பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள்

பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள்


தேவர்களைக் குறித்த வியாசம்

தேவர்களைக் குறித்த வியாசம்

மறுநாட் காலையில் விஷயப்பிரியனாகிய சிஷியன் விவேக பூரணனாகிய குருவைத் தரிசித்து வணங்கி இதைப் பேசலுற்றனன்.

சிஷியன்: சென்றதினம் தேவர்கள் பதியில் வாழுந் தேவர்களென்று தாங்க ணுவன்றதற்கு விவர மென்னை?

குரு: அமரர் கற்பத்திற்கு ஆண்டகையாகிய ஆகண்டலன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களும், சத்தியலோகத்திற்குத் தலைவனாகிய தமனியனா தியரும், வைகுந்த பதவிக் கரையனாகிய மாதவனாதியரும், உருத்திரபதிக்கு நாயகனாகிய உருத்திரன் முதலியோரும், மகேஸ்வரபதிக்கு அதிபனாகிய மகேஸ்வரன் முதலியோரும், சதாசிவபதிக்கு இறையாகிய சதாசிவன் முதலி யோரும், மற்றுந் தெய்வீகத்தன்மை பொருந்தினோரும் தேவர்களாவார்கள்.

சிஷி: அந்தத் தேவர்கள் அப்பதிகளில் எதற்காக வேற்பட்டிருக்கின்றனர்?

குரு: சர்வேஸ்வரனுடைய பஞ்ச கிருத்தியங்களாகிய (1) சிருஷ்டி, (2) திதி, (3) சங்காரம், (4) திரோபவம், (5) அனுக்கிரகம் என்னுமைந்து தொழில்களால் சகல லோகங்களையும் பேதாபேதமின்றி நீதியாய் நடாத்த வேற்பட்டிருக்கின் றனர்.

சிஷி: அவ்வைந்து கிருத்தியங்கட்குஞ் சர்வ வல்லமையுடைய சர்வேஸ்வர னொருவன் நித்தியமாயிருந்து கொண்டிருக்க வேறு தேவர்களிருந்து நடாத்த வேண்டிய தவசியமின்றே. ஆதலால், அவ்வித முண்டென்று தாங்கள் தீர்மானி க்கிற அத்தேவர்களிருக்கிறார்களென்பதை நம்பற்கு நியாயமென்ன?

குரு: நீ, எதைத்தான் இலேசாய் நம்புகிறாய்! இதை நம்பற்கு ஆயினும், நின் சந்தேக விபரீதத்தைப் பரிகரிக்க வேண்டியது நங்கடமைதான். கேள்; ஓர்நகரத்திற் கதியனாயிருந்து அந்நகரைத் தன்னைக்யமாயாளு மரசன் தன்னிடத் துளா ரெவரையு *நிஷேதஞ் செய்து ஏகனாயிருந் தெத்தொழில் புரிவன் எத்தன்மை யாவன் என்பதை யுற்றுணர்வாயேல், யாஞ்சொற்றது மித்தன்மைத் துளவென் றருத்தமாமன்றோ? ( * நிஷேதம் - விலங்கு )



சிஷி: யானைக்கும் பானைக்குஞ் சரியென்று தீர்த்தாற் போற்றீர்க்கின்றீர்கள். அவ்வரசனைப் போலவா தேவன்? அவர் சர்வ வல்லமை யுடையவராயிற்றே; அவருக்கு வேறொருவர் துணை யாதுக்கு?

குரு: சர்வவல்லமை யுடையவரேனும் பஞ்ச கிருத்தியங்களை அவர் நேரே வைத்துக் கொள வேண்டிய தவசியமின் றென்பதாய்த் தேவர்களுடைய தீர்மானத்திற்குள் வைத்திருக்கிறா ரென்பதற்குப் போந்த பிரமாணங்க ளுண்டு. அவற்றுளொன்றைப் பகர்கின்றோம். நம்முடைய சரீரத்தில் ஹிருதயமானது பிரதானமா யிருந்தும், அஃதொரு கருமஞ் செய்க வெனின் இந்திரியங்களை யேவல்கொண்டு முடிக்கின்றது. இஃது கிரம்முறையா யிருப்பதுபோலச் சர்வேஸ்வரன் தன்னாலாகு மனைத்திற்குந் தலையாயிருந்து கொண்டு தன்னீதி வழி பிரேரித்தல் தக்கது.

சிஷி: அத்தேவர்களைக்கொண்டு அவ்வைந்து தொழிலும் பிரேரிக்கப்படு வதேல், அவ்வைவர்களாகத் தானேயிருக்க வேண்டும்? அபாரியா யோதக் காரணம் யாது?

குரு: ஒவ்வொரு காரியம் புரிதற் கொவ்வொரு வித எண்ணம் வேண்டுதல் போல, அவரவர்களாளுகைக்குரிய பரிக்கிரக வினோத விளையாட்டுக்குத் தகுமாறு அப்படிப் பல தேவர்களு மேற்பட்டனர்.

சிஷி: அப்பஞ்ச கர்த்தாக்கள், எத்திறங் கொடு அத்தொழிலியற்று கின்றனர்?

குரு: அஃது, எம்பிரானாகிய ஈஸ்வரன் றிறங்கொடு.

சிஷி: அப்படியாயின், அவர்களைத் தேவர்களென் றுயர்த்துவானேன்?

