பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » ஐந்தாம் மண்டலம் இசை

ஐந்தாம் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
16. பெரியசாமி  

பெரியசாமி


கங்கை வார்கிடைக் கடவுள் சேயெனுங் கந்த வேள்சய கீய சவ்விய
புங்கன் மாணவ கருளைம் பாதகம் புரிந்த வோர்மனு டற்கி ரங்கியப்
பங்கம் வீட்டிமுன் கொண்ட துண்டெனப் பகரன் மெய்யெனி லெளிய னேனமும்
மங்க மாய்த்தருள் புரிவை யேயருள் வரத சாகரப் பெரிய சாமியே. (1)

கங்கையைச் சடைமுடியிற் கொண்டுள்ள சிவபெருமானின் திருக்குமரன் எனப்படும் கந்தவேள் பெருமான், ஜைகீஷவ்வியர் எனும் முனிவரின் மாணாக்கர்களுள் ஒருவன் ஐம்பெரும் பாதகச் செயல்களையும் செய்துவிட, அவனுக்காக இரக்கப்பட்டு, அப் பாதகப்பயன் சிறிதும் அவனைப் பீடிக்காதவாறு தீவினைப்பபனை அழித்து அவனை ஆட்கொண்ட கருணைச் செயலும் உண்டு என நூல்களில் கூறப்பட்டுள்ளது உண்மை எனின் எளியேனின் தீவினைப்பயன்களும் தேய்ந்தழியும் வண்ணம் அருள்புரிய மாட்டாயோ? அருள்மயமான வரங்களை மிகுதியாக வழங்கும் கருணைக்கடலாக உள்ள பெரும்பெயர் இறைவ!

சிந்தற் குந்தனு வாவிக் குந்தடச் சிகரிக் குஞ்சிறு திடருக் குங்கடத்
தந்திக் குங்குழைப் பன்றிக் கும்வியன் றாழ்வெம் மட்டம்மட் டெற்கு நின்னருள்
சிந்திக் கும்பெரி யர்க்கு முண்டிதிற் சிறிய னுய்யுமா றெங்ங னெற்கினி
வந்திக் கும்முனை யன்றித் திக்கிலை வரத சாகரப் பெரிய சாமியே. (2)

பெரிய கடலை நோக்க, சிறுகுளத்துக்கும், பெரிய மலையை நோக்க, சிறிய மணல்மேட்டுக்கும், மதம் வாய்ந்த யானையை நோக்க இழிந்த பன்றிக்கும் இடையே எவ்வளவு தாழ்வு உண்டோ அவ்வளவு தாழ்வு, நின் கருணையையே சிந்திக்கும் பெரியோர்க்கும் எனக்கும் இடையே உள்ளது. இப்படி இருக்கும்போதுயான் உய்யும் வகை எப்படி? உலகெல்லாம் துதிக்கும் உன்னையன்றி எனக்கு இனி வேறு கதிஇல்லை. வரத சாகரப் பெரிய சாமியே!

அனலிக் கும்மினும் புழுவுக் கும்மல யசத்துக் குங்குழை யளக்கர்க் குஞ்சுக
மனுவுக் கும்பிற மறைகட் குமுள்ள மாற்ற மெம்மடங் கம்ம டங்கருட்
டனுவர்க் குஞ்சிறி யவனுக் குஞ்சொலத் தடையொரற்பமு மிலையு னைப்பணி
மனமுற் றுங்கொனுந் தளர்வுத் றோய்வன்கொல் வரத சாகரப் பெரிய சாமியே. (3)

சூரியனை நோக்க மின்மினிப் புழுவுக்கும், நறுமணம் மிகுந்த தென்றலை நோக்கத் தீநாற்றச் சேற்றுக்கும், சுகநிலைதரும் மகாமந்திரத்தை நோக்க, உலகியல் தொடர்பான பிறமந்திரங்களுக்கும் இடையே எவ்வளவு தாழ்வு உண்டோ அவ்வளவு தாழ்வு அருள்மயமான திருமேனி உடையவர்களை நோக்க, சிறியனாகிய எனக்கு உள்ளது. இவ்வாறு கூறத் தடை எள்ளளவும் இல்லை. உன்னையே பணியும் உள்ளம் எனக்கு வாய்ததும் நான் வீணே தளர்ச்சியுற்று அழிந்து விடுவேனோ? வரதசாகரப் பெரிய சாமியே.

