியும் உடைய சிவபெருமான், சிவானந்த மயமான உமை அம்பிகை, அடியாரைக் காக்க எப்பொழுதும் வேலோடு விரைந்து வரும் குகப் பெருமான், யானைமுகனான கணபதி, எப்பொழுதும் தூய்மையாகவே திகழ்கின்ற ஞானமே வடிவான ஒரே பரம்பொருளே எனக் கருதி, இவ்வாறு பேதம் காணாமல் ஒன்றெனக் கண்டு வழிபடுவதே சிறந்தது எனக் கருதி மகிழ்ச்சி அடைவேன்.

திருவருள் புரியுமைங் கிலீந்திரி புரைபரை
குருவருள் புரிசெளங் கிரீஞ்சிவை குகனிட
ரொருவருள் புரிபத விநாயக னுயர்சிவ
னருவருள் புரிபதி யாயெனைக் காக்க. (6)

விளக்கம்: திருவருள் புரிகின்ற ஐம், கிலீம் எனும் பீஜாட்சரங்களுடன் விளங்கும் திரிபுரையும், பராசக்தியும், ஞான குருவாக எழுந்தருளி ஞானப் பாற்சோறு அளிப்பவளும் "சௌம்", "ஹ்ரீம்" எனப்படும் பீஜாட்சரங்களுடன் கூடியவளுமான உமையம்பிகை, குகப்பெருமான், வணங்கும் அடியார்களுக்கு நேர உள்ள இடையூறுகள் நீங்கும் வண்ணம் அருள்புரிகின்ற திருவடிகளை உடைய கணபதி, ஏனைய தெய்வங்களினும் மேம்பட்டு விளங்கும் சிவபெருமான் ஆகிய இந்நால்வரும், தடத்த நிலையில் இல்லாமல் சொரூப நிலையில் விளங்கி அருள்புரியும் ஒருபரம்பொருளே, இவ்வாறு ஒரே பரம் பொருளாக விளங்கி என்னைக் காத்தருள்க (பீஜாட்சரம் வரும் இத்திருப்பாடலை மிகவும் கவனத்துடன் பிழையின்றி ஓதுக).

வாணுதன் மடப்பிடி மலைப்புன மானலம்
பேணுதல் விழிச்சர வணபவப் பெருந்தகை
மாணுத னயனகங் கணபதி வளரனல்
காணுத லரனுமை யருளெனைக் காக்க. (7)

விளக்கம்: ஓளிபொருந்திய நெற்றியை உடைய தெய்வானைப் பிராட்டியார், வள்ளிமலைத் தினைப்புனத்தில் விளங்கிய வள்ளிநாயகியார் ஆகிய இருவரின் பேரழகையும் கண்டு களிக்கும் திருக்கண்களை உடைய சரவணபவ எனும் திருஆறெழுத்துக்குரிய குகப்பெருமான், பெருமை பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவரும் "கம்“ எனும் பீஜாட்சரத்துடன் கூடியவருமான கணபதி, வளர்கின்ற அக்கினி, நெற்றிக் கண்ணாகக் காணப்படும் சிவபெருமான், உமை அம்பிகை ஆகிய இந்நால்வரும் ஒரே பரம் பொருளே ஆதலின், அப்பரம் பொருளின் திருவருள் என்னைக் காப்பதாக.

பாமகண் மறைபுக ழோங்கண பதியெழிற்
சீமக ணனிபுக ழோநமச் சிவாயவை
பூமகள் புகழுமை பூம்புகழ்க் கவியிறை
யேமக கனவருள் காத்தருள் கெனையே. (8)

விளக்கம்: கலைமகளும் நான் மறையும் புகழ்கின்ற ஓங்காரப் பரம் பொருளான கணபதி, அழகு பொருந்திய திருமகள் துதிக்கும் திருவைந்தெழுத்துக்குரிய சிவபெருமான், நிலவுலகத்தாலும், திருமகளாலும் புகழப்படும் உமை அம்பிகை, அருட் பொலிவும் சந்த பொலிவும் மிகுந்த திருப்புகழ்ப் பாடல்களை அருளிய அருணகிரிப் பெருமானின் இறைவனான முருகப்பெருமான் ஆகிய இந்நால்வரும் ஒரே பரம் பொருளே ஆதலின், அப்பரம் பொருளின் பேரின்ப களிப்பை உள்ளத்தில் ஊற்றுவதான பெருமை பொருந்திய திருவருள் என்னை என்றென்றும் காத்தருள்வதாக.