குரு: சித்ரூபமாய் விளங்கிய ஈஸ்வர பிரதிபிம்பர்களாகிய பஞ்சகர்த்தாக்கள் ஜாக்ர, சொப்பன, சுழுத்தி, துரிய, துரியா தீதம்வரையில் ஒன்றிக் கொன்று விசேஷித்து காலத்திரய வர்த்தமானத்தோடு பிரபஞ்ச சகிதமாயும், பிரபஞ்ச ரகிதமாயும் விளங்கா நிற்பதால் அவ்வாறுயர்த்தலாயிற்று.

சிஷி: சகல ஜீவான்மாக்களையும் இப்போழ்து நாம் பார்த்தமட்டில் மனிதருக்கு விசேஈமாய் ஒன்றுங் காணப்படவில்லை. அப்படிக்கான மனிதருக்கே காலத்தி ரயம் பிடிபடாமலும் மேற்கூறிய விசித்திர சங்கதிக ளின்னதென் றுணரத் தகாம லுமிருந்தக்கால் தாங்கள் பகர்ந்த துண்மையென் றெவ்வாறு நிச்சயிக்கலாம்?

குரு: 'எல்லா மிருட்டென் றெண்ணிக் கொண்டானாம், பொல்லா வினைசேர் பிறவிக்குருடன் ' , என்றது போல, நினக்கப்படி பட்டவைகள் தென்படாதிரு க்கின் ஏனையோர்கட்கு ம்பபடியிருக்குமென் றெண்ணுவது தகுதியன்று. மனிதர்கள் செய்யக்கூடியதை மட்டும் மனிதர்கள் செய்து முடிக்கலாமே தவிர, அத்தேவர்களைப்போற் சாதாரணமாய் விசித்திரவிலாசம் புரியத்தரமில்லை. ஆனால், மனிதர்களில் ஜோதிர்ஷ நூன்மூலமாய்க் காலத் திரயத்தையும், யோகபூரணத்தால் அஷ்டமாசித்தி முதலானவைகளையும் தெரிந்தனுபவிக்கத் தக்கவர்களாவார்கள். மற்றையோர்கட்கவைதெரிய வெளிதன்று.

சிஷி: ஜோதிர்ஷம் அஷ்டமாசித்தி முதலானவைகளை, மனிதர்கள் தெரிந்தனுப விப்ப திருக்கட்டும். தேவர்களிருந்த துண்மையா யிருந்தாலும், இவ்வுலகஞ் சிருஷ்டிக்கப்பட் டெவ்வளவோ அளவிறந்த காலங்களா யிருக்க வேண்டும்; ஆயின், அவர்களிது காறு மிறப்பின்றி யிருக்கிறார்களெனுங் கூற்றை யேற்றுக் கொள்ளலாமோ?

குரு: அக்கோ! அக்கோ! ஈதென்னவநியாயம்; தேவர்கள், சத்தியமான பகவானு டைய ஐங்கிருத்தி யங்களை அண்ட பிண்ட முள்ளளவும் அவரவர்கட் கேற்பட்ட தேவவயது நூற்றுக்குக் குறைவின்றி நிலை பரமாயிருந்து நடாத்தும்படி நியமிக் கப்பட்டவர்களாயும், தன்னையுந் தலைவனையு மறிவதென்னுந் தத்பத்தைச் சார்ந்தவர்களாயு மிருக்கிறார்கள். அவர்களையும் நரர்களை மான நுவலில், அறிவீனமன்றோ?

சிஷி: அவர்க ளிருக்கிறார்களெனற்குப் பிரத்தியக்கப் பிரமாண மென்னை?

குரு: பஞ்சபூத பௌதிகப் பிரவிருத்திகளும் அவைகள் தத்தம் ஆணை கடவா தியங்குகின்றதுமே பிரத்தியக்கப் பிரமாணம்.

சிஷி: இவைகளெல்லாம் 1 - ஆவது வியாசத்துழி கடவுளருளா யியம்பியதாங்கள், ஈண்டு தேவர்களருளா யியம்புவ தென்னை?

குரு: இவ்வியாசத்தின் 6 - வது வினாவுத்தரம் இதற்குப் பொருளா யிருப்பதால், இவ்வினா வீணேயாகும்.

சிஷி: இந்த வியாசத்தின் 1 ஆவது வினாவிடையிற்சொன்ன பலதேவர்களில் சிருஷ்டி யாதி பஞ்ச கிருத்தியங்களையும், முறையே பிரேரிக்குந் தேவர்கள் பெயரையும், அவற்களுற் பனமான விவரத்தையும் லக்ஷணத்தோடு விளங்கி யருண்மின்!