அரிய புத்தியின் மிருக மொப்பவிங் கருந்த லும்பொருந் தலுமின் பாமெனத்
திரியுன் மத்தரைப் பொருவ நிற்பணி சிறிய னுந்திரிந் திடின ருட்டிறன்
விரிம தர்ப்பினர் பொலிவி யக்கமெவ் விதமு றுஞ்சுக முதவு நல்லருள்
வரிய ளித்தருள் புரிதி யொப்பிலென் வரத சாகரப் பெரிய சாமியே. (4)

பெறுதற்கரிய அறிவுப்பேறு சிறிதும் இல்லாத மிருகத்தைப் போன்று உ ணவு உண்பதும், உடற்சேர்க்கையுமே இன்பம்தருவனவாம் எனக் கருதித் திரியும் வெறியர்கள் உ ள்ளனர். அவர்களைப் போன்று சிறியனாகிய யானும் திரிந்தால், உன் திருவருள் செல்வத்தைப் பெற்றுப் பேரின்பத்தில் திளைக்கும் அடியார்களின் சீலமும் நெறியும் எனக்கு எவ்வாறு வாய்க்கும்? ஆனந்தப் பேற்றைத் தரும் அருட்கடலை எனக்கு அளித்து அருள்புரிக. எனை ஆள உள்ள ஈடிணையற்ற வரதசாகரப் பெரிய சாமியே!

சுடரின் மேலுமெ லுந்துப் பாச்சியஞ் சொரிய வஃதவிந் திடுவ துண்டெனின்
விடய மோகமுந் தமசு ளேற்கற விதியுண் டாமெனப் புகறலாமைய
கடவு ளாயநின் கருணை நோக்கமென் கண்ணி னுந்தடை யாகு மேற்றொடர்
மடமை வீடவு மிடனுண் டோசொல்லு வரத சாகரப் பெரிய சாமியே. (5)

சுடர்விட்டு எரியும் நெருப்பின்மேல் தூய நெய் சொரிந்தால் அந்நெருப்பு அவிந்து தணிவது உண்டு எனின், உலக விடயங்கள்பால் எனக்குள்ள மோகமும் அறியாமை மிக்க என்னிடமிருந்து அறவே விலகி நிற்க ஒரு நியாயம் உண்டு எனக் கூறலாம். ஐயனே! அனைத்துயிர்க்கும் உரிய கடவுளாகிய உனது கருணைநோக்கம் என்மீது படாமல் தடைபட்டு நிற்குமேயானால், தொடர்ந்து நிற்கும் என் அறியாமை இருள் அழிந்துபட இடமும் உண்டோ? வரதசாகரப் பெரிய சாமியே! கூறி அருள்.

தக்க னொத்தணங் கொழித்து ஞற்றுநற் சகல கன்மமுங் கவலை யேதரும்
பக்க மிக்குடைத் தண்டி போலரும் பரத்தை யேமுனிட் டுஞற்று பாவமும்
பொக்க மற்றதைத் தருமென றாலருட் புரிவி யாதினும் பெரிது நல்லருள்
மக்க ளியாவர்க்கு முரிய வஃதளி வரத சாகரப் பெரிய சாமியே. (6)

தக்கனைப் போன்று தெய்வத்தை நீத்தும் நிந்தனை செய்தும் செய்யும் செயல்கள் அனைத்தும் துன்பத்தையே தரும். அன்புமிகவும் உடைய தண்டியடிகள் போன்று பரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் பாவச் செயல்களும் உண்மையும் உறுதியுமான பயனைத்தரும். நினது அருள்நெறியில் நடைமுறை இப்படி இருப்பதால் அன்புநிலையே யாவற்றினும் பெருமை வாய்ந்தது என உணரலாம். மங்களகரமானஅருள்பேறு பெற்றுள்ள பெரியோர் அனைவர்க்கும் உரிய தூய அன்புநிலையை எனக்கு அளித்தருள், என் வரத சாகரப் பெரியசாமியே!

சகுன மானெழின் மீன்மண் டூகமஞ் சலிகை போல்விணிற் சரித்துங் கானளிர்
மிகும றன்மகிப் புடைவ திந்துமுவ் வியத மாநித நான்று நிற்றலின்
தகுதி யாயநின் றனைய றிந்துயுஞ் சரத வின்பிலொ ரிறையு மெய்துமோ
மகுட வானவர் முதல்வ வென்னைய வரத சாகரப் பெரிய சாமியே. (7)