குரு: ஆன்மாக்கள் பொருட்டு ஜட சிருஷ்டி செய்பவருக்குப் பிரமா வென்றும், அவைகளைக் காத்தலாகிய திதி புரிபவருக்கு விஷ்ணு வென்றும், அவைகட்குள வினை தீர்த் தழித்தலாகிய சங்காரம் நடாத்துபவருக்கு உருத்திர னென்றும், அவ்வினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் ஆன்மாக்களை யமிழ்த் துதலாகிய திரோபவம் வழங்குபவருக்கு மகேஸ்வரனென்றும், அவைகட்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலாகிய அனுக்கிரக மருள்பவருக்குச் சதாசிவ னென்றும் பெயர். இவ்வைவரையுமே பஞ்ச கர்த்தாக்களென்றும், பஞ்சமூர்த்திகளென்றும், பஞ்ச தெய்வங்களென்றும் பகரப்படும்.
இவர்க ளுற்பன மெப்படியெனில், 1 - ஆவது ஆகிய பிரம்ம நியமப் படத்தில் விவரித்தப்படி விட்சேபசலனமே சுபாவமான மாயாந்தகாரத்தில் சப்த தன்மாத்திரையான அரூப ஆகாய முண்டாயிற்று. அதிற் பிரதி பிம்பித்த ஈஸ்வரனே சதாசிவன். அரூப ஆகாயத்தில் சப்தத்துடன் பரிச தன்மாத்திரையா யான வாயுவுண்டாயிற்று. அதிற் பிரதிபிம்பித்த ஈஸ்வரனே மகேஸ்வரன். ரூபா ரூபமான அவ்வாயுவில் சப்த பரிசத்துடன் ரூபதன் மாத்திரையான தேயு வுண்டா யிற்று. அதிற் பிரதிபிம்பித்த ஈஸ்வரனே உருத்திரன். ரூப முள்ள தேயுவில் சப்த பரிச ரூபத்துடன் ரச தன்மாத்திரையான அப்புவுண்டாயிற்று. அதிற் பிரதிபிம்பி த்த ஈஸ்வரனே விஷ்ணு. ரூப முள்ள ஜலமாகிய அவ்வப்புவில் சப்த பரிச ரூப ரசத்துடன் கந்ததன் மாத்திரையான பிருதிவி யுண்டாயிற்று. அதிற் பிரதிபிம்பி த்த ஈஸ்வரனே பிரமா. இங்குரைத்த பூதிய மைந்தும் காரணபூத மாகுமென்பர் கற்றுவல்லோர். இப்படிப் பஞ்சபூதாத்மகமாக வுண்டான பஞ்ச கர்த்தாக்கட்கு முறையே ஜாக்ரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்தவஸ்தைகளு முள.
இந்தப் பஞ்சமூர்த்தங்களும் ஈஸ்வரனுக்குப் பிரதான ஸவரூபங்களாகும். அவற்றுள் ஈஸ்வர ஸ்தூல சரீர முழுதும் ஜாக்ரமாயிருத்தலால், அதைப் பொருந்திய ஈஸ்வரனை வைஸ்வாநர னென்றும், அதிஷ்டான சைதன்யம் பிரமாவென்றுஞ் சொல்லலாம்.
ஈஸ்வர சூக்கும சரீரமுழுதும் சொப்பனமாயிருத்தலால், அதைப் பொருந்திய ஈஸ்வரனைச் சூத்திராத்மா வென்றும், அதிஷ்டான சைதன்யம் விஷ்ணு வென்றுஞ் சொல்லலாம்.
ஈஸ்வர காரணசரீர முழுதும் சுழுத்தியாயிருத்தலால், அதைப் பொருந்திய ஈஸ்வரனை அந்தரியாமி யென்றும், அதிஷ்டான சைதன்யம் உருத்திரனென் றுஞ் சொல்லலாம்.
இந்தப் பிரகாரம் மூன்று சரீரத்திற்கும் மூன்று கர்த்தாக்கள் அதிஷ்டான சைதன் யமா யிருக்கிறதில், முற்கூறிய மகேஸ்வரன் சதாசிவன் என்ற இரண்டு கர்த்தாக் களும் ஈஸ்வர காரணசரீரமாகிய சுத்த மாயையில் அந்தரங்கமாய் வாயுவைப் போலும் ஆகாயத்தைப்போலும் கலந்து நிற்பவர்களா யிருக்கிறார்கள்.

சிஷி: நன்று - அவயவசொரூப மல்லாத ஜலம், அக்கினி, ஊதை, சூரியன் முதலிய கிரகங்கள் என்பவைகளைத் தேவர்களென்றும், மண்ணாகிய பூமியைப் பூமாதேவி யென்றும், தண்ணீராகிய கங்கையைக் கங்கா தேவி யென்றும், வெளி யாகிய ஆகாயத்தை ஆகாய வாணி யென்றும் அவயவ சொரூபப்படுத்திச் சொல்லுவ தென்னை?

குரு: அத்தோற்றப் பொரு ளொவ்வொன்றுக்கு முரிய அதி தேவதைகட்கு அந்தந்தத் தானங்களும் அந்தந்தப் பொருள்களுஞ் சுவதந்தரமா யிருத்தலால், அந்தந்தப் பெயர்கொடு அந்தந்தத் தேவதைகட்கே சொல்லப்படுகின்றன.

சிஷி: ஆயின், பிருதிவியாகிய மண்; பிரம தத்துவமென்றும், அப்புவாகிய ஜலம்; விஷ்ணு தத்துவமென்றும், தேயுவாகிய அக்கினி; உருத்திர தத்துவமென்றும், வாயுவாகிய ஊதை; மகேஸ்வர தத்துவமென்றும், ஆகாயமாகிய வான்; சதாசிவ தத்துவமென்றும் தாங்கள் பயிற்றியதற்கு விரோத மாய்: இஞ்ஞான்று மண்ணைப் பூமிதேவியென்றும், ஜலத்தை வருணனென்றும், கங்கையென்றும், அக்கினியை அனற்கடவுளென்றும், ஊதையை வாயு தேவ னென்றும், விண்ணை * ஆகாயவாணியென்றும் பொருள்பட விகற்பமாய்ச் சொல்லுவ தென்ன? ( * ஆகாய வாணியென்பது அசரீரி வார்த்தை: வாணி = வார்த்தை )

குரு: அந்த ஐந்து பூதாத்மகமான பஞ்சகர்த்தாக்களின் காரண தோற்றமாகிய வஸ்துக்களில் அவர்களே காரணமாயும் பிற தேவதைகள் இரகசியமான சூட்சும மாயும் வியக்தமான ஸ்தூலமாயுமிருப்பதால், அவ்விருவகையாயும் விளம்பப் பட்டன. இதினால், அவ்வதி தேவதைகளும் பிரதிதேவதைகளாய் விளங்கிற்றெ னற்குப் - பூமாதேவி பிரவிருத்திசத்தியாதலால் அஃது பிரம தத்துவமென்றும், கங்காதேவி வருணனுடைய சக்தியென்பது தொட்டு அவ்விரு வகையு மொரு வகை யாகுமென்றும், அஃது இரக்ஷகசத்தியாதலால் விஷ்ணு தத்துவமென்றும், அக்கினி சங்காரதேவதை யாகையால் அஃது உருத்திர தத்துவமென்றும், வாயு துரியாவஸ்தையாகிய மயக்கு தேவதையாகையால் அஃது மகேஸ்வர தத்துவ மென்றும், ஆகாயம் சப்த தன்மாத்திரையாகையால் அதற்கு அதற்கு ஆகாய வாணி அசரீரிவாக்குத் தெய்வமென்னும் அபிதானங்கள் வந்தனவென்றும், அஃது நிர்மல ஆகாயத்தைப்போல தெளிவைக் கொடுக்குந் தெய்வமாதலால் சதாசிவ தத்துவமென்று முணரக் கடவாய்!

சிஷி: சரி, ஈஸ்வர பிரதிபிம்பர்களான தேவதைகளின் தன்மையை யுணர்ந்தேன். அமரர் கற்பத்திற்கு ஆண்டகையாகிய ஆகண்டலன் முதலிய முப்பது முக்கோடி தேவர்களுமென்று இவ்வியாசத்தின் றுவக்கத்தில் தாங்களோதிய விவரமென்ன?

குரு: ஜீவர்களியற்றும் நல்வினைப் பயனுக்குத் தீவினைப் பயனுக்குந் தக்க பலனை யளிக்கவெனவும், படைக்கப்பட்ட தேவர் முனிவர் முதலியோரைப் பாதுகாத் திரக்ஷிக்கவெனவும், அரசனாகப் பிரமதேவனா லுண்டாக்கப்பட்ட இந்திரனென்னும் ஆக்குவயத்தையுடைய தேவனையே - ஆகண்டலனென்றும், அவரோடு அவராளுகைக்குட்பட்ட தேவர்களையே 33 கோடி தேவர்களுமென் றுஞ் சொற்றதாகும்.

சிஷி: சிருஷ்டி கர்த்தாவாற் படைக்கப்பட்ட தேவர் முனிவர் முதலியோரை யிரக்ஷிக்க இரக்ஷக கர்த்தாவாகிய விஷ்ணுவும், பாவ புண்ணியங்கட்குரிய பலனையீய மேன்மூன்று கர்த்தாக்களும் நிலையாயிருக்க, இந்திரனைப் பொறுத்துச் சொல்லுவதென்னை?

குரு: இரக்ஷா பெருமானாகிய ஸ்ரீ - விஷ்ணுவே அவ்விந்திரனாய்ப் பிரதிபிம்பி த்திருக்கின்றார். பஞ்ச கர்த்தாக்கள் அவரவர்கட்குரிய நன்மையைப் புண்ணிய ஜீவர்கட் குதவுவதேயல்லால், பாவ ஜீவர்கட்குரிய பாவப்பலனைச் சாதாரணத் துதவுவதில்லை. அப்படிக்கான பாவப்பலனை ஜீவர்கட்குத் தண்டனையாய் தகுதியுடைத் தேவர்களையும் நமனையும் வைத்து நடாத்துந் தேவ நியாயாதி பதியெனும் பெரிய வரசனாயிருப்பவர், - அவ்விந்திரனேயாம்.

சிஷி: நன்று - தேவர்களுண்டெனற்கு நூலாதார முண்டா?

குரு: ஆம். அவைகள் வேத முதலிய கலைகளே.

சிஷி: அவற்றுள்; ஹரன், ஹரி, அயன் என்னும் முத்தேவர்களை மட்டும் பெரும் பாலுங் கூறக் காரணமென்னை?

குரு: ஆக்கல், காத்தல், அழித்தலென்னும் முத்தொழில் கட்குள்ளேயே சர்வ கிரியைகளு மடக்க மாயிருப்பதால், அவைகளையும் அவைகட்குரிய தேவர் களையும் பெரும்பாலுங் கூறப்பட்டுள. எஞ்சிய துவிதகர்த்தாக்கள் கிரியை குறைந்த துரிய, துரியாதீத தேவதைகளாயிருத்த றொட்டு கிரியைகட் கெடுத்துக் கூறப்படாதது முறைமையே. ஆனால், சுத்த யோகாதி நூற்களில் விசேஷித்துக் கூறப்படுவதுண்டு. தவிர, இங்குணர்த்திய நிச்சயம் பகர்ந்த 12 -ஆவது வினா விடையிற் கணிக்கும் விவரிப்பைக் கவனிக்கச் செவ்வேதோன்றும்.

சிஷி: தொழில் குயிற்றுமிடத்து அவ்வைந்து கர்த்தாக்கட்கும் தனித்தனி யொவ்வொரு தொழிலை யன்றி அதிகம் வாராவோ?

குரு: ஈசனருளால், தனித்தனி யாவும்வரும். ஆயினும் அவரவர்கட் கேற்பட்டிருக்கிற தொழிலே லௌகீகத்திற் பிரதானமாயிருந்து கொண்டிருக்கும்.