வானத்தில் பறவையும் காட்டில் மானும் நீரில் மீனும் நிலப்பரப்பில் தவளையும் சஞ்சரிக்கின்றன. இவற்றைப் போன்று வானிலும், கானிலும், நீரிலும், பூமியிலும் அலைந்து திரிந்தும், வௌவாலைப் போன்று தலைகீழாகத் தொங்கி தவம் என்ற பெயரில் தம்மை வருத்திக் கொள்வோர் தகுதிமிக்க நின்னை உ ள்ளவாறு உணர்ந்து உண்மையான பேரின்பத்தில் சிறிதளவேனும் பெறமுடியுமோ? இப்படியெல்லாம் வருத்திக் கொள்வதால் இறையின்பம் பொருந்தாது. உன்னதமான தேவர்களுக்குரிய முதல்வனே! என் ஐயனே! வரத சாகா பெரிய சாமியே! உன்னை உணர்ந்து இன்பநிலையை அடைந்து உய்யச்செய்யும் அன்புநிலையைத் தந்தருள்.

ஊன்பு ரத்தொரு வற்குன் மெய்யரு ளுறுமெ னிற்பிற வொருவ னைத்தொடல்
தேன்க டுக்குநன் மொழியு லோசனஞ் சிந்தை கொண்டிருள் போக்கி யாள்வலி
தான்பெ ருத்திடு மாயி னின்னொரு தரிச னந்தனிற்பாச நீக்கமும்
வான்க ளிப்புநன் கெய்தற் கையமென் வரத சாகரப் பெரிய சாமியே. (8)

பூதஉடல் கொண்டுள்ள ஒருவனுக்கு நினது பூரணமான மெய்யருள் பொருந்தும் போது அவன் தனது பரிசத்தாலும் (தொடுதல் என்பதாலும்) உபதேசத்தாலும் பார்வையாலும் மனத்தாலும், சீடர்களின் அறியாமையைப் போக்கி ஆட்கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே அவனுக்கு வந்துவிடுகிறது எனில் உனது தரிசன மாத்திரத்தில், - உன் சந்நிதிக்கு வந்த அளவிலேயே -பாசநீக்கமும் பேரின்பப் பேறும் அடைவதற்கு ஐயப்பாடு என்ன? என் வரத சாகரப் பெரியசாமியே!

சோக மென்றசொற் சொலலினாலுடற் சுமையுளோனொரு வனருந் தேவுனோ
டேக மாங்கதி யெய்து வேனென வெணலி னுஞ்சம னிருணி லத்திடைப்
போக னீங்குதல் பெரிதெ னத்தனுட் புந்தி செய்தனன் கென்றிவ் வானியம்
மாக ரிப்புறு வேனைக் காவுதி வரத சாகரப் பெரிய சாமியே. (9)

அனுபவ பூர்வமான ஐக்கிய பாவனை இல்லாமல் "ஸோஹம்" (அவனே நான்) என்று சொல்வதால் மட்டுமே, பூத உடலோடு கூடியுள்ள ஒருவன் "அரிய தெய்வமாகிய உ னனோடு ஒன்றாகி, உனக்கு நிகராக விளங்கும் நிலையை அடைவேன்" என விபரீதமாக எண்ணுவதைக் காட்டிலும் "யமனுலகு சென்று மீளுதல் பெருமை உடையதாகும்" என எண்ணுதல் பெரிதும் நன்றே. இந்நாளில் பெரிதும் அச்சம்கொண்டு வருந்தும் என்னைக் காத்தருள். அடியார் பொருட்டு வெளிப்பட்டு அருளும் வரதசாகரப் பெரிய சாமியே!

ஈச போற்றிநன் னேச போற்றியெம் மிறைவ போற்றியெம் பெரும போற்றிசூர்
நாச போற்றிமெய்ப்போச போற்றியொர் நாத போற்றியென் றோதும் வாய்ப்புடைத்
தாச ரேத்தரு ணாச லப்பெயர்ச் சாது பாத்தலை வாவு னைப்புணர்
மாசி லாக்கதி வேண்டு மாண்டருள் வரத சாகரப் பெரிய சாமியே. (10)

ஈசனே போற்றி! நேசனே போற்றி! எம் இறைவனே போற்றி! எம் பெருமானே போற்றி! அசுரர்குலத்தை அழித்தருள்பவனே போற்றி! உண்மையான பேரின்பமயமானவனே போற்றி! ஒப்பற்ற நாதனே போற்றி! - என்றெல்லாம் துதிக்கும் பேறு பெற்றுள்ள அடியார்களால் புகழப்படும் அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழ்ப் பாடல்களுக்குரிய தனித் தலைவ! உன்னுடன் இரண்டறக் கலந்திருக்கும் மாசற்ற பெருநிலையை வேண்டுகிறேன். ஆட்கொண்டு அருள்! வரத சாகரப் பெரிய சாமியே!