சிஷி: அவ்வைவர்கட்குஞ் சுவதந்தர சத்திக ளுண்டென்றும், அவர்கள் சத்தியோடுகூடி யுய்வார்க ளென்றும் நூல்கண் முறையிடுகின்றனவே? அதனாலவர் பரதந்திரரோ?

குரு: பிரபஞ்சம் மாயாமயமாதலால், அஃதை யுண்மைபோற் பிரேரிக்கும் ஈஸ்வரனுடைய மாயா சத்திகளைத் தானே தன் வயத்தாளு முறைமையிற் சுவதந்தரத்தொடும் பிரபஞ்சாதீத வுண்மையில் பரதந்திரத்தொடும் விளங்கு கின்றார்கள். இந்நியாயம் விளங் கற்பாலதாய் 1 - ஆவது வியாசம் 15 - ஆவது வினாவுத் தரத்தினும் இந்த வியாசம் 7 ஆவத் வினாவுத்திரத் தினுமுரைத்தோம்.

சிஷி: அவ் விரண்டிலக்கணமும் ஒருவர்பாற் பொருந்துவ தெவ்விதம்?

குரு: இந்த்ரஜாலவித்தை செய்கிறவன் அத்தைப் பிறருக்கு மெய்யெனக்காட்டி தன்னுட்டானே பொய்யென நினைந்திருப்ப தேய்ப்ப அவ்விருவகையும்.

சிஷி: கிருத்தியங்க ளைந்தினுள்ளும் தலையா யருக்கின்ற சிருஷ்டிக்குரிய திசைமுகன், அவ்வைவர்களினுந் தலைக்கர்த்தாவா யிருந்துகொண்டிருக்கக் கடைக்கர்த்தாவாய்க் கூறக் காரணம் யாது?

குரு: பூதமைந்துள் ஆகாயமுதல் அப்புவரை நான்கின்வழித்தாய் நான்குகர்த் தாக்க டோன்றியதற்பின் ஐந்தாவதாகிய பிருதிவியி னிடமாய்ப் பிரமன் தோன்றி கடபடாதி தோற்றங்கள் கற்பிக்கப்பட்டன வால், ஜென்மத்தில் நால்வர்கட்குங் கடைசியாயும் தொழிலில் முதன்மையாயும் சிருஷ்டிகர்த்தனைச் சொல்ல லாகும். உரியதிருஷ்டாந்தம்: (1) முதலிலொரு வித்தாகவிருந்து, (2) பின்னர் அதனுளி முளை தோன்றி, (3) தழைதோன்றி, (4) பற்பல கிளைதோன்றி, (5) தகுந்த விருக்கமாய்ப் பிரவிருத்திப்பட்டதின்மேல், அவ்விருக்கமே யனேக வித்துக்களைத் தரற்கு ஒரு காரணமா யிருத்தல் போன்றாம்.

சிஷி: சிலர்; பஞ்சகர்த்தாக்க ளைவருள்ளும் விநாயகரென்பவர் தலையாவாரெ ன்றும், எக்கிருத்தியங்கட்கும் முதன்மையாவ ரென்றும் தீர்மானித்து அவ்வாறு நடப்பதென்னை?

குரு: ஆகமத்திற் சொல்லப்படுகின்ற சரியை கிரியை யோகமெனு மூன்றினு ள்ளும் விநாயக மூர்த்தி முதல்வனா யிருக்கிறரென்றும், அந்த யோகத்திற்கான ஆதாரபீடங்க ளாறினுள்ளும் பிரதமமாகிய மூலாதாரத்தில் அவர் பதியாயிருக்கி றாரென்றும், முக்கிருத்தியங்களும் பிரணவத்தா னடத்தப்படுத றொட்டு அதற்கும் பிரணவ சொரூபியா யிருக்கிறாரென்றும் சாஸ்திரங்கள் வெளிப்படு த்துகின்றமையால் அவ்வாறு நடப்பதாயிற்று.

சிஷி: அம்மூர்த்திக்குரிய ஸ்வய கிருத்திய மெது வென்பதையும் அவருக்குச் சிந்தூர முகம் வாய்த்த தெவ்வாறென்பதையும், வாசஸ்தானம் இவ்வண்டத்தி லெங்ஙனென்பதையும் விவரிக்க வேண்டும்?

குரு: மொழிந்த தொழில்களில், விநாயகருக்கு மூலகாரணமா யிருத்தலைத்தவிர வேறில்லையென்றும், அப்படிக்கான நிஷ்களமூலம் தேவர்கள் வேண்டுதற்படி கஜமுகாசுர சம்மார நிமித்தம் *ஓரவதரம் அக்கஜ முகாசுர தோற்றத்திற் கெதிர் வடிவமாய்ச் சமைந்த தென்றும், நிலை அண்டத்தின் மூலஸ்தானமென்றும் அறி! அவ்வடிவஞ் சமைந்த வர்த்தமானத்தையும் இவ்வுளி சுலப முரைக்கக் கேட்டி!

மாகத னென்னு முனிவனுக்கும் விபுதையென்னும் இராக்கத ஸ்திரீக்கும்யானைமுகத்துடன் புத்திரனாயுற்பவித்து தேவர் பூதம் மனிதர்மிருகம் ஆயுதம் முதலியனவால் இறவா வரம் சிவபிரானிடம் பெற்றனன்.பின்பு அக்கஜமுகா சுரன், உம்பர்களை ஹிம்சித்துவருந் துன்பொழிக்கற்கென்று சிவபிரானார் கிருபை கூர்ந்து * வேதண்டச் சாரலில் ஓர்சோலை மத்தியிலுள்ள விசித்திர மண்ட பத்திற் கெழுந்தருளி வந்து அவண் வரைந்துள ஓவியங்களிற் சித்தித் திருந்த சிவசத்திபிரணவங்களை ஆண்யானை வடிவும் பெண்யானை வடிவுமாய்ச் சேரும்படிசெய்து அக்கருவினிடந் தாமே யமசஞ் செய்தவுடன் யானைமுகத் துடன் பல வுருக்கலந்த திவ்ய திருமேனியுடன் வெளி வந்தார்; அவரே விநாயகர் அவர் தமது நான்கு கொம்புகளில் வலக்கொம்பை முறித்து அமர் முனையிற் கஜமுகா சுரன் பேரி லெறிந்து கொன்ற நிமித்தம் துன்பு தீர்ந்த வமரர்கள் தாங்க ளவ்வசுரனு க்குச் செய்து வந்த மரியாதையான தலையிற் குட்டிக் கொள்ளுதலை யும் தோப்புக் கண்டம் போடுதலையும் அவ்விநாயக மூர்த்திக்குச் சமர்ப்பித்து வருவதானார்கள். அம்முறையே நம்மவர்களு மியற்றி வருகின்றனர். (*ஓரவதரம் = ஓர்தருணம் , * வேதண்டம் = வெள்ளியங்கிரி )

சிஷி: அவ்விநாயகரைப் பிரமசாரியென்றும், வல்லபை நாயகனென்றும், சித்தி, புத்தி நாயக னென்றுஞ் சிலர் பன்னுவதென்னை?

குரு: மூல ஸ்வபாவீகத்தில் அவர் பிரமசாரியென்றும், அசுரசம்மார காலத்தெதிர் த்த வல்லபை யாகிய மாயாசக்தியைத் தன் வயப்படுத்திக் கொண்டதுதொட்டு வல்லபை நாயகனென்றும் சித்தி புத்தி யென்கிறசக்திகளோடுகூடி நிற்றலினால் சித்தி புத்தி நாயகனென்றும் சொற்றதாகும். இவ்வரலாறு கணேசபுராணத்தில் விசேஷமாய்க் காணலாம். மேல்வழுத்திய தாற்பரியங்கள் ஞானார்த்தமுமாகும்.

சிஷி: அவருக்குப் பிள்ளையாரென்ற ஓர் நாமம் கற்பிதமாகவும், வயிறு விசால மாகவும், ஊர்தி உந்துருவாகவும் ஏற்பட்டதெது நிமித்தம்?

குரு: ஈசனுடைய பிள்ளையென்பதுபற்றிப் பிள்ளையாரென்ற வபிதானமும், பால்யதிசை மாறாத நித்திய பருவத்தையும் சமஸ்த கற்போதயத்திற்கு இட மாகிய வுதரத்திற்குந் தானேபிரணவ மென்பதையும் ஆரோபிக்கத் தொந்தி வயிறும் அதனாலவருக்கு "லம்போதரன் " என்கிற பெயரும் கஜமுகனொடு பொருதும் * ஆயோதனத்தில் அவ்வசுரன் மாயமாய் உருவெடுத்து வந்த **கந்துளத்தை மிஞ்சவொட்டாமற்பிடித்து மேல் ஆரோகணித்ததுமுதல் அஃதூர்தியாகவு மேற்பட்டன. (* ஆயோதனம் = போர், ** கந்துளம் = பெருச்சாளி )

சிஷி: அற்றேல், கற்போதயத்திற்கு மாத்திமோ பிள்ளையார் பிரணவமா யிருப்பது?

குரு: தொழில்களைந்துள் சிருஷ்டி துவக்கமாயிருந்து கொண்டிருத்தலினால், கிரியா நாயாயம்பற்றி அன்னண மாயது. அதுவே முன்னும் பின்னும் வினைக் கீடாகிய சர்வ புவன காரியமாய் விளங்கும்.

சிஷி: அவ்விநாயகரை அயன் கற்பித்ததாகத் தானே யிருக்கவேண்டும்? அவரை முன்னோனென்று மொழிவோதெற்றோ?

குரு: இலௌகீகத்தில் இருவினைக்குட்பட்ட ஜீவர்களை வேதன் படைப்ப தென்றும், அதன்மேல் விசேஷார்த்தமாய் தமதருட்சத்திகொடு ஈஸ்வரனே படைப்பதென்று முள்ளபடிக்கு அவ்வானை முகத் தேவை ஈஸ்வரனே படைத்தாரென்றும், சகல கர்மங்கட்கும் அவரை முன்னிட்டு நடாத்துதலால் அவைகட்கு முன்னோனெனப் பெயரேற்பட்டதென்றும் அறி!

சிஷி: பிரமன், பிரபஞ்ச சிருஷ்டி கர்த்தாவாயிருந்து கொண்டிருக்கச் சித்தஜ னென்பானொருவன் சிருஷ்டிக்குக் காரணமாயிருந்துகொண்டிருக்கிறானெ ன்றும் நூல்களு ரைப்பதென்ன?

குரு: ஜீவாத்மாக்களுடைய ஜடவுற்பத்திக்குக் காமங் காரணமா யிருத்தலாலும் அக்கமத்திற்குக் கந்தர்ப்பனாகிய சித்தஜன் கர்த்தாவா யிருத்தலாலும் அவன் விட்சேப தத்துவமாய்ச் சதுர் முகனுக் கநுஜனாய்ச் சிருஷ்டிக் குபபலனாய் அவதரித்ததனாலும் அப்படி யுரைக்கலாயிற்று. இப்படியே ஒன்றுக்கொன்று பகரணமான காரிய நிமித்தம் கால கரணாதிகட்கும் அனேக தேவதைகளுண் டென்றறி!

சிஷி: கந்தர்ப்பனாகிய இரதிகாதலன் உதயமா முன்னம் அவனதுவினை புரிந்தவர் யாவர்?

குரு: பிரவிருத்தி மாயை.

சிஷி: அம்மாயை காமனேற்பட்ட காலமாகிய இக்காலத்தின்றோ?

குரு: எக்காலத்தும் பிரவிருத்தி மாயையினாலேயே எழுவகைத் தோற்றங்களும் விருத்தியாகிக் கொண்டிருக்கின்றன. அம்மாயையின் பிரேரகர்களாகவே * மறைக்கயிற்றோனும் ** அலர்க்கணையோனும் பிரதிஸ்வரூபிகளா யிருந்து கொண்டிருக்கிறார்கள். (* மறைக்கயிற்றோன் = பிரமன், அலர்க்கணையோன் = மன்மதன் )

சிஷி: இவ்வியாசத்தின் 12 - ஆவது வினாவுத்தரத்தில் பிரமதேவனை ஈஸ்வர பிரதிபிம்பனென்றும் இங்ஙனம் மாயையின் பிரதிஸ்வரூப னென்றும் இரு பிரிவாய்ச் சொல்லுவதென்ன?

குரு: அணுவாகிய ஜீவான்மா ஈஸ்வர பிரதிபிம்ப மென்றும் அதின் பிரதிதத்துவ முதலாய சரீரம் மாயா பிரதிபிம்பமென்றும் இருவகையாய்ச் சொல்லப்படும். அதினாலெனவும், இவ்வுவளக வகையும் எவர்க்கும் பொதுவெனவு மறிதி!

சிஷி: மேற்கூறிய காமனுக்குரிய விருதுகள் இயல்புக்கு விரோதமாய் கரும்பு, சுரும்பு, அரும்பு, காற்று, கடல், மடல், மதி, மகரம், குயில், தையல் என்பன வாயேற்பட்டிருக்கிறதுமன்றி அவன் அனங்கனாயு மிருக்கிறதாக வெளியா கிறது. அப்படிக்கானால் அவன் காரிய மெற்று? குரு: அவையனைத்தும் காமத்திற்குரிய சின்னங்களாகுமென்றும், விஷ்ணு புதல்வனாகிய அம் மன்மதன் சுயசொரூபம் ஓர் காலத்திற் சங்கரனாற் சாம்பராகி விட்டதென்றும், பின்னர் அனங்கனாய்ச் சூட்சும மாயாரூபம் பெற்றுச் சர்வ ஜீவாத்மாக்களின் சித்தத்தி னிடமாய்ப் பிரவேசித்துச் சித்தஜனென்னும் பெயர் பெற்றிருக்கிறானென்றும் புராணங்கள் புகலும். இதினால், எரிந்தெழுந்தவ னிவனென்றாம்.

சிஷி: சரி விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்னும் நால்வர்களும் விநாயக மூர்த்தியும் வேதத்திற் குரித்தாகாமல், *விதி உரித்தான தென்னை? (* விதி = பிரமா )

குரு: அவர்களும் ஆதிவேதத்திற் குரியவர் கடான். அதில், அவ்வேதம் கர்ம நூலாக வனந்த விதமாய் விரிந்து சகலதர்மமும் நீதியுமாய் விளங்கிய நிமித்தம், ஜீவாத்மாக்கள் செய்யும் இருவினைக்குத் தக்க பாவ புண்ணியங் கண்டு பலனுதவிச் சிருஷ்டி செய்வ தவசியம் பற்றி, ஈஸ்வரன் சிருஷ்டிகர்த்தாவிடம் வேதத்ததை யொப்புவித்தார். அதனாலவ ருரித்தானார்.

சிஷி: அம்மறையோனுக்கு நாமக ளென்னுஞ் சாரதாள் நாவிலிருக்கிறாளென்று நூல்க ணுவலு கின்றன. அற்றேல், அவர் சுயமாய் *ஓத்தோதச் சக்தி யிலரோ? (* ஓத்து = வேதம் )

குரு: ஈசனை நோக்கித் தவஞ்செய்து கலைமகளாகிய வேதசத்தியைத் தான் பெறுமுன்னரேயே, அப்பிரமன் வேதத்திற் குடையோரா யெழுந்தருளப் பெற்றார். ஆயினும் ஓத்தோதுங் காரியம் எங்கணும் விசேஷிக்கும் பொருட்டு, அப்பாமகளை நாவில் அந்த ரங்கமா யிருத்திக் கொண்டார். அச்சத்தி வாக்குக் கதி தேவதையாயுள்ளாள்.

சிஷி: இம்மட்டில், தேவர்களின் றன்மையைத் தெளியலானேன். அதில், அயனைச் சிலரும், ஹரியைச் சிலரும், ஹரனைச் சிலரும் விசேஷமாய்ப் பிதற்றித் தர்க்கங்கள் பண்ணிக்கொள்ளுவதற் கிணங்க, வேத முதலிய கலைகளும் ஏற்பட்டிருப்பானேன்?

குரு: மூலப் பிரமாவின் சிருஷ்டித் தொழிலிற்காக அவராலேற்பட்டிருக்கிற வர்களையும், அவருரு வடைந்தவர்களையும் அவரடியார்களையும் பிரமா வென்றும்; மூல விஷ்ணுவின் இரக்ஷகத் தொழிலிற்காக அவரா லேற்பட் டிருக்கிறவர்களையும், அவருரு வடைந்தவர்களையும், அவரடியார்களையும் விஷ்ணு வென்றும், மூல வுருத்திரன் சங்காரத் தொழிலிற்காக அவராலேற் பட் டிருக்கிறவர் களையும், அவருரு வடைந்தவர்களையும், அவரடியார்களையும் உருத்திர ரென்றுஞ் சொல்லப்படும். அவற்றுள், அம்மூல விஷ்ணு பிரமாக்க ளுக்கு அனேக பிரமா விஷ்ணு உருத்திரர்கள் தாழ்ந்தவர்களாயும், மூல விஷ்ணு வுக்கு அனேக விஷ்ணு உருத்திரர் பிரமாக்கள் தாழ்ந்தவர்களாயும், மூல வுருத்திர னுக்கு அனேக உருத்திரர் விஷ்ணு பிரமாக்கள் தாழ்ந்தவர்க ளாயும், கிருத்திய நிமித்தம் பிரமாண்டங்கடோறும் இருத்தலால், அவரவர் புராணகலைகள் அவரவரை யுயர்த்தியும் மற்றவரைத் தாழ்த்தியும் விளம்புகின்றன. இவ்வுண்மை யறியாமல், வாய் மதம்பேசி வெறும்புளித்தின்று நாக்கெரிகின்றார்கள். அதனானமக்குறும் பயனென்னை? கிருத்திய நிமித்தம் பிரமாண்டங்க டோறும் பிரம விஷ்ணு உருத்திரர்க ளுண்டெனற்குப் பிராமாணியம்: ஸ்காந்தம் வீரமாகேந்திர காண்டம், 6 - ஆவது அத்தியாயம் 8,9,10,11,12,13 - ஆவது சுலோகங்களினருத்தம் " அத்தூத னெங்கு மோடிச்சென்று பார்த்ததில் அந்தப் பிரமா சகல தேவர்களுனும் ஸ்ரீ முருகேசனண்டையி லிருப்பதைக் கண்டு பிறகு திரும்பி வந்து செய்தியை யுள்ளபடி யுரைக்க " " சூரபத்மனும் அத்தூதன் வசனத்தைச் செவியுற்று அப்போது மனசில் பிரமாதி தேவர்களையெல்லாம் கோபித்து கொண்டு " உடனே மற்றோரண்டத்திற் கதிபரான பிரமனையழைப் பித்துத் தூதன் முகமாய் அவரை நோக்கி ஓ! பிரமனே! நமது நகரத்தை முன்னி ருந்த மாதிரி செய்து விடென, உடனே யப்பிரமன் " சீர்திருத்தி விட்டுச் சூரனிடஞ் செல்ல" "பின்பு சூரனும் அவரை வெகுமானத்துடன் தனது தூதர் களொடுகூட அவரது சுய அண்டத்திற்குச் செல்லும்படி யனுப்பினான் உடனே" அத்தூதர்கள் பிரமனை இப் பிரமாண்டத்திற்கு வெளியிற் கொண்டுபோய்விட அவர் சென்றுவிட்டனர் " என்பனவே.

சிஷி: அஃதப்படிக் காயினும் திரிகர்த்தர்களில் வேதன் இருவரையும் படைத்த தாகவும், விஷ்ணு பிரமாவைப் படைத்து அவரா லுருத்திரனைப் படைத்ததா கவும், உருத்திரன் விஷ்ணுவைப் படைத்து அவராற் பிரமாவைப் படைத்ததா கவும், பராசத்தி உருத்திரனையும் வி

ஷ்ணு வையும் படைத்ததாகவும் புராண கலைகள் புகலுவ தென்னை?

குரு: யாம் மேலே சொற்றதனைய அவரவர்கள் தன்மைக்குத் தாழ்ந்த வகையிற் படைத்ததையே அவ்வாறாகவும் ஈஸ்வரனுடைய சத்தியினின்று சதா சிவாதி பஞ்சகர்த்தாக்கள் தோற்றியதனால் அவர்களைப் பராசத்தி படைத்ததாகவுங் கூறலாயிற்று. அதில், எவற்றுக்குங் காரணம் ; இதுகாறும் விளக்கி வந்ததில் வாசாமகோசரமாய்ச் சேட்டித்து நின்ற ஈசனாகிய பரமசிவனேயாம். அப்பரமசிவ பெருமானின் வர்த்தமானங்களை அடுத்த வியாசத்திலருள்வேம்.

சிஷி: மெய்யே. இதுகாறுந் தேவர்களுண்டோ வில்லையோவென் றிருந்துள சந்தேகங்க ளொழிந்து உண்டென்பது கண்டு சந்தோஷமானேன். என் விஷயத் தில் இவ்வளவு சிரத்தை யெடுத்துக் கொண்ட தேவரீர் திருவடிகளைப் பன்முறை பணியா நின்றேன். மற்றுந் தெளிய வேண்டுவனவற்றை நாளைக் காலை யறிவித்துக் கொள்ளுகின்றேன். அவ்வண மருள் செய்க!

குரு: நன்று நன்று. சற்குருநாதன் தயவு பாலிப் பாராக.

தேவர்களைக்குறித்த வியாசம் முற்றிற்று.